இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

12 ஏப்ரல், 2009

வண்ண மயமாகும் பணபாட்டு அசைவுகள்

ஓவியர் தட்சணாமூர்த்தி


நவீன ஓவியங்களை அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது என்கிற கருத்து கலை உலகில் நிலவி வருகிறது.இத்தகைய ஓவியங்களை வரையும் ஓவியர்கள், மனித வாழ்க்கை இன்று சிக்கல் நிறைந்ததாக, புரிந்து கொள்ள இயலாததாக உள்ளது அதுதான் எங்கள் ஓவியங்களில் வெளிப்படுகிறது என்கின்றனர். இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து என்றாலும் எளிய மக்களுக்கு நவீன ஓவியங்கள் புரிந்துகொள்ள இயலாதவையாகத்தான் உள்ளன என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஓவியங்களை வரையும் நவீன ஓவியர்களும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் ஒருவர்தான் ஓவியர் தட்சணாமூர்த்தி. 1954 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி அருகிலுள்ள நல்லூரில் பிறந்த இவர் தற்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஓவியத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு முடித்த இவர் ஓவியர் கோவிந்தனின் வகுப்புத் தோழர். தொடக்கக் கல்வியை நல்லூரிலும், பள்ளிக்கல்வியை அருகிலுள்ள புதுப்பேட்டையிலும் முடித்த ஓவியருக்கு சிறு வயதிலேயே ஓவியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அதற்குக் காரணம், பள்ளியில் ஓவிய ஆசிரியர்கள் வரைந்த ஓவியங்களும் பண்ணுருட்டி பகுதியில் சிறு வயதில் பார்த்த வண்ணப் பதாகைகளும்தான். ஓவியக் கல்லூரியில் சேர்ந்த பிறகு அங்கிருந்த பேராசிரியர்கள் அல்போன்சா, கன்னியப்பன், சந்திரசேகரன், சானகிராமன், முனுசாமி ஆகியோரின் வழிகாட்டுதல் மிகுந்த உற்சாகத்தைத் தரவே ஓவித்தின் மீதான ஈடுபாடு அதிகரித்தது. அது போலவே சுடுமண் சிற்பங்கள் செய்வதிலும் கை தேர்ந்தவராக விளங்கும் ஓவியர் இன்றும் தொடர்ந்து ஓவியங்களை வரைந்து வருகிறார். இவரது ஓவியங்களைப் பார்த்ததும் இவை தட்சணாமூர்த்தி வரைந்தவை எனக் கூறுமளவிற்குத் தனித்தன்மை வாய்ந்தவை. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்களை ஓவியங்களில் இவர் வடிக்கும் போது அந்த நடனங்களின் ஒயிலான அடவுகளையும் வேகமான அசைவுகளையும் மிக நுட்பமாக வெளிப்படுத்துவார். ஆட்டக்கலைஞர் அணிந்திருக்கும் ஆடை காற்றில் அலைவதை இயல்பாக ஓவியத்தில் பதிவு செய்வது தட்சணாமூர்த்தியின் தனித்தன்மை. கோட்டோவியங்கள் வரைவதிலும் வல்லவர். பல்வேறு இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாகக் கணையாழி, எக்கனாமிக் டைம்ஸ், அலைவ் போன்ற இதழ்களில் அதிகம் வெளியாகி யிருக்கின்றன. இவர் தம் நண்பர்களோடு சேர்ந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், கல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் ஓவியக் கண்காட்சி நடத்தியிருக்கிறார். சென்னை, புதுவை, கேரளா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஓவிய முகாம்களில் பங்கேற்றிருக்கிறார். சென்னையிலும் கொச்சியிலும் இதுவரை பதினொரு முறை தனிநபர் ஓவியக்கண்காட்சி நடத்தியிருக்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல வெளிநாடுகளிலும் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். 1990 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் பங்கேற்று சிறந்த ஓவியர் விருது பெற்றுள்ளார். நீர் வண்ணம், தைல வண்ணம், அக்ரிலிக் எனப்படும் நவீன வண்ணம் ஆகிய வண்ணங்களில் ஓவியம் தீட்டும் இவர் கணினியைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைவதில்லை. கேன்வாஸ் எனப்படும் துணியில் தூரிகையைக்கொண்டு வரைவதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி கணினியில் வரையும்போது கிடைப்பதில்லை, மேலும் வண்ணங்களைக் கலந்து கலந்து தீட்டுவதில் கிடைக்கின்ற உயிரோட்டமும் பனுவலாக்கமும் கணினியில் நாம் எதிர்பார்க்க முடிதாது. ஒரு குழந்தையைத் தொடுவதற்கும் ஒரு தாளைத் தொடுவதற்கும் எத்தகைய வேறுபாடு உண்டோ அத்தகையதுதான் இந்த ஊடகங்களுக் கிடையேயான வேறுபாடும் என்கிறார். இவரது ஓவியங்களில் பாத்திரங்களின் முகத்திலுள்ள உறுப்புகளுக்கோ ஆடை ஆபரணங்களுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை, ஏனெனில் பார்வையாளர்களின் கவனம் ஓவியப் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் அடவுகளிலிருந்து சிதறிவிடும் என்பதால். ஓவியராக மட்டுமில்லாமல் பார்வையாளர் கோணத்திலிருந்தும் ஓவியத்தைப் படைப்பது இவரது ஓவியத்தின் வெற்றியாக உணர முடிகிறது. நுட்பமான பண்பாட்டு அசைவுகளை வண்ணமயமான ஓவியங்களால் வெளிப்படுத்தும் தண்சணாமூர்த்தியின் படைப்புகள் கலை உலகின் பேழைகளாக நிலைத்து நிற்கும் வல்லமை உடையன.

5 கருத்துகள்:

 1. அன்புள்ள புகழேந்தி.

  வணக்கம். வெகு நாட்களாகிவிட்டன. தற்செயலாக உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன்.இப்போதுதான் நான் என் வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறேன். அதன் விளைவாகத்தான் உங்கள் வலைப்பதிவைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. நன்றாக வடிவமைத்து இருக்கிறீர்கள். தொடர்ந்து பார்ப்பேன். என்னுடைய வலைப்பதிவைப் பாருங்கள். கருத்துக்களை எழுதுங்கள். நாம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சந்தித்தது. நான் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறேன். சந்திப்போம்....அன்புடன்....முனைவர் க.அன்பழகன் (உறரணி.தஞ்சாவூர்). 17.11.2009.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் யாவும் பண்பாட்டு அசைவுகளைப் படம்பிடித்துக்காட்டுபவையாகவுள்ளன..

  பதிலளிநீக்கு
 3. தலைப்பில் சிறு எழுத்துப்பிழை ..

  வண்ண மயமாகும் பணபாட்டு அசைவுகள்

  பண்பாடு என்றிருக்கவேண்டும்..

  பதிலளிநீக்கு