இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

2 மார்ச், 2024

நடுநாட்டுச் சிறுகதைகளின் முன்னோடி

 அஞ்சலி

***



தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கவிதை, கதைகள் வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டபோது வழக்கமாக இளைஞர்கள் வாசிக்கும் வெகுமக்கள் இதழ்களில் வரும் கதை கவிதைகளையே வாசிக்க நேர்ந்தது. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் என்னுடன் பயிற்சி பெற்ற நண்பன் அருள், நிரந்தர மனிதர்கள் என்னும் அறிவுமதியின் கவிதைத்தொகுப்பை எனக்கு பரிசளிக்க அந்த கவிதைகளில் வீராணம் ஏரி, சாலைப் புளியமரம் போன்ற கவிதைகளில் முதன்முதலாக எம் வட்டார மனிதர்களையும் மண்ணையும் வாசிக்க வாசிக்க என்னுள் இனம்புரியாத மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. பிறகு பயிற்சி முடித்து சு.கீணனூர் தொடக்கப்பள்ளியில் விடுப்பு பதிலி ஆசிரியராக பணியேற்ற போது உடன் பணியாற்றிய முதனை செயராமன் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி இந்த ஊர்க் காரர்தான் என்று கூறியபோது என்னால் நம்ப இயலவில்லை. கீணனூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கவிஞர் அறிவுமதி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இலக்கியம் குறித்து நிறைய உரையாடினோம். கடிதத்தின் வாயிலாகவும் உரையாடல் தொடர்ந்தது. இப்படியாக அவர் நட்பு பல நூல்களையும் கலை இலக்கிய ஆளுமைகளையும் அறிமுகப்படுத்தியது. அவர்தான் பழமலயின் சனங்களின் கதை கவிதை நூலையும், ராசேந்திரசோழனின் எட்டு கதைகள் நூலையும் கொடுத்து இவைகளைப் படி. நீயும் கவிதைகள் எழுதுவதோடு கதைகளையும் நிறைய எழுது என்று ஊக்கப்படுத்தினார். அவ்வப்போது கடிதத்தின் மூலமும் ஊக்கப்படுத்துவார்.

 எட்டு கதைகள் ஒருமுறை படித்துமுடித்த உடன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மீண்டும் மீண்டும் எத்தனை முறை படித்தேன் என்று கணக்கிட முடியாத அளவுக்கு பல முறை படித்தேன். ஒவ்வொரு கதையும் எங்கள் ஊரில் நடந்தவை போலவே இருந்தது. கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் எங்கள் ஊர் மனிதர்களாக இருந்தனர். நம்ம வாழ்க்கையும் சிறுகதையாகியுள்ளதே என்னும் மகிழ்ச்சி ஒருபுறம். கதையிலுள்ள நுட்பங்களை விளங்கிக்கொள்ளும் பக்குவம் அப்போது இல்லை. ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மக்களின் வாழ்க்கை அழகுகளும் அவலங்களும் அவரது கதைகளில் கொட்டிக்கிடந்தன.

நடுநாட்டு மக்களின் வாழ்க்கை இலக்கியமாகியுள்ளதே என்பதே முதல் மகிழ்ச்சி. அதுவரை சிறுகதையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் எல்லாருமே மேல்தட்டு மக்களின் வாழ்க்கையையே பதிவு செய்து வந்த சூழலில் முதன் முதலாக  விவசாயக் கூலிகளையும், வண்டிமாட்டுத் தொழிலாளிகளையும், அடித்தட்டு மக்களையும் சிறுகதையில் கொண்டுவந்தவர் நம் ராசேந்திரசோழன் என்பதே இந்த மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம். விந்தன் கதைகளில் இப்படிப்பட்ட கதாப் பாத்திரங்கள் அமைந்திருந்தாலும் அதில் ஒரு பொதுத்தன்மை காணப்படும். ஆனால் இவர் கதைகளில் நம் நடுநாட்டுத் தனித்தன்மை மேலோங்கியிருக்கும்.

ஏன் நாமும் இதுபோல் எழுதக்கூடாது என்று முயற்சி செய்து பார்த்தேன், எங்கள் ஊரில் அப்போது கரும்பு தீவிரமாக பயிரிட்ட காலம் அது. எனவே கரும்பு வெட்டும் தொழிலாளிகளைப் பற்றி கரும்பு என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினேன். அப்போது விருத்தாசலத்தில் நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பு தொடங்கப்பட்டது. இளைஞர்கள் தங்கள் படைப்புகளை வாசிக்க அனுமதித்து விமர்சனம் செய்து ஊக்கப்படுத்தினார்கள். கரும்பு கதையை வாசித்து பாராட்டு பெற்றதும், இதனை இதழில் வெளியிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தினப்புரட்சி நாளிதழில் மக்கள் இலக்கியம் என்னும் ஒரு பக்கம் வெளியானது. அதன் பொறுப்பாசிரியர் நண்பர் ப.தி.அரசு இந்த கதையை வெளியிட்டார். அதனைப் படித்த நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் என்னைப் பாராட்டியதாக அண்ணன் அறிவுமதி அவர்களின் மூலம் கேள்விப்பட்டேன். இதற்கெல்லாம் மூலகாரணம் அஸ்வகோஷ் என்னும் ராசேந்திரசோழன் அவர்களே. இந்த உற்சாகத்தோடு சில கதைகளை எழுதினேன்.

 அப்போது விருத்தாசலத்தில் சதாசிவம் அவர்களின் அருணா டெக்ஸ்டைல்ஸ்தான்  இலக்கியவாதிகள் சங்கமிக்கும் இடம். அடிக்கடி அங்கு சென்று புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம். ஒரு முறை அஸ்வகோஷ் அவர்கள் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது அவர்களை அருணாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் எழுதிய ஒரு கதையின் கையெழுத்துப் படியை அவர்களிடம் கொடுத்து இந்த கதை குறித்து நீங்கள் கருத்து கூறவேண்டும் எனக்கேட்டபோது சற்றும் தயங்காமல் வாங்கி படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்து அழகாக உள்ளது. கதை எழுதுவதற்கான நடை உங்களுக்கு வசப்பட்டுள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அவரின் அந்த பண்பாடு இன்றும் வியப்பளிக்கிறது. அவரோ பெரிய எழுத்தாளர் நானோ ஒரு கத்துக்குட்டி ஆனாலும் அவர் அதுபோல் நினைக்காமல் நேரம் ஒதுக்கி உடனே படித்து கறுத்து கூறிய விதம் என் மனத்தில் அவருக்கு மாபெரும் சிம்மாசனத்தை இட்டுவைத்தது. இன்று வரை அவர் படைப்பு எங்களுக்கு பிரமிப்பாகத்தான் உள்ளது. 

 ஒரு சிறந்த எழுத்தாளரே நம்மைப் பாரட்டிவிட்டாரே என்று நினைக்கும்போது இன்றும் அந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கிறது.

அதன் பிறகு அவர்களின் மற்ற படைப்புகளைத் தேடினேன். 21 ஆவது அம்சம் பற்றி சதாசிவம் அவர்கள் கூற அந்த நூலையும் வாங்கினேன். ஆனால் இன்று வரை அதனைப் படித்து முடிக்கவில்லை. அவரது எட்டு கதைகள் ஒன்றே போதும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்று ஒரு நூலை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். எனக்கு ரசேந்திரசோழனின் எட்டு கதைகள்தான் வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்.

 இந்த மண்ணின் மாபெரும் படைப்பாளியை இலக்கிய உலகம் கொண்டாடியிருக்கவேண்டாமா? அதற்கெல்லாம் தென்மாவட்டத்தில் பிறந்திருக்கவேண்டுமோ? காலம் உள்ளவரை ராசேந்திர சோழனின் படைப்புகள் நிலைத்து நிற்கும். 

இணையத்தில் அவரது வலைப்பூ பார்த்தேன். 2014 க்குப் பிறகு படைப்புகள் பதிவேற்றப்படவில்லை. அவரது அத்தனை படைப்புகளும் இணையத்தில் வாசிக்க வழியேற்படுத்தி இளைஞர்களிடம் அவரது படைப்புகளை கொண்டுசேர்க்கவேண்டும்.

ஐயா அவர்களின் படைப்புகளை காலம் கொண்டாடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக