இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

28 அக்டோபர், 2011

தமிழனும், ஏழாம் அறிவும்




இயக்குநர் தங்கர்பச்சான் ஏழாம் அறிவு பற்றி எழுதிய மின் மடலை இங்கே பதிகிறேன்.
மிக சுருக்கமாக ஏழாம் அறிவு எனும் வணிக சினிமா பற்றி ;
நான் எந்த சினிமாவுக்காகவும் எனக்கிருக்கிற வேலைகளை விட்டுவிட்டு இப்படி எழுத உட்கார்ந்ததில்லை.இன்றைக்கு தமிழர்களின் தேவை என்பது இருக்க வீடும்,பின் ஒரு காரும் பின் கான்வென்ட் படிப்பும், வங்கி சேமிப்பும் என்பது மட்டுமே..இன அறிவோ,மொழி அறிவோ,அரசியல் அறிவோ,நம் முன்னோர்களின் வரலாறு பற்றியோ தேவையில்லை என முடங்கிவிட்டான். இனி இவைகளை சொல்லித்தர நமது கல்வித்திட்டமோ,பெற்றோர்களோ,ஆசிரியர்களோ உருவாகப் போவதில்லை.பிழைப்புக்கு இதெல்லாம் இனி தேவை இல்லை எனும் நிலைக்கு அவனது சிந்தனை சிதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவிட்டது.இந்த சிந்தனை இல்லாமல் செய்ய நம் எதிரிகள் தமிழர்களை அழிக்க தமிழனையே தயார்ப் படுத்திவிட்டார்கள்.
கலைகள் அவரவர்களுக்கான இலக்கியத்தையும்,அரசியலையும் ,மொழி பண்பாட்டுக் கூறுகளையும் பேச வேண்டும்.இதைப்பற்றி எதையும் பேசாத,வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே கைய்யாளபபடுகிற கலை எதுவாக இருந்தாலும் மக்களை மயக்க நிலையிலேயே வைத்துக் கொள்வதற்குத்தான் உதவும். மது அருந்தியவன் மூன்று மணி நேரம் போதையிலேயே இருக்க உதவுகிற வேலையைத்தான் பல வணிக சினிமாக்கள் செய்து கொண்டிருக்கின்றன.அரிதாக சில சினிமாக்கள்தான் அந்த மூன்று மணி நேரத்தில் மயக்க நிலையில் வசியப் படுத்தி வைத்திருப்பதற்கு பதிலாக சிந்திக்க தூண்டுகின்றன.அடிமைகளாய் இருப்பவனைவிட,தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன். அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு தமிழர்களாய் இருப்பவர்கள் பல பேர் தங்களின் மொழி, இன, அரசியல் விடுதலைப்பற்றி உணராமல் பெயரளவிற்கு ஏதோ தமிழ் போல ஒரு மொழி பேசி,தமிழர்களுக்கு இருக்க வேண்டிய எதுவுமே இல்லாமல்,பெயரளவிற்கு தமிழ்நாடு என்றிருக்கும் இடத்தில் தமிழனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இன்றைக்கு தமிழ் பற்றி தமிழன் உரிமை பற்றி யார் பேசினாலும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள்.தமிழை தங்களின் சொந்த நலனுக்காக,அதிகாரத்துக்காக,பயன்படுத்தியவர்களைப் பார்த்து ஏற்பட்ட சலிப்புதான் இதற்கெல்லாம் காரணம்.
இனிவரும் காலங்களில் நம்மை வழி நடத்த உண்மையில் நம் மேல் அக்கறையுள்ளவர்கள் அரசியலில் வந்தாலோ!இப்போது உள்ள ஒரு சிலரையோ நாம் அடையாளம் கண்டு கொள்ளப்போவதும் இல்லை. அந்த வேலைகளை நம் கலை படைப்புகள்தான் செய்ய வேண்டும். ஏழாம் அறிவு மூலம் நிகழ்ந்திருப்பது ஒரு அறிய மாற்றம்.தமிழனுக்கு இன்றிருக்கிற அடிமை சிந்தனையையும்,ஏளனத்தையும், கூச்சத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும் சரி செய்ய ஒரு மருத்துவம் தேவைப்படுகிறது.அந்த மருத்துவத்தை ஒரு மசாலா சினிமா செய்திருக்கிறது.
நம் வரலாற்றை,அறிவியலை,மருத்துவத்தின் அவசியத்தையும் சொல்ல, படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மனப்பாடக்கல்வியை கற்றவர்களுக்கும்,இந்த படிப்பறிவில்லாத பாமர தமிழர்களுக்கும் இப்போதைக்கு பொழுதுப் போக்கு சினிமாதான் ஒரே வழி.தமிழனுக்கு எழுச்சியை உருவாக்க , அடிமைத் தனத்தை உணர்த்த சில செய்திகளோடு ஒரு கதை சினிமா வந்திருக்கிறது.அதற்கான பலனை எனது மகன்களிடமே நான் கண்டிருக்கிறேன்.எனது படைப்புகள் என் மகன்களிடம் உருவாகிய தாக்கத்தைக்காட்டிலும்,ஏழாம் அறிவு அவர்களுக்கு இனப்பற்றை உணர்த்தி தமிழன் என்பதை பெருமையாக நினைக்க செய்திருக்கிறது.
இன்றைய தமிழ் அரசியல் சூழலில் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத மக்களுக்கு ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தேவையாக இருக்கின்றன.seventh sense , nonsense என்றெல்லாம் எழுதி நம் தமிழர்கள் இணைய தளங்களில் எழுதி இன்பம் கண்டு தங்களின் திரைப்பட திறனாய்வை பறை சாற்றி மகிழ்கிறார்களாம் .இவ்வாறு எழுதுவதால் அவர்களின் அறியாமைதான் வெளிப்படுகிறது.நான் உங்களிடம் இப்படத்தைப்பற்றிய திறனாய்வை விளக்கவரவில்லை.திறனாய்வு செய்தால் என் அழகியும்,பள்ளிக்கூடமும்கூட நிற்காது.மனிதர்கள் எல்லோருமே குறை உள்ளவர்கள்தான். அவர்கள் உருவாக்குகிற படைப்புகள் எவ்வாறு குறைகள் இல்லாமல் இருக்க முடியும்.எனது குறைகளை அதன் படைப்பாளிகளிடம் கூறி விட்டேன்.நம்மை ஒன்று படுத்த இப்படிப்பட்ட படைப்புகள் உதவுகின்றன.எதிரிகளாய் இருப்பவர்கள் குறை சொல்லிப் போகட்டும். தமிழர்களாய் இருப்பவர்கள் இப்படத்தை கொண்டாட வேண்டும்.நம் கலாச்சாரத்தையும்,பண்பாட்டுக் கூறுகளையும்,நம் மொழியையும் சிதைக்கின்ற பொழுதுப் போக்கு திரைப்படங்களுக்கிடையில் பழந்தமிழர் பெருமை பேசவும்,தேய்ந்துபோன நம் இன உணர்வை பேசவும் ஒரு சினிமா அதுவும் முருகதாஸ்,சூர்யா போன்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது நமக்கெல்லாம் பெருமைதானே.நிச்சயம் தமிழனாகிய நான் அதனை பெருமையாக நினைக்கிறேன்.அதே போல் இதன் தயாரிப்பாளர் உதயநிதியையும் நாம் பாராட்ட வேண்டும்.
தாய் மண்,தொலைந்து போனவர்கள் எனும் தமிழர்களுக்கான மிக அத்தியாவசியமான இரண்டு திரைக்கதைகளை 2002 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தயாரிப்பளர்களிடமும் சொல்லி அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.என் போன்ற பல படைப்பாளிகளின் நிலை தமிழ் சினிமாவில் இப்படித்தான் இருக்கின்றது.தமிழை நம்பியோ,தமிழர்களை நம்பியோ முதலீடு செய்ய இன்று யாரும் இல்லாத நிலையத்தில் ஒரு தமிழனாகவும், ஒரு படைப்பாளியாகவும் என் நன்றியை தயாரிப்பாளர் அவர்களுக்கு தெரிவிக்கிறேன்.
ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் பலனடைபவர்கள் அந்த படத்தோடு வியாபார ரீதியாக தொடர்புடையவர்கள்தான்.ஆனால் ஒரு சில படங்கள்தான் அவை சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.ஏழாம் அறிவும் அப்படிப்பட்டதுதான்.உங்களின் இனப்பற்றை சோதனை செய்கிற படம்.தமிழர்களிடம் நான் கவனிக்கின்ற ஒரு கெட்ட செயல் இதுதான். சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியை கேட்பதை விட்டுவிட்டு,இந்த படம் எத்தனை வாரம் ஓடும்,எவ்வளவு வசூலாகும் என்றெல்லாம் கேட்பதுதான்.இந்த கவலையெல்லாம் அந்த படத்தை தயாரித்தவர்களுக்கும்,படத்தை வாங்கியவர்களுக்கும்,திரையிட்டவர்களுக்கும் இருக்க வேண்டிய கேள்வியும்,கவலையும்.ஏழாம் அறிவு எத்தனை நாட்கள் ஓடும்,எவ்வளவு பணம் கிடைக்கும்,வெற்றியா,தோல்வியா என்கிற கவலை படம் பார்க்கிறவர்களுக்கு வேண்டாம். மீண்டும் சொல்கிறேன்,ஏழாம் அறிவு தமிழர்களுக்கான வெற்றி.
--
அன்போடு
தங்கர் பச்சான்

8 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. வரிகளில் அவரின் நியாயமான கோபம் தெரிகிறது..

    பதிலளிநீக்கு
  3. இட ஒதுக்கீட்டைபற்றி சர்ச்சைக்குறிய வசனம் ஒன்று இந்த படத்தில் வருகிறதே,இது குறித்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரான தங்கர்பச்சானின் கருத்து என்னவோ?

    பதிலளிநீக்கு
  4. தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... என்று எத்தனை திரைப்படங்கள் இருக்கிறது என விரல் விட்டு எண்ணி விடலாம். உண்மையில் இந்த படத்தினை பார்த்த போது ரசிப்பயும் மீறி தமிழன் என்ற பெருமைப் படுதலையும் உணர முடிந்தது. இயக்குனரின் கோபமும் நியாயமானதுவே. என் கோபமும் அதுவே.

    பதிலளிநீக்கு
  5. ."தமிழர்களிடம் நான் கவனிக்கின்ற ஒரு கெட்ட செயல் இதுதான். சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியை கேட்பதை விட்டுவிட்டு,இந்த படம் எத்தனை வாரம் ஓடும்,எவ்வளவு வசூலாகும் என்றெல்லாம் கேட்பதுதான்"

    நல்லா சொன்னிங்க சார்... பிரம்படி

    பதிலளிநீக்கு
  6. எழாம் அறிவு திரைப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு இடத்தில் கூட தமிழன் என்ற வார்த்தை உச்சரிக்கபடவில்லை என்று எனது நண்பர்கள் மற்றும் முக நூல் மூலம் அறிந்தேன். தமிழன் என்ற உணர்ச்சியை தூண்டிவிட்டு வியாபாரத்திற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையாகவே தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டுமெனில் இங்கு பயன்படுத்திய அதே வசனத்தை அந்த மொழியிலும் பயன்படுத்தி இருக்க வேண்டும். அவர்களுக்கும் நம்மை பற்றி தெரிய ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு