இரத்தின புகழேந்தி நூல்கள்

Loading...

18 ஜனவரி, 2012

புதிய கூரைப் பேட்டை




நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பல சிற்றூர்களை விழுங்கியுள்ளது. அவற்றுள் ஒன்று கூரைப்பேட்டை. அந்த ஊரை காமராசர் முதல்வராக இருந்த போது மீண்டும் புதிய கூரைப்பேட்டையாக மறு கட்டமைப்பு செய்துள்ளனர் அந்த ஊர் தறப்பு விழா முதல்வர் காமராசர் தலைமையில் 1957 ஆம் ஆண்டு நடைபெற்றது.
17.01.2012 காணும் பொங்கலன்று அண்ணன் அறிவுமதி அழைக்க கூரைப்பேட்டை திரு . கி. தன்வேல் இ.ஆ.ப. (தற்போதைய திட்ட்க்குழு உறுப்பினர் செயலர்) அவர்களை சந்திக்கச்சென்றபோது பழைய ந்னைவுகளை பகிர்ந்துகொண்டனர். அப்போது அவர்களின் தம்பி திரு . செல்வராசு அவர்கள் கூரைப்பேட்டை திறப்பு விழா அழைப்பை பொக்கிஷம்போல் காத்துவைத்திருந்தார். அந்த அழைப்பை இங்கே வெளியிடுகிறேன். அது பல செய்திகளைச்சொல்லுகிறது. 50 ஆண்டு வரலாறு சொல்லும் அழைப்பு இது.

9 ஜனவரி, 2012

முறம் சில குறிப்புகள்






இல்லத்தில் பயன்படுத்தும் புழங்கு பொருள்கள் பெரும்பாலும் இன்று நவீன மயமாகியுள்ளன.பல பொருள்கள் காணாமல் போய்விட்டன. துடுப்பு, உரி, விளக்குத்தண்டு, அகப்பை, கழுத்துக்கோல் என்று காணமல் போன பொருள்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றும் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருள்களின் பட்டியலில் முறம் இருக்கிறது. பிலாஸ்டிக் முறங்கள் சந்தைகளுக்கு வந்தாயிற்று இருந்தாலும் மூங்கில் பிளாச்சுகளால் செய்யும் முறங்களுக்கு உள்ள வரவேற்பு அலாதியானது.ஆனால் அதை உற்பத்தி செய்யும் தொழிலாள்ர்கள் நிலைதான் வருந்தத்தக்கது. எங்கள் ஊருக்கு முறம் விற்க வந்த பெரியசாமி (63) அவர்களிடம் பேசிய்போதுதான் அவர்களின் கைத்தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை அறிந்தேன்.
தொட்டிநாய்க்கர் சமூகத்தைச் சேர்ந்த இவர் முன்னோர்கள் மூன்று தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுளனர்.முறத்தின் பாகங்களையும் செய்முறையையும் அவர் கூறக் கூற வியப்பில் விழிகள் விரிகின்றன ஒரு முறத்தில் இவ்வளவு செய்தியா! ஒரு மூங்கில் கழி முறமாவதற்கு நான்கு நாட்கள் ஆகின்றன. அதற்கு இரண்டு பேர் உழைப்பும் தேவை. ஒரு கழியில் இருபது முறங்கள் செய்யலாம்.

செய் முறை: மூங்கிலை மூன்று தினுசாகப் பிளக்கவேண்டும் .முறத்தைப் புடைப்பதற்காகப் பிடிக்கும் பகுதியில் சிறிதும் பெரிதுமாக இரண்டு பிளாச்சுகள் அமைந்திருக்கும். அவற்றுள் வெளிப்பக்கமுள்ள பிளச்சுக்கு சலக்குடி என்று பெயர். இது (1மீ.X1.5செ.மீ.X1செ.மீ.) 1மீட்டர் நீளம், 1 செ.மீ. அகலம், 1 செ.மீ. கனம் என்ற அளவில் அமைந்திருக்கும். அதற்கும் உள் பக்கமுள்ள பிளாச்சுக்கு கம்பை என்று பெயர். இது
(1மீ. X 3 செ.மீ. X 1செ.மீ.) என்ற அளவிலும், முன் பகுதியிலுள்ள பிளாச்சு மூங்குடு எனப்படும் இதன் அளவு
(35 செ.மீX1.5 செ.மீ. X 1 செ.மீ. ) ஆகும். உள் பகுதியில் பின்னலுக்கு பயன்படும் மெல்லிய பிளாச்சு அவுனி எனப்படும் . அளவு (1மீ. X 1 செ.மீ. X 2 மி.மீ.) இவற்றை முதலில் தயாரித்துக்கொண்டு பிறகு ஆண்கள் அடிபோட்டுத் தர பெண்கள் பின்னுவர்.

முறத்தின் படிநிலைகள்:

1.மூங்கில்
2.சிம்பு
3.கம்ப
4.சலக்குடி
5.கட்டாக்கணத் துண்டு
6.அரணி (அடி போடுவதற்கு அரணி எனப் பெயர்)
7.தட்டு ( மூலை வளைப்பதர்கு முன் )
8.அவுந்தியம் ( மூலை வளைத்தபின் )
9.முறம்

முறம் செய்வதற்கான கருவிகள்

1. தட்டு அம்பு
2. வாள் அம்பு
3. கொடுவாள்

மூலப்பொருள்கள்

1.மூங்கில்
2.கட்டுக்கொடி

இருபது முறங்களுக்கான உற்பத்தி செலவு.

ஒரு மூங்கில கழி விலை ரூ. 100-
ஆண் ஆள் கூலி நான்கு நாட்களுக்கு : ரூ. 1200-
பெண் ஆள் கூலி நான்கு நாட்களுக்கு : ரூ. 800-
மொத்த செலவு : ரூ. 2100-
ஒரு முறத்தின் உற்பத்தி செலவு : ரூ. 105-
ஒரு முறம் விற்கும் விலை : ரூ. 75-
நூறு ரூபய்க்கு பஞ்சு வாங்கி நூத்து அம்பது ரூபாய்க்கு வித்தா லபமா நட்டமா என்று ஒரு கணக்கினை எங்கள் ஊரில் கேட்க சிறுவர்களான நாங்கள் லாபம் என்று கூற கணக்கு போட்ட தாத்தா நூத்து என்பதற்கு நூலாக நூத்து என விளக்கியபின் நட்டம் என உணர்வோம். அப்படித்தான் இருக்கிறது முறம் விற்கும் தொட்டி நாய்க்கர் வாழ்க்கை.
நாம் இன்னமும்
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்தொக்கொள்"
என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

4 ஜனவரி, 2012

சித்தன்ன வாசல் பயணம் -2




சித்தன்னவாசல் சமணர் படுக்கைகள்



படுக்கையின் தோற்றம்


படுக்கையை வேலி அமைத்து பாதுகாக்கும் நிலை

3 ஜனவரி, 2012

சித்தன்ன வாசல் பயணம்

அரையாண்டு விடுமுறை புதுக்கோட்டையில்தான் என மனைவி மக்கள் முடிவெடுத்தனர். முதல் நாளே சித்தன்னவாசல் பயணம். அரசு விருந்தினருக்கு உள்ள அத்தனை சிறப்புகளுடன் சென்று வந்தோம். சமணர் குடைவரைக் கோயிலில் உள்ள ஊழியர் மூச்சடக்கி பயிற்சி செய்து காண்பித்தார். ஓம் என்ற ஒலி எழும்பியது வியப்பாக இருந்தது. நானும் முயற்சி செய்து பார்த்தேன் ஒலிதான் வர்வில்லை. பண்பாட்டுக் க்ருவூலமான அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நம் கல்லூரி இளைஞர்களிடம் இல்லை என்பது தான் வேதனை. சில படங்களை இங்கே காணலாம்.



சித்தன்ன வாசல் ஓவியத்தை அருங்காட்சி யகத்தில் முழுமையாக நகல் எடுத்து வைத்துள்ளுனர்
குடை வரை கோயில் சுவரில் உள்ள சமணர் உருவம்

ஓவியம் சிதைந்த நிலை
















சித்தன்ன வாசல் ஓவியம் தற்போதைய நிலை

குடை வரை கோயில் பற்றிய அறிவிப்பு
மேலே சென்றால் சமணர் படுக்கைகள் எல்லாம் தற்கால காதலர்களால் சிதைக்கப்பட்டுள்ள நிலை. அடுத்த பதிவில் காணலாம்.




28 அக்டோபர், 2011

தமிழனும், ஏழாம் அறிவும்




இயக்குநர் தங்கர்பச்சான் ஏழாம் அறிவு பற்றி எழுதிய மின் மடலை இங்கே பதிகிறேன்.
மிக சுருக்கமாக ஏழாம் அறிவு எனும் வணிக சினிமா பற்றி ;
நான் எந்த சினிமாவுக்காகவும் எனக்கிருக்கிற வேலைகளை விட்டுவிட்டு இப்படி எழுத உட்கார்ந்ததில்லை.இன்றைக்கு தமிழர்களின் தேவை என்பது இருக்க வீடும்,பின் ஒரு காரும் பின் கான்வென்ட் படிப்பும், வங்கி சேமிப்பும் என்பது மட்டுமே..இன அறிவோ,மொழி அறிவோ,அரசியல் அறிவோ,நம் முன்னோர்களின் வரலாறு பற்றியோ தேவையில்லை என முடங்கிவிட்டான். இனி இவைகளை சொல்லித்தர நமது கல்வித்திட்டமோ,பெற்றோர்களோ,ஆசிரியர்களோ உருவாகப் போவதில்லை.பிழைப்புக்கு இதெல்லாம் இனி தேவை இல்லை எனும் நிலைக்கு அவனது சிந்தனை சிதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவிட்டது.இந்த சிந்தனை இல்லாமல் செய்ய நம் எதிரிகள் தமிழர்களை அழிக்க தமிழனையே தயார்ப் படுத்திவிட்டார்கள்.
கலைகள் அவரவர்களுக்கான இலக்கியத்தையும்,அரசியலையும் ,மொழி பண்பாட்டுக் கூறுகளையும் பேச வேண்டும்.இதைப்பற்றி எதையும் பேசாத,வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே கைய்யாளபபடுகிற கலை எதுவாக இருந்தாலும் மக்களை மயக்க நிலையிலேயே வைத்துக் கொள்வதற்குத்தான் உதவும். மது அருந்தியவன் மூன்று மணி நேரம் போதையிலேயே இருக்க உதவுகிற வேலையைத்தான் பல வணிக சினிமாக்கள் செய்து கொண்டிருக்கின்றன.அரிதாக சில சினிமாக்கள்தான் அந்த மூன்று மணி நேரத்தில் மயக்க நிலையில் வசியப் படுத்தி வைத்திருப்பதற்கு பதிலாக சிந்திக்க தூண்டுகின்றன.அடிமைகளாய் இருப்பவனைவிட,தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன். அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு தமிழர்களாய் இருப்பவர்கள் பல பேர் தங்களின் மொழி, இன, அரசியல் விடுதலைப்பற்றி உணராமல் பெயரளவிற்கு ஏதோ தமிழ் போல ஒரு மொழி பேசி,தமிழர்களுக்கு இருக்க வேண்டிய எதுவுமே இல்லாமல்,பெயரளவிற்கு தமிழ்நாடு என்றிருக்கும் இடத்தில் தமிழனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இன்றைக்கு தமிழ் பற்றி தமிழன் உரிமை பற்றி யார் பேசினாலும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள்.தமிழை தங்களின் சொந்த நலனுக்காக,அதிகாரத்துக்காக,பயன்படுத்தியவர்களைப் பார்த்து ஏற்பட்ட சலிப்புதான் இதற்கெல்லாம் காரணம்.
இனிவரும் காலங்களில் நம்மை வழி நடத்த உண்மையில் நம் மேல் அக்கறையுள்ளவர்கள் அரசியலில் வந்தாலோ!இப்போது உள்ள ஒரு சிலரையோ நாம் அடையாளம் கண்டு கொள்ளப்போவதும் இல்லை. அந்த வேலைகளை நம் கலை படைப்புகள்தான் செய்ய வேண்டும். ஏழாம் அறிவு மூலம் நிகழ்ந்திருப்பது ஒரு அறிய மாற்றம்.தமிழனுக்கு இன்றிருக்கிற அடிமை சிந்தனையையும்,ஏளனத்தையும், கூச்சத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும் சரி செய்ய ஒரு மருத்துவம் தேவைப்படுகிறது.அந்த மருத்துவத்தை ஒரு மசாலா சினிமா செய்திருக்கிறது.
நம் வரலாற்றை,அறிவியலை,மருத்துவத்தின் அவசியத்தையும் சொல்ல, படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மனப்பாடக்கல்வியை கற்றவர்களுக்கும்,இந்த படிப்பறிவில்லாத பாமர தமிழர்களுக்கும் இப்போதைக்கு பொழுதுப் போக்கு சினிமாதான் ஒரே வழி.தமிழனுக்கு எழுச்சியை உருவாக்க , அடிமைத் தனத்தை உணர்த்த சில செய்திகளோடு ஒரு கதை சினிமா வந்திருக்கிறது.அதற்கான பலனை எனது மகன்களிடமே நான் கண்டிருக்கிறேன்.எனது படைப்புகள் என் மகன்களிடம் உருவாகிய தாக்கத்தைக்காட்டிலும்,ஏழாம் அறிவு அவர்களுக்கு இனப்பற்றை உணர்த்தி தமிழன் என்பதை பெருமையாக நினைக்க செய்திருக்கிறது.
இன்றைய தமிழ் அரசியல் சூழலில் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத மக்களுக்கு ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தேவையாக இருக்கின்றன.seventh sense , nonsense என்றெல்லாம் எழுதி நம் தமிழர்கள் இணைய தளங்களில் எழுதி இன்பம் கண்டு தங்களின் திரைப்பட திறனாய்வை பறை சாற்றி மகிழ்கிறார்களாம் .இவ்வாறு எழுதுவதால் அவர்களின் அறியாமைதான் வெளிப்படுகிறது.நான் உங்களிடம் இப்படத்தைப்பற்றிய திறனாய்வை விளக்கவரவில்லை.திறனாய்வு செய்தால் என் அழகியும்,பள்ளிக்கூடமும்கூட நிற்காது.மனிதர்கள் எல்லோருமே குறை உள்ளவர்கள்தான். அவர்கள் உருவாக்குகிற படைப்புகள் எவ்வாறு குறைகள் இல்லாமல் இருக்க முடியும்.எனது குறைகளை அதன் படைப்பாளிகளிடம் கூறி விட்டேன்.நம்மை ஒன்று படுத்த இப்படிப்பட்ட படைப்புகள் உதவுகின்றன.எதிரிகளாய் இருப்பவர்கள் குறை சொல்லிப் போகட்டும். தமிழர்களாய் இருப்பவர்கள் இப்படத்தை கொண்டாட வேண்டும்.நம் கலாச்சாரத்தையும்,பண்பாட்டுக் கூறுகளையும்,நம் மொழியையும் சிதைக்கின்ற பொழுதுப் போக்கு திரைப்படங்களுக்கிடையில் பழந்தமிழர் பெருமை பேசவும்,தேய்ந்துபோன நம் இன உணர்வை பேசவும் ஒரு சினிமா அதுவும் முருகதாஸ்,சூர்யா போன்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது நமக்கெல்லாம் பெருமைதானே.நிச்சயம் தமிழனாகிய நான் அதனை பெருமையாக நினைக்கிறேன்.அதே போல் இதன் தயாரிப்பாளர் உதயநிதியையும் நாம் பாராட்ட வேண்டும்.
தாய் மண்,தொலைந்து போனவர்கள் எனும் தமிழர்களுக்கான மிக அத்தியாவசியமான இரண்டு திரைக்கதைகளை 2002 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தயாரிப்பளர்களிடமும் சொல்லி அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.என் போன்ற பல படைப்பாளிகளின் நிலை தமிழ் சினிமாவில் இப்படித்தான் இருக்கின்றது.தமிழை நம்பியோ,தமிழர்களை நம்பியோ முதலீடு செய்ய இன்று யாரும் இல்லாத நிலையத்தில் ஒரு தமிழனாகவும், ஒரு படைப்பாளியாகவும் என் நன்றியை தயாரிப்பாளர் அவர்களுக்கு தெரிவிக்கிறேன்.
ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் பலனடைபவர்கள் அந்த படத்தோடு வியாபார ரீதியாக தொடர்புடையவர்கள்தான்.ஆனால் ஒரு சில படங்கள்தான் அவை சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.ஏழாம் அறிவும் அப்படிப்பட்டதுதான்.உங்களின் இனப்பற்றை சோதனை செய்கிற படம்.தமிழர்களிடம் நான் கவனிக்கின்ற ஒரு கெட்ட செயல் இதுதான். சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியை கேட்பதை விட்டுவிட்டு,இந்த படம் எத்தனை வாரம் ஓடும்,எவ்வளவு வசூலாகும் என்றெல்லாம் கேட்பதுதான்.இந்த கவலையெல்லாம் அந்த படத்தை தயாரித்தவர்களுக்கும்,படத்தை வாங்கியவர்களுக்கும்,திரையிட்டவர்களுக்கும் இருக்க வேண்டிய கேள்வியும்,கவலையும்.ஏழாம் அறிவு எத்தனை நாட்கள் ஓடும்,எவ்வளவு பணம் கிடைக்கும்,வெற்றியா,தோல்வியா என்கிற கவலை படம் பார்க்கிறவர்களுக்கு வேண்டாம். மீண்டும் சொல்கிறேன்,ஏழாம் அறிவு தமிழர்களுக்கான வெற்றி.
--
அன்போடு
தங்கர் பச்சான்

10 செப்டம்பர், 2011

இன்றும் தொடரும் சடங்குகள்

தமிழர் திருமணங்களில் இன்றும் சில சடங்குகள் தொடர்கின்றன. தமிழர் திருமணம் என்று பொதுவாக கூறிவிட முடியாது. இருப்பினும் நாட்டுப்புற மக்களிடம் குறிப்பாக வன்னியர்களிடம் இன்றுவரை தொடரும் சடங்கு பாலி விடுவது. இது வேளாண்மைத் தொழிலின் எச்சமாகப் பார்க்கப் படுகிறது. நவதானியங்களை முளைக்க வைத்து திருமணத்தன்று நீர் நிலைகளில் விடுவதே இச்சடங்கு.கல்யணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது முது மொழி. வேளாண்மையோடு தொடர்புடைய சமூகத்தின் வெளிப்பாடுகளாக பழமொழியும் இச்சடங்கும் தோன்றுகின்றன.
           நேற்று என் அக்காள் மகன் சிங்கத்தமிழன் திருமணத்தில் இச்சடங்குக்காக திருமுதுகுன்றம் தெப்பக்குளத்திற்கு சென்றோம் அங்கு குடிமகன்களின் நற்செயலால் உடைந்து கிடந்த மதுபாட்டில்களுக்கிடையே நடனமாடியபடி சென்று ஒருவழியாக முளைப்பாரியை குளத்தில் கரைத்தோம். அரசாணி கழியையும் நட்டோம். தானியங்களை முளைக்க வைப்பது அரசங்குச்சியை நட்டு வைப்பதும் இயறகையை அழகு செய்யும் ஒரு வழிமுறையாக இருக்கலாம்.
         அடுத்த சடங்கு சாலும் கரகம் என்பது .இது மணமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கான சடங்காகும். இது தமிழரின் விளையாட்டு மரபைப் பறை சாற்றும் சடங்காகப் பார்க்கலாம். விளையாட்டின் வாயிலாக நாடுகளிடையே மட்டுமின்றி மனித மனங்களுக்கிடையேயும் நல்லுறவு உருவாகும் என்பதற்கு இச்சடங்கு சிறந்த எடுத்துக்காட்டு.
மணக்கோலத்தில் மருத்துவர் சிங்கத்தமிழன், மருத்துவர் கயல்விழிதேவி, மணமகள் பெற்றோர் எழில்ராணி குணசேகரன் மணமகன் பெற்றோர் சுசிலா குமார்.
தெப்பக் குளத்தில் பாலிவிடும் மணமக்கள்
அரசாணி நடும் மணமக்கள்
சாலும் கரகம் விளையாடும் மணமக்கள்
1979 இல் மணமகன் பெற்றோர் குமார் சுசிலா திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களோடு.. இடமிருந்து நிற்பவர்கள் இரத்தின புகழேந்தி, பெரியம்மா ராஜாமணி, பெரியப்பா தனபால், மணமக்கள், எம்.ஜி.ஆர்., பண்ருட்டியார், சி.இராமநாதன்,சின்னப்பொண்ணு.              

 இப்பதிவிலுள்ள படங்களில் சில வரலாறுகள் உண்டு . மணமகனின் பெற்றோரின் திருமணத்தை அன்றைய முதல்வர் ம.கோ.இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர். தான்) நடத்திவைத்தார். அப்போது (1979)திருமண மண்டபங்கள் கிடையாது. எனவே சன்தோஷ்குமர் திரையரங்கில் திருமணம் நடைபெற்றது. மணமகன் தந்தை திரு சி.இராமநாதன் அப்போது விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்தேன். (கண்களை மூடியபடி மேடையில் நிற்கும் சிறுவன் நான்தான்)அவர்களின் மகன் திருமணம் இப்போது என் மகன் எட்டாம் வகுப்பு படிக்கிறான்.