இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

27 ஆகஸ்ட், 2009

சாமியான சாமியார்சாமியார்கள் என்றாலே ஒரு மாதிரி காமடியாகப் பார்க்கும் இன்றைய சூழலில் ஒரு சாமியாருக்கு ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து சிலை வைத்திருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்.அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் கோட்டைக்காடு கிராமத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. கோட்டைக்காட்டு முனியப்ப சாமி என்றால் சுற்று வட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் பழமையான கோயில் அது. சுற்றிலும் முட்புதர்கள் சூழ அடர்ந்த காட்டுக்குள் அமைந்திருந்த அந்தக்கோயிலை சீர்திருத்தி கோயில் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கும்பகோணம் மாணிக்க சாது சாமி. ஓய்வு பெற்ற இராணுவ வீரரான இவர் எப்படி சாமியாரானார் என்பது தெரியவில்லை.1965 இல் கோட்டைக்காடு வந்து தங்கிய இவர் மூலிகை வைத்தியம் பார்ப்பது ஜாதகம் பார்ப்பது என மக்களோடு நெருங்கிப் பழகி பின்னர் அந்த வருமானத்தைக் கொண்டு கோயிலை விரிவாக்கம் செய்து மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். எப்போதும் அவரைச் சுற்றி பத்து பேர் இருந்துகொண்டிருப்பார்களாம். அவர்களுக்கு மூன்று வேளையும் அவர்தான் உணவு அளிப்பாராம். சுற்று வட்டாரங்களில் கோயில் கும்பாபிசேகம் என்றால் கோட்டைக்காட்டு சாமியார் இல்லாமல் நடக்காது அவ்வளவு பிரபலமானவர் இந்த சாமி. அவருடன் நெருங்கிப் பழகிய அவ்வூர் வேலாயுதம் (80) சாமியாரின் நற்பண்புகளைப் புகழ்ந்து தள்ளினார். "யாராவது எதாவது குடுத்தாங்கன்னா பக்கத்துல இருக்குற எல்லாருக்கும் குடுத்துட்டுதான் சாப்புடுவாரு அது கொஞ்சமா இருந்தாலும்.அவரு மாதிரி ஒரு மனுசன பாக்க முடியாதுங்க என்று சாமியாரின் மரணத்தை எண்ணி கண் கலங்கினார். முனியப்பர் கோயிலுல மூணு கெணறு அந்த காலத்துல இருந்துருக்குணும்னு சொல்லிகிட்டிருந்தவரு திடீர்னு ஒரு நாளு ஆளுங்கள கூப்பிட்டு இந்த எடத்துல தோண்டுங்கன்னு சொன்னாரு பத்தடி தோண்டுனா அதுல பழய கெணறு இருக்கு அந்த கேணியிலதான் இப்ப மோட்ரு போட்டு தண்ணி எரைச்சிகிட்டிருக்கு. அவ்வளவு சக்தியானவரு" என்று கூறினார். 1996 ஆம் ஆண்டு சாமியார் திடீரென மரணமடைய அவரது சொந்த ஊர்க்காரர்கள் அவரது சடலத்திற்கு உரிமை கோர ஊரே சேர்ந்து மறுத்துவிட்டது. அவர் வாழ்ந்த முனியப்பர் கோயில் வளாகத்திலேயே அவருக்கு சமாதி அமைத்து சமாதியின் மேல் சாமியாருக்கு சிலையும் அமைத்து வழிபட்டு வருகின்றனர். சாமியாரைப்பற்றி ஊரில் விசாராத்தபோது," சாமிதாங்க எங்களுக்கு தெய்வம்". என்றார் பரமசிவம், மேலும் அவர் கூறிம்போது," இப்ப இருக்குற டுபாக்கூர் சாமியாரு மாதிரியில்ல இவரு. நான் அப்ப துபாயிக்கு வேலைக்கு போயிருந்தன் சாமியாரு செத்துட்டாருன்னு சேதி கெடைச்சுது உடனே நானும் எங்கூட இருந்த எங்கூருக்காரங்க மூணு பேரும் மொட்ட போட்டுகிட்டோம். அந்த அளவுக்கு சாமியாரு மேல எங்களுக்கு மரியாதை". என்று அவர் கூறியதும் பக்கத்தில் அமர்ந்திருந்த கொளஞ்சி என்பவர்," சுருக்கமா சாமியார பத்தி சொல்லணும்னா அவரு எம்.ஜி.ஆர். மாதிரி" என்றார். மற்ற சாமியார்களைப் போல் பித்தலாட்டம் எதுவும் செய்யாமல் மக்களுக்காக வாழ்ந்த மாணிக்கசாது சாமி மாறுபட்ட சாமியார்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக