இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

12 ஜனவரி, 2009

உலகப்புகழ்பெற்ற குறிஞ்சிப்பாடி மூட்டிகள்


கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி கைத்தறி மூட்டிகளுக்குப் புகழ்பெற்ற ஊர் .அவ்வூரிலுள்ள பெரும்பாலான மக்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.கைத்தறி நெசவு என்பது பல தொழிலாளர்களின் கூட்டுமுயற்சியால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய ஒன்று. இரண்டு கூட்டுறவு சங்கங்களின் உதவியோடு அவ்வூர் மக்கள் இன்றும் நெசவுத்தொழிலைக் காப்பாற்றிவருகின்றனர்.உழவர்,தச்சர்,கொல்லர்,கைவினைக்கலைஞர்கள் என பல்வேறு தொழிலாளர்களின் கூட்டு உழைப்பினால் உருவாவது கைத்தறித்துணி.இது வெறும் தொழில் மட்டுமன்று சமூக ஒற்றுமைக்கான ஒரு குறியீடு. இந்த உலகத்தில் மனித குலம் உள்ளவரை உழவும் நெசவும் இரு கண்களைப்போல் பாதுகாக்கப் படவேண்டிய தொழில்கள். ஆனால் இரண்டு தொழில்களுமே நலிவடைந்து வருகின்றன என்பதுதான் நடைமுறை உண்மை. குறிஞ்சிப்பாடி நெசவாளர்களும் இதற்கு விதி விலக்கு இல்லை. கடுமையான உழைப்பு குறைவான கூலி என்றால் அவர்களால் எவ்வளவு காலம்தான் இந்தத் தொழிலில் ஈடுபட முடியும். விசைத்தறிகளின் வருகையால் துணி உற்பத்தி உயர்ந்திருக்கலாம் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை நிலை தாழ்ந்துதான்போனது. கைத்தறி நெசவாளர்களின் நிலையை அறிந்துகொள்வதற்காக நண்பர்கள் நவசோதி, சான்பாசுகோ, முருகவேல் ஆகியோரின் துணையோடு குறிஞ்சிப்பாடி சென்றோம். அவர்களின் மரபுவழி நுட்பமான அறிவு முறை நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது. பஞ்சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட நூல் துணியாக மாறுவதற்கான படிநிலைகள், அதற்கான நெசவாளர்களின் உழைப்பு ஆகியவற்றை நேரில் பார்க்கும்போது மலைப்பாகத்தான் உள்ளது. முதலில் ஆலை என குறிப்பிடப்படும் பெரிய மூங்கில் பிளாச்சுகளால் செய்யப்பட்ட உருளையில் நூலைச்சுற்றுகின்றனர். நூல் முப்பது சிறு உருளைகளிலிருந்து பெரிய உருளைக்குச் செல்லும். இவற்றைப் பிரித்தெடுப்பதற்கு ஏதுவாக கடிகாரச்சுற்றில் ஒன்று எதிர் சுற்றில் ஒன்று என பெரிய உருளை அறுபதாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இப்பணியைப் பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர். மாற்றி மாற்றி சுற்ற வேண்டும் என்பதால் எந்த இடத்தில் மாற்ற வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஒரு ஆரக்காலில் சிவப்பு வண்ணத் துணியைச் சுற்றிவைத்துள்ளனர்.இவ்வாறு சுற்றப்பட்ட நூல் துவைச்சுப் பட்டறைக்குச் செல்கிறது அங்கு கஞ்சி ஏற்றி நூலை விறைப்பாக்குகின்றனர். பச்சரிசி மாவைக் காய்ச்சி கஞ்சியாக்கி ஊர்தியில் நீளமாக மாட்டப்பட்டிருக்கும் நூலில் தூரிகையால் கஞ்சியைத்தூவுகின்றனர் தூவப்பட்ட கஞ்சி நூலின் மறுபக்கத்தை நனைப்பதற்காக பில்லேறு எனப்படும் விழலின் வேரால் செய்யப்பட்ட பெரிய தூரிகையை நூலின் மீது அழுத்தியபடி இருவர் இழுத்துச்செல்கின்றனர் அதன் பிறகு ஊர்தியைச் சுழற்றி அசைத்து கஞ்சிப்பசையை உலர்த்துகின்றனர்.இவ்வாறு இரு முறை செய்த பிறகு சிறிது தேங்காய் எண்ணெயைத் தூவி நூலை வழுவழுப்பாக்கி முறுக்கேற்றி தறிக்கு அனுப்புகின்றனர். நெய்யப்படவிருக்கும் மூட்டியின் நிறங்களுக்கேற்ற நூல்களை அச்சில் பிணைத்து, அள்ளிப்பிடித்து சிக்கலில்லாமல் தனித்தனி இழையாக நீவி அதன்பிறகு தறியில் பிணைக்கின்றனர்குறுக்கு இழைக்கான நூல்கள் தார் எனப்படும் சிறு உருளையில் சுற்றப்பட்டிருக்கும் அதனை மரத்தாலான நாடா எனப்படும் கருவிக்குள்ளிருக்கும் பித்தளைப் பட்டைக்குள் பொருத்தி நெய்யத்தொடங்குவர். பல வண்ண மூட்டியெனில் குறுக்கு இழைகளை அதற்கேற்ப சரியான நேரத்தில் அவ்வப்போது மறவாமல் மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். இப்பணி பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் நெய்பவரின் நினைவாற்றலுக்கும், கவனம் சிதையாமைக்கும் மிகப்பெரிய சவாலாகும். ஒரு மூட்டிக்கான உற்பத்தி செலவு 88 உருவா அதன் விற்பனை விலை 100 உருவா ஆகும். கூட்டுறவு சங்கத்திற்குக் கிடைக்கும் இலாபம் 18 உருவாவாகும். 18% இலாபத்தில்தான் இக் கூட்டுறவுச் சங்கம் இயங்கி வருகிறது. குறைந்தது 100 லிருந்து 250 உருவா வரை விலையுடைய மூட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் தொழிலாளர்களுக்கான கூலியைக் கணகிட்டால் மற்ற தொழில்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான். ஒரு மூட்டியை நெய்து முடிப்பதற்கு இரண்டு நாட்கள் ஆகின்றன அதற்கான கூலி வெறும் 50 உருவாதான். தொழிலாளருக்கான குறைந்த பட்ச ஒரு நாள் கூலி 80 உருவா என அரசு தீர்மானித்திருந்தாலும் நடைமுறை இதுதான்.விசைத்தறிகளில் தயாராகும் ஒருமூட்டி குறைந்தது 50 உருவாயிலிருந்து கடைகளில் கிடைப்பதனால்கைத்தறி மூட்டிகளின் விற்பனை சறிந்துள்ளது. இவர்களின் ஒரே ஆறுதல் கோ-ஆப்டெக்ஸ்தான்.உழவுத் தொழிலாளர்களுக்கு பொங்கலுக்கு வழங்குவதற்காகவும் சிலர் கைத்தறி மூட்டிகளை வாங்கி ஆதரவு தருகின்றனர். ஏற்றுமதியும் ஓரளவு கைகொடுக்கிறது. உலகில் எந்த நாடுகளிலெல்லாம் இரப்பர் தோட்டங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் ஏற்றுமதியாகிச் சென்றன குறிஞ்சிப்பாடி மூட்டிகள். இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பூச்சிகளிடமிருந்து தங்களைப்பாதுகாத்துக்கொள்வதற்கு மூட்டிகளைத்தான் பயன்படுத்துகின்றனர். விற்பனைவிலையைக்காரணம் காணபித்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கைத்தறியைவிட மலிவு விலையில் கிடைக்கும் விசைத்தறி மூட்டிகளை இறக்குமதி செய்து கொடுக்கின்றனர் இதனால் குறிஞ்சிப்பாடி கைத்தறி மூட்டி ஏற்றுமதி அளவு முன்பைவிடக் குறைந்துள்ளது. இன்றும் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டுதான் உள்ளனர்இருப்பினும் நெசவாளர்கள் வாழ்வு வறுமை நிலையில்தான் உள்ளது." பாட்டி கொட்ட நூத்தது பையன் அண்ணாகவுத்துக்குத்தான் சரியா இருக்கு" என்று நெசவாளர்களைப் பற்றி ஒரு பழமொழி உண்டு அதுதான் இன்றும் உண்மை நிலையாக உள்ளது.பல நெசவாளர்கள் இத்தொழிலை விட்டு விலகி வருகினறனர். ஒரு சிலர் விடாப்பிடியாக இன்றும் இத்தொழிலை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட இருவரை நாம் சந்திக்க நேர்ந்தது. வைத்தியநாதன்(54) என்ற நெசவாளர் தன் வீட்டில் 16 தறிகளை வைத்து பலருக்கு வேலை வாய்ப்பைத் தந்ததோடு அவர்களை மேற்பார்வை செய்த பணிக்கராக 30 ஆண்டுகள் பணி செய்திருக்கிறார் இன்று யாரும் நெசவுத்தொழிலுக்கு வராததனால் ஒரே ஒரு தறியில் அவர் மட்டும் நெய்துகொண்டு மற்ற தறிகளையெல்லாம் பிரித்து சட்டங்களாக அடுக்கி வைத்துள்ளார். அது போலவே துவைச்சுப் பட்டறைத்தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்ற சூழலில் அத்தொழிலில் ஈடுபடுவோரிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இருப்பினும் குலத்தொழிலை விட்டுவிடக்கூடாது என்ற பிடிவாதத்தோடு ராமர்(45) என்பவர் தன் தந்தை சுந்தரம்(76) அவர்களின் உதவியோடு துவைச்சுப்பட்டறையை நடத்தி பத்துக்கும் மேற்பட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருவதோடு இத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்கிறார். இவர்களைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தவேண்டியது நம் அரசின் கடமையாகும் பெயரளவுக்கு மறு வாழ்வுத் திட்டங்களை அளிக்கும் அரசு தொலைநோக்குச் சிந்தனையோடு திட்டங்களைத் தீட்டி இவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அரசு கவனிக்குமா? .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக