இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

16 அக்டோபர், 2009

ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த பழமலைநாதர் கோயில்



தமிழகப் பழங்கோயில்களில் குறிப்பிடத் தகுந்தது விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர்கோயில்.சங்க இலக்கிய நூலான அகநானூற்றில் 197 ஆவது பாடலில் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாமூலனார் என்ற புலவர் விருத்தாசலத்தை 'தேம்முதுகுன்றம்' என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் பழமலைநாதரைப் பற்றிப் பாடியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக பதிமூன்றரை கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த இரிடேசியஸ் என்ற வகை சுண்ணாம்புப் பாறைகள் மீது இக்கோயில் கட்டப்பட்டிருப்பதாக நிலவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனாலும் துல்லியமாக இக்கோயில் யாரால் எப்போது கட்டப்பட்டது என்பதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளை தமிழகத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. அக்கல்வெட்டுகளில் கோயிலுக்குத் திருப்பணி செய்தவர்கள், நிலம் கொடுத்தவர்கள், நன்கொடையளித்தவர்கள் பற்றிய குறிப்புகள் மட்டுமே காணக் கிடைக்கின்றன.பத்தாம் நூற்றாண்டில் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி இக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. மேலும் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், உத்தம சோழன், இராசராச சோழன், இராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன் ஆகிய சோழ மன்னர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சோழ மன்னர்களைத் தொடர்ந்து காடவராயன், கச்சிராயன், அரியண்ண உடையார், பருவூர் பாளையக்காரர் ஆகிய குறுநில மன்னர்களும் இக்கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1760 இல் ஆங்கில ஆட்சியாளர்கள் இக்கோயிலைச் சுற்றி அகழி வெட்டி கோட்டையாக்கினர். அதனடையாளமாகத்தான் இன்றும் கோயிலைச்சுற்றியுள்ள தெருக்கள் தென்கோட்டை வீதி, வடக்குக் கோட்டை வீதி எனக் குறிப்பிடப்படுகின்றன. கோட்டையை எதிரிகள் முற்றுகையிட்டு தாக்கியதற்கான அடையாளங்களாகச் சிதிலமடைந்த சிற்பங்கள் பல கொயிலில் இன்றும் காணக் கிடைக்கின்றன. 1803 ஆம் ஆண்டு கார்ரோ என்ற ஆங்கில ஆட்சியாளர் அகழிகளைத் தூர்த்து மீண்டும் கோயிலாக்கினார். அவரைத்தொடர்ந்து சார்லஸ் கைடு என்ற மாவட்ட ஆட்சியரும் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளார். தேவாரத் திருப்பதிகங்களில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் திருமுதுகுன்றத்தின் சிறப்புகளைப் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழிலும், வள்ளலார் திருவருட்பாவிலும் திருமுதுகுன்றம் பற்றி பாடியுள்ளனர். இத்தகைய பழமையும் சிறப்பும் பெற்று விளங்கும் இக்கோயிலை பக்தர்கள் மட்டுமே சென்றுவரக்கூடிய ஓர் இடம் என்று ஒதுக்கி விட முடியாது. கலை ஆர்வலர்களுக்கும் கண்களுக்கு விருந்து படைக்கும் பல அரிய கலைப் படைப்புகள் இங்கு அமைந்துள்ளன.
பழங்கால சிற்பிகளின் கை வண்ணதைப் பல்வேறு சிற்பங்களில் காணமுடிகிறது. குறிப்பாக கோயிலின் வடக்கு, தெற்கு கோபுர வாயில்களில் அமைந்துள்ள ஆடல் மகளிர் சிற்பங்களில் பல நுட்பமான பரதநாட்டிய அடவுகள் வடிக்கப்பட்டுள்ளன. பரத நாட்டியக் கலை நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்ற மூன்று வகையான ஆடல் முறைகளைக் கொண்டது என்பர் இசையறிஞர்கள். கை, கால் அசைவுகளைக்கொண்ட தாள நுட்பங்களோடமைந்த அடவுகள் நிருத்தியம் என்ற ஆடல் முறையில் அடங்குவதாகும். இது போன்ற ஆடற்சிற்பத் தொகுதிகள் தஞ்சாவூர், சிதம்பரம், தாராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களில் காணப்படுகின்றன. இவற்றுள் காலந்தால் முந்தயதாகக் கருதப்படுகிறது விருத்தாசலம் கோயில் சிற்பங்கள். இச்சிற்பங்களில் ஆடலாசான் நெறிப்படுத்த நடனமாடும் ஆடல் மகளிர், இசைக்கருவி முழங்க நடனமிடும் காட்சி, தண்ணும்மைக்காரருடன் நடன மங்கை என பல வகையான நுட்பமான சிற்ங்கள் வடிக்கப்பட்டு காண்போர் கண்களைக் கொள்ளைகொள்ளும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளன. சிற்பிகள் சிற்பக்கலையில் மட்டும் வல்லவராயிருந்தால் மட்டும் இந்தகைய கலை நுட்பம் சிற்பத்தில் வெளிப்பட்டுவிடாது. ஆடல் கலை நுட்பங்களும் அறிந்திருந்தால் மட்டுமே இத்தகைய சிற்பங்கள் வடிப்பது சாத்தியம். அக்கால சிற்பிகள் இரு வேறு கலைகளில் ஒருங்கே அறிவாற்றல் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர் என்பதற்கு இத்தகைய சிற்பங்கள் சானறாதாரங்களாக இன்றும் திகழ்கின்றன. தமிழர்களின் கலைத் தொன்மையை உலகுக்கு பறைசாற்றுவதாகத் திருமுதுகுன்றம் கோயில் சிற்பங்கள் விளங்குகின்றன.
பழமலை தோன்றிய கதை
பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார். அப்பொழுது திருமால் தீயவர்களை வெட்டி வீழ்த்த வெட்டுண்ட உடல்கள் பிரம்மன் படைத்த நீரில் வீழ்ந்து மிதந்தன.அதைக்கண்ட நான்முகன் சிவபெருமானிடம் வேண்ட நீரும் அவ்வுடல் தசைகளும் ஒன்றாக இறுகி சிவபெருமானே மலைவடிவாகத்தோன்றி நின்றார். இதனை அறியாத மலரவன், வேறு பல மலைகளைப் படைத்தார். தான்படைத்த மலைகளுக்கு இருக்க இடமில்லாததைக் கண்டு மயங்கி நின்ற போது ," ஏ அறிவிலியே நாமே இம்மலை வடிவாகத் தோன்றி நின்றோம் நான் வேறு இம்மலை வேறு இல்லை. இந்த மலை தோன்றிய பின்னரே உன்னால் பல மலைகள் தோன்றின. ஆதலின் நம் மலைக்கு பழமலை என்றே பெயர் வழங்குவதாக. மேலும் இப்பழமலை மண்ணுலகுக்கு அச்சாணியாக அழுந்தி நின்று மேலே சிவலிங்கமாக விளங்கி நிற்கும். இதனை வழிபட்டோர் விரும்பிய பயனை எய்தி இன்புறுவர்." என்று கூறி சிவபெருமான் மறைந்ததாக விருத்தாசல புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பழமலைநாதரின் சிறப்புகள்
பழமலைநாதர் கோயில் மற்றகோயில்களிலிருந்து மாறுபட்டதும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதுமாகும். நடுநாட்டுத் திருத்தலங்கள் இருபத்திரண்டில் ஒன்பதாவதாகப் போற்றப்படுகிறது. இங்கு உயிர் நீப்பவர்களை பழமலைநாதர் தன் மடி மீது கிடத்தி ஐந்தெழுத்து உபதேசம் செய்ய பெரிய நாயகி முந்தானையால் வீசி முக்தியளிப்பதாக கந்தபுராணத்தில் கச்சியப்ப முனிவர் குறிப்பிட்டுள்ளார். சைவர்கள் 'சிவாயநம' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை எப்போதும் உச்சரித்தபடி இருப்பர். இக்கோயிலில் பல ஐந்தின் சிறப்புகள் அமைந்துள்ளன.கோயிலில் அமைந்துள்ள கோபுரங்கள் ஐந்து. திருச்சுற்றுகள் ஐந்து. கொடிமரங்கள் ஐந்து. நந்திகள் ஐந்து. தீர்த்தங்கள் ஐந்து. லிங்கங்கள் ஐந்து. தேர்கள் ஐந்து. உள் மண்டபங்கள் ஐந்து. வெளி மண்டபங்கள் ஐந்து. கடவுளின் பெயர்கள் ஐந்து. கடவுள் அமைந்துள்ள ஊருக்கும் பெயர்கள் ஐந்து.மேலும் பல சிறப்புகள் இக்கோயிலுக்கு உண்டு.அறுபத்து மூன்று நாயன்மார்களும் உள்ள ஒரே கோயில் இதுதான். ஆழத்து வினாயகர் அமைந்திருப்பதும் இக்கோயிலில் மட்டும்தான்.
காசிக்கு வீசம் அதிகம்
காசிக்கு வீசம் சாஸ்தி விருத்தாசலம் என்றொரு வழக்காறு இப்பகுதி மக்களிடையே தொன்றுதொட்டு புழக்கத்திலிருக்கிறது. காசிக்கு சென்று நீராடுவது புனிதமானதாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மணிமுத்தாற்றில் நீராடினால் அதைவிட அதிக பலனைத் தரும் என மக்கள் நம்புகின்றனர். அதனால்தான் விருத்தாசலம் விருத்தகாசி என்றும் குறிப்பிடப்படுகிறது. நெற்குப்பை என்ற மற்றுமொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு.
மணிமுத்தாற்றின் சிறப்புகள்.
இக்கோயில் மணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது. மணிமுத்தாறு குறித்தும் மக்களிடையே பல நம்பிக்கைகள் நிலவுகின்றன. மணிமுத்தாறு கோயிலின் வடக்கு, கிழக்கு ஆகிய இரு திசைகளிலும் அரை வட்ட வடிவில் செல்கிறது. இவ்வாற்றில் நீராடி பழமலைநாதரை வழிபட்டால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. கோயிலின் வடக்கு கோபுரத்திற்கும் நேர் வடக்கில் ஆற்றில் குளிப்பதே சிறந்தது என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த இடம் புண்ணிய மடு என குறிப்பிடப் படுகிறது. இவ்விடதில் இறந்தவர்களின் எலும்புகளை இட்டால் அவை கல்லாக மாறி இறந்தவரின் உயிர் நற்பயனை அடையும் என்பதும் இன்னொரு நம்பிக்கை. மணிமுத்தாற்றுக்கு இன்னொரு சிறப்புமிருப்பதாகக்கூறுகின்றனர். இந்த நம்பிக்கையினடிப்படையில் தான் இன்றும் நீத்தார் இறுதிச் சடங்குகளையும், இறந்தவர்களின் நினைவாக மாசி மகத்தன்று திதி கொடுப்பதையும் மணிமுத்தாற்றில் செய்கின்றனர்.

ஆற்றிலிட்டு குளத்தில் தேடியது.
ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பழமலைநாதர் மேல் திருப்பதிகம் பாடி சில நாள் திருமுதுகுன்றத்தில் தங்கியிருந்தார். அப்போது பொன் வேண்டும் என்னும் குறிப்போடு 'மெய்யை முற்றப் பொடி பூசியோர் நம்பி..' என்றோர் பதிகம் பாடினாராம். பழமலை நாதர் குறிப்புணர்ந்து பன்னீராயிரம் பொன் கொடுக்க இப்பொன்னெல்லாம் திருவாரூர் வந்து கிடைக்குமாறு அருள் செய்ய வேண்டும் என்று மீண்டும் வேண்டினாராம். பழமலைநாதர், " சுந்தரரே நீ இப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டுச்சென்று திருவாரூர் கமலாலயக் குளத்தில் எடுத்துக்கொள்வாயாக" என்று கூற அவ்வாறே சுந்தரமூர்த்திநாயனார் செய்தார். பொன்னை ஆற்றிலிடும்போதும் குளத்திலிருந்து எடுக்கும் போதும் மாற்று உரைத்துப் பார்த்ததற்கு வினாயகர்தான் சான்றாகத் திகழ்ந்தாராம் அதனால்தான் திருவாரூரிலும் விருத்தாசலத்திலும் மாற்றுரைத்த வினாயகர் சிலைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தல விருட்சம்
வன்னி மரம் பழமலைநாதரின் தல விருட்சமாகும். இது மிகவும் பழமையான மரமாகும் இரண்டாயிரம் வயது மரம் எனக்குறிப்பிடுகின்றனர். முதன் முதலாக இக்கோயிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்குக் கூலியாக வன்னிமரத் தழைகளை உருவிக் கொடுக்க அது அவரவர் உழைப்புக்கேற்ப ஊதியமாக மாறியதாகவும் ஒரு வாய்மொழிக் கதை உண்டு. இங்கு பல சிவனடியார்கள் ஓதுவார்களாக தேவாரம் பாடுகின்றனர். வடக்குக்கோட்டை வீதியிலுள்ள வேதாந்த மடத்தின் நிர்வாகியும் ஓதுவாருமான ஞானப்பிரகாச சுவாமிகள் இக்கோயிலில் பத்து ஆண்டுகளாக ஓதுவாராக திருப்பணி செய்து வருகிறார். தேவார தலபுராணம் என்ற நூலை இம் மடம் வெளியிட்டுள்ளது. இறைவன் ஒளி வடிவில் நமக்குள்ளே இருக்கிறான் நாம் நாள்தோறும் அவ்வொளியால் உடலுக்குத்தேவையான வெப்பத்தைப் பெறுகிறோம் கவ்வெப்பமே நாளடைவில் நம்மை ஆட்கொண்டுவிடும் இதைத்தான் முக்தியடைதல் என்கிறோம் எலும்பு கல்லகா மாறுவதும் இதனடிப்படையில்தான் என்று கூறினார். என்ன உங்களுக்கும் ஒரு முறை விருத்தாசலம் சென்று வர வேண்டுமெனத் தோன்றுகிறதா. சென்னையிலிருந்து தொடர் வண்டியில் மூன்றரை மணி நேரப் பயணம்தான் வாருங்கள் வந்தாரை வரவேற்கும் திருமுதுகுன்றம். இத்தகைய பழமையும் பெருமையும் வாய்ந்த திருமுதுகுன்றம் என்ற அழகானத் தமிழ்ப் பெயர் காலப்போக்கில் விருத்தாசலம் என்று வட மொழியால் வழங்கப்படுகிறது. முது என்னும் சொல் விருத்தம் என்றும் குன்றம் என்பது அசலம் என்றும் வடமொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த கட்டுரையின் விரிவாக்கம்