இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

9 மார்ச், 2015

மாடித்தோட்டம்- அசத்தும் கோவை இளைஞர்





எதிர்பாராமல் படிக்கநேர்ந்தது தோட்டம் வலைப்பூ. மாடித்தோட்டம் போட்டு அசத்தும் அந்த இளைஞரின் செயல் அவர்மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியது, தொடர்புகொண்டேன். தோட்டம் பற்றிய பல தகவல்கள் கொட்டிக்கிடக்கும் அவர் வலைப்பூவை இங்கே அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.
அவரையைத் தாக்கும் அசுவினி பூச்சியயை ஒழிக்க அவர் தெளித்த பூச்சிக்கொல்லி என்ன தெரியுமா? படித்துப்பருங்கள். அதிர்ந்து போவீர்கள். கிண்டலுக்காகத்தான் அந்த குளிர்பானத்தைப் பூச்சிக்கொல்லி என்று சொல்வோம் உண்மையில் அது பூச்சியைக்கொன்றிருக்கிறது.
தோட்டம் சிவா ஒரு மென்பொருள் பொறியாளர் அவர் தோட்டப் பயிரில் இவ்வளவு கவனம் செலுத்துவது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அவரின் பேட்டி இதோ.

உங்களைப்பற்றிய சுய அறிமுகம்?
இந்த பதிவில் கொடுத்துள்ளேன்.
என்னை பற்றி சொல்லவேண்டும் என்றால், சொந்த ஊர் திருநேல்வேலி அருகில் திசையன்விளை. வளர்ந்தது, பள்ளி படிப்பு எல்லாம் திருச்செந்தூர் அருகில் நாசரேத்தில்.  பொறியியல் படிப்பு சென்னையில் (MIT, Chrompet). பிறந்த வருடம் 1976 (வயது 39). வேலை, இங்கே கோவையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில். கடந்த பதினான்கு வருடமாக சாப்ட்வேர் துறையில் தான். முதலில் சென்னையில் வேலை, பிறகு ஒரு ஐந்து வருடம் அமெரிக்காவில்(Minneapolis, 2001 – 2005) , பிறகு சென்னை. தற்போது கோவையில் செட்டில்.    

முதன்முதலில் தோட்டம் அமைத்தது எப்போது?
சின்ன வயதில் மழைக்கு உரக்குழிகளில் முளைத்து நிற்கும் செடிகளை கொண்டு அமைத்த தோட்டம் தான். பிறகு பெரிய அளவில் திட்டமிட்டு ஆரம்பித்தது இங்கு கோவையில் தான் ( 2010-ல்)
இதற்காக பயிற்சிகள் பெற்றீர்களா?
பயிற்சி ஒன்றும் பெறவில்லை. கட்டணம் கொடுத்து ஒரே ஒரு பயிற்சி வகுப்பு சென்றேன். அதில் மாடித் தோட்டம் பற்றிய பொருட்கள் பற்றி விவரம் கிடைத்தது. மற்ற படி நாமே கற்றுக் கொள்வது தான். 
தோட்டதிதிற்காக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள்?
தினமும் ஒரு மணி நேரம். வார இறுதியில் மூன்று-நான்கு மணி நேரம் (புதிதாய் செடிகள், நாற்றுகள் தயாரிக்கும் போது)
வலைப்பூ தோட்டம்எப்போது தொடங்கினீர்கள்?
வலைப்பூ விவரம் படி April 2012-ல் ஆரம்பித்திருக்கிறேன். பெரிதாய் திட்டம் போட்டு ஆரம்பிக்கவில்லை. இப்படி எழுதவும் நினைக்கவில்லை. அலுவலக நண்பர்களிடம் எனது தோட்டம் பற்றி பகிர்ந்து கொள்ளும் ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்து, இந்த அளவில் வந்திருக்கிறது.  
தினமும் தண்ணீர் ஊற்றுவீர்களா?
மாடி தோட்டம் என்றால் இரண்டு நாளுக்கு ஒரு முறை. கீழே தரையில் செடிகளுக்கும் மரங்களுக்கும் மூன்று-நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றினால் போதும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது?
வீட்டில் நிறைய மரங்களும் உண்டு. வாரத்திற்கு இரண்டு நாள் நீர் பாயச்சுவதுண்டு. ஒரு முறை தோட்டம், மரங்கள் என்று சேர்த்து ஆயிரம் லிட்டர்கள் ஆகலாம் என்று நினைக்கிறேன்.
களைகள் வருகின்றனவா?. எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள்?
களைகள் இல்லாமல் எப்படி J . நேரம் கிடைக்கும் பொது களை எடுத்து விடுவேன் (பிடுங்கி போடுவது மட்டும் தான். களைக்கொல்லி ஏதும் பயன்படுத்துவதில்லை).
தேவையான மண்ணை எங்கிருந்து பெறுகிறீர்கள்?
அருகில் உள்ள நர்சரிகளில் இருந்து. பெரிதாய் தரம் எல்லாம் பார்த்து வாங்குவதில்லை. நல்ல செம்மண் என்று தெரிந்தால் வாங்கி கொள்வேன்.
உங்களுடன் பணியாற்றுபவர்களுக்கு உங்கள் தோட்டம் பற்றி தெரியுமா?
முதலில் நான் தோட்டம் வலைப்பூ ஆரம்பித்தே என் அலுவலக வலைப்பூ தளத்தில் தான். அதை அப்படியே வெளியே உள்ள வலைப்பூவிலும் பதியலாம் என்று ஆரம்பித்தது தான் தோட்டம் வலைப்பூ. அலுவலக வலைப்பூவில் இருநூறு பேருக்கு மேல் என் வலைப்பூவை தொடர்ந்தார்கள். ஆனால் நான் நினைத்த மாதிரி எனக்கு தோட்டம் மேல் ஆர்வம் உள்ள நண்பர் வட்டம் ஓன்று கூட அமையவில்லை. நேர விரயம் என்று ஒரு கட்டத்தில் அந்த வலைப்பூவை நிறுத்தி விட்டேன்.     
உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் இது பற்றி உங்களுடன் பேசுவார்களா? அவர்கள் உங்கள் தோட்டம் பற்றி என்ன நினைக்கின்றனர்?
நிறைய பேர் பேசுவார்கள். நிறைய பகிர்தல் நடக்கும். ஏதும் நாற்று கிடைத்தால், விதை கிடைத்தால் கொண்டு வந்து கொடுப்பார்கள். செடிகள் பற்றி, விதைகள் பற்றி விசாரிப்பார்கள்.  
உங்கள் மனைவி குழந்தைகள் எப்படி ஒத்துழைக்கின்றனர்? அவர்கள் உதவுகிறார்களா?
அவர்கள் ஒத்துழைப்பு நிறையவே உண்டு. என் அளவுக்கு இறங்கி வேலை செய்யவில்லை என்றாலும், திட்டமிடுவதில் இருந்து செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது என்று வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நான் என்ன தான் விளைவித்தாலும், அதை சந்தோசமாய் பறித்து சமையலுக்கு பயன்படுத்தினால் தானே நான் செலவிடும் நேரம் சந்தோசமாகும்.      
உங்கள் தேவை போக மீதம் ஏற்படும் காய்களை என்ன செய்கிறீர்கள்?
செந்த பந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்போம்.
தற்போது தோட்டத்தை விரிவு படுத்துவதன் நோக்கம் என்ன்?
நான் இப்போது செய்து கொண்டிருப்பது ஒரு சோதனை முயற்சிகள் தான். வீட்டிற்கு தேவையான காய்கறி (வெங்காயம் முதல் கொண்டு) தோட்டத்தில் இருந்தே எடுப்பது தான் எனது நோக்கம். அதற்க்கு இன்னும் நிறைய இடம் வேண்டும். அதனால் தான் விரிவு படுத்த திட்டமிட்டு இருக்கிறேன்.
நீங்கள் உற்பத்தி செய்வதை மட்டுமே சமைக்கிறீர்களா? கடையில் வாங்குவதுண்டா?
வீட்டுத்தேவை முழுவதும் பூர்த்தி செய்வது தான் எனது நோக்கம். என்றாலும் அதற்கு இன்னும் கொஞ்ச காலம் எடுக்கும். இப்போதைக்கு சில காய்கறிகள் (வெங்காயம், ஆங்கில காய்கறிகள்) கடையில் தான் வாங்க வேண்டிய உள்ளது.
வேளாண் பல்கைக்கழகத்தினருக்கு உங்கள் தோட்டம் பற்றித்தெரியுமா?
அந்த அளவுக்கு நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லையே. இங்கே கோவையில் என்னை விட பெரிய அளவில், ஆர்வமுடன் வீட்டுத்தோட்டம் செய்யவர்கள் நிறைய பேர் உண்டு. நான் செய்வதை இணையத்தில் எழுதுகிறேன். அவ்வளவு தான் வித்தியாசம்.
தோட்டம் சிவா என்பது யார் சூட்டிய பெயர்?
பெயர் எல்லாம் சூட்டவில்லை J . சில ப்ளாக் நண்பர்கள் எனது பெயரை மொபைலில் ‘தோட்டம்’ சிவா என்று பதிவதை பார்த்திருக்கிறேன். சரி அதையே பெயராக வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று ஆரம்பித்தது தான்.
ஒரு கத்திரிச்செடி எவ்வளவு நாட்கள் காய்க்கும்? அதன் பிறகு அந்த பையில் மண்ணை மாற்றுவீர்களா?
கத்தரி செடி நான்கு – ஐந்து மாதங்கள் வரை காய்க்கும். வைத்த பிறகு மாற்றி எல்லாம் வைப்பதில்லை.
காய்க் கழிவுகளை உரமாக்கும் முயற்சியைத்தொடர்கிறீர்களா?
ஆமாம். ஆனால் பெரிய அளவில் செய்ய எனது மாடித் தோட்டம் தயாராக வேண்டும். இப்போது மண் பானைகளில் வழக்கம் போல தொடர்கிறேன்.
ஒரு மாதத்திற்கு தோட்டத்திற்காக எவ்வளவு செலவாகிறது?
பெரிதாக கணக்கு எல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. செலவென்று பார்த்தால், வருடத்திற்கு மண்புழு உரம் ஒரு 1500 ஆகும். வேப்பம் புண்ணாக்கு Rs.1000 ஆகும். பிறகு விதைகள் தான். நான் கூறுவது எங்க வீட்டில் இருக்கும் மரங்களையும் சேர்த்து தான்.
குருவிகளுக்கு கூடு அமைத்துக்கொடுப்பது அவற்றுக்கு தானியம் தண்ணீர்வைப்பது போன்ற எண்ணங்கள் எப்படி தோன்றியது?
பொதுவாகவே ஒரு அணில் ஆகட்டும், குருவி ஆகட்டும், அவைகளின் செயல்களை பார்ப்பதே சந்தோசம் தானே. நிறைய மரங்கள் வைத்த போது அவைகளின் வரவும், விளையாட்டுகளும் அதிகமானது. அப்படியே ஆரம்பித்தது தான்.
குருவிகள் இனப்பெருக்கம் செய்திட முட்டை இட பாதுகாப்பான இடம் அமைத்தீர்களே முட்டை இட்டனவா?
அதில் பறவைகள் ஒன்றும் வரவில்லை. நான் அமைத்து வைப்போம் என்று ஒரு எண்ணத்தில் அமைத்தது தான். இப்போது அதை மாற்றி மரப்பலகைகளால் கூடு (Nest Box) அமைக்க நினைத்திருக்கிறேன். அவைகள் சிட்டுக்குருவிகளுக்கு பயன்படலாம். மற்ற படி வழக்கம் போல தோட்டத்தில் மரங்களில் பறவைகள் கூடு கட்டுகின்றன. சந்தோசம் தான்.
விதைகள் சேர்க்கும் முயற்சி குறித்து?. எத்தனை வகையான விதைகள் சேகரித்துள்ளீர்கள்?
பெரிதாய் ஒன்றும் அதில் கவனம் செலுத்தவில்லை. நாட்டு விதைகள் சேகரிக்க ஆர்வம் இருக்கிறது. இப்போதைக்கு கிடைக்கும் விதைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். பிற்காலத்தில் விதைகள் சேர்ப்பது பற்றி இன்னும் கவனம் செலுத்த திட்டம்.

                                                               தோட்டம் சிவா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக