இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

26 நவம்பர், 2013

கரகாட்டக்கலை.

                                                     
                                                        மாலா,ரவிராஜன்

                                                           
                                                  ஒப்பனையில் மாலா

                                                 
                                                   வழிபாட்டு சடங்கில் தாள் கரகம்

தலையில் கரகம் சுமந்து செல்வது நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் ஒன்றாகும். குறிப்பாக கிராமக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மகாபாரதம் கதைப்பாடல் வடிவத்தில் நிகழ்த்தப்படும்போது முதல் நாள் நிகழ்ச்சியாக காப்பு கட்டும் விழா நடைபெறும் அதனைத் தொடர்ந்து பதினெட்டு நாட்களும் விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும். அப்போது முதல் நாள் நிகழ்வில் முக்கிய அம்சமாக தாள் கரகம்  சோடித்தல் அமையும். (தாள் கரகம் என்பது குடத்தின் வாய்ப்பகுதியில் பல்வேறு வண்ணத்தாள்களால் செய்யப்பட்ட முக்கோண வடிவ கொடிகள் ஒட்டப்பட்ட குச்சிகள் செறுகப்பட்டிருக்கும்). பக்தர்  ஒருவர் அதைத் தலையில் சுமந்து வருவது  உண்டு.  அதுபோலவே தீமிதித்திருவிழாவன்று அக்கினி கரகம்(மண் பானையில் மரக்கட்டைகளை இட்டு தீ மூட்டி தகதகவென எரியவிடுவர். தீ, பானையின் வாய் வழியே நாவை நீட்டும்) எனப்படும் தீக்கரகத்தைச் சுமந்து வருவதும் வழக்கம்.கரகம் சுமப்பது என்ற வழக்கம் ஒரு வழிபாட்டு மரபாக இருந்துள்ளது.
இத்தகையதொரு வழிபாட்டுச் சடங்கு நாளடைவில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று ஒரு நிகழ்த்து கலையாக வளர்ந்துள்ளது. தலையில் கரகம் சுமந்து ஆடும் ஆட்டம் கரகாட்டம் என்றாலும்  கலைஞர்களின் தனித்திறமைக்கேற்ப பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது இக்கலை. கரகாட்டக்கலை இன்றும் நடைமுறையில் உள்ள ஒரு கலை என்றாலும் அக்கலைஞர்களின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சி  கலைகளை பெரிதும் பாதித்துள்ளது, என்றாலும் அதையே சாதகமாக மாற்றிக்கொள்ளும் கலைஞர்களும் உண்டு. தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் ,எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்தவேண்டிய தேவையை இன்று கட்டாயமாகியிருக்கிறது. கலைகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல . நாட்டுப்புற கலைகள் அந்தக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. எனவே அக்கலைஞர்கள் தொடர்ந்து வாழ்க்கையை நடத்துவதற்கு கலை நிகழ்ச்சிகளைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். அதிலும் போட்டிகள் உண்டு. எனவே ஒவ்வொரு கலைக்குழுவும் தங்கள் குழுவை நிலை நிறுத்த விளம்பரப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். தஞ்சாவூர் கிழக்கு வாசல் பகுதியில் கரகாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம் என பல குழுக்கள் தங்கள் கலைக்கான விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
என்னதான் விளம்பரப்படுத்தினாலும் இதுபோன்ற கலைகள் கோயில் திருவிழாக்களை நம்பியே உள்ளன. அதில் ஈடுபடும் கலைஞர்கள் உரிய முறையில் கெளரவிக்கப்படுவதில்லை. ஓலைக் குடிசைகளில்தான் அவர்களின் வாழ்க்கை கழிகிறது. நாம் அந்த கலைகளின் சிறப்பைப் பேசுவதால் அவர்களின் வாழ்வில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை.  கலை அவர்களை வாழவைக்கிறதோ இல்லையோ அவர்கள் கலைகளை வாழவைத்துக்கொண்டுள்ளனர் என்பதுதான் கசப்பான உண்மை. நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். அரசு அவர்களுக்கென்று நல வாரியம் அமைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
கலை கலையாக மட்டும் இல்லாமல் அதில் பல நுண் அரசியல் இயங்குகிறது. அவற்றையெல்லாம் மீறியும் பல கலைஞர்கள் பல்வேறு கலைகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளனர். அத்தகையவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள ஊ.மங்கலம் கிராமத்தில் உள்ள கரகாட்டக் கலைஞர் மாலா.இவர் பிறந்தது பண்ருட்டி அருகிலுள்ள தண்டுப்பாளையம் . தற்போது கணவர் தமிழ்ச்செல்வனோடு ஊ.மங்கலத்தில் வாழ்ந்து வருகிறார்.
மாலாவின் பெற்றோர் தொடக்கத்தில் கரகாட்டம் ஆடுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவருக்குள்ளிருந்த கலை உணர்வை யாராலும் தடுக்க இயலவில்லை. பத்து ஆண்டுகள் கரகாட்ட அனுபவம் பெற்ற தேர்ந்த கலைஞராக ஆடச் செல்லுமிடங்களிலெல்லாம் பார்வையாளர்களின் பாராட்டைப்பெற்று வருகிறார் மாலா. கரகத்தைத் தலையில் சுமந்தபடி தீப்பந்தத்தினுள் செல்வது, குழல் விளக்குகளை உடைப்பது என தன் தனித்திறமைகளை இக்கலையோடு இணைத்து பார்வையாளர்களைப் பரவச்ப்படுத்துவது மாலாவின் வழக்கம்.
இவருடன் இணைது ஆடும் ஆண் கலைஞர் ரவிராஜ். இவரும்  அதே ஊரைச் சேர்ந்தவர். இவர் முதலில் குறவன் குறத்தி ஆட்டத்தைத்தான் ஆடியுள்ளார் பிறகு தானாகவே கரகாட்டம் கற்றுக்கொண்டு இன்று கரகாட்டக் கலைஞராக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிப்பருவத்திலேயே ஆட்டத்தில் நாட்டம் கொண்டவர். பள்ளிக்கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப்பெற்றவர்.
இவருக்கு திருமணம் ஆகும் வரை  இக்கலையில் ஈடுபட எவ்வித எதிர்ப்பும் இல்லை. அதன் பிறகு இவர் மனைவிக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும் ஆடிப்பழகிய ர்வியால் வேறு வேலைகளில் ஈடுபடமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி இவரது ஆட்டம் இவரின் மனைவிக்கும் பிடித்துப்போக தொடர்கிறது கலைச் சேவை.
இப்படித்தான் பல கலைஞர்கள் கலைவாழ்க்கைக்கு தங்களை அற்பணித்துள்ளனர். அவர்களை கெளரவப்படுத்த இயலவில்லை என்றாலும் அவமானப் படுத்தாமலிருக்கவேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோளாக இருக்கிறது.