இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

14 ஜனவரி, 2009

பொங்கல் கோலம்



கால் நூற்றாண்டுக்கு முன்பு மார்கழி பிறந்தால் போதும் சிற்றூர்களில் இளம்பெண்கள் தாளும் கையுமாகத்தான் காட்சியளிப்பார்கள் மறுநாள் வாசலில் இடவேண்டிய கோலத்தைப் போட்டுப் பார்த்தால்தான் இரவு நிம்மதியாகத்தூங்க முடியும், சற்று பொருளாதார வசதி குறைந்தவர்கள் ராமக்கட்டியால் தரையில் போட்டுப் பார்த்து விடுவார்கள். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து பசுஞ்சாணத்தைக் கரைத்து வாசலில் தெளித்து துடைப்பத்தால் பெருக்கித் தரையைப் பசுமையாக்கி பச்சரிசி மாவினால் கோலமிடுவது வழக்கம். ஏழ்மை நிலையிலிருப்பவர்கள் கூட பச்சரிசி மாவைத்தான் கோலமிடப் பயன்படுத்துவர். பெண்களின் திறமைக்கேற்பவும் மனநிலைக்கேற்பவும் கோலம் அமையும். ஒருசிலர் சிக்குக் கோலமிடுவதில் கைதேர்ந்தவர்களாக விளங்குவர், வேறுசிலருக்கு பூக்கோலம் வரைவது பிடிக்கும். சிக்கல் கோலமிடுவதில் வல்லவராயிருந்தால் அவர் வாழ்க்கைச் சிக்கலாகிவிடும் என்ற நப்பிக்கை பெணகளிடையே உண்டு. புள்ளிகளைப் போதிய இடைவெளியில் இடுவது கோடுகளைப் பிசிறில்லாமலும், வளைவு நெளிவுகளை இலாவகமாகவும் வரைவது கோலத்திற்கு அழகு சேர்க்கும் அம்சங்களாகும். கோலம் வரைந்து முடித்ததும் ஒரு சோடி சாணிப் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் தலையில் பரங்கிப் பூக்களைச் செருகி வைப்பதுண்டு. மாலையில் அந்த சாணிப் பிள்ளையாரை சிறு வரட்டியாகத் தட்டி அதன் மீதிருந்த பரங்கிப் பூவை வரட்டியில் ஒட்டி விடுவர். இது போல் தேவையான அளவு வரட்டிகளைத் தயாரித்து வைத்துக் கொண்டு பொங்கலன்று அந்த வரட்டிகளைப் பற்ற வைத்து அடுப்பு மூட்டி பொங்கல் உலை வைப்பது வழக்கம். கோலம், பெண்களுக்கான ஒரு கலை வடிவம் என்றாலும் ஒரு சில ஆண்களும் அக்கலையில் வல்லவர்களாக விளங்குகின்றனர். இன்றும் சிற்றூர்களில் வாசலுக்கு முன் கோலமிடும் ஆண்களும் உண்டு. தாயிடமிருந்து கோலமிடக் கற்றுகொள்வதைப் போல் தந்தையிடமிருந்தும் கற்றுக்கொள்ளும் மகள்கள் உண்டு. கோலம், தமிழ்ப் பண்பாட்டின் நுட்பமான பகுதிகளை வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும். விருந்தோம்பல்தான் தமிழ்ப் பண்பாட்டின் உச்சம் எனக் கருதப்படுகிறது. அத்தகைய விருந்தோம்பல் பண்பை சக மனிதர்களையும் தாண்டி புவிக்கோளத்தில் வாழும் ஓர் எளிய சிற்றுயிரிடமும் வெளிப்படுத்துகின்ற பாங்குதான் அரிசி மாக்கோலமாகும். எறும்புகள் கோலமாவை விருந்துண்டு செல்லும் காட்சிகளை சிற்றூர்களின் வீடுகள்தோறும் காணலாம். இன்றைய குழந்தைகள் அந்தக் காட்சிகளைக் காண இயலாமல் போனதுதான் பண்பாட்டு அவலம். கோலத்தை வீட்டின் முன்பு போடுவதென்றால் மாக்கோலமாகவும் உள்ளே போடுவதெனறால் மாவை நீரில் கரைத்து நீர்க்கோலமாகவும் போடுவது வழக்கம். காய்ந்த பிறகு பளிச்செனத் தெரியும் மெல்லிய மாவையும் எறும்புகள் உண்ணும். உழவர்கள் வீட்டில் விளைந்த தானியத்தில் ஒரு சிறு பகுதியை சிற்றுயிர்களுக்கு ஈந்து மகிழும் ஒரு உயிர் நேயக் கலையான கோலக்கலை இன்று அதன் தனித்தன்மையை இழந்து கல்மாவாலும், வண்ணத்தூள்களாலும் வரையக்கூடிய வெறும் அழகுக்கலையாகவும், வணிகக்கலையாகவும் சிதைந்துள்ளது. முன்பெல்லாம் பொங்கலன்று இடப்படும் கோலத்தில் பானை, கரும்பு, மாடு எனப் பொங்கலுக்கான அடையாளங்கள் காணப்படும். இன்று அது பிணீஜீஜீஹ் ஜீஷீஸீரீணீறீ ஆக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. நம் வீட்டுப்பெண்கள் ஆங்கில வழியில் கல்வி பயில்வதன் அடையாளம் நம் வீட்டு வாசலில் வரையப்படும் கோலம் வரை நீண்டுள்ளது. ரங்கோலி எனப்படும் உலகப்பொதுக் கோலமும் நம் வாசலுக்கு வந்தாயிற்று. கோலத்திற்கும் அதன் பண்பாட்டுத் தொன்மைக்கும் இனித் தமிழன் உரிமை கொண்டாட முடியாது. அதற்கும் எந்தக் கொம்பனாவது மரபுரிமை வாங்கி வைத்திருக்கக்கூடும். இப்படி ஒவ்வொரு துறையிலும் நாம் ஊடகங்களிடம் கற்றுக்கொண்டு நமக்கான வட்டார மரபுகளையெல்லாம் மறந்து, நம் தனித் தன்மைகளை இழந்து பண்பாட்டு அனாதைகளாகத்தான் நிற்க வேண்டுமா ? இந்தப் பொங்கல் திருநாளில் உறுதியேற்போம். இந்த அலங்கோலம் மாற வேண்டும். பண்பாட்டுக்கூறுகள் ஒவ்வொன்றிலும் நம் தனித்தனமைகளைப் பேணிக்காப்போம். தமிழர்களின் பண்பாட்டு நுட்பங்களை உலகுக்குப் பறைசாற்றுவோம்.

12 ஜனவரி, 2009

உலகப்புகழ்பெற்ற குறிஞ்சிப்பாடி மூட்டிகள்


கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி கைத்தறி மூட்டிகளுக்குப் புகழ்பெற்ற ஊர் .அவ்வூரிலுள்ள பெரும்பாலான மக்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.கைத்தறி நெசவு என்பது பல தொழிலாளர்களின் கூட்டுமுயற்சியால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய ஒன்று. இரண்டு கூட்டுறவு சங்கங்களின் உதவியோடு அவ்வூர் மக்கள் இன்றும் நெசவுத்தொழிலைக் காப்பாற்றிவருகின்றனர்.உழவர்,தச்சர்,கொல்லர்,கைவினைக்கலைஞர்கள் என பல்வேறு தொழிலாளர்களின் கூட்டு உழைப்பினால் உருவாவது கைத்தறித்துணி.இது வெறும் தொழில் மட்டுமன்று சமூக ஒற்றுமைக்கான ஒரு குறியீடு. இந்த உலகத்தில் மனித குலம் உள்ளவரை உழவும் நெசவும் இரு கண்களைப்போல் பாதுகாக்கப் படவேண்டிய தொழில்கள். ஆனால் இரண்டு தொழில்களுமே நலிவடைந்து வருகின்றன என்பதுதான் நடைமுறை உண்மை. குறிஞ்சிப்பாடி நெசவாளர்களும் இதற்கு விதி விலக்கு இல்லை. கடுமையான உழைப்பு குறைவான கூலி என்றால் அவர்களால் எவ்வளவு காலம்தான் இந்தத் தொழிலில் ஈடுபட முடியும். விசைத்தறிகளின் வருகையால் துணி உற்பத்தி உயர்ந்திருக்கலாம் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை நிலை தாழ்ந்துதான்போனது. கைத்தறி நெசவாளர்களின் நிலையை அறிந்துகொள்வதற்காக நண்பர்கள் நவசோதி, சான்பாசுகோ, முருகவேல் ஆகியோரின் துணையோடு குறிஞ்சிப்பாடி சென்றோம். அவர்களின் மரபுவழி நுட்பமான அறிவு முறை நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது. பஞ்சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட நூல் துணியாக மாறுவதற்கான படிநிலைகள், அதற்கான நெசவாளர்களின் உழைப்பு ஆகியவற்றை நேரில் பார்க்கும்போது மலைப்பாகத்தான் உள்ளது. முதலில் ஆலை என குறிப்பிடப்படும் பெரிய மூங்கில் பிளாச்சுகளால் செய்யப்பட்ட உருளையில் நூலைச்சுற்றுகின்றனர். நூல் முப்பது சிறு உருளைகளிலிருந்து பெரிய உருளைக்குச் செல்லும். இவற்றைப் பிரித்தெடுப்பதற்கு ஏதுவாக கடிகாரச்சுற்றில் ஒன்று எதிர் சுற்றில் ஒன்று என பெரிய உருளை அறுபதாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இப்பணியைப் பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர். மாற்றி மாற்றி சுற்ற வேண்டும் என்பதால் எந்த இடத்தில் மாற்ற வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஒரு ஆரக்காலில் சிவப்பு வண்ணத் துணியைச் சுற்றிவைத்துள்ளனர்.இவ்வாறு சுற்றப்பட்ட நூல் துவைச்சுப் பட்டறைக்குச் செல்கிறது அங்கு கஞ்சி ஏற்றி நூலை விறைப்பாக்குகின்றனர். பச்சரிசி மாவைக் காய்ச்சி கஞ்சியாக்கி ஊர்தியில் நீளமாக மாட்டப்பட்டிருக்கும் நூலில் தூரிகையால் கஞ்சியைத்தூவுகின்றனர் தூவப்பட்ட கஞ்சி நூலின் மறுபக்கத்தை நனைப்பதற்காக பில்லேறு எனப்படும் விழலின் வேரால் செய்யப்பட்ட பெரிய தூரிகையை நூலின் மீது அழுத்தியபடி இருவர் இழுத்துச்செல்கின்றனர் அதன் பிறகு ஊர்தியைச் சுழற்றி அசைத்து கஞ்சிப்பசையை உலர்த்துகின்றனர்.இவ்வாறு இரு முறை செய்த பிறகு சிறிது தேங்காய் எண்ணெயைத் தூவி நூலை வழுவழுப்பாக்கி முறுக்கேற்றி தறிக்கு அனுப்புகின்றனர். நெய்யப்படவிருக்கும் மூட்டியின் நிறங்களுக்கேற்ற நூல்களை அச்சில் பிணைத்து, அள்ளிப்பிடித்து சிக்கலில்லாமல் தனித்தனி இழையாக நீவி அதன்பிறகு தறியில் பிணைக்கின்றனர்குறுக்கு இழைக்கான நூல்கள் தார் எனப்படும் சிறு உருளையில் சுற்றப்பட்டிருக்கும் அதனை மரத்தாலான நாடா எனப்படும் கருவிக்குள்ளிருக்கும் பித்தளைப் பட்டைக்குள் பொருத்தி நெய்யத்தொடங்குவர். பல வண்ண மூட்டியெனில் குறுக்கு இழைகளை அதற்கேற்ப சரியான நேரத்தில் அவ்வப்போது மறவாமல் மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். இப்பணி பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் நெய்பவரின் நினைவாற்றலுக்கும், கவனம் சிதையாமைக்கும் மிகப்பெரிய சவாலாகும். ஒரு மூட்டிக்கான உற்பத்தி செலவு 88 உருவா அதன் விற்பனை விலை 100 உருவா ஆகும். கூட்டுறவு சங்கத்திற்குக் கிடைக்கும் இலாபம் 18 உருவாவாகும். 18% இலாபத்தில்தான் இக் கூட்டுறவுச் சங்கம் இயங்கி வருகிறது. குறைந்தது 100 லிருந்து 250 உருவா வரை விலையுடைய மூட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் தொழிலாளர்களுக்கான கூலியைக் கணகிட்டால் மற்ற தொழில்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான். ஒரு மூட்டியை நெய்து முடிப்பதற்கு இரண்டு நாட்கள் ஆகின்றன அதற்கான கூலி வெறும் 50 உருவாதான். தொழிலாளருக்கான குறைந்த பட்ச ஒரு நாள் கூலி 80 உருவா என அரசு தீர்மானித்திருந்தாலும் நடைமுறை இதுதான்.விசைத்தறிகளில் தயாராகும் ஒருமூட்டி குறைந்தது 50 உருவாயிலிருந்து கடைகளில் கிடைப்பதனால்கைத்தறி மூட்டிகளின் விற்பனை சறிந்துள்ளது. இவர்களின் ஒரே ஆறுதல் கோ-ஆப்டெக்ஸ்தான்.உழவுத் தொழிலாளர்களுக்கு பொங்கலுக்கு வழங்குவதற்காகவும் சிலர் கைத்தறி மூட்டிகளை வாங்கி ஆதரவு தருகின்றனர். ஏற்றுமதியும் ஓரளவு கைகொடுக்கிறது. உலகில் எந்த நாடுகளிலெல்லாம் இரப்பர் தோட்டங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் ஏற்றுமதியாகிச் சென்றன குறிஞ்சிப்பாடி மூட்டிகள். இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பூச்சிகளிடமிருந்து தங்களைப்பாதுகாத்துக்கொள்வதற்கு மூட்டிகளைத்தான் பயன்படுத்துகின்றனர். விற்பனைவிலையைக்காரணம் காணபித்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கைத்தறியைவிட மலிவு விலையில் கிடைக்கும் விசைத்தறி மூட்டிகளை இறக்குமதி செய்து கொடுக்கின்றனர் இதனால் குறிஞ்சிப்பாடி கைத்தறி மூட்டி ஏற்றுமதி அளவு முன்பைவிடக் குறைந்துள்ளது. இன்றும் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டுதான் உள்ளனர்இருப்பினும் நெசவாளர்கள் வாழ்வு வறுமை நிலையில்தான் உள்ளது." பாட்டி கொட்ட நூத்தது பையன் அண்ணாகவுத்துக்குத்தான் சரியா இருக்கு" என்று நெசவாளர்களைப் பற்றி ஒரு பழமொழி உண்டு அதுதான் இன்றும் உண்மை நிலையாக உள்ளது.பல நெசவாளர்கள் இத்தொழிலை விட்டு விலகி வருகினறனர். ஒரு சிலர் விடாப்பிடியாக இன்றும் இத்தொழிலை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட இருவரை நாம் சந்திக்க நேர்ந்தது. வைத்தியநாதன்(54) என்ற நெசவாளர் தன் வீட்டில் 16 தறிகளை வைத்து பலருக்கு வேலை வாய்ப்பைத் தந்ததோடு அவர்களை மேற்பார்வை செய்த பணிக்கராக 30 ஆண்டுகள் பணி செய்திருக்கிறார் இன்று யாரும் நெசவுத்தொழிலுக்கு வராததனால் ஒரே ஒரு தறியில் அவர் மட்டும் நெய்துகொண்டு மற்ற தறிகளையெல்லாம் பிரித்து சட்டங்களாக அடுக்கி வைத்துள்ளார். அது போலவே துவைச்சுப் பட்டறைத்தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்ற சூழலில் அத்தொழிலில் ஈடுபடுவோரிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இருப்பினும் குலத்தொழிலை விட்டுவிடக்கூடாது என்ற பிடிவாதத்தோடு ராமர்(45) என்பவர் தன் தந்தை சுந்தரம்(76) அவர்களின் உதவியோடு துவைச்சுப்பட்டறையை நடத்தி பத்துக்கும் மேற்பட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருவதோடு இத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்கிறார். இவர்களைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தவேண்டியது நம் அரசின் கடமையாகும் பெயரளவுக்கு மறு வாழ்வுத் திட்டங்களை அளிக்கும் அரசு தொலைநோக்குச் சிந்தனையோடு திட்டங்களைத் தீட்டி இவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அரசு கவனிக்குமா? .

10 ஜனவரி, 2009


நூறு வயது ஓலைச்சுவடி

இந்த நூற்றாண்டிலும் பேருந்து செல்லாத ஒரு சிற்றூர் கடலூர் மாவட்டத்தில் உள்ளது.விருத்தாசலம் வட்டத்திலுள்ள கொடுமனூர்தான் அது. அந்த ஊரில்தான் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஓலைச்சுவடியைப் பாதுகாத்து வைத்துள்ளனர். மன்மதன் கதைப்பாடல் அடங்கிய அச்சுவடி ஐம்பத்து மூன்று ஓலைகளில் இருபுறமும் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. காமன் புஷ்தகம் என்று குறிப்பிடப்பட்டுள்ள அச்சுவடியை செம்புலிங்கபூசி என்பவர் எழுதியுள்ளார். அவரின் வழித்தோன்றலான செயராமன் அதை இன்றுவரைப் பாதுகாத்து வருகிறார். ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் மன்மதன் கோயில் திருவிழாவில் இச்சுவடியிலுள்ள பாடல்கள் பாடப்படுகின்றன. "மாசி பிறை கண்டு மன்மதர்க்கு காப்பு கட்டு" என்ற சொல்லடை இம்மக்களிடம் இன்றும் புழக்கத்திலுள்ளது. பத்துநாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் மன்மதன் கதைப்பாடல் பாடப்பட்டிருக்கிறது என்பதை சுவடியிலுள்ள குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. முதல் நாள் கதை, இரண்டாம் நாள் கதை என ஒவ்வொரு நாளும் பாடவேண்டிய பகுதிகள் அதில் பிரித்து எழுதப்பட்டுள்ளன.காப்புகட்டுதல் என்பது முதல் நாள் திருவிழாவாகும். மன்மதன் கோயில் காமட்டி கோயில் என்று சிற்றூர் மக்களால் குறிப்பிடப்படுகிறது. காமன் என்பது மன்மதனின் மற்றொரு பெயராகும்.
மன்மதனுக்குக் கோயில்கட்டி விழா எடுக்கும் வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்து வருகிறது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. மன்மதன் கோயிலைக் காமவேள் கோட்டம் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.கனாத்திறம் உறைத்த காதையில் தேவந்தி கண்ணகியை நோக்கிக் கூறும்போது சோமகுண்டம்,சூரிய குண்டம் என்னும் புண்ணிய தீர்த்தங்களின் துறைகளிலே மூழ்கி,காமவேள் கோட்டம் சென்று காமதேவனைத் தொழும்மகளிர் தம் கணவருடன் கூடிப் பிரியா வாழ்வு வாழ்ந்து இன்புறுவர் என்று கூறுவாள். இப்பகுதி சோமகுண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கிக்காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடுதாமின் புறுவர் உலகத்துத் தையலர் (சிலம்பு: 9;59-60)
என்று இளங்கோவடிகளால் எழுதப்பட்டுள்ளது. இளவேனிற்காலம் மன்மதனுக்கு உரிய காலமாகும்;இக்காலத்தே மன்மதனுக்கு விழா எடுக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்திருக்கிறது,இது காமன்விழா, காமன் பண்டிகை என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.கலித்தொகையில் அத்தகைய பாடல்கள் காணக்கிடைக்கின்றன.
காமவேள் விழாவாயின்,கலங்குவள் பெரிது என (கலி:27;24) உறல் யாம் ஒளிவாட,உயர்ந்தவன் விழவினுள்.... (கலி: 30:10)வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுதன்றோ (கலி: 35;14)
மேற்கண்ட கலித்தொகைப்பாடல்களில் காமவேள்,உயர்ந்தவன்,வில்லவன் என்பனவெல்லாம் மன்மதனைக்குறிக்கும் சொற்களாகும்.இளவேனில் காலமான சித்திரை, வைகாசி மாதங்களில் கொண்டாடப்பட்ட இவ்விழா இன்று பின்பனிக்காலமான மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.பெரும்பாலும் வடமாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இவ்விழா மிகுதியாகக் கொண்டாடப்படுகிறது.
காப்பு கட்டிய முதல் நாளில் மன்மதனின் பிறப்பு கதைப்பாடலாகப் பாடப்படுகிறது.இது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாகப் பாடப்படுகிறது. கொடுமனூரில் கிடைத்த ஓலைச்சுவடியில் கீழ்க்கண்டவாறு பாடல் அமைந்துள்ளது. மனதில் நினைத்த உடன் மன்மதன் வந்தானேசிந்தைதனில் நினைக்க சிற்றரசன் பேச்சுமாசி பிறைதனில் மாறன் பிறந்தானேமாயனைப் போலே வந்து முன்னின்றானே (சுவடி:19;16-19)
என்று நீள்கிறது அப்பாடல்.
மன்மதன் பிறப்பைப் பாடுவதற்கு முன் வழக்கமாக ஓலைச்சுவடிகளில் உள்ளதைப் போன்று கடவுள் வாழ்த்துப் பாடல் இச்சுவடியிலும் இடம்பெற்றுள்ளது.கதைப்பாடல்களுக்கு உரிய இலக்கணங்களுடன் இச்சுவடி அமைந்துள்ளது. இரண்டாம் நாள் கதையில் ரதியின் பிறப்பும், மூன்றாம் நாள் கதையில் ரதி மன்மதன் திருமணமும் பாடப்பட்டுள்ளது. திருமணக்காட்சி கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது.
அக்கினிதான் வளர்த்து அழகான மாங்கல்யத்தைமன்மதன் கையில் வாழ்த்தியேதான் கொடுக்கஇரதி கழுத்திலேயணிந்து நல்ல மலர்மாலைஇருவரும் பூண்டு இருந்தார்களப்போது....
என்ற பாடலைத் தொடர்ந்து தக்கன் தவம் செய்வது அதனைக் கலைக்க பார்வதியை அனுப்புவது, அதிலும் இயலாமல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அம்முயற்சிகளும் தோல்வியில் முடியவே இறுதியாக மன்மதனை அனுப்புவது என்ற முடிவுக்கு வருகின்றனர். மன்மதன் சென்றால் அவனைத் தக்கன் அழித்து விடுவான் என்பதை ரதி கனவில் கண்ட காட்சிகளின் மூலம் உணர்ந்து மன்மதனைத் தடுக்கிறாள். மன்மதன் ரதிக்கு தேறுதல் கூறியும் பலன் இல்லை இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றுகிறது இறுதியில் மன்மதன் ரதியின் சொல்லைக்கேளாமல் சென்று தக்கனின் தவத்தைக் கலைக்க சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனைச் சாம்பலாக்கி விட ரதி அழுது புலம்புவதாகக் கதைப்பாடல் முடிகிறது.
முன்பு கதைப்பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. இப்போது ஓலைச்சுவடியை முழுமையாகப் படிக்க யாரும் முன்வராமையால் முதல் நாளும் இறுதி நாளும் மட்டும் பாடப்படுகிறது.
ஒரு சில சிற்றூர்களில் சிறுவர்களுக்கு ரதி மன்மதன் வேடமிட்டு நிகழ்த்து கலையாக நிகழ்த்துகின்றனர். ரதி மன்மதன் திருமணக்காட்சி உண்மையான திருமணம் போன்றே நிகழ்த்தப் படுகிறது.
இறுதி நாள் விழாவில் மன்மதன் எரிந்து சாம்பலாவதையும் நிகழ்த்திக்காட்டுகின்றனர். காப்பு கட்டும்போது கோயிலின் முன் புறம் துவரை மிளாறுகளைக்கொண்டு ஒரு கூண்டு அமைப்பது வழக்கம் அக்கூண்டை மன்மதனாகக்கருதி அதனைக் கொளுத்திச் சாம்பலாக்குவர். இந்நிகழ்வைக் காமட்டி கொளுத்துதல் என்று குறிப்பிடுவர்.
இவ்வாறு இன்றும் சிற்றூர் மக்களால் காமன் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.
நன்றி;தமிழ் ஓசை களஞ்சியம்.