கற்பித்தல் பணியைவிடவும் பிற பணிகளின் அழுத்தம் அதிகரித்திருக்கிறது
நிரந்தர ஆசிரியர் பணி கிடைப்பதே இன்று குதிரைக்கொம்பாகிவிட்டது. எனினும், இளம் ஆசிரியர்களில் பலர் வேலையை உதறிவிட்டு வேலையில்லாத் திண்டாட்டத்துக்குள்ளும் நிச்சயமற்ற வாழ்க்கைச் சூழலுக்குள்ளும் நுழைய முற்படுகின்றனர். பள்ளிக்கூடங்களில் பரவும் அமைதியின்மை வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.
அதிகரிக்கும் நெருக்கடி: இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இந்தப் போக்கு பல நாடுகளில் தலைதூக்குவதை யுனெஸ்கோ கவனப்படுத்தியது. யுனெஸ்கோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஆய்விதழான ‘பிராஸ்பெக்ட்டஸ்’இல் ‘அத்தனை ஆசிரியர்களும் எங்கே போனார்கள்?’ என்னும் கட்டுரை வெளிவந்தது.
வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் சோர்வடைந்து, விரக்தியுற்று இருப்பதை உலகளாவிய ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தது இதில் விவாதிக்கப்பட்டது. இந்தப் பணியில் சத்தமில்லாமல் மூண்டிருக்கும் நெருக்கடிக்கான காரணிகளை அந்த ஆய்வு அடையாளப்படுத்தியது. பள்ளிகள், வகுப்பறைகளின் நிலைமையோடு தொடர்புடைய காரணிகள் சில உள்ளன. மற்றவை குடும்பச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பள்ளிக்கூடத்தில் குழந்தைகளின் நடத்தையில் ஏற்படுத்தும் தாக்கத்துடன் தொடர்புடையவை.
ஆனால், இப்படியொரு நிகழ்வை உணர்ந்ததாக இந்தியாவில் இதுவரை எந்தவொரு ஆய்வும் நடத்தப்படவில்லை. தங்களது பணிவாழ்க்கையைச் சிக்கலாக்குபவை பற்றி இங்கும் ஆசிரியர்கள் ஓரளவு பேசவே செய்கின்றனர். அரசு இயந்திரத்தின் அடக்குமுறையில் இருந்து தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையே என்கிற ஏக்கப்பெருமூச்சு பொதுவான புகாராக எதிரொலிக்கிறது. அதிகார அடக்குமுறையும் அதிகப்படியான எதிர்பார்ப்பும், ஏதோ அரசுப் பள்ளிகளில் மட்டுமே நிலவுவதாக யாரேனும் தவறுதலாக நினைக்கக்கூடும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் அதிகார நெருக்கடிக்கு இணையான நெருக்கடி தனியார் பள்ளிகளின் கார்ப்பரேட் மயமான நிர்வாகத்தாலும் தரப்படுகிறது. இன்றைய காலச்சூழலில் ஆசிரியர்களுக்குத் தொழில்சார் சுதந்திரமும் அதிகாரமும் மறுக்கப்படுவது வழக்கமான கதையாகிவிட்டது.
சில எடுத்துக்காட்டுகள்: நான் அறிந்த சிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர் உயர் தகுதி வாய்ந்த பொதுப்பள்ளி ஒன்றிலிருந்து வெளியேறிவிட்டார். காரணம், எண்ணிலக்க (Digital) வளங்களைப் பயன்படுத்திக் கற்பிக்கும்படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். வரலாற்றுத் தரவுகள், விவாதங்களை அலசி ஆராய்வதே உண்மையான வரலாற்றுக் கல்வி எனச் சிந்திப்பவரான அந்த ஆசிரியர், அதை ஏற்க மறுத்துவிட்டார்.
வரலாற்றுச் சம்பவங்களை எண்ணிலக்க அணுகுதல் மூலம் அறிந்துகொள்வதால் தமது இலக்கு நிறைவேறாது என்று அவர் கருதுகிறார். இந்த ஆசிரியரை இழப்பதற்காக அந்தப் பள்ளி வருந்தவில்லை. வேறு பல பள்ளிகளைப் போலவேதான் அந்தப் பள்ளியும் நடந்துகொண்டது. அந்தப் பள்ளியின் முதல்வரைப் பொறுத்தமட்டில், கூடுமானவரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்தான் எதிர்காலம் உள்ளது. பள்ளிக்கூடங்களின் கதவுகளை ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தட்டிக்கொண்டிருக்கிறது. பள்ளி முதல்வர்கள் பலரும் ஏஐ-யை வரவேற்க ஆவலாக உள்ளனர்.
இப்படித்தான் மற்றொரு மூத்த ஆசிரியர், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கூடுதல் பொறுப்பு, கடுமையான பணிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியாதபடி செய்வதாகவும் கூறி ராஜினாமா செய்துவிட்டார். தான் பணிபுரிந்துவந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி தம்மை நிகழ்ச்சி மேலாளராக மாற்றிக்கொண்டிருந்ததாக வருத்தம் தெரிவித்தார். ஏதேதோ நாள்களைக் கொண்டாடச் சொல்லி மேலிருந்து கட்டளைகள் வந்தவண்ணம் இருந்தன; போதாக்குறைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் ஒளிப்படங்களைப் பதிவேற்றவும் பணிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
விழா நாள்களில் பள்ளியை நல்ல காட்சிப்பொருளாக்க உதவும் ஆசிரியர்களைப் பள்ளி முதல்வர்கள் பாராட்டுகின்றனர். பதிவேடு பராமரித்தல் ஆசிரியர் பணியின் முக்கிய அங்கமாக எப்போதுமே இருந்துவந்துள்ளது. இன்றோ அது கற்பித்தலைக் காட்டிலும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. இதனால் பாடவேளைக்கான தயாரிப்புக்கும் கற்பித்தலுக்கும் மிகக்குறைந்த அவகாசம் மட்டுமே கிடைக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பொருளாதார வசதி கொண்டவர்கள் மட்டுமே ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிடுவதாகச் சிலர் கருதலாம். ஆனால், பொருளாதாரரீதியில் பின்தங்கிய சூழலில் இருந்துவந்து அரசுப் பள்ளியில் படித்துப் பின்னாளில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நிரந்த ஆசிரியர் பணியில் சேர்ந்த ஒருவர், இனியும் இதைத் தொடர முடியாது என்று வேலையை ராஜினாமா செய்துவிட்டாராம். குறிப்பாக, வகுப்பறை வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருதல் இந்த ஆசிரியருக்கு மற்றொரு உளவியல் சிக்கலாக மாறியுள்ளது.
வகுப்பறைகளிலும் பள்ளி வளாக நடைபாதைகளிலும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது. புத்தகப்பையில் குழந்தைகள் கத்தியை எடுத்துவரும் செய்திகள் அவ்வப்போது தென்படுகின்றன. அமெரிக்கா அளவுக்கு இங்கு நிலைமை மோசமாகிவிடவில்லை என்றாலும், அதை நோக்கி நகர்வது கண்கூடு.
வகுப்பறையில் மாணவர்கள் வெளிப்படுத்தக்கூடிய கட்டுக்கடங்காத கோபம், சட்டாம்பிள்ளைத்தனம், வன்முறை முதலானவற்றைக் கண்டு ஆசிரியர்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர். சமூக ஊடகச் செயல்பாடுகளில் குழந்தைகள் பங்கேற்பது, வரம்பு மீறிய வன்முறைக் காட்சிகளைத் தடையின்றி கண்டுகளிப்பது ஆகியவையே சிறார் மத்தியில் இத்தகைய போக்கு தலைதூக்கக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மிக இளம் வயதில் திறன்பேசிக்கு அறிமுகமாவதே இந்தச் சிக்கல் பூதாகரமாவதற்குக் காரணம் என்கிறார் ‘பதற்றமான தலைமுறை’ (The Anxious Generation) நூலாசிரியர் ஜொனதன் ஹையிட். குழந்தைகளிடத்தில் மன அழுத்தம் அதிகரிப்பதற்கும் புதிய தொழில்நுட்பச் சூழலுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதாக அவர் கருதுகிறார். முரட்டுத்தனமாகச் சிறார் நடந்துகொள்ளும்படி இதுவே இட்டுச்செல்கிறது என்கிறார்.
மாறிப்போன இலக்கு: கிராமப்புற இந்தியாவில் ஆயிரக்கணக்கான தொடக்கப் பள்ளிகள் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்களுடன் செயல்படுகின்றன. மிகக்குறைந்த வசதியுடன் இந்த ஆசிரியர்கள் பாடம் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் மாவட்ட அதிகாரிக்கும் பள்ளி நிர்வாகம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து அனுப்பி வைப்பதிலும் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு இவர்கள் உதவிசெய்தாக வேண்டும்.
மையப்படுத்தப்பட்ட தரவு அணுகல் என்னும் பித்து இன்று பிடித்தாட்டுகிறது. மாணவர் சேர்க்கை, வருகைப்பதிவு, உதவித்தொகை விநியோகம், பயிற்சி, மதிய உணவு போன்ற அனைத்தையும் ஒன்றாகப் பிணைத்துப் போடப்பட்ட பெரிய மாவுக்கட்டு இது. இந்தத் தரவுகளை நிர்வகித்து வழங்க வேண்டியதும் ஆசிரியர்கள்தான். கற்பித்தலும் குழந்தைகளும் ஒரு பொருட்டே இல்லை என்றாகிவருகிறது. திட்டங்களுக்கான பலன்கள், விளைவுகளில் வெளிப்படைத்தன்மை கட்டாயம். அமைப்பின் முழுக் கவனமும் இதில் மட்டுமே உள்ளது. அதாவது, உயர் அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் தரவுகளைப் பார்வையிடும்படியாகத் தகவல்களை உரிய நேரத்தில் பதிவேற்றம் செய்தாக வேண்டும்.
தரத்தை உயர்த்துவதற்காக, இதில் கவனம் செலுத்துவதே நோக்கம். ஆனால் இதுவே தற்போது இலக்காக மாறிவிட்டிருக்கிறது. குழந்தைகளின் நலன், கற்றல் மீதான அக்கறையைக் காட்டிலும் அதிகாரிகளுக்கும் நன்கொடையாளர்களுக்கும் செயல்திறனுக்கான ஆதாரத்தில் மட்டுமே ஆர்வமெல்லாம் உள்ளது என்பதை ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் உணர்ந்துவிட்டனர். பணி நிமித்தமான உண்மைக்கும் ஆசிரியர்களுடைய உண்மைக்கும் இடையில் எப்போதுமே வேறுபாடு இருந்துவருகிறது. பின்விளைவுகளைத் தவிர்க்கப் பிந்தைய உண்மை ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.
- கிருஷ்ண குமார், தேசியக் கல்வி ஆராய்ச்சி - பயிற்சிக் குழுவின் (என்சிஇஆர்டி) முன்னாள் இயக்குநர், ‘Thank you, Gandhi’ நூலாசிரியர்.
தமிழில்: ம.சுசித்ரா
நன்றி: https://www.hindutamil.in


