இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

2 டிசம்பர், 2012

நாட்டுப்புற இலக்கியம் அறிவோம்






நாட்டுப்புற இலக்கியம் அறிவோம் என்ற தலைப்பில் சுட்டிவிகடன் வழங்கும் சுட்டித்தமிழ் நிகழ்ச்சியில் தினம் ஒரு தகவல் தருகிறேன்.
ஒவ்வொரு நாளும் என்ன  தகவல் என்ற அட்டவணை கீழே உள்ளது இயலுமெனில் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு கேளுங்கள் 3 நிமிடம் மட்டுமே அழைப்புக்கட்டணம் சாதாரணக்கட்டணமே.

தொடர்பு எண் - 044-66802905

1.12.12 - இலக்கியங்களின் தாய் - நாட்டுப்புற இலக்கியமே இலக்கியங்களின் தாய் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் கேட்கலாம்.

2.12.12 - வாய்மொழி இலக்கியம் - வாய்மொழி இலக்கியம் எவ்வாறு தோன்றி எப்படி பரவுகிறது என்பதைக்கேளுங்கள்.

3.12.12 - நாட்டுப்புறப்பாடல்கள் - இதில் எத்தனை வகை நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன அவை எப்போது பாடப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

4.12.12 - தாலாட்டு - தலாட்டுப்பாடல் கேட்காதவர் உண்டா? ஆராரோ ஆரிராரோ.. என்ற மந்திரச்சொல்லின் மகிமையை ஒரு பாடலோடு கேட்கலாம்.

5.12.12 -விளையாட்டுப்பாடல்கள் - எத்தனையோ விளையாட்டுப்பாடல்கள் இந்த மண்ணில் புதைந்து கிடக்கின்றன அத்தனையும் நம் குழந்தைகளின் சொத்துகள்.கேளுங்கள்...

6.12.12 - தொழில் பாடல்கள் - கம்பரே வியந்த ஒரு தொழில்பாடல்தான் ஏற்றப்படல் கம்பர் எப்படி ஏமாந்தார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

7.12.12 - நடவுப்பாடல் - வேளாண்தொழிலின் முக்கிய நிகழ்வு நெல் நடவு அப்போது பாடப்படும் பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் கேட்டுப்பாருங்கள்.

8.12.12 - கொண்டாட்டப்பாடல்கள் - மக்களிடம் எத்தனைக் கொண்டாட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் அவர்களிடம் பாட்டு உண்டு பொங்கல் கொண்டாடும் தமிழர்களிடம் என்ன பாட்டு உண்டெனத்தெரிந்துகொள்ளக் கேளுங்கள்.

9.12.12 - நாட்டுப்புறக் கதைகள் - டண் டண் டண் டமுக்கு ஆளுக்கு ரெண்டு அமுக்கு இந்த ஆம கத கேட்டிருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி கேட்டுப்பாருங்க.

10.12.12 - பழமொழிகள் - தமிழக நாட்டுப்புறங்களில் எத்தனை பழமொழிகள் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு பழமொழி கந்தலாட்டுக்காரன் எந்த ரோட்டுல போறான் விருத்தாலத்து ரோட்டுல விரு விருன்னு போறான். இதுபோல் மண் மணம் கமழும் பழமொழிகளைக் கேட்கலாம்.

11.12.12 - விடுகதைகள் - சிற்றூர் மக்களின் பொழுது போக்கு என்றாலும் நாட்டுப்புற விடுகதைகளுக்கு ஒரு புதிர்த்தன்மை உண்டு காயும் கோணக்கா கொள்ளுடா மச்சான் கொள்ளு வெடியும் வெடிச்சுட்டேன் சொல்லுடா மச்சான் சொல்லு. கண்டுபிடித்து விட்டீர்களா விடையை?

12.12.12 - நகைப்புகள் - பத்திரிக்கைகளில் நகைச்சுவைத்துணுக்குகள் படித்திருப்பீர்கள் நாட்டுப்புற நகைப்புகளைக் கேட்டதுண்டா கேட்டுப்பாருங்கள்.

13.12.12 - சிறுவர் வழக்காறுகள் - நாக்க நீட்டாதே வாக்கப்படதே குண்டாஞ்சட்டியில குட்டி போடதே . இது என்ன பாடல் தெரிந்து கொள்ளவேண்டுமா கேளுங்கள்.

14.12.12 - கதைப்பாடல்கள் - பல கதைப்பாடல்கள் ஓலைச்சுவடிகளிலேயே முடங்கிக்கிடக்கின்றன. இவை எந்த சூழலில் பயன்படும் கெளுங்கள்.

15.12.12 - நாட்டுப்புற இலக்கியங்களின் பயன்கள் - நாட்டுப்புற இலக்கியங்களால் ஏதேனும் பயன்கள் உண்டா? விடுதலைப்போராட்டம் முதல் விளையாட்டுப்போட்டிகள் வரை அவற்றின் பயன்பாடுகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி : சுட்டிவிகடன்

22 ஜூன், 2012

தில்லையாடி சரஸ்வதி

தில்லையாடி வள்ளியம்மையை நமக்குத் தெரியும் ஆனால் அவரை காந்தியடிகளிடம் அறிமுகப்படுத்தியவரைத் தெரியுமா. அவர் தில்லையாடி வேதியப்பிள்ளை. அவரின் 82 வயது மகள் திருமதி சரஸ்வதி கூறுகிறார்...
வ.உ.சி. சிறையிலிருந்தபோது அவரின் குடும்பத்திற்கு உதவியதும் இவரின் தந்தைதானாம்.





21 ஜூன், 2012

என் விகடனில் மண்கவுச்சி


என் விகடனில் என் வலைப்பூ பற்றி அறிமுகம் .
இந்த வாரம் ஆனந்தவிகடன், என் விகடன் வலையோசை பகுதியில் மண்கவுச்சி பற்றி அறிமுகப்படுத்தி உள்ளனர்.
நன்றி : ஆனந்தவிகடன்

17 ஜூன், 2012

விருத்தாசலம் பெயர்மாற்றம் கோரிக்கை




விருத்தாசலத்தை திருமுதுகுன்றம் என மாற்றக்கோரி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவும், ஆதாரங்களும் கொடுத்தோம். உடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் குழந்தை தமிழரசன் வந்தார். அவரிடம் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். செய்தி வெளியிட்ட தினமணி, தினமலர் இதழ்களுக்கு நன்றி

18 ஜனவரி, 2012

புதிய கூரைப் பேட்டை




நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பல சிற்றூர்களை விழுங்கியுள்ளது. அவற்றுள் ஒன்று கூரைப்பேட்டை. அந்த ஊரை காமராசர் முதல்வராக இருந்த போது மீண்டும் புதிய கூரைப்பேட்டையாக மறு கட்டமைப்பு செய்துள்ளனர் அந்த ஊர் தறப்பு விழா முதல்வர் காமராசர் தலைமையில் 1957 ஆம் ஆண்டு நடைபெற்றது.
17.01.2012 காணும் பொங்கலன்று அண்ணன் அறிவுமதி அழைக்க கூரைப்பேட்டை திரு . கி. தன்வேல் இ.ஆ.ப. (தற்போதைய திட்ட்க்குழு உறுப்பினர் செயலர்) அவர்களை சந்திக்கச்சென்றபோது பழைய ந்னைவுகளை பகிர்ந்துகொண்டனர். அப்போது அவர்களின் தம்பி திரு . செல்வராசு அவர்கள் கூரைப்பேட்டை திறப்பு விழா அழைப்பை பொக்கிஷம்போல் காத்துவைத்திருந்தார். அந்த அழைப்பை இங்கே வெளியிடுகிறேன். அது பல செய்திகளைச்சொல்லுகிறது. 50 ஆண்டு வரலாறு சொல்லும் அழைப்பு இது.

9 ஜனவரி, 2012

முறம் சில குறிப்புகள்






இல்லத்தில் பயன்படுத்தும் புழங்கு பொருள்கள் பெரும்பாலும் இன்று நவீன மயமாகியுள்ளன.பல பொருள்கள் காணாமல் போய்விட்டன. துடுப்பு, உரி, விளக்குத்தண்டு, அகப்பை, கழுத்துக்கோல் என்று காணமல் போன பொருள்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றும் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருள்களின் பட்டியலில் முறம் இருக்கிறது. பிலாஸ்டிக் முறங்கள் சந்தைகளுக்கு வந்தாயிற்று இருந்தாலும் மூங்கில் பிளாச்சுகளால் செய்யும் முறங்களுக்கு உள்ள வரவேற்பு அலாதியானது.ஆனால் அதை உற்பத்தி செய்யும் தொழிலாள்ர்கள் நிலைதான் வருந்தத்தக்கது. எங்கள் ஊருக்கு முறம் விற்க வந்த பெரியசாமி (63) அவர்களிடம் பேசிய்போதுதான் அவர்களின் கைத்தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை அறிந்தேன்.
தொட்டிநாய்க்கர் சமூகத்தைச் சேர்ந்த இவர் முன்னோர்கள் மூன்று தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுளனர்.முறத்தின் பாகங்களையும் செய்முறையையும் அவர் கூறக் கூற வியப்பில் விழிகள் விரிகின்றன ஒரு முறத்தில் இவ்வளவு செய்தியா! ஒரு மூங்கில் கழி முறமாவதற்கு நான்கு நாட்கள் ஆகின்றன. அதற்கு இரண்டு பேர் உழைப்பும் தேவை. ஒரு கழியில் இருபது முறங்கள் செய்யலாம்.

செய் முறை: மூங்கிலை மூன்று தினுசாகப் பிளக்கவேண்டும் .முறத்தைப் புடைப்பதற்காகப் பிடிக்கும் பகுதியில் சிறிதும் பெரிதுமாக இரண்டு பிளாச்சுகள் அமைந்திருக்கும். அவற்றுள் வெளிப்பக்கமுள்ள பிளச்சுக்கு சலக்குடி என்று பெயர். இது (1மீ.X1.5செ.மீ.X1செ.மீ.) 1மீட்டர் நீளம், 1 செ.மீ. அகலம், 1 செ.மீ. கனம் என்ற அளவில் அமைந்திருக்கும். அதற்கும் உள் பக்கமுள்ள பிளாச்சுக்கு கம்பை என்று பெயர். இது
(1மீ. X 3 செ.மீ. X 1செ.மீ.) என்ற அளவிலும், முன் பகுதியிலுள்ள பிளாச்சு மூங்குடு எனப்படும் இதன் அளவு
(35 செ.மீX1.5 செ.மீ. X 1 செ.மீ. ) ஆகும். உள் பகுதியில் பின்னலுக்கு பயன்படும் மெல்லிய பிளாச்சு அவுனி எனப்படும் . அளவு (1மீ. X 1 செ.மீ. X 2 மி.மீ.) இவற்றை முதலில் தயாரித்துக்கொண்டு பிறகு ஆண்கள் அடிபோட்டுத் தர பெண்கள் பின்னுவர்.

முறத்தின் படிநிலைகள்:

1.மூங்கில்
2.சிம்பு
3.கம்ப
4.சலக்குடி
5.கட்டாக்கணத் துண்டு
6.அரணி (அடி போடுவதற்கு அரணி எனப் பெயர்)
7.தட்டு ( மூலை வளைப்பதர்கு முன் )
8.அவுந்தியம் ( மூலை வளைத்தபின் )
9.முறம்

முறம் செய்வதற்கான கருவிகள்

1. தட்டு அம்பு
2. வாள் அம்பு
3. கொடுவாள்

மூலப்பொருள்கள்

1.மூங்கில்
2.கட்டுக்கொடி

இருபது முறங்களுக்கான உற்பத்தி செலவு.

ஒரு மூங்கில கழி விலை ரூ. 100-
ஆண் ஆள் கூலி நான்கு நாட்களுக்கு : ரூ. 1200-
பெண் ஆள் கூலி நான்கு நாட்களுக்கு : ரூ. 800-
மொத்த செலவு : ரூ. 2100-
ஒரு முறத்தின் உற்பத்தி செலவு : ரூ. 105-
ஒரு முறம் விற்கும் விலை : ரூ. 75-
நூறு ரூபய்க்கு பஞ்சு வாங்கி நூத்து அம்பது ரூபாய்க்கு வித்தா லபமா நட்டமா என்று ஒரு கணக்கினை எங்கள் ஊரில் கேட்க சிறுவர்களான நாங்கள் லாபம் என்று கூற கணக்கு போட்ட தாத்தா நூத்து என்பதற்கு நூலாக நூத்து என விளக்கியபின் நட்டம் என உணர்வோம். அப்படித்தான் இருக்கிறது முறம் விற்கும் தொட்டி நாய்க்கர் வாழ்க்கை.
நாம் இன்னமும்
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்தொக்கொள்"
என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

4 ஜனவரி, 2012

சித்தன்ன வாசல் பயணம் -2




சித்தன்னவாசல் சமணர் படுக்கைகள்



படுக்கையின் தோற்றம்


படுக்கையை வேலி அமைத்து பாதுகாக்கும் நிலை

3 ஜனவரி, 2012

சித்தன்ன வாசல் பயணம்

அரையாண்டு விடுமுறை புதுக்கோட்டையில்தான் என மனைவி மக்கள் முடிவெடுத்தனர். முதல் நாளே சித்தன்னவாசல் பயணம். அரசு விருந்தினருக்கு உள்ள அத்தனை சிறப்புகளுடன் சென்று வந்தோம். சமணர் குடைவரைக் கோயிலில் உள்ள ஊழியர் மூச்சடக்கி பயிற்சி செய்து காண்பித்தார். ஓம் என்ற ஒலி எழும்பியது வியப்பாக இருந்தது. நானும் முயற்சி செய்து பார்த்தேன் ஒலிதான் வர்வில்லை. பண்பாட்டுக் க்ருவூலமான அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நம் கல்லூரி இளைஞர்களிடம் இல்லை என்பது தான் வேதனை. சில படங்களை இங்கே காணலாம்.



சித்தன்ன வாசல் ஓவியத்தை அருங்காட்சி யகத்தில் முழுமையாக நகல் எடுத்து வைத்துள்ளுனர்
குடை வரை கோயில் சுவரில் உள்ள சமணர் உருவம்

ஓவியம் சிதைந்த நிலை
















சித்தன்ன வாசல் ஓவியம் தற்போதைய நிலை

குடை வரை கோயில் பற்றிய அறிவிப்பு
மேலே சென்றால் சமணர் படுக்கைகள் எல்லாம் தற்கால காதலர்களால் சிதைக்கப்பட்டுள்ள நிலை. அடுத்த பதிவில் காணலாம்.