இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

28 அக்டோபர், 2011

தமிழனும், ஏழாம் அறிவும்




இயக்குநர் தங்கர்பச்சான் ஏழாம் அறிவு பற்றி எழுதிய மின் மடலை இங்கே பதிகிறேன்.
மிக சுருக்கமாக ஏழாம் அறிவு எனும் வணிக சினிமா பற்றி ;
நான் எந்த சினிமாவுக்காகவும் எனக்கிருக்கிற வேலைகளை விட்டுவிட்டு இப்படி எழுத உட்கார்ந்ததில்லை.இன்றைக்கு தமிழர்களின் தேவை என்பது இருக்க வீடும்,பின் ஒரு காரும் பின் கான்வென்ட் படிப்பும், வங்கி சேமிப்பும் என்பது மட்டுமே..இன அறிவோ,மொழி அறிவோ,அரசியல் அறிவோ,நம் முன்னோர்களின் வரலாறு பற்றியோ தேவையில்லை என முடங்கிவிட்டான். இனி இவைகளை சொல்லித்தர நமது கல்வித்திட்டமோ,பெற்றோர்களோ,ஆசிரியர்களோ உருவாகப் போவதில்லை.பிழைப்புக்கு இதெல்லாம் இனி தேவை இல்லை எனும் நிலைக்கு அவனது சிந்தனை சிதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவிட்டது.இந்த சிந்தனை இல்லாமல் செய்ய நம் எதிரிகள் தமிழர்களை அழிக்க தமிழனையே தயார்ப் படுத்திவிட்டார்கள்.
கலைகள் அவரவர்களுக்கான இலக்கியத்தையும்,அரசியலையும் ,மொழி பண்பாட்டுக் கூறுகளையும் பேச வேண்டும்.இதைப்பற்றி எதையும் பேசாத,வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே கைய்யாளபபடுகிற கலை எதுவாக இருந்தாலும் மக்களை மயக்க நிலையிலேயே வைத்துக் கொள்வதற்குத்தான் உதவும். மது அருந்தியவன் மூன்று மணி நேரம் போதையிலேயே இருக்க உதவுகிற வேலையைத்தான் பல வணிக சினிமாக்கள் செய்து கொண்டிருக்கின்றன.அரிதாக சில சினிமாக்கள்தான் அந்த மூன்று மணி நேரத்தில் மயக்க நிலையில் வசியப் படுத்தி வைத்திருப்பதற்கு பதிலாக சிந்திக்க தூண்டுகின்றன.அடிமைகளாய் இருப்பவனைவிட,தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன். அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு தமிழர்களாய் இருப்பவர்கள் பல பேர் தங்களின் மொழி, இன, அரசியல் விடுதலைப்பற்றி உணராமல் பெயரளவிற்கு ஏதோ தமிழ் போல ஒரு மொழி பேசி,தமிழர்களுக்கு இருக்க வேண்டிய எதுவுமே இல்லாமல்,பெயரளவிற்கு தமிழ்நாடு என்றிருக்கும் இடத்தில் தமிழனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இன்றைக்கு தமிழ் பற்றி தமிழன் உரிமை பற்றி யார் பேசினாலும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள்.தமிழை தங்களின் சொந்த நலனுக்காக,அதிகாரத்துக்காக,பயன்படுத்தியவர்களைப் பார்த்து ஏற்பட்ட சலிப்புதான் இதற்கெல்லாம் காரணம்.
இனிவரும் காலங்களில் நம்மை வழி நடத்த உண்மையில் நம் மேல் அக்கறையுள்ளவர்கள் அரசியலில் வந்தாலோ!இப்போது உள்ள ஒரு சிலரையோ நாம் அடையாளம் கண்டு கொள்ளப்போவதும் இல்லை. அந்த வேலைகளை நம் கலை படைப்புகள்தான் செய்ய வேண்டும். ஏழாம் அறிவு மூலம் நிகழ்ந்திருப்பது ஒரு அறிய மாற்றம்.தமிழனுக்கு இன்றிருக்கிற அடிமை சிந்தனையையும்,ஏளனத்தையும், கூச்சத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும் சரி செய்ய ஒரு மருத்துவம் தேவைப்படுகிறது.அந்த மருத்துவத்தை ஒரு மசாலா சினிமா செய்திருக்கிறது.
நம் வரலாற்றை,அறிவியலை,மருத்துவத்தின் அவசியத்தையும் சொல்ல, படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மனப்பாடக்கல்வியை கற்றவர்களுக்கும்,இந்த படிப்பறிவில்லாத பாமர தமிழர்களுக்கும் இப்போதைக்கு பொழுதுப் போக்கு சினிமாதான் ஒரே வழி.தமிழனுக்கு எழுச்சியை உருவாக்க , அடிமைத் தனத்தை உணர்த்த சில செய்திகளோடு ஒரு கதை சினிமா வந்திருக்கிறது.அதற்கான பலனை எனது மகன்களிடமே நான் கண்டிருக்கிறேன்.எனது படைப்புகள் என் மகன்களிடம் உருவாகிய தாக்கத்தைக்காட்டிலும்,ஏழாம் அறிவு அவர்களுக்கு இனப்பற்றை உணர்த்தி தமிழன் என்பதை பெருமையாக நினைக்க செய்திருக்கிறது.
இன்றைய தமிழ் அரசியல் சூழலில் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத மக்களுக்கு ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தேவையாக இருக்கின்றன.seventh sense , nonsense என்றெல்லாம் எழுதி நம் தமிழர்கள் இணைய தளங்களில் எழுதி இன்பம் கண்டு தங்களின் திரைப்பட திறனாய்வை பறை சாற்றி மகிழ்கிறார்களாம் .இவ்வாறு எழுதுவதால் அவர்களின் அறியாமைதான் வெளிப்படுகிறது.நான் உங்களிடம் இப்படத்தைப்பற்றிய திறனாய்வை விளக்கவரவில்லை.திறனாய்வு செய்தால் என் அழகியும்,பள்ளிக்கூடமும்கூட நிற்காது.மனிதர்கள் எல்லோருமே குறை உள்ளவர்கள்தான். அவர்கள் உருவாக்குகிற படைப்புகள் எவ்வாறு குறைகள் இல்லாமல் இருக்க முடியும்.எனது குறைகளை அதன் படைப்பாளிகளிடம் கூறி விட்டேன்.நம்மை ஒன்று படுத்த இப்படிப்பட்ட படைப்புகள் உதவுகின்றன.எதிரிகளாய் இருப்பவர்கள் குறை சொல்லிப் போகட்டும். தமிழர்களாய் இருப்பவர்கள் இப்படத்தை கொண்டாட வேண்டும்.நம் கலாச்சாரத்தையும்,பண்பாட்டுக் கூறுகளையும்,நம் மொழியையும் சிதைக்கின்ற பொழுதுப் போக்கு திரைப்படங்களுக்கிடையில் பழந்தமிழர் பெருமை பேசவும்,தேய்ந்துபோன நம் இன உணர்வை பேசவும் ஒரு சினிமா அதுவும் முருகதாஸ்,சூர்யா போன்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது நமக்கெல்லாம் பெருமைதானே.நிச்சயம் தமிழனாகிய நான் அதனை பெருமையாக நினைக்கிறேன்.அதே போல் இதன் தயாரிப்பாளர் உதயநிதியையும் நாம் பாராட்ட வேண்டும்.
தாய் மண்,தொலைந்து போனவர்கள் எனும் தமிழர்களுக்கான மிக அத்தியாவசியமான இரண்டு திரைக்கதைகளை 2002 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தயாரிப்பளர்களிடமும் சொல்லி அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.என் போன்ற பல படைப்பாளிகளின் நிலை தமிழ் சினிமாவில் இப்படித்தான் இருக்கின்றது.தமிழை நம்பியோ,தமிழர்களை நம்பியோ முதலீடு செய்ய இன்று யாரும் இல்லாத நிலையத்தில் ஒரு தமிழனாகவும், ஒரு படைப்பாளியாகவும் என் நன்றியை தயாரிப்பாளர் அவர்களுக்கு தெரிவிக்கிறேன்.
ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் பலனடைபவர்கள் அந்த படத்தோடு வியாபார ரீதியாக தொடர்புடையவர்கள்தான்.ஆனால் ஒரு சில படங்கள்தான் அவை சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.ஏழாம் அறிவும் அப்படிப்பட்டதுதான்.உங்களின் இனப்பற்றை சோதனை செய்கிற படம்.தமிழர்களிடம் நான் கவனிக்கின்ற ஒரு கெட்ட செயல் இதுதான். சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியை கேட்பதை விட்டுவிட்டு,இந்த படம் எத்தனை வாரம் ஓடும்,எவ்வளவு வசூலாகும் என்றெல்லாம் கேட்பதுதான்.இந்த கவலையெல்லாம் அந்த படத்தை தயாரித்தவர்களுக்கும்,படத்தை வாங்கியவர்களுக்கும்,திரையிட்டவர்களுக்கும் இருக்க வேண்டிய கேள்வியும்,கவலையும்.ஏழாம் அறிவு எத்தனை நாட்கள் ஓடும்,எவ்வளவு பணம் கிடைக்கும்,வெற்றியா,தோல்வியா என்கிற கவலை படம் பார்க்கிறவர்களுக்கு வேண்டாம். மீண்டும் சொல்கிறேன்,ஏழாம் அறிவு தமிழர்களுக்கான வெற்றி.
--
அன்போடு
தங்கர் பச்சான்

10 செப்டம்பர், 2011

இன்றும் தொடரும் சடங்குகள்

தமிழர் திருமணங்களில் இன்றும் சில சடங்குகள் தொடர்கின்றன. தமிழர் திருமணம் என்று பொதுவாக கூறிவிட முடியாது. இருப்பினும் நாட்டுப்புற மக்களிடம் குறிப்பாக வன்னியர்களிடம் இன்றுவரை தொடரும் சடங்கு பாலி விடுவது. இது வேளாண்மைத் தொழிலின் எச்சமாகப் பார்க்கப் படுகிறது. நவதானியங்களை முளைக்க வைத்து திருமணத்தன்று நீர் நிலைகளில் விடுவதே இச்சடங்கு.கல்யணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது முது மொழி. வேளாண்மையோடு தொடர்புடைய சமூகத்தின் வெளிப்பாடுகளாக பழமொழியும் இச்சடங்கும் தோன்றுகின்றன.
           நேற்று என் அக்காள் மகன் சிங்கத்தமிழன் திருமணத்தில் இச்சடங்குக்காக திருமுதுகுன்றம் தெப்பக்குளத்திற்கு சென்றோம் அங்கு குடிமகன்களின் நற்செயலால் உடைந்து கிடந்த மதுபாட்டில்களுக்கிடையே நடனமாடியபடி சென்று ஒருவழியாக முளைப்பாரியை குளத்தில் கரைத்தோம். அரசாணி கழியையும் நட்டோம். தானியங்களை முளைக்க வைப்பது அரசங்குச்சியை நட்டு வைப்பதும் இயறகையை அழகு செய்யும் ஒரு வழிமுறையாக இருக்கலாம்.
         அடுத்த சடங்கு சாலும் கரகம் என்பது .இது மணமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கான சடங்காகும். இது தமிழரின் விளையாட்டு மரபைப் பறை சாற்றும் சடங்காகப் பார்க்கலாம். விளையாட்டின் வாயிலாக நாடுகளிடையே மட்டுமின்றி மனித மனங்களுக்கிடையேயும் நல்லுறவு உருவாகும் என்பதற்கு இச்சடங்கு சிறந்த எடுத்துக்காட்டு.
மணக்கோலத்தில் மருத்துவர் சிங்கத்தமிழன், மருத்துவர் கயல்விழிதேவி, மணமகள் பெற்றோர் எழில்ராணி குணசேகரன் மணமகன் பெற்றோர் சுசிலா குமார்.
தெப்பக் குளத்தில் பாலிவிடும் மணமக்கள்
அரசாணி நடும் மணமக்கள்
சாலும் கரகம் விளையாடும் மணமக்கள்
1979 இல் மணமகன் பெற்றோர் குமார் சுசிலா திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களோடு.. இடமிருந்து நிற்பவர்கள் இரத்தின புகழேந்தி, பெரியம்மா ராஜாமணி, பெரியப்பா தனபால், மணமக்கள், எம்.ஜி.ஆர்., பண்ருட்டியார், சி.இராமநாதன்,சின்னப்பொண்ணு.              

 இப்பதிவிலுள்ள படங்களில் சில வரலாறுகள் உண்டு . மணமகனின் பெற்றோரின் திருமணத்தை அன்றைய முதல்வர் ம.கோ.இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர். தான்) நடத்திவைத்தார். அப்போது (1979)திருமண மண்டபங்கள் கிடையாது. எனவே சன்தோஷ்குமர் திரையரங்கில் திருமணம் நடைபெற்றது. மணமகன் தந்தை திரு சி.இராமநாதன் அப்போது விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்தேன். (கண்களை மூடியபடி மேடையில் நிற்கும் சிறுவன் நான்தான்)அவர்களின் மகன் திருமணம் இப்போது என் மகன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். 

20 ஜூன், 2011

திருக்கோயிலூர் கபிலர் குன்று








அண்மையில் திருக்கோயிலூர் நண்பர் அசோக் அவர்களின் புதிய இல்லத் திறப்புவிழாவுக்குச் சென்றேன் நீண்ட நாள்களாகப் பார்க்க எண்ணியிருந்த கபிலர் குன்றினை நண்பர்கள் பிரபாகரன், புருசோத்தமன் ஆகியோரோடு சென்று கண்டு வந்தேன். கபிலர் குன்று பற்றி நண்பர் மு.இளங்கோவன் வலைப்பக்கத்தில் எழுதியுள்ளதை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.
மூவேந்தர்களின் சூழ்ச்சியால் பாரிவள்ளல் இறந்ததும், அவரின் இரண்டு மகள்களும் தாங்கள் அநாதைகளாக இருப்பதை உணர்ந்து,""அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்... இற்றைத்திங்கள்...குன்றும் கொண்டார் எந்தையும் இலமே''(புறம் 112)எனும் பாடலைப் பாடித் தங்களின் கையறு நிலையை அங்கவையும், சங்கவையும் பதிவு செய்தனர்.மாடமாளிகைகளில் வாழ்ந்த அங்கவை, சங்கவை தம் தந்தையாரின் மறைவிற்குப்பின் "கபிலர்' என்ற புலவரின் பாதுகாவலில் இருந்தனர். கபிலரும், பாரியும் நெருங்கிய நண்பர்கள். தம் நண்பன் பாரியின் மறைவுக்குப் பின் அவன் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களைக் கபிலர் வேண்டியதைப் புறநானூறு (200,202) தெரிவிக்கிறது. பாரியைக் கொன்ற வேந்தர்களால் தங்களுக்குத் தொல்லை உண்டாகும் என நினைத்தே மற்ற அரசர்கள் பாரிமகளிரை மணக்க விரும்ப வில்லை போலும்! பின்னர்ச் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்' எனும் அரசனைப் புகழ்ந்து பாடி கபிலர் பரிசில் பெற்றார் (பதிற். 61-70). சேரனின் நண்பனான மலையமான் திருமுடிக்காரியைப் புகழ்ந்து பாடி (புறம் 121-24) பாரியின் இரு ம(க்)களையும் அவன் வழியினர்க்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டுக் கபிலர் வடக்கிருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு (புறம் 236,அடிக்குறிப்பு)உயிர் துறந்தார் என்பது நாம் அறிந்த செய்திகள். அவ்வாறு கபிலர் உயிர்துறந்த இடம் எது?திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "கபிலர் குன்று' (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சிகளால் உறுதி செய்துள்ளார் ஆநிரைக் காவலன்என்னும் அறிஞர். இனிக் கபிலர் குன்றை நோக்சிச் செல்வோம்....திருக்கோவிலூர் பேருந்து நிலையத் திலிருந்து இரண்டு கி.மீட்டரில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று'உள்ளது.மழைக்காலங்களில் நீரோடினாலும் பெரும்பான்மையான காலங்களில் மணலைக்கடந்து கபிலர் குன்றை அடையலாம். கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்' என்றே இந்த இடத்தைக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. கபிலர் குன்றை அண்மைக் காலங்களில் "இடைச்சி குன்று' என்று அழைத்தனர். ஆநிரைக் காவலனின் முயற்சிக்குப் பிறகு தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. இவ்வூரின் அரசுப் பள்ளிகள் அங்கவை, சங்கவை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எனவும்,கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எனவும் அழைக்கப்படுவது பொருத்தமாகும்.கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. குறுகிய படிக்கட்டு வழியாக ஏறிக் கபிலர் குன்றை அடையலாம். கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது.செங்கல்கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகூட்டப்பட்டுள்ளது. கட்டட அமைப்பை நோக்கும் பொழுது, கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணி எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் சாமி சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் கருத இடம் உண்டு. அல்லது பாரி, கபிலர் உருவங்கள் என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை மெருகூட்டப்பட்டுள்ளதால் எக்காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிட முடியவில்லை.திருக்கோயிலூரைப் பார்க்க நினைப்பவர்கள் கபிலர் குன்றின் அழகிய அமைவிடத்தைக் கண்டு களிக்கலாம். இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அப்பகுதிக்குச் செல்ல முடியாதபடி அழகிய வண்ண விளக்குகள், பூங்காக்கள் அமைத்துப் பராமரித்தால் திருக்கோயிலூர் நகர மக்களின் அழகிய பொழுதுபோக்கு இடமாக இதனை மாற்ற முடியும்.பறம்புமலையில் வாழ்ந்த கபிலர் பார்ப்பனர்களிடம் பாரிமகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விட்டார் என இலக்கியங்கள் குறிப்பிடும்பொழுது திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில்,""செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது'' (தெ.இ.க. தொகுதி 7, 863) எனும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டில் இராசராசனின் தாய்வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறிய முடிகிறது. அதுபோல் அக்கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.பல்வேறு போர்கள் நடைபெற்ற,சங்க காலம்முதல் இடைக்காலம், பிற்காலம் வரை, வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கிய திருக்கோவிலூர் ஊரும், பெண்ணையாற்றின் கபிலர் குன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய- பார்வையிடப்படவேண்டிய முதன்மையான இடங்களாகும்.
நன்றி : http://muelangovan.blogspot.com/2007/04/blog-post_599.html

2 ஜூன், 2011

அம்புலி




அழும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவது உண்டு. குழந்தையை காலில் கிடத்தி விளையாட்டு காட்டுவதுதான் அம்புலி என்று நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுவர். பிள்ளைத்தமிழ் இலக்கிய உறுப்பான அம்புலி குழந்தையின் 15 ஆம் மாதத்திற்கு உரியது. இப்பருவத்தில் குழந்தையோடு விளையாட வரும்படி நிலாவை அழைப்பது மரபு.நாட்டுப்புற அம்புலியில் குழந்தையை படத்திலுள்ளவாறு அமர்த்தி கீழ்க்கண்டுள்ள பாடலைப்பாடி விளையாட்டு காட்டுவர்.பெரியவர் பாடலைப்பாட குழந்தையும் பின்பற்றிக்கூறுவதாக விளையாட்டு தொடரும்.

அம்புலி அம்புலி எங்க போன?
ஆவாரங்காட்டுக்கு

ஏன் போன?
குச்சி ஒடிக்க

ஏன் குச்சி?
குழி நோண்ட

ஏன் குழி?
பணம் பொதைக்க

ஏன் பணம்?
மாடு வாங்க

ஏன் மாடு?
சாணி போட

ஏன் சாணி?
ஊடு மொழுவ

ஏன் ஊடு?
பிள்ளைகள் வளர

ஏன் பிள்ளைகள்?
ஆத்து மணலுல... அஞ்சி வெளையாட...
கோரப்பாயில... கொஞ்சி வெளையாட...

பயன்கள்: இவிளையாட்டின் மூலம் குழந்தைகள் கேட்கும் திறனும் பேசும் திறனும் அதிகரிக்கிறது. நமது கிராமப்புற பண்பாடு பழக்கவழக்கங்களையும் குழந்தைகள் அறிந்துகொள்ள உதவுகிறது.

13 மார்ச், 2011

தியாக ரமேஷ்



சிங்கப்பூரில் தமிழ் எழுத்தாளர் கழகம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடும்படியான இலக்கியப் பணிகளை ஆற்றிவரும் இவமைப்பிற்கான செயலவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். அண்மையில் கூடிய 17 ஆம் செயற்குழு தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் தியாக ரமேஷ் அவர்களை செயலவை உறுப்பினராகத் தேர்வுசெய்துள்ளது.
தியாக ரமேஷ் சிங்கப்பூரில் உள்ள ரோட்டரி பொறியியல் நிறுவனத்தில் வடிவமைப்புப் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார். ‘அப்படியே இருந்திருக்கலாம்’ என்ற கவிதை நூலின் ஆசிரியர். ‘நினைவுப் பருக்கைகள்’ என்னும் இவரது கவிதை நூல் அடுத்த மாதம் சிங்கப்பூரில் வெளியாக உள்ளது.சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தி சிராங்கூன் டைம்ஸ் தமிழ் மாத இதழின் சிங்கப்பூர் நிருபராகவும் பணியாற்றி வருகிறார்.
சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து பங்காற்றிவரும் இவரின் பொறுப்பு மிக்க செயல்பாடினைக் கருத்தில் கொண்டு இவருக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கவிஞர் தியாக ரமேஷ் கடலூர் மாவட்டம் கணபதி குறிச்சி கிராமத்தில் பிறந்தவர். இவரின் மனைவி குழந்தைகள் விருத்தாசலத்தில் வசிக்கின்றனர்.
திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கவிஞருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

17 ஜனவரி, 2011