இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

2 மார்ச், 2024

நாட்டுப்புறவியல் துறைக்கும் சிறுவர் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் நூல்





நண்பர் பல்லவிக்குமார் அவர்களின் புதிய நூலை இன்று வழங்கினார். எனது அணிந்துரையிலிருந்து.....

நாட்டுப்புறவியல் துறையில் தமிழ் படித்தவர்கள் மட்டுமே ஆய்வு செய்து கொண்டிருந்த நிலையில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்ய வந்திருப்பது அந்த துறையை மேலும் வளப்படுத்தும். நாட்டுப்புறவியல் ஆய்வு என்பது பல்துறை களப்பாய்வாக இருக்க வேண்டும் என்பதை எங்கள் பேராசிரியர் முனைவர் ஆறு. இராமநாதன் அவர்கள் அடிக்கடி வலியுறுத்துவார்கள்.

பல்வேறு நாட்டுப்புறவியல் அறிஞர்களும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர். அவர்கள் விரும்பியபடி இப்போது நாட்டுப்புறவியல் துறையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளை தங்கள் துறை சார்ந்தும் நாட்டுப்புறவியல் சார்ந்தும் நிகழ்த்தி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நண்பர் முனைவர் பல்லவிக்குமார் அவர்கள். அவர் பல துறைகளில் அழங்கால் பட்டவர் உடற்கல்வித்துறையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றியவர் முறையாக உடற்கல்வி பயின்றவர் வணிகவியல் துறையிலும் முதுகலை ஆசிரியராக திறம்பட பணியாற்றியவர் தற்போது நாட்டுப்புறவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று அத்துறைக்கு தன்னால் என்ற வகையில் வளம் சேர்த்து வருகிறார். நண்பர் இதழாளராகவும் படைப்பாளராகவும் பதிப்பாளராகவும் தீவிரமாக இயங்கி வருபவர். பல்வேறு படைப்பாளர்களின் நூல்களை தமிழ் பல்லவி வெளியீடாக கொண்டு வந்து கொண்டிருக்கிறார் இப்படி இலக்கியம் சார்ந்தும் நாட்டுப்புறவியல் சார்ந்தும் மொழிபெயர்ப்பு சார்ந்தும் பல்வேறு தளங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அந்தந்த துறைகளுக்கும் தன்னால் என்ற பங்களிப்பை முழுமையாகவும் ஈடுபாட்டோடும் செய்து வருபவர். தன்னை ஒரு தனி நபராக இல்லாமல் ஒரு இயக்கமாக மாற்றிக் கொண்டு இயங்கி வருபவர். என்னுடைய கிராமத்து விளையாட்டுகள் நூலை வெளியிடும்போது முனைவர் பல்லவிக்குமார் அவர்களின் கையெழுத்து படிகளாக வைத்திருந்த அவருடைய குறிப்பேடுகள் குறிப்பாக விளையாட்டு கொள்கைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவிகரமாக அமைந்தன. நியாயமாக எனக்கு முன்பே இந்த நூலை அவர் கொண்டு வந்திருக்க வேண்டும். இப்போது நாட்டுப்புற சிறுவர் விளையாட்டுகள் என்ற தலைப்பில் தனது ஆய்வேட்டின் ஒரு பகுதியை மேலும் செழுமைப்படுத்தி இங்கே வாசகர்களுக்கு நூலாக வழங்கி உள்ளார்.

விளையாட்டு அவர் பணியாற்றிய துறை மட்டுமல்ல சிறு வயது முதலே சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தவர் எனவே விளையாட்டு குறித்து ஆய்வு செய்வதற்கும் நூல் வெளியிடுவதற்கும் முழுமையான தகுதி உடையவர். விளையாட்டுகளை அறிவியல் முறைப்படி இந்த நூலில் ஆய்வு செய்துள்ளார். விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல அது எதிர்கால மனித வளத்துக்கான ஒரு முதலீடு. பெருநகர குழந்தைகள் கணினியில் விளையாண்டு கொண்டிருக்கும் சூழலில் நாட்டுப்புற சிறுவர்கள் தான் நம் மரபு வழி விளையாட்டுகளை இன்னும் காப்பாற்றி வருகின்றனர். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது விளையாடிய விளையாட்டுகள் இப்போது வடிவங்களிலும் உள்ளடக்கங்களிலும் வெவ்வேறு சிறு சிறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. நாட்டுப்புற கதைகளை போல பாடல்களைப் போல நாட்டுப்புற விளையாட்டும் ஒரு கூட்டுப் படைப்பாகவே திகழ்கிறது கால சூழலுக்கு ஏற்பவன் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்படும் அவர்களின் படைப்பாற்றலுக்கு ஏற்படவும் விளையாட்டுகள் புதுப்புது மாற்றங்களோடு தம்மைப் புதுப்பித்துக் கொள்கின்றன.

இந்த நூலில் முனைவர் பல்லவி குமார் அவர்கள் விளையாட்டுகளை சிறுவர் விளையாட்டு சிறுமியர் விளையாட்டு இருபாலரும் விளையாடும் விளையாட்டுகள் என்று நுட்பமாக ஆய்வு செய்ததோடு விளையாட்டு எப்படி நல்வாழ்வுக்கான ஒரு மிகச் சிறந்த கருவியாக திகழ்கிறது என்பதை நூலின் இறுதியில் ஆணித்தரமாக சுட்டிக் காட்டுகிறார்.

அனைத்து துறைகளிலும் நமது மரபு வழி அறிவு எப்படி தேவைப்படுகிறது அதுபோலவே விளையாட்டிலும் நமது மறு வழி விளையாட்டுகள் சிறுவர்களை சமூகவயமாக்குவதிலும் உடல் ரீதியாக பலமானவர்களாக மாற்றுவதோடு மட்டுமின்றி நம் பண்பாட்டுக் கூறுகளை விளையாட்டு சிறுவர்களிடம் கடத்துகிறது. பல்வேறு நற்பண்புகளை விளையாட்டுகள் வாயிலாக சிறுவர்கள் தம்மை அறியாமலே கற்றுக் கொள்கின்றனர் என்பது நம் நாட்டுப்புற விளையாட்டுகளுக்கான தனித்தன்மையாக விளங்குகிறது. தமிழர் விளையாட்டுகள் குறித்து பல்வேறு தமிழ் அறிஞர்களும் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் துறை சார்ந்த ஆய்வுக்கு தமிழறிஞர்களின் ஆய்வுக்கு ஏராளமான வேறுபாடுகளை காண முடிகிறது. நண்பர் பல்லவிகுமார் அவர்களின் இந்த நூல் விளையாட்டு துறைக்கு மட்டுமின்றி நாட்டுப்புறவியல் துறைக்கும் தமிழ் இலக்கியத் துறைக்கும் வளம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது இந்த நூலின் தனிச்சிறப்பாக நான் கருதுகிறேன். மேலும் ஒவ்வொரு விளையாட்டும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் எத்தகைய பயன்களை சிறுவர்களுக்கு தருகின்றன என்பதை மிகவும் நுட்பமாக ஒரு விளையாட்டு வீரராகவும் உடற்கல்வி பயிற்றுநர் ஆகவும் தேர்ந்த ஆசிரியராகவும் நல்ல ஆய்வாளராகவும் சிறுவர் இலக்கிய படைப்பாளியாகவும் இந்த நூலில் மிகச் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.நண்பர் பல்லவி குமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.தமிழ் இலக்கிய உலகம் இந்நூலினைப் போற்றி வரவேற்க வேண்டும் என விரும்புகிறேன்.


அன்புடன்,

முனைவர் இரத்தின புகழேந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக