இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

29 நவம்பர், 2009

கண்ணாமூச்சிசிறுவர் சிறுமியர் என இரு பாலரும் விளையாடும் விளையாட்டு. ஒரு சிறுவனின் கண்ணை மற்றொருவன் பொத்த பிறர் ஒளிந்து கொள்ள ஒளிந்திருப்பவர்களில் ஒருவரைக் கண்டறிவது விளையாட்டு. கண்ணைப்பொத்தியிருப்பவனோடு கீழ்க்கண்டவாறு உரையாடல் நடைபெற்று முடிந்த பிறகு கண்ணைத்திறந்துவிடவேண்டும்.

உரையாடல்: கண்ணாமூச்சி காதடைப்பு

உங்க வீட்டுல என்னா சோறு?

நெல்லு சோறு

ஈ உழுந்துதா, எறும்பு உழுந்துதா?

எறும்பு உழுந்துது

எடுத்துட்டு சாப்பிட்டியா, எடுக்காம சாப்பிட்டியா?

எடுத்துட்டு சாப்பிட்டேன்

காட்டுக்கு போயி ஒரு சிங்கம், ஒரு புலி,

ஒரு கரடி எல்லாம் புடிச்சிகிட்டு வா...
கண்பொத்தி ஆடும் மரபு சங்ககாலந்தொட்டே தமிழர்களிடமிருந்திருப்பதைக் கீழ்க்கண்ட பாடல்கள் உணர்த்துகின்றன.
சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன

நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே! (ஐங்குறுநூறு)கண் புதையாக் குறுகிப் பிடிக்கை அன்ன...(அகநாநூறு)

28 நவம்பர், 2009

குலை குலையா முந்திரிக்காய்சிறுவர் சிறுமியர் என இரு பாலரும் ஆடும் ஆட்டம். விளையாட்டில் கலந்துகொள்பவர்கள் வட்டவடிவில் அமர்ந்திருக்க ஒருவர் மட்டும் கையில் வைத்திருக்கும் துணியைச் சுழற்றிக்கொண்டு வட்டத்தைச் சுற்றி பாட்டு பாடியபடி ஓடிவரும்போது அமர்ந்திருப்போரில் யாரேனும் ஒருவர் பின்னே அத்துணியை போட்டுவிட்டு ஓடுவார். துணி யாருக்குப்பின்னால் கிடக்கிறதோ அவர் எழுந்து ஓடி துணி போட்டவரைப் பிடிக்கவேண்டும் இல்லையேல். இவர் யாரேனும் ஒருவர் பின்னால் துணியைப்போட ஆட்டம் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும்.
பாடல்: கொல கொலயா முந்திரக்காய்

நரிய நரிய சுத்தி வா

கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்

கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி.

22 நவம்பர், 2009

கல்பாரி


பாரி என்றால் கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல் என்று பொருள். தரையில் செவ்வக வடிவில் கோடு கிழித்து அதனுள் குறுக்கு நெடுக்காக இரு கோடுகள் அமைத்து கோடுகள் வெட்டுமிடத்தில் ஒரு சிறு வட்டம் வரைந்து அதில் நான்கு கற்களை வைத்து கட்டத்திற்கு ஒருவர் வீதம் நான்கு பேர் நிற்க நடுக்கோட்டில் ஒருவன் நின்று கட்டத்திற்குள்ளிருப்போர் கற்களை எடுத்துச்சென்று விடாமல் காவல் காக்கும் விளையாட்டு கல்பாரி. காவலாளியிடம் அடி படாமல் கற்களை எடுத்துவிட்டால் ஆட்டத்தில் வென்றதாக பொருள்.
பயன்கள்: உழைத்து பொருளீட்ட வேண்டும், ஈட்டிய பொருளில் தம் தேவை போக எஞ்சியதை பிறருக்கு கொடுத்து உதவுதல் ஆகிய பண்புகளைச் சிறுவர்களிடம் வளர்க்கிறது.

21 நவம்பர், 2009

சில்லி விளையாட்டுமழைக்காலங்களில் சிறுமியர் ஆடுவது. இருவர் சேர்ந்து ஆடுவதால் தலா ஐந்து கட்டங்களை நிலத்தில் வரைந்து உடைந்த மண் பானைத்துண்டுகளை சல்லியாக்கி (இதுதான் சில்லி என்று மாறியிருக்க வேண்டும்) கட்டத்துக்குள் வீசி ஒற்றைக் காலால் நொண்டியடித்தபடி கட்டத்தினுள்ளிருக்கும் சில்லியை மிதித்து அதனை அடுத்த கட்டத்துக்குக் காலால் எத்தித் தள்ளவேண்டும் அது போல் ஒவ்வொரு கட்டத்திலும் வீசி விளையாடுவர்.இது போல் நான்கு சுற்றுகள் வெற்றிகரமாக முடித்தால் ஒரு பழம் பழுத்ததாகக் கூறி கடைசி நான்காவது கட்டத்தில் ஒரு பெருக்கல் குறி வரைந்துகொள்வது வழக்கம். வெற்றிக்கனிகளை முதலில் பெறுபவர் ஆட்டத்தில் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிறார்.

பயன்கள்: தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகிய பண்புகளைச் சிறுவயதிலேயே இவ்விளையாட்டு ஏற்படுத்துகிறது.

ஏழாங்காய் விளையாட்டு


சிறுமியர் ஆடுவது. ஏழு கற்களைக்கொண்டு ஆடுவதால் இப்பெயர். ஒரு காயைக் கையில் வைத்துக்கொண்டு மற்றகாய்களைச் சிதறவிட்டு கையிலிருக்கும் காயை மேலே விட்டு கீழிருக்கும் காயை எடுத்தபடி மேலிருந்து வருவதையும் பிடிக்க வேண்டும்.
பாடல்: ஆலெல பொறுக்கி
அரசெல பொறுக்கி
கிண்ணம் பொறுக்கி
கீரிபுள்ள தாச்சி
தாச்சின்னா தாச்சி
மதுர மீனாட்சி.
பயன்கள்: கை,வாய், கண் ஆகிய முப்புலன்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் ஆற்றல் வளர்கிறது

16 நவம்பர், 2009

கார்த்திகை சுற்றும் விளையாட்டுகார்த்திகைத் திங்கள் முழு நிலா நாளில் சிறுவர் நிகழ்த்தும் சடங்கியல் விளையாட்டு இது. பனம்பூவைக் கருக்கித் தூளாக்கி துணியில் பொட்டலமாகக் கட்டி அதனை ஒரு கவைக்குள் வைத்து நெருப்பு மூட்டி சற்றுவர் அதில் பறக்கும் தீப்பொறி காட்சி கண்ணுக்கு இனிமை.

ஓரி விளையாட்டு


நீரில் ஆடும் விளையாட்டு. நிலத்தில் ஓடிப் பிடித்து விளையாடுவதைப்போன்று நீரில் மூழ்கி நீந்திச்சென்று பிடிக்கவேண்டும்.ஆட்டத்தின் தொடக்கத்தில் பாடப்படும் பாடல்:

ஆத்துல கெண்ட புடிச்சன்

எல்லாருக்கும் குடுத்தன்

எங்க வெங்கடேசனுக்கு மட்டும் குடுக்கலே.

பயன்கள்: நீச்சலை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம், யூகித்து அறியும் ஆற்றல் வளரும்.

15 நவம்பர், 2009

சடுகுடு விளையாட்டுதமிழர்களின் வீர விளையாட்டு. சங்க கால போர் முறைகளின் எச்சமாகக் கருதப்படுகிறது. வெட்சித் திணையின் துறைகளாகக் கூறப்படும் 'பசுக்கூட்டங்களைக் கவர்தலுக்கு எழுகின்ற பேரொலி, பகைவேந்தரின் புறத்திடத்து சென்று சூழ்ந்து தங்குதல், தங்கிய பின்னர் சூழப்பட்ட ஊரை அழித்தல், எதிர்ப்பவர்களைப் போரிட்டு மீளுதல்' ஆகிய கூறுகளோடு பின் வரும் சடுகுடு ஆட்ட அலகுகள் ஒப்பு நோக்கத் தக்கவை. அவை முறையே,' ஆட்டத்தில் பாடப்படும் பாடலின் பேரொலி, எதிரணியின் எல்லைக்குள் சென்று ஆடுதல், அங்குள்ளவர்களைத் தொட்டு ஆட்டமிழக்கச் செய்தல், பிடிக்க வருபவர்களிடமிருந்து மீளுதல்'. ஆகியனவாகும்.
பாடல்: 1. நாந்தாண்டா ஒப்பன்
நல்லமுத்து பேரன்
வெள்ளி பெரம்பெடுத்து
வெளையாட வரேண்டா
தங்கப் பெரம்பெடுத்து
தாலி கட்ட வரேண்டா
வரேண்டா... வரேண்டா...
2. சப்ளாஞ்சி அடிக்கவே
சறுக்கிட்டு உழவே
ஒப்பனுக்கும் ஓயிக்கும்
ஒரு பணம் தெண்டம்
தெண்டம்... தெண்டம்...
3. தோத்த கடைக்கு நான் வரேன்
தொட்டு பார்க்க நான் வரேன்
கருவாட்டு முள்ளெடுத்து
காது குத்த நான் வரேன்.
பயன்கள்: வீர உணர்வு வளரும், சவால்களை எதிர் கொள்ளக் கற்பிக்கிக்கிறது, தமிழரின் போர் மரபுகளை அறிய உதவுகிறது.

ஆபியம் விளையாட்டு


நான்கைந்து சிறுவர்கள் சேர்ந்து ஆடும் விளையாட்டு இது. பகல் இரவு என இரு பொழுதுகளிலும் ஆடுவர். ஒருவர் குனிந்து நிற்க மற்றவர்கள் குனிந்து நிற்பவரின் முதுகில் கை வைத்து ஒரு புறமிருந்து மறுபுறத்திற்குத் தாண்ட வேண்டும். தாண்டும்போது தாண்டுபவரின் கால்கள் குனிந்திருப்பவரின் மீது படக்கூடாது, பட்டால் ஆட்டமிழப்பர்.ஆட்டத்தில் பாடப்படும் பாடல்: ஆபியம்... மணியாபியம்... கிருணாபியம் நாகனார் மண்ணைத்தொடு ராஜா சூத்துல ஒத குடு.பயன்கள்: எச்சரிக்கை உணர்வை வளர்க்கும், எதையும் தாங்குகிற வலிமையைத் தரும்.

8 நவம்பர், 2009

திம்பி விளையாட்டுசிறுமியர் விளையாடுவது. முன்னிரவு நேரத்தில் ஆடுவர்.

பெயர்க்காரணம்:தும்பி சில நேரங்களில் ஓரிடத்திலிருந்து கொண்டு கரகரவெனச் சுற்றும்.அதனால் இவ்விளையாட்டு 'தும்பி சுற்றுதல்' என்று சூட்டப்பட்டு, பின்னர் 'திம்பி சுற்றுதல்' என்று திரிந்திருக்கலாம்.(நன்றி:முனைவர் ஆறு.இராமநாதன்)
திம்பி சுற்றும்போது பாடப்படும் பாடல்கள்:
1. எண்ண இல்ல சீப்பு இல்ல

ஊதா பொடவ இல்ல

உன்னக் கூட நான் வல்ல2. நீயும் நானும் சோடி

நெல்லு குத்த வாடி

ஆத்து மணல அள்ளிபோட்டு

அவுலு இடிக்க வாடிஇவ்விளையாட்டின் பயன்: தோழமை உணர்வை வளர்க்கிறது,சமுதாயத்தில் இணைந்து செயல்படும் பண்பை குழந்தைகளிடம் வளர்க்கிறது,திம்பிப்பாடல்கள் ஆண் பெண் உறவு நிலை, சிற்றூர் பொருளாதாரநிலை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. மேலும் விரிவாக அறிய படிக்கவும் கிராமத்து விளையாட்டுகள் (விகடன் வெளியீடு)

5 நவம்பர், 2009

விளையாட்டுகளும் அதன் பயன்களும்

சிற்றூர்களில் சிறுவர்கள் பல வகையான விளையாட்டுகளை விளையாடுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏதாவது பயன்கள் உண்டா? இப்படி ஒரு கேள்வியை அவள்விகடன் அலுவலகத்திலிருந்து கேட்டார் லட்சுமிகிருபா. கிராமத்து விளையாட்டுகள் நூலில் எழுதியிருக்கிறேன் என்று கூறியபோதும் அவர் விடவில்லை. குறிப்பாக விளையாட்டுகளின் பெயர்களைக் கூறி அவ்விளையாட்டால் என்ன பயன் கிடைக்கிறது என்று சுருக்கமாக ஹைக்கூ போலக் கூறுங்கள் என்று கேட்க சிந்தித்தபோது தோன்றியவை இவை. இவற்றையும் மீறி விளையாட்டுகள் எண்ணற்ற பயன்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.
பல்லாங்குழி: பொருள் ஈட்டும் குணம்,நினைவாற்றலை வளர்த்தல்,பிறருக்கு உதவுதல்.
காயே கடுப்பங்காய்:குழு மனப்பான்மை, உடல் மொழி அறிதல், இடர் மேலாண்மை ஆகிய பயிற்சிகளை வழங்குகிறது.

காற்றாடி:இயற்கை ஆற்றல், தொழில் நுட்ப ஆற்றல் ஆகியவற்றை சிறப்பாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுதல்.


கண்ணாமூச்சி:கண்டறியும் திறனை வளர்க்கிறது, செவிப்புலனைக்கூர்மையாக்குகிறது, காட்டிக்கொடுக்கக்கூடாது என்ற பண்பை வளர்க்கிறது.கல்பாரி: சாமர்த்தியத்தை வெளிப்படுத்துகிறது,எதிரிகளிடமிருந்து தப்பிக்கக்கற்றுக்கொள்ளுதல்நொண்டி விளையாட்டு:இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலைத் தருவதோடு தன்னம்பிக்கையைத்தருகிறது

மேலும் விளையாட்டுகள் பற்றிய விரிவான தகவல்களுக்கு படிக்க விகடன் வெளியிட்டுள்ள கிராமத்து விளையாட்டுகள் நூலை.
நன்றி: அவள் விகடன்.