இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

29 மார்ச், 2009

காயத்ரியின் ஒலிம்பிக் கனவு நிறைவேறுமா ?





விளையாட்டுப் போட்டிகளில் உலக அளவில் சாதனை புரிந்தவர்களுக்கு நம் நாட்டு அரசு ஊக்கப்பரிசு வழங்கி அந்த சாதனையைப் பாராட்டுவது நடைமுறை. அதன் மூலம் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் ஊக்கம் பெறுவதோடு மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை ஈட்டி நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார். ஒலிம்பிக் போட்டியிலோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலோ தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ஒரு கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ஐம்பது லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு இருபத்தைந்து லட்சமும் ஊக்கப் பரிசு வழங்குவதற்கு அரசு ஆணையே உள்ளது. அது போலவே காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றவர்களுக்கு இருபது லட்சமும், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு முறையே பதினைந்து லட்சமும் பத்து லட்சமும் வழங்குவதற்கும் அதே அரசு ஆணை வழிகாட்டுகிறது. காமன் வெல்த் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம் வாங்கியதற்காக கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சுஜார்ஜுக்கு தமிழக அரசு பதினைந்து லட்சம் வழங்கியுள்ளது.ஆனால் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பூனாவில் நடைபெற்ற இளையோருக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு 4 ஙீ 100 மீ தொடர் ஒட்டத்தில் தங்கப் பதக்கமும், தடைதாண்டும் ஓட்டத்தில் ஒரு வெள்ளிப் பதக்கமும் ட்ரிபிள் ஜம்ப்பில் ஒரு வெள்ளிப் பதக்ககமும் வென்று நம் தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இது வரை தமிழக அரசு எந்த நிதியும் வழங்கவில்லை, ஏன் என்ற காரணமும் தெரியவில்லை. தற்போது சென்னை புனித வளனார் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு கணினித் தொழில் நுட்பம் பயிலும் காயத்ரிதான் அந்தப் பெண். தடைதாண்டும் போட்டியில் காயத்ரியின் சாதனையை முறியடிக்க இதுவரை இந்தியாவிலேயே யாராலும் முடியவில்லை. 2007 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய தடை தாண்டும் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் 14.40 நிமிடங்களில் இலக்கை எட்டி பூனம் பெல்லியப்பாவின் 11 ஆண்டு கால (14.50) சாதனையை முறியடித்ததோடு மட்டுமல்லாமல் 2008 ஆம் ஆண்டு ஜாம்செட்பூரில் நடைபெற்ற தேசியப் போட்டியில் 14.04 நிமிடங்களிலும் அதே ஆண்டில் மைசூரில் நடைபெற்ற போட்டியில் 14.02 நிமிடங்களிலும் இலக்கை எட்டி இவரது முந்தைய சாதனைகளை இவரேதான் முறியடித்திருக்கிறார். இதுவரை இவரின் இந்த சாதனைகளை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. மேலும் 2007 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், அதே ஆண்டில் தென்கொரியாவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் தடைதாண்டுதலில் ஒரு வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். இவரது சாதனைகளைப் பாராட்டாத பத்திரிகைகள் இல்லை.இவரது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று நம் நாட்டிற்குப் பெறுமை சேர்க்கவேண்டும் என்பதுதான். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த காயத்ரி விளையாட்டு வீராங்கனையானது சுவையான நிகழ்வாகும். இவரது சொந்த ஊர் அரியலூருக்கு அருகிலுள்ள இலந்தங்குழி. தந்தை கோவிந்தராசு, தாய் நவமணி, அக்காள் கயல்விழி, தங்கை கிருத்திகாவோடு தற்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவர் இரண்டாம் வகுப்பு படித்த போது வட்டார விளையாட்டுப் போட்டி ஒன்றை வேடிக்கை பார்க்கச் சென்றிருக்கிறார் அப்போது விளையாட்டுத் திடலின் ஒரு மூலையில் தாண்டிக் குதித்துக்கொண்டிருந்த இவரை உற்று நோக்கிய பயிற்சியாளர் முனைவர் நாகராஜன் இவரிடமுள்ள திறமையைக் கண்டு கொண்டதோடு காயத்ரியின் பெற்றோரை அணுகி காயத்ரிக்கு உரியமுறையில் பயிற்சி கொடுத்தால் எதிர்காலத்தில் பெரிய விளையாட்டு வீராங்கனையாவார் என்று கூறி அன்று முதல் காயத்ரிக்கு இலவசமாகவே பயிற்சி கொடுத்து வளர்த்தெடுத்திருக்கிறார். இவரின் விளையாட்டுத் திறமைக்காகவே சர்ச்பார்க் ஆங்கிலப் பள்ளி கட்டணமில்லாமல் சேர்த்துக்கொண்டது. பள்ளிக்கல்வியை முடித்ததும் புனிதவளனார் கல்லூரி இலவசக் கல்வியும் விளையாட்டுப் பயிற்சியும் காயத்ரிக்கு வழங்கி வருகிறது. ஒரு அரசு செய்ய வேண்டிய பணியைத் தனியார் நிறுவனம் செய்கிறது.இதற்கு உறுதுணையாக இக்கல்லூரியின் இயக்குநர் பாபுமனோகரன் விளங்குகிறார்.ஆனால் வழங்க வேண்டிய ஊக்கப் பெரும் நிதியைக்கூட வழங்காமல் அரசு காலம் கடத்தி வருவது இவரது ஒலிம்பிக் கனவுகளுக்குத் தடைக்கல்லாக உள்ளது. ஆம் ஒலிம்பிக்கில் சாதிக்கவேண்டும் என்பதுதான் காயத்ரியின் அடுத்த இலக்கு. ஒலிம்பிக்கில் வெற்றி பெறவேண்டுமென்றால் குறைந்தது மூன்றாண்டுகளுக்கு வெளிநாடுகளில் தங்கி பயிற்சி பெற வேண்டும் உணவு, உடல் திறன், விளையாட்டுப் பயிற்சி என ஒவ்வொன்றுக்கும் ஒரு வல்லுனரின் கண்காணிப்பில் தயாரானால்தான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்குத் தகுதியுடையவராகலாம் அதற்கு ஒரு கோடி செலவாகும். தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தற்போதுள்ள அரசாணைப் படி காயத்ரி இதுவரை செய்த சாதனைகளுக்காக வழங்க வேண்டிய ஊக்கத்தொகையே 62 லட்சத்து 15 ஆயிரம். இந்தத்தொ தொகையை உடனே வழங்கினால் கூட காயத்ரி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட உதவியாக இருக்கும். காயத்ரிக்கு ஊக்கப் பெரும் நிதியை உடனே வழங்கவேண்டுமென்று அச்சமில்லை பத்திரிகை ஆசிரியர் இறைவன் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் தனிக்கவனத்திற்குக் கொண்டு சென்றால் காயத்ரியின் ஒலிம்பிக் கனவு நிறைவேறும். தொடர்புடைய அதிகாரிகள் கவனிப்பார்களா?

22 மார்ச், 2009

ஈழத்தமிழர் முகாமின் அவல நிலை





ஈழத்தில் போர் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர் இது இன்றைய நிலை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போல போர் கடுமையாக நடைபெற்ற போது இலங்கைத் தமிழ் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க இயலாமல், உயிர் வாழவும் இயலாமல் ஏதிலியராகப் பலர் தமிழகத்திற்கு வந்தனர் அவர்களில் நூறு குடும்பத்தினர் விருத்தாசலம் வந்தனர். அவர்களுக்குக் கடலூர் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்குப் பின்புறமுள்ள இடத்தில் ஒரு குடும்பத்திற்கு பத்தடி நீளம் பத்தடி அகலமுள்ள தற்காலிகக் கொட்டகை அமைத்துத் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். நூறு குடும்பங்களில் ஒரு சில குடும்பங்கள் மீண்டும் நாட்டிற்கு சென்றுவிட ஒரு சிலர் வேறு முகாம்களுக்குச் சென்றுவிட இன்று விருத்தாசலம் முகாமில் ஐம்பத்தெட்டு குடும்பங்கள் மட்டுமே உள்ளன. இவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு மாதத்திற்குக் குடும்பத்தலைவருக்கு ரூ.400, தலைவிக்கு ரூ.250, ஒரு குழந்தைக்கு ரூ.90 வழங்கப் படுகிறது. மேலும் சலுகை விலையில் மாதத்திற்கு அரிசி 12 கி., மண்ணெண்ணெய் 6 லி., சர்க்கரை 2கி. வழங்கப் படுகிறது. விருத்தாசலம் முகாமிலுள்ளவர்கள் அனைவருமே இலங்கையில் மீன் பிடித் தொழிலைச் செய்தவர்கள் அவர்களுக்கு சொத்து எனச் சொல்லிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் மீன் பிடித்தொழிலில் கிடைத்த நல்ல வருமானத்தைக் கொண்டு தரமான வாழ்க்கை நிலையில்தான் அங்கு இருந்திருக்கின்றனர். ஏதிலியராக இங்கு வந்த பின்பு அவர்களுக்குத் தெரிந்த அவர்களின் குலத்தொழிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதிக்கவில்லை நம் அரசு. எனவே வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாய சூழலில் பெரும்பாலானோர் வீடுகளுக்கு வண்ணமடிக்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர்.அதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் அரசு வழங்கும் உதவித் தொகையையும் வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்திவருகின்றனர். அரசு தற்காலிகமாக இருபதாண்டுகளுக்கு முன்பு கட்டிக்கொடுத்த அந்த குடிசைகளை இதுவரை மாற்றவுமில்லை பராமறிக்கவுமில்லை. குடும்பங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்ததும் ஒரு சிலர் இரண்டு வீடுகளை ஒன்றாக்கி சிமிட்டி ஓடுகளைக் கொண்டு மழை, வெய்யிலிலிருந்து பாதுகாத்துக் கொண்டுள்ளனர். இயலாதவர்கள் விதியை நொந்துகுண்டு அரசு அமைத்துக்கொடுத்த அதே குடிசையில் இன்றும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை அரசுக்குத் தெரிவிப்பதற்காக அவர்களுள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் நாளடைவில் அவர் ஊழல் பேர்வழியாகிவிட தற்போது வேறு ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்து மீண்டும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர். பாவம் அவர்கள் வேறு என்ன செய்ய முடியும். முந்தைய ஆட்சியில் இரவில் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டது தற்போது பகலிலும் வழங்கப் படுகிறது அதானால் மின் கட்டணம் அதிகமாகி விட்டதாக வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் புலம்புகின்றனராம் அது எப்போது நிறுத்தப் படுமோ என்ற அச்சத்திலுள்ளனர். முகாமில் கழிவறைகள் உள்ளன அவற்றைப் பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்றனர் ஆண்கள் திறந்த வெளியில்தான். கழிவு நீர் சேமிப்புக் குழி நிரம்பி நீண்ட நாட்களாகிறது அதனை சுத்தம் செய்வதற்காகப் பல முறை கோரிக்கை விடுத்தும் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. குடி நீர் இணைப்பு கொடுத்துள்ளனர் ஆனால் தண்ணீர்தான் வராது எனவே மூன்றடி ஆழமுள்ள குழி அமைத்து அதனுள்ளிறங்கி தண்ணீர் பிடித்துக்கொள்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலுள்ள முகாம்களில் இவர்களுக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளுக்குச் செல்லவேண்டுமெனில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன் அனுமதிக்காகச் செல்கிறவர்களிடமும் கையூட்டு கேட்டு அலை கழிக்கின்றனர் நம் மதிப்பிற்குரிய அலுவலர்கள். அப்படியும் அனுமதி கிடைத்து வெளியூர் செல்லும் போது மாத உதவித்தொகைக் கொடுப்பதற்காக அலுவலர்கள் வந்து விட்டால், அவர்களுக்குரிய உதவித் தொகையை குடும்பத்திலுள்ள பிறரிடம் கொடுப்பதில்லை. மீண்டும் அவர் ஊரிலிருந்து வந்த பிறகு வட்டாட்சியர் அலுவலகம் சென்று கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் அவருக்குரிய உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் விசயகாந்து இதுவரை ஒரு முறை கூட அந்த முகாமுக்குள் சென்று பார்க்கவில்லை.அவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்ன? முகாமிலுள்ள வீடுகளுக்கிடையே ஒற்றையடிப் பாதை அளவுக்குத்தான் இடமுள்ளது. போதுமான நிலப்பரபு இருந்தும் நெறுக்கமாக வீடுகள் கட்டப்பட்டிருப்பதால் காற்றோட்ட வசதியில்லை. எனவே அரசு இருபதாண்டுகளுக்கு முன்பு கட்டிய அவ் வீடுகளைப் பராமறிப்பதற்காக அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதோடு, அவர்களிடம் கருணையோடு நடந்துகொள்ள வேண்டுமென வட்டாட்சியட் அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நகர வளர்ச்சியில் அக்கரையோடு செயல்பட்டு வரும் கோட்டாட்சியர் ஈழத்தமிழர் முகாமை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டுமென்பது அம் மக்களின் எதிர்பார்ப்பு.

14 மார்ச், 2009

ஒற்றுமை வளர்க்கும் கன்னியாயி வழிபாடு



வழிபாட்டிடங்களில் தீண்டாமையைக் கடைபிடிப்பதும் சாதிய மோதல்கள் நிகழ்வதும் இன்றும் நடைமுறையிலிருப்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதற்கு மாறாக ஆதிதிராவிட இன மக்கள் தலைமையில் நடைபெறும் கன்னியாயி வழிபாட்டில் வன்னியர் இன மக்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் வழிபடுவதும், ஆதிதிராவிடர்களிடம் சாட்டையடி வாங்குவதும் இன்றைக்கும் ஒரு சிற்றூரில் நடைமுறையில் உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள மருங்கூரில்தான் மாசி மகத்தன்று இத்தகையத் திருவிழா நடைபெறுகிறது. கன்னியாயி வழிபாடு மருங்கூரில் ஆதிதிராவிடர்களால் பல தலைமுறைகளுக்கு முன்பிருந்தே நடத்தப்பட்டு வருகிறது. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு வரை ஏழு செங்கற்களை நட்டுவைத்து வழிபட்டு வந்திருக்கின்றனர். அதன் பிறகு வாசுதேவ படையாட்சி என்பவர் ஏழு கன்னி சிலைகளை மரச்சிற்பங்களாகச் செய்து கொடுத்துள்ளார். இப்போது நடுகற்களோடு மரச்சிற்பங்களையும் சேர்த்து வழிபட்டு வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் மாசி மகத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாள் காப்பு கட்டுதல், இரண்டாம் நாள் கன்னி தெரு வலம் வருதல், மூன்றாம் நாளான மகத்தன்று கன்னிகள் ஊருக்குத் தெற்கே உள்ள வெள்ளாற்றுக்குச் செல்லுதல் என நடைபெறும். கன்னி ஆற்றுக்குச் செல்வதைக் கிள்ளை முகம் பார்க்கச் செல்லுதல் எனக் குறிப்பிடுகின்றனர். முதலிரண்டு நாள் திருவிழாவும் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியிலேயே நடைபெறுகின்றன. மூன்றாம் நாள் திருவிழாவில் ஆற்றுக்குச் செல்லும் கன்னி வன்னியர்கள் வாழும் தெரு வழியாகச் செல்லும். அப்போது வன்னியர்கள் கன்னிகளுக்குப் பாவாடை, மாலை அணிவித்து மாவிளக்கு மாவிட்டு வழிபடுவர் ஆதிதிராவிட பூசாரி வன்னியர்களுக்கு தீப ஆராதனைக் காண்பித்து திருநீரு வழங்குவர். நீண்ட நாள் நோய்வாய்ப் பட்டவர்கள், பேய் பிடித்திருப்பதாய் நம்புகிறவர்கள் கன்னியிடம் வேண்டிக் கொண்டு ஆதிதிராவிடப் பூசாரியிடம் சாட்டையடி வாங்குவது இன்றும் வழக்கத்திலுள்ளது. ஆற்றுக்குச் சென்று கன்னிகளை இறக்கி வைத்து வழிபாடு செய்து பேய் பிடித்ததாய் நம்பப்படும் கன்னிப் பெண்களுக்கு சாட்டையடி கொடுத்து பேயோட்டுவர். இச் சடங்குகள் முடிந்த பிறகு கோயிலுக்கு திரும்புகையில் கன்னிகளுக்கு மரச்சிற்பம் செய்து கொடுத்த வாசுதேவ படையாட்சியின் வீட்டிற்குச் செல்கின்றனர். இதைப் பிறந்த வீடு எனக் குறிப்பிடுகின்றனர். இவ் வழிபாட்டு முறைகளை உற்று நோக்கும் போது இது பழமையான வழிபாட்டு முறையாகவே தோன்றுகிறது. கோயிலில் விழா தொடங்கும்போது காப்பு கட்டுதல், நடுகல் நட்டு வழிபடுதல், ஆற்றின் நடுவில் கன்னிப் பெண்களுக்குப் பேயோட்டுதல் ஆகிய அனைத்துமே சங்ககாலத்தில் நடந்திருக்கின்றன என்பதைக் கீழ்க்கண்ட சங்கப் பாடல்கள் மூலம் அறியலாம்.
விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாம்; கைந்நூல் யாவாம் (குறு: 218 ; 2)
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் (அகம்: 67 ; 9-10) வேற்றுப் பெருந்தெய்வம் பலஉடன் வாழ்த்தி, பேஎய்க் கொளீஇயள் இவள்.....(குறு : 263 ; 4-5 )
இப்பாடல்கள் இவ்வழிபாட்டின் தொன்மையை உணர்த்துவது போல வேறு சில வழக்காறுகள் ஆதிதிராவிடர்கள் பழங்காலத்தில் உயர்வான இடத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன. இவர்கள் சமய குருவாக இருந்து பல சடங்குகளை நடத்தியுள்ளனர். சில பழங்கோயில்களில் இவர்களுக்கு தனி மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் கோயில் திருவிழாவின் போது ஆதிதிராவிடர் ஒருவர் யானை மீது அமர்ந்து கொடி பிடித்துச் செல்லும் வழக்கம் அண்மைக்காலம் வரை நடைமுறையில் இருந்ததாக பேராசிராயர் தொ.பரமசிவன் குறிப்பிடுவார். பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பாரில்லாமல் கீழ்ச்சாதியானான் என்று ஒரு சொல்லடை உண்டு, அதற்கேற்ப காலப்போக்கில் ஆதிதிராவிடர்கள் தாழ்த்தப்பட்ட சமூகமாக சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இந்நிலையில் மருங்கூரில் நடைபெறும் இத்திருவிழா தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதாக உள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும்.
காணக:தமிழ் ஓசை களஞ்சியம்

11 மார்ச், 2009

ஆகாசவீரன் வழிபாடு





போரில் இறந்தவர்களின் நினைவாக நடுகல் அமைத்துவழிபடும் மரபு தமிழர்களிடையே உண்டு என்பதற்கு சானறுகள் காணப்படுகின்றன. இது ஒரு தொன்மையான வழிபாட்டு முறையாகக் கருதப்படுகிறது. இதனைத்தான் முன்னோர் வழிபாடு என்ற கோட்பாடாக அறிஞர்கள் வளர்த்தெடுத்தனர். இறந்தோரின் ஆற்றல் வாழ்வோரின் நலனில் பெரும்பங்காற்றுகிறது எனும் கருத்தாக்கத்தால் ஏற்பட்டதே முன்னோர் வழிபாடாகும். சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இத்தகைய வழிபாடு காணப்படுகிறது என்பார் முனைவர் ஆறு.இராமநாதன். இந்த வழிபாட்டு முறைதான் நாளடைவில் குல தெய்வ வழிபாடாக மாறியிருக்கலாம் இதனை பகுத்தறிவுப் பார்வையில் மூட நம்பிக்கை என்று புறம் தள்ளிவிட முடியாது. மக்களின் வழிபாட்டு முறை என்பது நாட்டின் பண்பாட்டு வரலாற்றோடு தொடர்புடைய ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு இனக்குழு மக்களின் பண்பாட்டுத் தொன்மையை வெளிப்படுத்துவதாகும். சிற்றூர்கள் தோறும் இன்றும் இவ்வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மணிமுத்தாறு வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள அழகியசிற்றூர் மருங்கூர். அங்கு வாழும் வன்னிய இன மக்களில் க(£)லிங்கராயர் என்ற பட்டப்பெயருடைய பங்காளிகள் குல தெய்வமாக ஆகாச வீரனை வழிபட்டு வருகின்றனர். இவ்வழிபாட்டு முறை முற்றிலும் மாறுபட்டதாகவும், பண்பாட்டுத் தொன்மையுடையதாகவும் விளங்குகிறது. சிறு தெய்வம் என நிறுவன சமயத்தினரால் குறிப்பிடப்படும் வழிபாட்டு இடங்களில் வேல், சிலை, மரம் என ஏதேனும் ஓர் அடையாளம் காணப்படும். ஆனால் ஆகாச வீரனுக்கு எவ்வித அடையாளமும் பூமியில் இல்லை. வானத்தில் அவர்களின் வீரன் இருப்பதாக நம்புகின்றனர். பங்காளிக் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வேண்டிக்கொண்டு ஆகாச வீரனுக்கு பூசை செய்வது வழக்கம். ஆடு, பன்றி ஆகிய உயிர்களை வீரனுக்கு வேண்டி விட்டு அவற்றைப் பலியிடு வர். இவ்வாறு உயிர்ப்பலி கொடுத்து நடத்தப்படும் பூசை பிலி பூசை எனக் குறிப்பிடப் படுகிறது(பலி பூசை என்பது பிலி பூசை என மருவியிருக்கலாம்) உயிர்ப்பலியின்றி, பொங்கல் மட்டும் பொங்கி செய்யப்படும் பூசை பா(ல்) பூசை எனப்படும். பூசைக்கு இன்றும் கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தப்படுகிறது. மண்பானை, சட்டி, அகப்பை ஆகியவற்றை மட்டுமே சமைக்கப் பயன் படுத்துகின்றனர். மஞ்சள், மிளகு ஆகியவற்றைத் தவிர உப்பு, புளி, மிளகாய் என எதையும் பயன்படுத்துவது இல்லை. நெல்லைக் குற்றுவது மஞ்சளரைப்பது என அனைத்துப் பணிகளையும் ஆண்களே செய்யவேண்டும். பூசைக்குப் பொருள்களைக் கொண்டு செல்லும் போதும், மஞ்சளரைத்து எடுத்துச்செல்லும் போதும் எதிரில் யாரும் வராமலிருக்கும்படி அறிவிப்பு செய்து அதன் பிறகே எடுத்துச்செல்வர். சமைத்த உணவு வகைகளைப் படைப்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்துவதில்லை. பொரச இலையைத் தைத்துத் தையல் இலையாகப் பயன்படுத்துவர். இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது. காட்டுமல்லிப் பூவைத்தான் பூசைக்குப் பயன்படுத்துகின்றனர். படைக்கும்போது பூசை செய்பவர் வாயைக் கட்டிக்கொள்வார். பூசைக்கு சூடம், சாம்பிராணி தவிர பிற பொருள்கள் பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு இலைக்கும் முன்பாகச் சூடத்தைக் கொளுத்தி எரியச்செய்வர். பூசையில் கலந்து கொள்ளும் ஆண், பெண், சிறுவர்கள் அனைவரும் வெள்ளை உடையில்தான் வர வேண்டும். கறுப்பு நிற நாடாவோ, அறைஞாண்கயிரோ அணியக் கூடாது. ஆகாச வீரனுக்குக் கறுப்பு ஆகாது என்பதால் அக்குடும்பத்தினர் எப்போதும் கறுப்பு நிற அரைஞாண் கயிறு அணிவதில்லை. பூசை முடிந்ததும் முதல் உணவை ஆகாயத்தை நோக்கி வீசுவது மரபு. ஆகாச வீரன் அவ்வுணவைப் பெற்றுக்கொள்வார் என நம்புகின்றனர். இப்பூசையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நீத்தார் நினைவுச் சடங்கு போலவே அமைந்துள்ளன. பூசையன்று பெண்கள் தலையில் பூச்சூடுவதில்லை. அன்று தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்பதில்லை. உப்பின்றிச் சமைப்பது, பூசைப் பொருள்களைக் கூடையில் வைத்து எடுத்துச் செல்வது, அப்போது எதிரில் யாரும் வராமலிருப்பது, பெண்கள் வெள்ளை உடை அணிவது ஆகிய அனைத்தும் இறப்புச் சடங்கோடு தொடர்புடையவை. எனவே தங்கள் இல்லத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போரில் இறந்த வீரனையே இவர்கள் தெய்வமாக வழிபடுவதாகக் கருதலாம். இக்காலிங்கராயர்களின் குடும்பம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பங்காளிச் சண்டையில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்பதை இவர்களிடம் நிலவும் வாய்மொழிக் கதையின் மூலம் அறிய முடிகிறது.