இதோ இந்த
தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில்தான்
எங்கள் ஊர்கள்
இருக்கின்றன.
அங்கே சில
மரங்களும் இருந்தன.
அவை வெறும்
மரங்கள் மட்டுமல்ல
எங்களுக்கு எல்லாமுமாக
இருந்தன.
ஊர்களைக்கூட எம்
மக்கள்
மரங்களைக்கொண்டே
அடையாளம் காண்பார்கள்.
பொன்னேரியில்
ராமணாத்திகளின் கீச்சொலி
நிரம்பி வழியும்
தூங்கு மூஞ்சி
மரமிருந்தது.
மரங்கொத்திகளின்
பொந்துகளுடைய
புளியமரமிருந்த ஊர்
கார்குடல்
தூக்கணாங்குருவிக்கூடுகள் தொங்கும்
பனைகளைத்தாண்டினால்
மாவிடந்தல்
குயில்களின் கச்சேரி
மணக்கும்
வேப்பமரத்தடியில் சுமைதாங்கி
இருந்தால்
அது ஆதனூர்
தேன் சிட்டுக்களின்
சிணுங்கல்களோடு
புன்னை மலர்களும்
உதிர்ந்து கிடப்பது
குமாரமங்கலம்
கோபாலபுரத்திலோ
கிளி கடித்த
இலுப்பைக் கனிகள்
சிதறிக் கிடக்கும்.
குரங்குகள் தாவி
விளையாடும் இடம்
நரிக்குறமங்கலம்
காக்கைகளின் சண்டைக்
கச்சேரியை
அலுக்காமல் வேடிக்கை
பார்க்கும்
புளியமரங்களையுடையது
கம்மாபுரம்
சூரிய வெளிச்சம்
சாலையில் படாமல்
குகையாய் அடர்ந்த
புளியமரங்கள்
சிறுவரப்பூரில்
அணில்கள் கண்ணாமூச்சு
ஆடும்
ஒற்றை ஒதிய
மரமிருந்தது
தர்மநல்லூர்
இந்த ஊர்களையெல்லாம்
பெயர்ப்பலகைகளால்
அடையாளம் காட்டிவிட்டீர்கள்
மனிதர்களுக்கு
பறவைகளுக்கு?
நன்றி: தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக