இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

14 மார்ச், 2009

ஒற்றுமை வளர்க்கும் கன்னியாயி வழிபாடு



வழிபாட்டிடங்களில் தீண்டாமையைக் கடைபிடிப்பதும் சாதிய மோதல்கள் நிகழ்வதும் இன்றும் நடைமுறையிலிருப்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதற்கு மாறாக ஆதிதிராவிட இன மக்கள் தலைமையில் நடைபெறும் கன்னியாயி வழிபாட்டில் வன்னியர் இன மக்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் வழிபடுவதும், ஆதிதிராவிடர்களிடம் சாட்டையடி வாங்குவதும் இன்றைக்கும் ஒரு சிற்றூரில் நடைமுறையில் உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள மருங்கூரில்தான் மாசி மகத்தன்று இத்தகையத் திருவிழா நடைபெறுகிறது. கன்னியாயி வழிபாடு மருங்கூரில் ஆதிதிராவிடர்களால் பல தலைமுறைகளுக்கு முன்பிருந்தே நடத்தப்பட்டு வருகிறது. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு வரை ஏழு செங்கற்களை நட்டுவைத்து வழிபட்டு வந்திருக்கின்றனர். அதன் பிறகு வாசுதேவ படையாட்சி என்பவர் ஏழு கன்னி சிலைகளை மரச்சிற்பங்களாகச் செய்து கொடுத்துள்ளார். இப்போது நடுகற்களோடு மரச்சிற்பங்களையும் சேர்த்து வழிபட்டு வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் மாசி மகத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாள் காப்பு கட்டுதல், இரண்டாம் நாள் கன்னி தெரு வலம் வருதல், மூன்றாம் நாளான மகத்தன்று கன்னிகள் ஊருக்குத் தெற்கே உள்ள வெள்ளாற்றுக்குச் செல்லுதல் என நடைபெறும். கன்னி ஆற்றுக்குச் செல்வதைக் கிள்ளை முகம் பார்க்கச் செல்லுதல் எனக் குறிப்பிடுகின்றனர். முதலிரண்டு நாள் திருவிழாவும் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியிலேயே நடைபெறுகின்றன. மூன்றாம் நாள் திருவிழாவில் ஆற்றுக்குச் செல்லும் கன்னி வன்னியர்கள் வாழும் தெரு வழியாகச் செல்லும். அப்போது வன்னியர்கள் கன்னிகளுக்குப் பாவாடை, மாலை அணிவித்து மாவிளக்கு மாவிட்டு வழிபடுவர் ஆதிதிராவிட பூசாரி வன்னியர்களுக்கு தீப ஆராதனைக் காண்பித்து திருநீரு வழங்குவர். நீண்ட நாள் நோய்வாய்ப் பட்டவர்கள், பேய் பிடித்திருப்பதாய் நம்புகிறவர்கள் கன்னியிடம் வேண்டிக் கொண்டு ஆதிதிராவிடப் பூசாரியிடம் சாட்டையடி வாங்குவது இன்றும் வழக்கத்திலுள்ளது. ஆற்றுக்குச் சென்று கன்னிகளை இறக்கி வைத்து வழிபாடு செய்து பேய் பிடித்ததாய் நம்பப்படும் கன்னிப் பெண்களுக்கு சாட்டையடி கொடுத்து பேயோட்டுவர். இச் சடங்குகள் முடிந்த பிறகு கோயிலுக்கு திரும்புகையில் கன்னிகளுக்கு மரச்சிற்பம் செய்து கொடுத்த வாசுதேவ படையாட்சியின் வீட்டிற்குச் செல்கின்றனர். இதைப் பிறந்த வீடு எனக் குறிப்பிடுகின்றனர். இவ் வழிபாட்டு முறைகளை உற்று நோக்கும் போது இது பழமையான வழிபாட்டு முறையாகவே தோன்றுகிறது. கோயிலில் விழா தொடங்கும்போது காப்பு கட்டுதல், நடுகல் நட்டு வழிபடுதல், ஆற்றின் நடுவில் கன்னிப் பெண்களுக்குப் பேயோட்டுதல் ஆகிய அனைத்துமே சங்ககாலத்தில் நடந்திருக்கின்றன என்பதைக் கீழ்க்கண்ட சங்கப் பாடல்கள் மூலம் அறியலாம்.
விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாம்; கைந்நூல் யாவாம் (குறு: 218 ; 2)
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் (அகம்: 67 ; 9-10) வேற்றுப் பெருந்தெய்வம் பலஉடன் வாழ்த்தி, பேஎய்க் கொளீஇயள் இவள்.....(குறு : 263 ; 4-5 )
இப்பாடல்கள் இவ்வழிபாட்டின் தொன்மையை உணர்த்துவது போல வேறு சில வழக்காறுகள் ஆதிதிராவிடர்கள் பழங்காலத்தில் உயர்வான இடத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன. இவர்கள் சமய குருவாக இருந்து பல சடங்குகளை நடத்தியுள்ளனர். சில பழங்கோயில்களில் இவர்களுக்கு தனி மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் கோயில் திருவிழாவின் போது ஆதிதிராவிடர் ஒருவர் யானை மீது அமர்ந்து கொடி பிடித்துச் செல்லும் வழக்கம் அண்மைக்காலம் வரை நடைமுறையில் இருந்ததாக பேராசிராயர் தொ.பரமசிவன் குறிப்பிடுவார். பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பாரில்லாமல் கீழ்ச்சாதியானான் என்று ஒரு சொல்லடை உண்டு, அதற்கேற்ப காலப்போக்கில் ஆதிதிராவிடர்கள் தாழ்த்தப்பட்ட சமூகமாக சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இந்நிலையில் மருங்கூரில் நடைபெறும் இத்திருவிழா தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதாக உள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும்.
காணக:தமிழ் ஓசை களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக