இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

13 பிப்ரவரி, 2009

புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு


புவி வெப்பமடைவதற்கும் அதனால் பருவ நிலை மாறுபடுவதற்கும் மனிதச் செயல்களே காரணம் என்பதை உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்கள் உறுதிப் படுத்தியிருக்கின்றனர்.அதிலும் குறிப்பாகப் பணக்கார நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்தான் தங்களது வேகமான வளர்ச்சிக்காகவும், ஆடம்பரத் தேவைகளுக்காகவும் புவியை வெப்பமடையச் செய்துள்ளன என்பது உலகறிந்த உண்மை. புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் முயற்சி 1992 ஆம் ஆண்டு ரியோ-டி- செனிராவில் நடந்த உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1997 இல் கியூட்டோ உடன்படிக்கை எட்டப்பட்டது. ஒவ்வொரு நாடும் அது வெளியேற்றும் கரியமிலக் காற்றைக் கட்டுப் படுத்த வேண்டும் என்பதுதான் அந்த உடன்பாட்டின் நோக்கம். உலகிலேயே அமெரிக்காதான் அதிக அளவு கரிக்காற்றை வெளியிடுகிறது எனவே அமெரிக்கா இவ்வுடன்பாட்டிற்கு ஒத்துழைக்க மறுத்தது. புவி வெப்பமடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் துருவப் பகுதிகளிலுள்ள பனிமலைகள் உருகிக் கடலில் கலக்கும் அதனால் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகள் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளது அதனால் உலகம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும் என்பதால் மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வைப் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் செய்து வருகின்றன. இதழாளர்கள், எழுத்தாளர்கள், ஒளிப்படக்கலைஞர்கள் என அனைவரும் அவரவர் இயங்குதளத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் எச்.பி.கணினி நிறுவனமும் சேஞ்சுரி வைல்டு லைப் நிறுவனமும் இணைந்து பெட்டர் போட்டோ கிராபி இதழில் பருவநிலை மாற்றத்திற்கான காரணிகள் என்ற தலைப்பில் ஒளிப்படப் போட்டி ஒன்றை அறிவித்தனர். இந்தியாவிலுள்ள முன்னணி ஒளிப்படக் கலைஞர்கள் பலர் இப்போட்டியில் கலந்து கொண்டனர் முதல் பரிசு சுப்ரியா பிஸ்வாஸ் என்ற பெண்மணிக்குக் கிடைத்தது. இரண்டாவது பரிசாக மடிக்கணினி நம் தமிழர் ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது என்பதில் நமக்குப் பெருமை. அவர் நெய்வேலியைச் சேர்ந்த சான்பாஸ்கோ என்பதில் கடலூர் மாவட்டத்திற்கு கூடுதல் பெருமை. இப்படத்தை மிக நுட்பமாகப் பதிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார். பொதுவாக ஒரு படம் எடுப்பதற்கு ஒரு வினாடியில் அறுபதில் ஒரு பங்கு நேரம் போதுமானது ஆனால் இப்படத்தை இவர் எடுப்பதற்கு செலவிட்ட நேரம் பத்து வினாடிகள். இரவு பத்தேமுக்கால் மணிக்கு இப்படத்தை எடுத்துள்ளார்.பத்து வினாடிகளில் இவ்வானத்தை இவ்வளவு புகை மண்டலமாக்க முடியுமானால் காலகாலத்திற்கு இவ்வானத்தில் எவ்வளவு மாசு சேறுமோ? என்ற கவலையோடுதான் இப்படத்தைத் தான் பதிவு செய்ததாகக் கூறினார். நம் வசதிக்காக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கொதி உலையால் காற்று மண்டலம் இப்படி மாசுபடுகிறதே என்ற குற்ற உணர்வை நம்மிடையே இப்படம் ஏற்படுத்துகிறது. புவி வெப்பமடைவதை நம்மால் இயன்ற அளவு குறைக்க வேண்டும் என்ற சிந்தனையை ஒவ்வொரு மனிதரிடமும் இப்படம் ஏற்படுத்தும் என்றால் அது சான்பாஸ்கோவுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக