இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

14 நவம்பர், 2010

திருநெல்வேலி

சிற்பச்சிறப்பு

இசைத்தூண்கள்

நூலகத்தில் நவநீத்ன், எழிலவனுடன்


திராவிடப் பல்கலைக்கழகம், தென்னிந்திய நாட்டார்வழக்காற்றியல் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட உள்ளது, அதற்கான செயலரங்கு பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி சென்றிருந்தேன். நெல்லையப்பர் கோயிலுக்கு நண்பர் எழிலவனோடு சென்றேன். அங்குள்ள இசைத்தூண்கள் பற்றி எழிலவன் குறிப்பிட்டார். நாங்கள் காதுகளைத் தூண்களில் வைத்து விரல் நகத்தால் ஒலி எழுப்பி கேட்டோம் கணீரென இசைக்கருவிகளிலிருந்து தோன்றுவது போல இனிய இசை கேட்டது . மிக நுட்பமாக அந்தத் தூண்களை அக்கால சிற்பிகள் செய்திருப்பதை உணர்ந்தோம் அது பற்றிய நுட்பங்கள்குறித்து கோயில் தலவரலாற்று நூலில் குறிப்பிடாதது ஏமாற்றமாக இருந்தது. அங்குள்ள வழிகாட்டிக்கும் அது பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கவில்லை. ஏழு சுரங்களுக்கும் ஏழு தூண்கள் அவ்வளவுதான் இந்த மண்டபத்திற்குப் பெயர் நாத மணி மண்டபம். ராசா இங்குதான் அமர்ந்திருப்பார் அவர் காலத்திற்குப் பிறகு இந்த மணியை யாரும் அடிப்பதில்லை என்ற தகவலைக்கூறினார். அந்த மணியின் நாக்கு இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. அங்குள்ள சிற்பங்கள் மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தன. அணிகலன்களைக் கல்லில் வடித்திருந்த விதம் காண்போரை வியக்கச் செய்த்து. இருட்டுக்கடையில் அல்வா வாங்க நணபர் நவநீதகிருட்டிணன் அழைத்துச்சென்றார். மாலை 5.30 க்குக் கடையைத் திறக்கின்றனர் 7 மணிக்கெல்லாம் வியாபாரம் முடிந்து விடுகிறது. கூட்டம் களைகட்டுகிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் கிலோ அல்வா விற்பனை ஆவதாக பக்கத்துக் கடையில் வேலை செய்பவர் கூறினார்.தொடர்வண்டியில் பயணச்சீட்டு கிடைக்காமல் அரசு போக்குவரத்துக்கழகத்தில் முன்பதிவு செய்ய நண்பர் செல்வின் அழைத்துச் சென்றார் நல்லவேளை சீட்டு கிடைத்தது. பயணிகள் கூட்டம் பேருந்து நிலையத்திலும் தொடர்வண்டி நிலையத்திலும் அலை மோதியது. விருத்தாசலத்திலிருந்து புறப்படும் போது மும்பையிலிருந்து நாகர்கோயில் செல்லும் தொடர்வண்டியில் காத்திருப்போர் பட்டியலில் 27 ஆம் இடத்திலிருந்தேன் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று நண்பர் சதீசு கூறியதை நம்பி நிலையத்திற்கு வந்தபோது 26 ஆம் இடத்திலிருந்தேன் அங்கு வந்திருந்த கண்மணிகுணசேகரன் அவரது நண்பரான பயணச்சீட்டு பரிசோதகருக்கு தொலைபேசியில் கூறி எனக்கு இடத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். தொடர்வண்டியில் அவர் குறிப்பிட்டிருந்த 3 பெட்டிகளிலும் மூன்று முறைக்கு மேல் சுற்றி அவர் சமையல் கூடத்திலிருக்கிறார் என்ற தகவலைத் தெரிந்துகொண்ட பிறகு அங்கு சென்றால் வேறு ஒருவர் தான்தான் புகழேந்தி என்று கூறி இடம் பெற்றுக்கொள்ள என்னைப் பார்த்ததும் ஏமாற்றியவருக்கு இடம் கொடுக்கவேண்டாம் உண்மையான புகழேந்தி இப்போதுதான் வருகிறார் எனக்கூறி ஒரு வழியாக இடம் கிடைத்தது. ஏ.சி.யில்தான் இடம் இருக்கிறது கூடுதல் கட்டணம் 350 கொடுக்கவேண்டும் எனக்கூறி திருச்சி சென்றதும் படுப்பதுபோல் இடம் ஒதுக்கிக் கொடுத்தார் சில்லரை இன்மையால் அவருக்கு தரவேண்டிய 10 ருபாயைத் தராமலே நெல்லையில் இறங்கியது உறுத்தலாகவே இருக்கிறது. மாலை நண்பர் செல்வின் பேருந்து நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார்.நாட்டார் வழக்காற்றியல் மைய நூலகம் பற்றி கூற மறந்துவிட்டேன் அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை கணினியில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர் நூலின் பெயரையோ ஆசிரியர் பெயரையோ கூரினால் ஒரு நொடியில் அந்த நூல் இருக்கும் அலமாரி தெரிந்துவிட உடனே எடுத்துக்கொடுக்கின்றனர் 15 ஆண்டுகளுக்கு முன் நான் கொடுத்திருந்த மண்கவுச்சியும் களம்புதிது இதழ்களும் இருக்கின்றனவா என பார்த்தேன் அடுத்தவினாடியில் அப்பெயர்கள் திரையில் ஒளிர்ந்தது கண்டு மகிழ்ந்தேன் நமது அரசு நூலகங்கள் எப்போது இப்படி செயல்படப்போகின்றனவோ ?

1 கருத்து: