இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

8 அக்டோபர், 2018

காந்தியின் கல்விக்கொள்கைகள்




            காந்தியின் பல கொள்கைகள் இன்றும் சிலரால் பின்பற்றப் பட்டாலும்,  கடுமையான விமர்சனங்களை முன் வைத்து காந்தியக் கொள்கைகளை எதிர்ப்பவர்களும் உண்டு. ஆனால் காந்தியின் கல்விக் கொள்கைகளை நம் நாடு கண்டுகொள்ளமல் விட்டது நமக்கு மிகப்பெரிய இழப்பு என்றுதான் கூறவேண்டும். காந்தியின் ஆதாரக் கல்விக் கொள்கை நம் மண்ணுக்காக சிந்தித்தது. நமக்கான தற்சார்பை வலியுறுத்தியது. முதல் பிரதமரான நேரு இக்கொள்கையை வளர்த்தெடுத்திருந்தால் நம் நாட்டுக் கல்விமுறை மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கும். ஆனால் நேரு அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஆதாரக் கல்வித்திட்டத்தை நழுவ விட்டார்.
கல்வி குறித்து காந்தியின் விளக்கம்: 
            கல்வி என்பது பாட நூல்கள் வாயிலாகப் பெறுவது என்கிற எண்ணம் பல பெற்றோர்களிடம் நிலவுகிறது. இந்த சிந்தனையை காந்தி மறுதலித்தார். பாட நூல்கள் மூலமாகவே அனைத்தையும் கற்பித்துவிடலாம் எனில், ஆசிரியர்களின் சொற்களுக்கு மதிப்பற்றுப் போய்விடும். பாட நூல்களை மட்டும் கற்பிக்கும் ஓர் ஆசிரியர், அவரது மாணவர்களிடத்தில் சுயசிந்தனையை விதைக்க முடியாது” என்றார்.
ஒருவர் கற்கும் கல்வி அவர் வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதனால்தான்  ‘வாழ்க்கைக்கான கல்வி; வாழ்க்கை மூலம் கல்வி; வாழ்க்கை முழுவதும் கல்வி’ என்பதை  காந்தி வலியுறுத்தினார்.  காந்தியக் கல்வியின் அடிப்படையே, தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவது என்பதேயாகும்.
காந்தியக் கல்வியின் கூறுகள்
காந்தியக் கல்வி ஆறு முதன்மைப் பகுதிகளைக் கொண்டது.
1)ஏழாண்டு ஆதாரக் கல்வியை இலவசமாக அரசே தரத்தோடு வழங்க வேண்டும்.
2) ஆதாரக் கல்வியானது முழுக்க முழுக்கத் தாய்மொழிவழிக் கல்வியாக இருக்கவேண்டும். 3)கைத்தொழில் மூலமோ, ஆக்கப்பணி மூலமோ கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.
4) பள்ளியின் சட்ட திட்டங்களிலிருந்து தாங்கள் கற்க வேண்டிய தொழில் உட்பட மாணவர்களே தீர்மானித்து சுயக்கட்டுப்பாட்டுடன் ஒரு சமூகமாகப் பள்ளியை வழிநடத்துவார்கள்.
5)தங்களது சூழலோடு பொருந்துகிற கல்வி 
6)குடிமைப் பயிற்சி. நாட்டின் உயர்ந்த லட்சியங்களாகக் காந்தி கருதிய மதச்சார்பின்மை, வாய்மை, நேர்மை, பொது வாழ்வியல், சமுதாயப் பங்கேற்பு, அகிம்சை வழியில் உரிமைகளைப் பெறும் வழிகளை அறிதல் என அவரது கல்வி விரிவடைகிறது.
            இவை அனைத்துமே இன்றைக்கும் சமூகத்திற்கு பயனுள்ளவையாக, தேவைப் படுவனவாக உள்ளன என்பது வியப்பளிக்கும் உண்மை. இவற்றையெல்லாம் கொள்கை அளவில் மட்டும் கூறி விட்டுவிடாமல்  நடைமுறைப்படுத்தி சோதித்தும் பார்த்தார் காந்தி.
காந்தியின் கல்விச் சோதனைகள்:
காந்தியின் முதல் கல்விச் சோதனை தென்னாப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணை ஆசிரமத்தில் தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து 1915 இல் இந்தியா திரும்பியவர் அன்றைய இந்தியக் கல்வித் திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தியதினார். அதன் விளைவாக, புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கினார். அதன்படி 1917 இல் அகமதாபாத்தில் தன்னுடைய அடிப்படைக் கல்வி மற்றும் புதிய கல்வி எனும் கொள்கைகளின்படி புதிய பள்ளிகளைத் தொடங்கினார். இதே போன்று 1921 இல் குஜராத் வித்யா பீடம் என்ற பல்கலைக்கழகத்தை நிறுவினார்.  விடுதலைப்போராட்டம் தீவிரமான காலத்தில் சேவாகிராமத்தில் வாழ்ந்தபோது, ‘ஹரிஜன்’ இதழில் நாட்டின் கல்வி குறித்து விரிவான ஒரு கட்டுரையை காந்தி எழுதினார். அதில் கல்விமுறையின் பலவீனங்களைப் பின் வருமாறு பட்டியலிட்டிருந்தார்.
·         நமது மரபுக்கும் பண்பாட்டுக்கும் முரண்பட்டதாக இந்த மெக்காலே குமாஸ்தா கல்வி உள்ளது.
·         இந்தக் கல்வி, குழந்தையை நேரடியான சமுதாயச் சூழ்நிலையிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் பிரித்துவிடுகிறது.
·         கற்றவர்களைத் தனி இனமாக, பிரிவாக இன்றைய கல்வி உருவாக்கிவிட்டது.
·         அரசு மற்றும் தனியாருக்குப் பணியாளர்களாக மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சியை மட்டுமே இன்றைய கல்வி  வழங்குகிறது.
·         மாணவர்களின் மனத்தில் சமுதாய உணர்வு இன்றி சுயநல தனிமனித உணர்வு புகுந்துவிட்டது.
·         ஒரு நூற்றாண்டாகத் தொடரும் இந்த அந்நியர் கல்வியில் தொடக்கப் பள்ளி என்பது எந்த முன்னேற்றமுமின்றி வதங்கிவிட்டது.
·         கல்வித் திட்டத்தின் பெரும்பகுதி வாழ்க்கைக்குப் பயன்படாததாக வீணானதாக உள்ளது.
·         பொதுமக்கள் கல்வி முன்னேற்றம் பற்றி இன்றைய கல்வி எண்ணிப்பார்ப்பதே கிடையாது.
·         இயந்திர முறையில் ஒரே மாதிரி கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் - அவரவர் தேவை உணராமல் வழங்குகிறார்கள்.
·         கல்விமுறையும் தேர்வுகளும் கல்வியை மாணவர்களின் உள்ளத்தில் பயத்தை உருவாக்கிப் பெரிய சுமையாகவே மாற்றிவிடுகிறது.
என்று இந்தியக் கல்வி குறித்து கடுமையான அதே நேரத்தில் உண்மையான குற்றச்சாட்டுகளை அக்கட்டுரை முன் வைத்தது.
பின்னர் காந்தி 1937 அக்டோபர் 22 இல் வார்தாவில் தேசிய கல்வி மாநாட்டை கூட்டினார். அது இந்தியத் தேசியக் கல்வி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. கல்வியாளர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் தலைமையில் இந்தியக் கல்வி குறித்து முடிவுசெய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. வார்தா கல்வித் திட்டம் அல்லது ஆதாரக் கல்விக் கொள்கை அந்த கல்விக் குழுவால் பரிசீலித்து முன்மொழியப்பட்டது. பிறகு வர்தாவிலும் செகாவோனிலும் சர்வோதய மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. காந்தியின் மரணத்திற்குப் பிறகு அடிப்படை கல்வி மற்றும் முன்-அடிப்படை கல்விப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
மாற்றுக் கல்வியின் தேவை:
            நடுவண் அரசு அமைத்த தேசிய திட்ட ஆணையம் பல அடிப்படைகளில் காந்தியின் அடிப்படை கல்வி பார்வைக்கு எதிர்ப்பைப் தெரிவித்தது. நேருவின் அரசின் பார்வையானது நாட்டை தொழில்மயமாக்குவதையும், மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதாரத்தையும் கொண்டதாக இருந்ததால், இதில் காந்தியின் 'ஆதாரக் கல்வி' அல்லது சுய-ஆதரவு பள்ளிகளுக்கு இடமின்றி போனது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர அறிவுஜீவிகளாளலும், அரசியல் தலைவர்களாளும் வலியுறுத்தப்பட்டதால் நவீன கல்வி என்று கருதும் இன்றைய கல்விமுறை நம் நாட்டில் பின்பற்றப் படுகிறது. ஆனால் மீண்டும் நம் கல்விமுறை மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் காந்தியின் கல்விக்கொள்கைகள் நமக்கு உறுதியாகத் தேவைப்படும்.

நன்றி: குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி