இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

20 ஜூன், 2011

திருக்கோயிலூர் கபிலர் குன்று








அண்மையில் திருக்கோயிலூர் நண்பர் அசோக் அவர்களின் புதிய இல்லத் திறப்புவிழாவுக்குச் சென்றேன் நீண்ட நாள்களாகப் பார்க்க எண்ணியிருந்த கபிலர் குன்றினை நண்பர்கள் பிரபாகரன், புருசோத்தமன் ஆகியோரோடு சென்று கண்டு வந்தேன். கபிலர் குன்று பற்றி நண்பர் மு.இளங்கோவன் வலைப்பக்கத்தில் எழுதியுள்ளதை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.
மூவேந்தர்களின் சூழ்ச்சியால் பாரிவள்ளல் இறந்ததும், அவரின் இரண்டு மகள்களும் தாங்கள் அநாதைகளாக இருப்பதை உணர்ந்து,""அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்... இற்றைத்திங்கள்...குன்றும் கொண்டார் எந்தையும் இலமே''(புறம் 112)எனும் பாடலைப் பாடித் தங்களின் கையறு நிலையை அங்கவையும், சங்கவையும் பதிவு செய்தனர்.மாடமாளிகைகளில் வாழ்ந்த அங்கவை, சங்கவை தம் தந்தையாரின் மறைவிற்குப்பின் "கபிலர்' என்ற புலவரின் பாதுகாவலில் இருந்தனர். கபிலரும், பாரியும் நெருங்கிய நண்பர்கள். தம் நண்பன் பாரியின் மறைவுக்குப் பின் அவன் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களைக் கபிலர் வேண்டியதைப் புறநானூறு (200,202) தெரிவிக்கிறது. பாரியைக் கொன்ற வேந்தர்களால் தங்களுக்குத் தொல்லை உண்டாகும் என நினைத்தே மற்ற அரசர்கள் பாரிமகளிரை மணக்க விரும்ப வில்லை போலும்! பின்னர்ச் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்' எனும் அரசனைப் புகழ்ந்து பாடி கபிலர் பரிசில் பெற்றார் (பதிற். 61-70). சேரனின் நண்பனான மலையமான் திருமுடிக்காரியைப் புகழ்ந்து பாடி (புறம் 121-24) பாரியின் இரு ம(க்)களையும் அவன் வழியினர்க்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டுக் கபிலர் வடக்கிருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு (புறம் 236,அடிக்குறிப்பு)உயிர் துறந்தார் என்பது நாம் அறிந்த செய்திகள். அவ்வாறு கபிலர் உயிர்துறந்த இடம் எது?திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "கபிலர் குன்று' (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சிகளால் உறுதி செய்துள்ளார் ஆநிரைக் காவலன்என்னும் அறிஞர். இனிக் கபிலர் குன்றை நோக்சிச் செல்வோம்....திருக்கோவிலூர் பேருந்து நிலையத் திலிருந்து இரண்டு கி.மீட்டரில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று'உள்ளது.மழைக்காலங்களில் நீரோடினாலும் பெரும்பான்மையான காலங்களில் மணலைக்கடந்து கபிலர் குன்றை அடையலாம். கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்' என்றே இந்த இடத்தைக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. கபிலர் குன்றை அண்மைக் காலங்களில் "இடைச்சி குன்று' என்று அழைத்தனர். ஆநிரைக் காவலனின் முயற்சிக்குப் பிறகு தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. இவ்வூரின் அரசுப் பள்ளிகள் அங்கவை, சங்கவை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எனவும்,கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எனவும் அழைக்கப்படுவது பொருத்தமாகும்.கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. குறுகிய படிக்கட்டு வழியாக ஏறிக் கபிலர் குன்றை அடையலாம். கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது.செங்கல்கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகூட்டப்பட்டுள்ளது. கட்டட அமைப்பை நோக்கும் பொழுது, கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணி எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் சாமி சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் கருத இடம் உண்டு. அல்லது பாரி, கபிலர் உருவங்கள் என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை மெருகூட்டப்பட்டுள்ளதால் எக்காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிட முடியவில்லை.திருக்கோயிலூரைப் பார்க்க நினைப்பவர்கள் கபிலர் குன்றின் அழகிய அமைவிடத்தைக் கண்டு களிக்கலாம். இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அப்பகுதிக்குச் செல்ல முடியாதபடி அழகிய வண்ண விளக்குகள், பூங்காக்கள் அமைத்துப் பராமரித்தால் திருக்கோயிலூர் நகர மக்களின் அழகிய பொழுதுபோக்கு இடமாக இதனை மாற்ற முடியும்.பறம்புமலையில் வாழ்ந்த கபிலர் பார்ப்பனர்களிடம் பாரிமகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விட்டார் என இலக்கியங்கள் குறிப்பிடும்பொழுது திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில்,""செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது'' (தெ.இ.க. தொகுதி 7, 863) எனும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டில் இராசராசனின் தாய்வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறிய முடிகிறது. அதுபோல் அக்கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.பல்வேறு போர்கள் நடைபெற்ற,சங்க காலம்முதல் இடைக்காலம், பிற்காலம் வரை, வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கிய திருக்கோவிலூர் ஊரும், பெண்ணையாற்றின் கபிலர் குன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய- பார்வையிடப்படவேண்டிய முதன்மையான இடங்களாகும்.
நன்றி : http://muelangovan.blogspot.com/2007/04/blog-post_599.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக