ஊடகத்துறையில் 40 ஆண்டுகால அனுபவம் உடையவர் அண்ணன் ராஜா வாசுதேவன். தனியார் தொலைக்காட்சியின் முதல் செய்தி ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர். அவர் தனது பணி அனுபவங்களை மீண்டும் தலைப்புச் செய்திகள் என்னும் புனைவாக வெளியிட்டுள்ளார். புனைவு என்றாலும் அதில் வெறும் ஐந்து விழுக்காடு மட்டுமே புனைவு. 95 விழுக்காடு உண்மைகள் தான் இடம்பெற்றுள்ளன. இது தமிழ்ப் புதின வரலாற்றில் ஒரு தனித்தன்மை உள்ள படைப்பு. ஒரு செய்தி ஆசிரியர் காட்சி ஊடகத்தில் செய்தியை வெளியிடும்போது எத்தகைய பாடுகளைப் படுகிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். அணியாக இணைந்து செயல்படுவதில் உள்ள சவால்கள் அதிகாரத்தின் நெருக்கடிகள் என்று செய்தியாளர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சவால்களையும் மிக நேர்த்தியான தனது எழுத்துக்களின் வாயிலாக பதிவு செய்துள்ளார். இது இவரது நான்காவது புதினம். முதல் புதினமான விடுதலைப் போராட்ட வீரர் கடலூர் அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை வரலாற்று புதினமான “அஞ்சலை” நான் படித்துள்ளேன். அதற்கு அடுத்ததாக வெளியிட்ட கொள்ளிடம், கற்றதனால் ஆய பயன் ஆகிய புதினங்களை நான் படிக்கும் வாய்ப்பு அமையவில்லை. முதல் புதினத்திற்கும் நான்காவது புதனத்திற்கும் இடையில் அவர் எழுத்து செழுமைப்பட்டுள்ளது. மிகுந்த பாய்ச்சலோடு நான்காவது புதனத்தில் விளையாடுகிறார். நாங்கள் அந்தமான் சென்றபோது பிழை திருத்துவதற்காக இந்த நூலை எடுத்து வந்தார். அந்தமானில் இருந்து திரும்பும்போது விமானத்தில் நான் பாதி நாவலைப் படித்து முடித்தேன். சென்னை வந்து சில நாட்கள் கழித்து அஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார் அப்போது மீண்டும் முழுதாக படித்து முடித்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுதாக படித்து முடித்த புதினம் இது. படிக்கத் தொடங்கி விட்டால் நீங்கள் அதை வைத்து விட்டு வேறு வேலை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு உங்களை வசப்படுத்தி உள்ளே அழைத்துச் செல்கிறார். இது அவரது எழுத்துக்கு கிடைத்த வெற்றி என்றே கருதுகிறேன். கதை தேடி அலையும் இயக்குனர்கள் இந்த, “மீண்டும் தலைப்புச் செய்திகள்” புதினத்தை திரைப்படமாக எடுக்கலாம். இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியில் இவர்கள் ஒளிபரப்பிய முதல் செய்தியே தமிழ்நாட்டு அரசியலை மாற்றிப் போட்டது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தில் தொடங்குகிறது நாவல். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு காரணமான செய்திகளை, சம்பவங்களை சுவாரசியமாக நாவல் நெடுக சொல்லிச் செல்கிறார். பிரேமானந்தா, நித்யானந்தா போன்ற போலிச் சாமியார்களை வெளி உலகத்திற்கு காட்டியதற்காக செய்தியாளர்கள் சந்தித்த நெருக்கடிகள் சட்டப் போராட்டங்கள் எனச் செல்வதோடு இலங்கைக்குச் சென்று பிரபாகரன் பேட்டியை நேரடியாக ஒளிபரப்பு வதற்காக அவர்கள் சந்தித்த சவால்கள் என தமிழ்நாட்டின் கால் நூற்றாண்டுக்கு மேலான வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த புதினம்.
காட்சி ஊடகத்துறையில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பாடநூலாக வைக்கின்ற அளவுக்கு தரமான படைப்பு. நாம் மறந்து போன பல நிகழ்வுகளை நாவல் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது. தர்மபுரி பேருந்து எரிப்பு ,சங்கரராமன் கொலை வழக்கு, பிரேமானந்தா கைது, நித்யானந்தாவின் லீலைகள் என பல சம்பவங்களை செய்தியாக்குவதற்கு செய்தியாளர்கள் எத்தகைய உழைப்பைச் செலுத்தி இருக்கிறார்கள் என்பதைப் படிக்கும் போது நாம் உணரலாம்.
செய்திகள் இல்லாத போது செய்தியாளர்களே செய்திகளை உருவாக்குகின்றனர் என்ற உண்மையையும் போகிற போக்கில் இந்த புதினம் பதிவு செய்துள்ளது. அது ஒரு சராசரி வாசகருக்கு செய்தியாளர்கள் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தும் என்றாலும் உள்ளதை உள்ளபடி எழுதியதற்காக ஆசிரியரைப் பாராட்டத்தான் வேண்டும். மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துவதற்கும் இவர்கள் வெளியிட்ட செய்தி அடிப்படையாக இருந்திருக்கிறது என்பதும் நாவலைப் படிக்கும்போது தெரிகிறது.
பல அரசியல் மாற்றங்களை இவரது செய்தியாளர் அணி செய்திருக்கிறது.
உண்மையை உலகிற்கு சொல்ல வேண்டும் என்பதற்காக பல இடங்களில் செய்தியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்க்கிறார்கள் என்பதை இவரது புதினம் சிறப்பாக பதிவு செய்துள்ளது. பொன்னியின் செல்வன் சோழர்களின் வரலாற்றை பதிவு செய்ததைப் போல் அண்ணன் ராஜா வாசுதேவன் தற்கால தமிழகத்தின் வரலாற்றை இந்த புதினத்தின் வழியாக பதிவு செய்துள்ளார். இதுவரை தமிழ் இலக்கிய உலகம் கண்டிராத ஒரு புதிய வெளியை அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். முதலில் இதற்கான தலைப்பு புலிவால் என்று வைக்கப்பட்டது, பிறகு நியாயத்தின் பக்கம் என்று மாற்றப்பட்டது. மூன்றாவதாக மீண்டும் தலைப்புச் செய்திகள் என்ற சரியான தலைப்பை இந்த நாவலுக்கு பரிந்துரைத்த கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தமிழக அரசியல் களத்திலும் இலக்கியப் புலத்திலும் இந்தப் படைப்பு சலசலப்பை ஏற்படுத்தும் என்றே கருதுகிறேன்.
நூலை வாசிக்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
தழல் பதிப்பகம்
35,அண்ணா நகர் பிளாசா
சி, 47, இரண்டாவது நிழற்சாலை, அண்ணா நகர்,
சென்னை- 600040.
தொலைபேசி: 9360860699.
விலை :620
பக்கங்கள்: 513.






