இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

6 ஜனவரி, 2019

மினுசுதார் வீடு







முன்னுரை:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் (தற்போது திருமுட்டம் வட்டம்) மருங்கூர் கிராமத்தில் மினுசுதார் வீதியில் அமைந்துள்ள 50 அடி நீளம், 34அடி அகலமுள்ள சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுக்கட்டு வீடாக அமைந்துள்ள மினுசுதார் வீடு, முழுக்க முழுக்க உள்ளூர் வளங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு ஆகும். அந்த வீடு நூறு ஆண்டுகளைக்கடந்தும் நிலைத்திருப்பதற்கான தொழில்நுட்பம் என்ன என்பதை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.
பெயர்க் காரணம்:
மினுசுதார் வீடு என்பது மக்களால் சூட்டப்பட்ட பெயர் ஆகும். வீட்டு உரிமையாளர்களால் வைக்கப்பட்ட பெயர் அல்ல. அந்த வீட்டின் உரிமையாளரான குழந்தைவேல் காலிங்கராயர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிராம முனுசீப் ஆக பணியாற்றியவர் என்பதால் அவர் வீட்டை மக்கள் முன்சீப்தாரர் வீடு என அழைத்துள்ளனர் அது காலப்போக்கிலும் பேச்சு வழக்கிலும் மினுசுதார் வீடு என தற்போதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வீடு அமைந்திருக்கும் தெரு மினுசுதார் வீதி என்றே அழைக்கப்படுகிறது. மினிஸ்ட்ரார் என்ற பதவி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்ததாகவும் அப்பதவியை அவர் வகித்ததால் அப்பெயர் வந்தது என்றும் குறிப்பிடுகின்றனர்.
வீடு அமைப்பு:
தெற்கு பார்த்து கட்டப்பட்ட ( தெக்கு பாத்த வீட்டுக்கு லெக்கு பாத்து காத்து வரும் என்பது நாட்டுப்புற வழக்கு) இவ்வீட்டின் படிக்கட்டுகளின் இருபுறமும் சுமார் 4 அடி உயரமுள்ள மதில் எழுப்பப்பட்டுள்ளது ( இது சிறு திண்ணை போல் அமைந்திருக்கும்) படிக்கட்டு முடியுமிடத்தில் நடைப் பகுதி நடையின் இரு புறமும் பெரிய திண்ணைகள் அமைந்துள்ளன. திண்ணை முடியுமிடத்தில் நுழைவாயில் அமைந்துள்ளது. சூரியப்பலகையில் அன்னக்கிளியும் யாளி உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. (யாளி உருவம் வீட்டில் இருக்கக் கூடாது என யாரோ கூற தற்போது அந்த உருவம் அகற்றப்பட்டுள்ளது) அருகாலின் இரு புறமும் சுவரில் விளக்கேற்றும் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அருகாலின் மேல் பலகை அமைப்பதற்கு ஏதுவாக இரு தண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்மீது மந்தாங்கி பலகை அல்லது பந்தல் பலகை அமிந்துள்ளது. இது பாய் தலையணையை வைப்பதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது.  ஒற்றைக்கதவு நாதாங்கி உளதாழ்ப்பாளோடு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கூடமும் தாழ்வாரமும் உள்ளன சதுர வடிவ உள் வாசலைச் (முற்றம்) சுற்றிலும் அமைதிருப்பது தாழ்வாரம் தாழ்வாரத்தின் வெளிப் பகுதியில் மூன்று அறைகள் உள்ளன. வீட்டின் பின் பகுதியில் சாரம் அமைத்து அதில் தோட்டத்து வாயில்படி அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப்பொருள்கள்:
செங்கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டுள்ளது, பூவரசு, வேம்பு, பனை, மூங்கில் போன்ற மரங்களிலிருந்து முறையே அருகால், கதவு,விட்டம்,வாரை, கம்பி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. மேற்கூரை நாட்டு ஓடுகளால் அமைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பின்பற்றப்பட்டுள்ள நுட்பங்கள்:
வீட்டின் சுவர்கள் 15 அடி உயரம் 2அடி அகலம் உள்ளன இவை கோடைக்காலத்தில் வெப்பத்தையும் குளிர்காலத்தில் குளிரையும் வீட்டுக்குள் கடத்துவதில்லை. எனவே எல்லா பருவங்களுக்கும் குடியிருக்க ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஓடுகள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் சூரிய வெப்பம் எளிதில் வீட்டுக்குள் தாக்காது. கோடைக்கலத்தில் மாலைப்பொழுதில் வீடு குளிர்ந்துவிடும். சன்னல்கள் ஏதும் இல்லை என்பதால் வெளிச்சமும் காற்றும் வரும் வண்ணம் சுவருக்கும் மேற்கூரைக்கும் இடையே விட்டம் அமைத்து இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது ஓடுகளுக்கு இடையே கண்ணாடிகள் அமைக்கப்பட்டு வெளிச்சம் கூடுதலாகக் கிடைக்கும்படி இக்கட்டுரையாளரின் தந்தை அமைத்துள்ளார். உள் வாசல் வழியாகவும் காற்றும் வெளிச்சமும் வரும். பனை வாரைகளை மட்காமலும் பூச்சித் தாக்காமலும் தடுக்கும் பொருட்டு உப்பனாற்றில் ஊரவைத்து பயன்படுத்தப்பட்டுள்ளன. மழை நாட்களில் வெள்ள நீர் வீட்டுக்குள் நுழையா வண்ணம் மிகவும் உயரமாகக் கட்டப்பட்டுள்ளது. (அந்த ஊரின் உயரமான வீடு இதுவே). நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவ்வூரை வெள்ளம் சூழ்ந்தபோது வீட்டின் உரிமையாளரின் வயலில் கத்தரி மேடு என்ற பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் இருப்பதைப் பார்த்து அந்த உயரத்திற்கு வீட்டை உயர்த்திக் கட்டியதாக குடும்பத்தில் தற்போது மூத்தவரான திரு. தனபால் கூறினார்.
மழைநீர் சேகரிப்பு:
முற்றத்தின் நான்கு முனைகளிலும் ஓடுகள் கூடுமிடத்தை கூடுவாய் என்று குறிப்பிடுகின்றனர். கூடுவாயில் உள்புறம் அமைக்கப்பட்டுள்ள ஓடுகள் மற்ற ஓடுகளைவிட அளவில் பெரிதானவை. மழை நாட்களில் கூடுவாய் வழியே அதிக அளவில் நீர் வாசலில் ஊற்றும். அந்த நீரை பெரிய கொப்பரைகளில் சேகரித்து துணி துவைக்க, பாத்திரம் விளக்க, குளிக்க என பலவகையில் பயன்படுத்துவது இந்த வீட்டின் நூற்றாண்டுகால வழக்கம். மழை நீர் தூய்மையான நீர் என்பதை இக்கட்டுரையாளர் குளித்தும் குடித்தும் அறிந்துகொண்டவர்.
கழிவுநீர் மேலாண்மை:
இவ்வீட்டில் கழிவுநீர் மேலாண்மை மிகச்சிறப்பாக பின்பற்றப்படுகிறது. முற்றத்திலிருந்து நீர் வெளியேறும் பொருட்டு கற்குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன குளிக்கும் நீரும் பாத்திரம் விளக்கும் நீரும் இதன் வழியே வெளியேறும். அந்த நீர் தோட்டத்திலுள்ள தாவரங்களுக்கும் மரங்களுக்கும் பயன்படும். சமைக்கும்போது ஏற்படும் கழுநீர், கஞ்சித்தண்ணி ஆகியவற்றை அடுப்பங்கரையிலுள்ள கழுநீர்ப் பானையில் சேகரித்து அவை ஒவ்வுருநாளும் முற்றத்திலுள்ள தொட்டிப்பானைக்கு மாற்றப்படும். தொட்டிப்பானை நிரம்பியதும் அந்த நீர் தொட்டியில் ஊற்றப்பட்டு மாடுகள் குடிக்க பயன்படுத்தப்படும். கழிவு நீர் ஒருபோடும் சாக்கடையாவதில்லை.
கழிவரை:
இந்த வீட்டில் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கழிவரை இல்லை. ஆண்கள் விளை நிலங்களிலும் பெண்கள் குப்பை மேட்டிலும் காலைக் கடன்களைக் கழித்து வந்தனர். அதிகாலை எழும் வழக்கம் இருந்தமையால் இது ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. இக்கட்டுரையாளர் நகரத்தில் திருமணம் செய்தமையால் வீட்டின் தோட்டத்தில் இவ்வூரின் முதல் கழிவரையைக் கட்டினார். இன்று கழிவரை இல்லாத வீடுகள் இவ்வூரில் இல்லை.

உள்ளூர் வளங்கள்:
இந்த வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமானப் பொருள்கள் அனைத்தும் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது என்பதே இதன் சிறப்பு. இன்று வீடு கட்டுவதற்கு அனைத்துப் பொருள்களும் ( கல்,கருங்கல்,இரும்பு, மரம்,சிமெண்ட்) நகரத்திலிருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இவ்வீட்டுக்குத் தேவையான செங்கல், ஓடு ஆகியவற்றை உள்ளூரிலேயே சூளை அமைத்து தயாரித்துள்ளனர். மரங்களை தோட்டத்திலிருந்து வெட்டி உள்ளூரிலேயே அதனை விட்டமாகவும் பலகையாகவும் அறுத்துள்ளனர். பலகை அறுப்பத்தற்காக கிணறு போன்ற  நிரந்தர அமைப்பு  ஊரில் இருந்துள்ளது. செங்கற்களை புளிக்க வைத்த களிமண் கொண்டு கட்டி சுவர் எழுப்பியுள்ளனர்.
புதுப்பித்தல்:
இவ்வீட்டில் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓடுகளை மாற்றி அடுக்குவது வழக்கம் அப்போது சேதமடைந்திருக்கும் வாரைகளையோ கம்பிகளையோ மாற்றி அவ்வப்போது வீட்டினைப் பராமரித்து வந்துள்ளனர். இதனால் வீட்டின் ஆயுள்காலம் அதிகரிக்கிறது.மரபு வழி தொழில்நுட்பத்தின் தனித்தன்மையே பரமரிக்கும் வசதியுடன் அமைக்கப்பட்டிருப்பதும் ஒன்றாகும். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வீட்டின் உரிமையாளர் குழந்தைவேல் அவர்கள் உடல் நலமின்றி நீண்ட நாட்கள் படுக்கையில் விழுந்தமையால் சிறிது காலம் வீட்டைப் பராமரிக்காமல் விட்டுவிட்டார். அப்போது வீட்டின் பின் பகுதி சேதமடைந்தது. வீட்டின் மூத்த மகன் திரு.தனபால் அவர்களுக்கு அப்போது 15 வயது இருக்கும் அவர் அப்பாவின் மறைவுக்குப் பிறகு வீட்டின் பின் பகுதியை முற்றிலுமாக புதுப்பித்துள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மழைக்காலத்தில் வீட்டின சாரம் சரிந்து விட இக்கட்டுரையாளரின் தந்தை திரு.இரத்தினசபாபதி அவர்கள் சிமெண்ட் சுவர் எழுப்பி அதனை சரிசெய்தார். தற்போது வீட்டின் முன்பகுதியிலுள்ள நூறு ஆண்டுகளைக் கடந்த பனை வாரைகள் ஒவ்வொன்றாக மட்கி உதிரத்தொடங்கியுள்ளன. அத்னை மாற்றுவதற்கு பொருள்செலவு மிகுதியாகும் என்பதால் இவ்வீட்டை இன்னமும் தொடர்ந்து பராமரிக்கவேண்டுமா? என்று இக்கட்டுரையளரும் அவரின் சகோதரரும் கருதுகின்றனர்.

கூட்டுக் குடும்ப முறை:
இவ்வீட்டில் மூன்று சகோதரர்கள் தனித்தனியே வசித்தாலும் கூட்டுக்குடும்ப முறை பின்பற்றப்பட்டு வந்தது. பொங்கல் திருநாளன்று மூவரும் சேர்ந்தே முற்றத்தில் சூரிய வழிபாடு செய்வார்கள். நிலத்தில் பயிர் வைப்பதற்கும் வீட்டைப்பராமரிப்பதற்கும் மூத்தவரின் ஆலோசனைப்படி தம்பிகள் இருவரும் நடந்து வந்தனர். காலப்போக்கில் அவரவர் தனிக்குடித்தனம் சென்றதிலிருந்து சில ஆண்டுகளாக வீடு பராமரிப்பு வேண்டி நிற்கிறது. தொடந்து பராமரித்தால் இன்னும் பல ஆண்டுகள் இவ்வீடு நிலைத்திருக்கும்.
முடிவுரை:
மரபுவழி தொழில்நுட்பம் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. தொடர்ந்து பராமரிக்கும் வண்ணம் அமைந்துள்ளதால் வீட்டின் ஆயுள் அதிகரிக்கிறது. நமது தட்ப வெப்பத்திற்கு ஏற்ற கட்டுமானமாகவும் அமைந்துள்ளது. அப்போது மரங்கள் அதிக அளவில் கிடைத்ததால் நிறைய மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். மரங்களை தொடர்ந்து வளர்ப்பதும் பாதுகாப்பதும் தேவைப்படும்போது வெட்டுவதும் மீண்டும் மரங்களை வளர்ப்பதும் அவர்களின் வாழ்க்கை முறையாக இருந்துள்ளது. அந்த மரபில் வந்த இக்கட்டுரையாளர் வீடு கட்டுவதற்காக 10 மரங்களை வெட்டினாலும் இன்று 500 மரங்களை வளர்த்து வருகிறார். இப்படி இயற்கை சம நிலையை ஒவ்வொருவரும் பின்பற்றினால் சுற்றுச்சூழல் காப்பாற்றபடும் என்பது திண்ணம்.
தகவலாளர்கள்:
1.திரு.கு.தனபால், 82, மருங்கூர், திருமுட்டம் வட்டம், கடலூர் மாவட்டம், 2.12.2018
2.திரு.கு.ராசலிங்கம்,78, மருங்கூர், திருமுட்டம் வட்டம், கடலூர் மாவட்டம், 9.12.2018
3.திரு.அ.ராமலிங்கம்,85, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்,10.12.2018
4.திரு. வேலாயுதம், 65,தச்சர், விருத்தாசலம்,12.12.2018

1 கருத்து:


  1. We are the Best Digital Marketing Agency in Chennai, Coimbatore, Madurai and change makers of digital! For Enquiry Contact us @+91 9791811111


    Best Digital Marketing Agency in Chennai
    Best Content Marketing companies in Chennai
    Best SEO Services in Chennai
    leading digital marketing agencies in chennai
    digital marketing agency in chennai
    best seo company in chennai
    best seo analytics in chennai

    பதிலளிநீக்கு