இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

1 மே, 2018

சிறுவர் விளையட்டுகள்




1.அம்புலி
நபர்கள்: இருவர்
விளையாட்டு முறை:அழும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவது உண்டு. குழந்தையை காலில் கிடத்தி விளையாட்டு காட்டுவதுதான் அம்புலி என்று நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுவர். பிள்ளைத்தமிழ் இலக்கிய உறுப்பான அம்புலி குழந்தையின் 15 ஆம் மாதத்திற்கு உரியது. இப்பருவத்தில் குழந்தையோடு விளையாட வரும்படி நிலாவை அழைப்பது மரபு.நாட்டுப்புற அம்புலியில் குழந்தையை படத்திலுள்ளவாறு அமர்த்தி கீழ்க்கண்டுள்ள பாடலைப்பாடி விளையாட்டு காட்டுவர்.பெரியவர் பாடலைப்பாட குழந்தையும் பின்பற்றிக்கூறுவதாக விளையாட்டு தொடரும்.
அம்புலி அம்புலி எங்க போன?
ஆவாரங்காட்டுக்கு
ஏன் போன?
குச்சி ஒடிக்க
ஏன் குச்சி?
குழி நோண்ட
ஏன் குழி?
பணம் பொதைக்க
ஏன் பணம்?
மாடு வாங்க
ஏன் மாடு?
சாணி போட
ஏன் சாணி?
ஊடு மொழுவ
ஏன் ஊடு?
பிள்ளைகள் வளர
ஏன் பிள்ளைகள்?
ஆத்து மணலுல... அஞ்சி வெளையாட...
கோரப்பாயில... கொஞ்சி வெளையாட...
முடிவு: பாடல் முடிந்ததும் விளையாட்டு நிறைவுபெறும்

பயன்கள்: இவிளையாட்டின் மூலம் குழந்தைகள் கேட்கும் திறனும் பேசும் திறனும் அதிகரிக்கிறது. நமது கிராமப்புற பண்பாடு பழக்கவழக்கங்களையும் குழந்தைகள் அறிந்துகொள்ள உதவுகிறது.

2.சரணா
நபர்கள்: குறைந்தது 8 பேர்முதல் 10 பேர்வரை
விளியாடும் முறை:சரணா சரணா, சரணாத்தி, கிளித்தட்டு என வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் ஆட்டம். செவ்வக வடிவில் நிலத்தில் கோடு கிழித்து அதனை நீள வாக்கில் இரண்டாகப் பிரித்து ஒரு அணியிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப குறுக்குக் கோடுகளை அமைத்துக்கொள்வர். உத்தி பிரிந்து ஒரு அணியினர் கோடுகளில் நின்று கொள்ள எதிரணியினர் நிற்பவர்களிடம் அடி படாமல் குறுக்குக் கோடுகளைக் கடந்து சென்று உப்பெடுத்து வரவேண்டும். அணித் தலைவனுக்குக் கிளி என்று பெயர் அவன் முதல் கோட்டில் நிற்க பிற உறுப்பினர்கள் மற்ற கோடுகளில் நிற்பர். இலங்கையிலும் தமிழர்களிடையே கிளித்தட்டு ஆடும் பழக்கம் உள்ளது. கிளி சரணா, உப்பு சரணா என இரு வகை உண்டு. முல்லை நிலத்தில் தோன்றியது கிளி சரணா, நெய்தல் நிலத்தில் தோன்றியது உப்பு சரணா எனக் கருதப்படுகிறது.
முடிவு: விரும்பும்போது முடித்துக்கொள்வர்
பயன்: தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னால் இழுக்கு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்னும் பண்பாட்டினை சிறுவர்களுக்குக் கற்றுத் தருகிறது.

3.கோட்டிப்புள்
நபர்: இருவர்
ஆடும் முறை: மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் நாட்களில் விளையாடுவது. கில்லித்தண்டு, கிட்டிப்புள் என்றும் வழங்கப்படுகிறது. இரண்டு முதல் பத்து பேர் வரை விளையாடுவர். சிறு குழியில் புள் எனப்படும் சிறு மரத்துண்டினை வைத்து கோட்டியால் கெந்திவிட்டு புள் விழுந்த இடத்திற்குச் சென்று அப்புள்ளை கோட்டியால் தட்டி எழுப்பி அடித்து விட எங்கு போய் வாழுகிறதோ அங்கிருந்து மீண்டும் மீண்டும் அது போல் செய்து இறுதியில் எதிரணியினர் புள் கிடந்த இடத்திலிருந்து கேலியான குறிப்பொலி எழுப்பியபடி ஆட்டம் தொடங்கிய இடத்திற்கு வந்து மீண்டும் ஆட்டத்தைத் தொடர வேண்டும். முதலில் புள்ளைக் கெந்தும் போது எதிரணியினர் புள்ளைப் பிடித்துவிட்டால் கெந்தியவர் ஆட்டமிழப்பார்.
முடிவு: விரும்பும்போது முடித்துக்கொள்ளலாம்.
பயன்கள்: ஊருடன் ஒத்துவாழக் கற்றல், திறமைக்கேற்ற வாய்புபு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துதல்.

4.பம்பரம்
நபர்கள்:இருவர் முதல் 10 பேர் வரை ஆடலாம்
ஆடும் முறை:சிறு கயிற்றைக்கொண்டு பம்பரத்தைச் சுழற்றி ஆடுவது பம்பரவிளையாட்டு. இதில் இரண்டுவகை ஆட்டங்கள் உண்டு. வல்லா,காட்டுக்குத்து எனக்குறிப்பிடுவர். வட்டத்துக்குள் பமபரத்தை வைத்து ஆடுவது வல்லா. இரு எல்லைக் கோடுகள் வரைந்து அதற்குள் பம்பரத்தை விட்டு கைகளில் ஏந்தி ஆடுவது காட்டுக் குத்து எனப்படும். பமபரம் பற்றிய குறிப்புகள் இராமாயணம், கந்தபுராணம், பிரபுலிங்கலீலை ஆகிய நூல்களில் காணக்கிடைக்கின்றன.
முடிவு: விரும்பும்ப்போது முடித்துக்கொள்ளலாம்.
பயன்கள்: தனித்திறன், தன்னம்பிக்கை வளர்கிறது.


5.அம்பால் விளையாட்டு
நபர்கள்: இருவர் முதல் 10 பேர் வரை விளையாடலாம்
ஆடும் முறை: 7 ஆம் எண் வடிவக் குச்சியைக்கொண்டு ஆடும் ஆட்டம். ஒருவன் இரு கைகளாலும் குச்சியை உயர்த்திப் பிடித்துக்கொள்ள மற்றொரு சிறுவன் அதனைத் தள்ளிவிட கீழே விழுந்து கிடக்கும் அம்பால் குச்சியை மற்ற சிறுவர்கள் முடிந்தவரைத் தள்ளிச்செல்வதே இவ்வாட்டத்தின் முக்கி அம்சம். தன் குச்சியைத் தள்ளிச் செல்பவர்களைத் தொட்டு ஆட்டமிழக்கச் செய்யவேண்டும். ஆட்டமிழப்பவர் தன் குச்சியை உயர்த்திப் பிடித்து நிற்க மீண்டும் மீண்டும் தொடரும். அதற்கு முன்பு கீழே கிடக்கும் குச்சியை அதற்குரியவன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்டம் தொடங்கிய இடத்திற்கு ஓடி வரவேண்டும். அப்போது அவனுக்குப் பின்னால் வரும் சிறுவர்கள் கீழ்க்கண்ட பாடலைப் பாடுவர்.
எங்க வீட்டு நாய் தெரு பொறுக்கப் போச்சுகல்லால அடிச்சேன்காலொடிஞ்சி போச்சு
முடிவு: இரு அணிகளிலும் சமமான வெற்றி கிடைத்ததும் முடித்துக்கொள்வர்.
ஆட்டத்தின் பயன்: சிறுவர்களிடம் மனதை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.

6.கண்ணாமூச்சி
நபர்கள்: 3 முதல் 10 பேர் வரை
விளையாடும் முறை: சிறுவர் சிறுமியர் என இரு பாலரும் விளையாடும் விளையாட்டு. ஒரு சிறுவனின் கண்ணை மற்றொருவன் பொத்த பிறர் ஒளிந்து கொள்ள ஒளிந்திருப்பவர்களில் ஒருவரைக் கண்டறிவது விளையாட்டு. கண்ணைப்பொத்தியிருப்பவனோடு கீழ்க்கண்டவாறு உரையாடல் நடைபெற்று முடிந்த பிறகு கண்ணைத்திறந்துவிடவேண்டும்.

உரையாடல்:
கண்ணாமூச்சி காதடைப்பு
உங்க வீட்டுல என்னா சோறு?
நெல்லு சோறு

ஈ உழுந்துதா, எறும்பு உழுந்துதா?
எறும்பு உழுந்துது
எடுத்துட்டு சாப்பிட்டியா, எடுக்காம சாப்பிட்டியா?
எடுத்துட்டு சாப்பிட்டேன்
காட்டுக்கு போயி ஒரு சிங்கம், ஒரு புலி,
ஒரு கரடி எல்லாம் புடிச்சிகிட்டு வா...
கண்பொத்தி ஆடும் மரபு சங்ககாலந்தொட்டே தமிழர்களிடமிருந்திருப்பதைக் கீழ்க்கண்ட பாடல்கள் உணர்த்துகின்றன.
சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன
நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே! (ஐங்குறுநூறு)
கண் புதையாக் குறுகிப் பிடிக்கை அன்ன...(அகநாநூறு)
முடிவு: அனைவரையும் கண்டறிந்ததும் ஒரு ஆட்டம் முடிவுக்கு வரும்
பயன்கள்: சிறுவர்களுக்கே உரிய கண்டறியும் ஆற்றலை இவ்விளையாட்டு வளர்க்கிறது.

7.குலை குலையா முந்திரிக்காய்
நபர்கள்: 10 பேர்
ஆடும் முறை:சிறுவர் சிறுமியர் என இரு பாலரும் ஆடும் ஆட்டம். விளையாட்டில் கலந்துகொள்பவர்கள் வட்டவடிவில் அமர்ந்திருக்க ஒருவர் மட்டும் கையில் வைத்திருக்கும் துணியைச் சுழற்றிக்கொண்டு வட்டத்தைச் சுற்றி பாட்டு பாடியபடி ஓடிவரும்போது அமர்ந்திருப்போரில் யாரேனும் ஒருவர் பின்னே அத்துணியை போட்டுவிட்டு ஓடுவார். துணி யாருக்குப்பின்னால் கிடக்கிறதோ அவர் எழுந்து ஓடி துணி போட்டவரைப் பிடிக்கவேண்டும் இல்லையேல். இவர் யாரேனும் ஒருவர் பின்னால் துணியைப்போட ஆட்டம் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும்.
பாடல்: கொல கொலயா முந்திரக்காய்

நரிய நரிய சுத்தி வா
கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி.
முடிவு: விரும்பும்போது முடித்துக்கொள்வர்
பயன்கள்: கை, கால், மூட்டு மற்றும் உடல் ஆகியவை வலுப்பெறும். மன மகிழ்ச்சி கிடைக்கும் நினைவாற்றல் வளரும்
8.கல்பாரி
நபர்கள்: 5 பேர்
ஆடும் முறை: பாரி என்றால் கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல் என்று பொருள். தரையில் செவ்வக வடிவில் கோடு கிழித்து அதனுள் குறுக்கு நெடுக்காக இரு கோடுகள் அமைத்து கோடுகள் வெட்டுமிடத்தில் ஒரு சிறு வட்டம் வரைந்து அதில் நான்கு கற்களை வைத்து கட்டத்திற்கு ஒருவர் வீதம் நான்கு பேர் நிற்க நடுக்கோட்டில் ஒருவன் நின்று கட்டத்திற்குள்ளிருப்போர் கற்களை எடுத்துச்சென்று விடாமல் காவல் காக்கும் விளையாட்டு கல்பாரி. காவலாளியிடம் அடி படாமல் கற்களை எடுத்துவிட்டால் ஆட்டத்தில் வென்றதாக பொருள்.
முடிவு: அனைவரும் ஆட்டம் இழக்கும்போது முடிவுக்கு வரும்
பயன்கள்: உழைத்து பொருளீட்ட வேண்டும், ஈட்டிய பொருளில் தம் தேவை போக எஞ்சியதை பிறருக்கு கொடுத்து உதவுதல் ஆகிய பண்புகளைச் சிறுவர்களிடம் வளர்க்கிறது.

9.சில்லி விளையாட்டு
நபர்கள்: இருவர்
ஆடும் முறை: மழைக்காலங்களில் சிறுமியர் ஆடுவது. இருவர் சேர்ந்து ஆடுவதால் தலா ஐந்து கட்டங்களை நிலத்தில் வரைந்து உடைந்த மண் பானைத்துண்டுகளை சல்லியாக்கி (இதுதான் சில்லி என்று மாறியிருக்க வேண்டும்) கட்டத்துக்குள் வீசி ஒற்றைக் காலால் நொண்டியடித்தபடி கட்டத்தினுள்ளிருக்கும் சில்லியை மிதித்து அதனை அடுத்த கட்டத்துக்குக் காலால் எத்தித் தள்ளவேண்டும் அது போல் ஒவ்வொரு கட்டத்திலும் வீசி விளையாடுவர்.இது போல் நான்கு சுற்றுகள் வெற்றிகரமாக முடித்தால் ஒரு பழம் பழுத்ததாகக் கூறி கடைசி நான்காவது கட்டத்தில் ஒரு பெருக்கல் குறி வரைந்துகொள்வது வழக்கம். வெற்றிக்கனிகளை முதலில் பெறுபவர் ஆட்டத்தில் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிறார்.
முடிவு : ஒருவர் வெற்றி பெற்றால் ஒரு ஆட்டம் முடியும். இருவரும் சேர்ந்து முடிவெடுக்கும்போது ஆட்டத்தை முடித்துக்கொள்வார்கள்.

பயன்கள்: தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகிய பண்புகளைச் சிறுவயதிலேயே இவ்விளையாட்டு ஏற்படுத்துகிறது.
10.ஏழாங்காய் விளையாட்டு
நபர்கள்: இருவர்
ஆடும் முறை:சிறுமியர் ஆடுவது. ஏழு கற்களைக்கொண்டு ஆடுவதால் இப்பெயர். ஒரு காயைக் கையில் வைத்துக்கொண்டு மற்றகாய்களைச் சிதறவிட்டு கையிலிருக்கும் காயை மேலே விட்டு கீழிருக்கும் காயை எடுத்தபடி மேலிருந்து வருவதையும் பிடிக்க வேண்டும்.
பாடல்: ஆலெல பொறுக்கி
அரசெல பொறுக்கி
கிண்ணம் பொறுக்கி
கீரிபுள்ள தாச்சி
தாச்சின்னா தாச்சி
மதுர மீனாட்சி.
முடிவு: இருவரும் விரும்பும்போது முடிவுக்கு வரும்
பயன்கள்: கை,வாய், கண் ஆகிய முப்புலன்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் ஆற்றல் வளர்கிறது


11.ஓரி விளையாட்டு
நபர்கள்: 5 முதல் 10 பேர் வரை
ஆடும் முறை: நீரில் ஆடும் விளையாட்டு. நிலத்தில் ஓடிப் பிடித்து விளையாடுவதைப்போன்று நீரில் மூழ்கி நீந்திச்சென்று பிடிக்கவேண்டும்.ஆட்டத்தின் தொடக்கத்தில் பாடப்படும் பாடல்:

ஆத்துல கெண்ட புடிச்சன்
எல்லாருக்கும் குடுத்தன்
எங்க வெங்கடேசனுக்கு மட்டும் குடுக்கலே.
முடிவு: உடல் சோரும்போது முடியும்
பயன்கள்: நீச்சலை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம், யூகித்து அறியும் ஆற்றல் வளரும்.

12.சடுகுடு விளையாட்டு
நபர்கள்: 10 முதல் 20 பேர் வரை
ஆடும் முறை: தமிழர்களின் வீர விளையாட்டு. சங்க கால போர் முறைகளின் எச்சமாகக் கருதப்படுகிறது. வெட்சித் திணையின் துறைகளாகக் கூறப்படும் 'பசுக்கூட்டங்களைக் கவர்தலுக்கு எழுகின்ற பேரொலி, பகைவேந்தரின் புறத்திடத்து சென்று சூழ்ந்து தங்குதல், தங்கிய பின்னர் சூழப்பட்ட ஊரை அழித்தல், எதிர்ப்பவர்களைப் போரிட்டு மீளுதல்' ஆகிய கூறுகளோடு பின் வரும் சடுகுடு ஆட்ட அலகுகள் ஒப்பு நோக்கத் தக்கவை. அவை முறையே,' ஆட்டத்தில் பாடப்படும் பாடலின் பேரொலி, எதிரணியின் எல்லைக்குள் சென்று ஆடுதல், அங்குள்ளவர்களைத் தொட்டு ஆட்டமிழக்கச் செய்தல், பிடிக்க வருபவர்களிடமிருந்து மீளுதல்'. ஆகியனவாகும்.
பாடல்:
 1. நாந்தாண்டா ஒப்பன்
நல்லமுத்து பேரன்
வெள்ளி பெரம்பெடுத்து
வெளையாட வரேண்டா
தங்கப் பெரம்பெடுத்து
தாலி கட்ட வரேண்டா
வரேண்டா... வரேண்டா...
2. சப்ளாஞ்சி அடிக்கவே
சறுக்கிட்டு உழவே
ஒப்பனுக்கும் ஓயிக்கும்
ஒரு பணம் தெண்டம்
தெண்டம்... தெண்டம்...
3. தோத்த கடைக்கு நான் வரேன்
தொட்டு பார்க்க நான் வரேன்
கருவாட்டு முள்ளெடுத்து
காது குத்த நான் வரேன்.
முடிவு: தொடங்கும்போதே எத்தனை ஆட்டம் என்று முடிவு செய்து விளையாடுவர். நான்கு முறை விளையாண்டதும் முடிப்பது வழக்கம்.
பயன்கள்: வீர உணர்வு வளரும், சவால்களை எதிர் கொள்ளக் கற்பிக்கிக்கிறது, தமிழரின் போர் மரபுகளை அறிய உதவுகிறது.


13.ஆபியம் விளையாட்டு
நபர்கள்: 6 பேர்
ஆடும் முறை: ஆறு சிறுவர்கள் சேர்ந்து ஆடும் விளையாட்டு இது. பகல் இரவு என இரு பொழுதுகளிலும் ஆடுவர். ஒருவர் குனிந்து நிற்க மற்றவர்கள் குனிந்து நிற்பவரின் முதுகில் கை வைத்து ஒரு புறமிருந்து மறுபுறத்திற்குத் தாண்ட வேண்டும். தாண்டும்போது தாண்டுபவரின் கால்கள் குனிந்திருப்பவரின் மீது படக்கூடாது, பட்டால் ஆட்டமிழப்பர்.ஆட்டத்தில் பாடப்படும்
பாடல்:
ஆபியம்...
மணியாபியம்...
கிருணாபியம்
நாகனார் மண்ணைத்தொடு
 ராஜா பின்னால ஒத குடு.
முடிவு: அனைவரும் விரும்பும்போது முடித்துக்கொள்வர்
பயன்கள்: எச்சரிக்கை உணர்வை வளர்க்கும், எதையும் தாங்குகிற வலிமையைத் தரும்.

14.திம்பி விளையாட்டு
நபர்கள்: இருவர்
ஆடும் முறை: சிறுமியர் விளையாடுவது. முன்னிரவு நேரத்தில் ஆடுவர்.
பெயர்க்காரணம்:தும்பி சில நேரங்களில் ஓரிடத்திலிருந்து கொண்டு கரகரவெனச் சுற்றும்.அதனால் இவ்விளையாட்டு 'தும்பி சுற்றுதல்' என்று சூட்டப்பட்டு, பின்னர் 'திம்பி சுற்றுதல்' என்று திரிந்திருக்கலாம்.(நன்றி:முனைவர் ஆறு.இராமநாதன்)
திம்பி சுற்றும்போது பாடப்படும் பாடல்கள்:
1. எண்ண இல்ல சீப்பு இல்ல
ஊதா பொடவ இல்ல
உன்னக் கூட நான் வல்ல


2. நீயும் நானும் சோடி
நெல்லு குத்த வாடி
ஆத்து மணல அள்ளிபோட்டு
அவுலு இடிக்க வாடி
முடிவு: இருவருக்கும் உடல் சோர்வு ஏற்படும் வரை விளையாடுவ்ர்.
இவ்விளையாட்டின் பயன்: தோழமை உணர்வை வளர்க்கிறது,சமுதாயத்தில் இணைந்து செயல்படும் பண்பை குழந்தைகளிடம் வளர்க்கிறது,திம்பிப்பாடல்கள் ஆண் பெண் உறவு நிலை, சிற்றூர் பொருளாதாரநிலை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. மேலும் விரிவாக அறிய படிக்கவும் கிராமத்து விளையாட்டுகள் (விகடன் வெளியீடு)

15.குண்டு(கோலி)
விளையாட்டு முறை: பேந்தாகுண்டு, குழி குண்டு என இரு வகையுண்டு. தரையில் சதுரம் வரைந்து அதனுள் குண்டை வைத்து ஆடுவது பேந்தாகுண்டு. குழியினுள் அடித்து ஆடுவது குழி குண்டு. பேந்தாவிலிருக்கும் குண்டுகளை கையிலுருக்கும் குண்டால் குறிபார்த்து அடித்து வெளியேற்ற் வேண்டும். அது எவ்வளவு தூரம் செல்கிறதோ அங்கிருந்து எதிரணியில் உள்ளவர்கள் கைவிரல்களை மடக்கி மணிக்கட்டுகளால் அக்குண்டுகளை பேந்தாவை நோக்கி தள்ளிவரவேண்டும். இவ்வாறு மூன்றுமுறை விளையாடுவது ஒரு ஆட்டம் ஆகும்.
நபர்கள்: எண்ணிக்கை வரையறை இல்லை
முடிவு: மூன்று ஆட்டம் விளையாடியதும் முடிவுபெறும்.
பயன்கள்: பொருள்களைக் கையாளும் திறன், விரல்களை ஒருங்கிணைக்கும் திறன், குறிதவறாமல் அடிக்கும் திறன், மனதை ஒருமுகப்படுத்தும் பண்பு ஆகியவற்றை சிறுவர்கள் பெறுகின்றனர்.

16.காயே கடுப்பங்காய்
விளையாட்டு முறை: இரு அணிகளாகப் பிரிந்து எதிரெதிரே அம்ர்ந்துஒண்டு கைகளை முதுகுப்பக்கம் வைத்துக்கொள்ளவேண்டும் அணிக்கு ஒரு தலைவர் அமர்ந்திருப்பவர்களின் பின்னால் நிற்கவேண்டும். ஒரு அணித்தலைவர் ஏதேனும் ஒரு சிறு பொருளை கையில் வைத்துக்கொண்டு பாடல் பாடிக்கொண்டே ஒரு உறுப்பினரின் கைகளில் இலாவகமாக ஒளித்து வைக்கவேண்டும். எதிரணியில் இருப்பவர் யார் கைகளில் பொருள் வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நபர்கள்: 10 நபர்கள்
முடிவு: விளையாடும் நபர்கள் விரும்பும்போது முடித்துக் கொள்ளலாம்.
பாடல்: காயே கடுப்பங்காய்
          கஞ்சி வார்த்த நெல்லிக்காய்
          உப்பே புளியங்காய்
          ஊறுகா போட்ட நெல்லிக்காய்
          கள்ளன் வறான் கதவ சாத்து
          வெள்ளன் வறான் விளக்கேத்து
          திடுமுடு திடுமுடு வாய்தா பணம்…
பயன்கள்: உழவர்களிடம் அடாவடியாக வரி வசூலிப்பதை பகடி செய்கிறது இந்த ஆட்டம். அரசியல் விழிப்புணர்வு, இடர் மேலாண்மை, குழுவாக இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை இவ்விளையாட்டின் மூலம் குழந்தைகள் கற்கின்றனர்.
17.கிச்சு கிச்சு தாம்பாளம்:
நபர்கள்: இரண்டு பேர்
விளையாட்டு முறை: இருவரும் எதிரெதிராய் அமர்ந்து இருவருக்கும் இடையில் மணலைக் குவித்து வைக்கவேண்டும். ஒருவர் தன்னிடமுள்ள சிறு குச்சியை மணலுக்குள் ஒளித்துவைக்க வேண்டும். மற்றவர் எந்த இடத்தில் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது என்பதை தன் இரு உள்ளங்கைகளாலும் வைத்து சுட்டிக்காட்டாவேண்டும். சரியாக காண்பித்தால் அவர் அதுபோல் ஒளித்து வைக்க எதிரிலிருப்பவர் கண்டறிய வேண்டும்.
முடிவு: விரும்பும்போது முடித்துக்கொள்வர்.
பாடல்:
          கிச்சு கிச்சு தாம்பாளம்
          கீயாக் கீயா தாம்பாளம்
          மச்சு மச்சு தாம்பாளம்
          மாயா மாயா தாம்பாளம்
பயன்கள்: கண்டறியும் ஆற்றல், கூர்ந்து நோக்கும் திறன், சிந்தனையை ஒருமுகப்படுத்தும் பண்பு ஆகியனவற்றை வளர்க்கிறது.




15.குண்டு(கோலி)
விளையாட்டு முறை: பேந்தாகுண்டு, குழி குண்டு என இரு வகையுண்டு. தரையில் சதுரம் வரைந்து அதனுள் குண்டை வைத்து ஆடுவது பேந்தாகுண்டு. குழியினுள் அடித்து ஆடுவது குழி குண்டு. பேந்தாவிலிருக்கும் குண்டுகளை கையிலுருக்கும் குண்டால் குறிபார்த்து அடித்து வெளியேற்ற் வேண்டும். அது எவ்வளவு தூரம் செல்கிறதோ அங்கிருந்து எதிரணியில் உள்ளவர்கள் கைவிரல்களை மடக்கி மணிக்கட்டுகளால் அக்குண்டுகளை பேந்தாவை நோக்கி தள்ளிவரவேண்டும். இவ்வாறு மூன்றுமுறை விளையாடுவது ஒரு ஆட்டம் ஆகும்.
நபர்கள்: எண்ணிக்கை வரையறை இல்லை
முடிவு: மூன்று ஆட்டம் விளையாடியதும் முடிவுபெறும்.
பயன்கள்: பொருள்களைக் கையாளும் திறன், விரல்களை ஒருங்கிணைக்கும் திறன், குறிதவறாமல் அடிக்கும் திறன், மனதை ஒருமுகப்படுத்தும் பண்பு ஆகியவற்றை சிறுவர்கள் பெறுகின்றனர்.

16.காயே கடுப்பங்காய்
விளையாட்டு முறை: இரு அணிகளாகப் பிரிந்து எதிரெதிரே அம்ர்ந்துஒண்டு கைகளை முதுகுப்பக்கம் வைத்துக்கொள்ளவேண்டும் அணிக்கு ஒரு தலைவர் அமர்ந்திருப்பவர்களின் பின்னால் நிற்கவேண்டும். ஒரு அணித்தலைவர் ஏதேனும் ஒரு சிறு பொருளை கையில் வைத்துக்கொண்டு பாடல் பாடிக்கொண்டே ஒரு உறுப்பினரின் கைகளில் இலாவகமாக ஒளித்து வைக்கவேண்டும். எதிரணியில் இருப்பவர் யார் கைகளில் பொருள் வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நபர்கள்: 10 நபர்கள்
முடிவு: விளையாடும் நபர்கள் விரும்பும்போது முடித்துக் கொள்ளலாம்.
பாடல்: காயே கடுப்பங்காய்
          கஞ்சி வார்த்த நெல்லிக்காய்
          உப்பே புளியங்காய்
          ஊறுகா போட்ட நெல்லிக்காய்
          கள்ளன் வறான் கதவ சாத்து
          வெள்ளன் வறான் விளக்கேத்து
          திடுமுடு திடுமுடு வாய்தா பணம்…
பயன்கள்: உழவர்களிடம் அடாவடியாக வரி வசூலிப்பதை பகடி செய்கிறது இந்த ஆட்டம். அரசியல் விழிப்புணர்வு, இடர் மேலாண்மை, குழுவாக இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை இவ்விளையாட்டின் மூலம் குழந்தைகள் கற்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக