இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS
தெருக்கூத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெருக்கூத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஆகஸ்ட், 2020

தெருக்கூத்துக் கதைகள்

 

 



முன்னுரை

            தெருக்கூத்து பற்றி பல்வேறு கோணங்களில் தமிழில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. தெருக்கூத்து நிகழ்த்துவதற்கு முதல் தேவை கதையே ஆகும். எனவே கதைகள் பற்றிய ஆய்வும் இன்றியமையாதது ஆகும். அந்த அடிப்படையில் இக்கட்டுரை தெருக்கூத்துக் கதைகள் பற்றி ஆய்வு செய்திடும் நோக்கில் அமைந்துள்ளது. இகட்டுரைக்குத்தேவையான தரவுகள் தெருக்கூத்துக் கலைஞர்களிடம் கலந்துரையாடி பெறப்பட்டன. அந்த தகவல்கள் மற்றும் தெருக்கூத்து நாடக நூல்கள் ஆகியவை முதன்மை ஆதாரமாகவும் தெருக்கூத்து பற்றிய நாட்டுப்புறவியல் நூல்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களை  துணை ஆதாரமாகவும் கொண்டு இக்கட்டுரைஅமைந்துள்ளது.

ஆய்வுப்போக்குகள்:

            தெருக்கூத்துக் கதைகளைப்பற்றி நாட்டுப்புறவியல் அறிஞர்கள் ஆய்வுகள் செய்துள்ளனர். முனைவர் ஆறு.இராமநாதன் அவர்கள் தமிழர் கலை இலக்கிய மரபுகள் என்னும் ஆய்வு நூலில் தெருக்கூத்து பற்றிய குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். தென்னார்க்காடு மாவட்டத்தில் தெருக்கூத்து என்ற ஆய்வுக்கட்டுரையில் கூத்துக்கதைகளை ஐந்தாக வகைப்படுத்தியுள்ளார். அவை 1.மகாபாரதக் கதைகள்,  2.புராணங்களை ஒட்டிய பிற கதைகள், 3.சரித்திரம் தொடர்பான புனைகதைகள், 4.குடும்பத்தொடர்பான புனைகதைகள் என்பனவாகும்.  இவை மட்டுமின்றி  கதைகளின் பண்புகள் அடிப்படையில் சண்டை, பக்தி, காதல்  எனவும் நில அடிப்படையில்  வட்டார கதைகள், தமிழகக்கதைகள், இந்திய கதைகள் என்றும் வகைப்படுத்தியுள்ளார். கிங்ஸ்டன் செல்வராஜ் என்பவர் தெருக்கூத்துக் கதைகளை வகைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைப்பற்றிய தனது ஆய்வுக்கட்டுரையில் நாட்டுப்புற கதைகளை வகைப்படுத்துவதுபோல் தெருக்கூத்துக் கதைகளை எளிதாக வகைப்படுத்த இயலவில்லை என்று குறிப்பிடுகிறார்.

கட்டுரை நோக்கம்:

            இத்தகைய சூழலில் இக்கட்டுரை தமிழகத்தில் நூற்றாண்டு காலமாக நிகழ்ந்து வரும் மரபுக் கலையான இந்த தெருக்கூத்தில் எத்தனைக் கதைகள் இடம்பெற்றுள்ளன? அவை எத்தகைய பண்புகளை உடையவை? கதை அமைப்பு முறை எப்படி உள்ளது? தெருக்கூத்துக் கதைகளில் இடம்பெறும் பாடல்கள் எவ்வாறு அமைந்துள்ளன? என்ற வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

தெருக்கூத்து கதைகள்:

            கடலூர் மாவட்டம் குறவன்குப்பம் திரு கோவி.சடகோபன் என்ற நாடக ஆசிரியரிடமும் மன்னம்பாடி, களர்க்குப்பம் ஆகிய ஊர்களிலுள்ள தெருக்கூத்துக் கலஞர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் தெருக்கூத்தில் இரு நூறு வகையான கதைகள் உள்ளது என கண்டறியப்பட்டது. ஆனால் அவர்களால் நூற்று தொண்ணூறு கதைகளை மட்டுமே நினைவுகூற முடிந்தது.(காண்க: பின் இணைப்பு)

தெருக்கூத்துக்கதைகளின் பண்புகள்:

            தெருக்கூத்து கதைகளின் முதன்மையான பண்பு சண்டை எனுமளவுக்கு சண்டை குறித்த கதைகள் ஏறாளமாக உள்ளன. அதற்கடுத்து திருமணம் பற்றிய நாடகங்களைக் குறிப்பிடலாம். மன்னர்கள் முடிசூடுதல் பற்றிய கதைகள், சம்காரம் பற்றிய கதைகள், மோட்சம் குறித்த கதைகள் ,மனிதர்கள் ,புனிதர்களின் மகத்துவம் பற்றிய கதைகள் என பல்வகையான பண்புகளில் கதைகள் அமைந்துள்ளன.

 

 

 

கதைகளின் அமைப்பு முறை:

            தெருக்கூத்துக் கதைகள் பெரும்பாலும் பின் வரும் அமைப்பைக் கொண்டுள்ளன. 1.காப்பு, 2.தரு, 3.விருத்தம், 4.வசனம் என்ற நான்கடுக்கு முறையில் அமைந்துள்ளன.

            காப்பு என்பது கடவுள் வாழ்த்துப்பகுதி இவை வினாயகர்,கலைவாணி போன்ற கடவுளரைப் போற்றிப்பாடுவதாக உள்ளன.

            தரு என்பது கதாப்பாத்திரம் தன்னை அறிமுகப்படுத்திக்கொளவதும், ஒருவரோடு ஒருவர் உரையாடுவதுமான  பாடல் வடிவில் அமைந்த பகுதியாகும்.

            விருத்தம் என்பது கதை நாயகன் நாயகி தன் செயலை / நிலையைப் பாடலாகப் பாடும் பகுதி.

வசனம் என்பது அடுத்து வரும் கதாப்பாத்திரம் யார் அவர் என்ன செய்யப்போகிறார் போன்றவற்றை வசனமாகக் கூறும் பகுதி.

இந்த அமைப்பு முறை சில கதைகளில் சற்று மாறுபடுவதும் உண்டு. இவை மட்டுமன்றி  எல்லா தெருக்கூத்து கதைகளிலும் சில ஒழுஙமைப்புகள் காணப்படுகின்றன. கதை நாயகன்/நாயகியின் பிறப்பு அவர்களின் திருமணம் , வாழ்வில் ஏற்படும் சோதனைகள் அவற்றை எதிர்கொண்டு வெற்றி காண்பது என சில மரபுகள் அனைத்துக் கதைகளிலும் பின்பற்றப்படுகின்றன.

பாடல் அமைப்புகள்:

            தெருக்கூத்துப் பாடல்கள் கதைப்பாடல் அமைப்புகளையே கொண்டுள்ளன. பேச்சு மொழியில்  பாடல்களின் பல சொற்கள்  அமைந்துள்ளன. வெண்பா அமைப்புகளும் சொல்லடுக்குகளும் கதைப் பாடல்களை ஒத்துள்ளன.

 

 

முடிவுரை:

தெருக்கூத்து கதைகள் பெரும்பாலும் இராமாயணம் , மகாபாரதம், புராணக் கிளைக்கதைகள் ஆகியவற்றின் அடிப்படியிலேயே அமைந்துள்ளன.

கூத்துக் கதைகளில் சண்டை, சம்காரம்,திருமணம்,முடிசூட்டுவிழா, மகத்துவம், மோட்சம் ஆகிய பண்புகள்  அதிகமாக இடம்பெற்றுள்ளன.

கதைகள் நான்கடுக்கு முறையில் அமைந்துள்ளன.

கதைப்பாடலை ஒத்த பாடல்கள் கூத்துக் கதைகளில் இடம்பெற்றுள்ளன.

தெருக்கூத்துக் கதைகள் மரபான கதை அமைப்பு முறையைக் கொண்டுள்ளன.

 

பின் இணைப்பு:

கூத்துக்கதைகள்:

பாரதக் கதைக் கூத்துகள்

பாரதக் கதைகளில் பஞ்சபாண்டவர் வனவாசம், திரௌபதி துகிலுரிதல், அர்ச்சுனன் தபசு, பாஞ்சாலி சபதம், கர்ணமோட்சம், கிருஷ்ணன் தூது, பதினெட்டாம் போர் என்னும் கதைகள் அடிக்கடி கூத்தாக நிகழ்த்தப்படுகின்றன. ஜலக்கீரிடை, யாகசாலை, திரௌபதி திருக்கல்யாணம், அல்லி திருக்கல்யாணம், பவளக்கொடி திருக்கல்யாணம், ராஜசூய யாகம், துரியோதனன் வீரயாகம், சுந்தரி மாலையீடு, விராட பருவம், அரவான் களப்பலி, அணிவகுப்பு, பீஷ்மர் சுவேதனன் சண்டை, பகதத்தன் வதை, அபிமன்யூவதை, சயந்தவன் வதை, துரோணர் சண்டை, துச்சாதனன் சண்டை, துரியோதனன் வீர சுவர்க்கம்

  இராமாயணக் கதைக் கூத்துகள்

இராமர் பட்டாபிஷேகம், மூலபல சண்டை, பக்த ஹனுமான், சீதா கல்யாணம், இந்திரஜித், இரணியன் வரலாறு, இராவண வதம், மந்தரை-கைகேயி சூழ்ச்சி, இராமன்

குகன் சந்திப்பு, பரதன் பாதுகா பட்டாபிஷேகம், சூர்ப்பணகை மானபங்கம், பொன்மான். வாலி வதை, சபரி மோட்சம், இராமர் வைகுந்தம்

  புராணக் கதைக் கூத்துகள்

புராணக் கதைகளில் சக்தி விநாயகர், வீர விநாயகர் யுத்தம், கந்தன் - கார்க்கோடகன் யுத்தம், தாரகாசுரன் சம்காரம், திரிபுர தகனம், காமதகனம், மும்மூர்த்திகள் கர்வ பங்கம், அனுசூயை, உத்தண்டாசுரன் சம்காரம் என்னும் முத்துமாரி மகத்துவம், நளாயனி சரித்திரம், ரேணுகா சம்காரம், தக்க யாகம், வல்லாள கண்டன் - வீரபத்திரன் சண்டை, கங்கா தேவி கர்வ பங்கம் என்னும் பராசக்தி - பண்டாசுரன் சண்டை, வள்ளி திருமணம்

  பிறவகைக் கதைக் கூத்துகள்

கட்டபொம்மன், தேசிங்கு ராஜன் முதலானோர் கதைகள் வரலாற்றுக் கூத்துகளாக நடிக்கப்பட்டன. அரிச்சந்திரன் கதை, வன்னியர் வீர முழக்கம், சனிவார விரத நாடகம் முதலானவை சாதி சமயம் சார்ந்து நடைபெறும் கூத்துகள். இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை, நல்லதங்காள் கதை முதலான ஓரளவு பிற்காலக் கதைகளும் கூத்தாக நடிக்கப்படுகின்றன.

பி.கு. கானல்வரி கருத்தரங்கம் 2016 இல் வாசித்த கட்டுரை

14 ஜூன், 2009

நலிவடைந்து வரும் தெருக்கூத்து




நலிவடைந்து வரும் தெருக்கூத்து
தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான தெருக்கூத்துக்கலை நலிவடைந்து வருவது ஒரு வரலாற்றுச்சோகம். கால் நூற்றாண்டுக்கிடையில் தெருக்கூத்துக் கலை மிகப்பெரிய வீழ்ச்சியை எதிர் கொண்டிருக்கிறது. சிற்றூர்களில் அறுவடை முடிந்து உழவர்கள் ஓய்வாக இருக்கும் காலங்களில் கூத்து நிகழ்த்தப்படும். கூத்து நிகழ்த்துவதற்கென்றே ஒவ்வொரு ஊரிலும் திடல் உண்டு. ஊரே திரண்டு வந்து கூத்தைக் கண்டுகளிப்பது வழக்கம். தமிழிசைக் கருவிகள் முழங்க முன்னிரவில் தொடங்கி விடிய விடிய ஆடலும் பாடலுமாகக் களை கட்டும். கூத்து தொடங்கியதும் அரங்கத்தில் முதலில் வருகின்ற கதாப் பாத்திரம் கட்டியக்காரன். குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒருங்கே கவரந்திழுக்கும் கதாப்பாத்திரமான அவர் இரண்டுக்கும் மேற்பட்ட வண்ணங்களை முகத்தில் பூசி ஒப்பனை செய்திருப்பார். விளக்கொளியில் மின்னும்படியான பளபளப்பான உடையணிந்திருப்பார். பல பல பல பல பல பப்பூன் வந்தேனே பன மரத்துல ஏறி தொப்புன்னு உழுந்தேனேஎன்று பாடியபடி அரங்கத்தை வலம் வரும்போது பார்வையாளர்களிடையே சிரிப்பொலி பரவும். பார்வையாளர்களை வரவேற்றுப் பாடி, நகைச்சுவையான பாடல்களைப் பாடி, நிகழவிருக்கும் கூத்தின் பெயரையும் கதைச் சுருக்கத்தையும் கூறுவார். அதன் பின்னர் வரக்கூடிய முதன்மைக் கதாப் பாத்திரங்களுக்குத் தோழனாக, தோழியாக, பணியாளராக, அமைச்சராக சூழலுக்கேற்ப அவர் மாறுவார். ஒவ்வொரு கதாப் பாத்திரமும் மேடைக்கு வருவதற்கு முன்பாக திரைக்குப் பின்னால் நின்று பாடல் மூலம் தம்மை அறிமுகப் படுத்திய பிறகு மேடையில் தோன்றுவர். அவர்களின் வண்ட மயமான ஒப்பனையைக் காண்பதற்காகப் பார்வையாளர்கள் ஆவலோடு காத்திருப்பர். கதாப் பாத்திரத்தின் தன்மைக்கேற்ற வண்ணத்தைக் கலைஞர்கள் தங்கள் முகத்தில் பூசியிருப்பர். ஒவ்வொரு கலைஞரும் போட்டி போட்டுக்கொண்டு தன் திறமையை வெளிப்படுத்துவார். சிறப்பாக நடிப்பவர்களுக்கு அன்பளிப்பு வழங்கி பார்வையாளர்கள் ஊக்கப்படுத்துவர். கூத்து முடிகின்ற வரை கலைஞர்களுக்கு ஊரில் விருந்தோம்பல் நடைபெறும். மக்களுக்கும் கலைஞர்களுக்குமான உறவு நெருக்கமுடையதாய் இருக்கும். இன்றைக்கும் ஒரு சில ஊர்களில் கூத்து நிகழ்த்தப்படுகிறது ஆனால் பார்வையாளர்கள் அதிகமின்மையால் கலைஞர்கள் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு கலை வெளிப்பாடு குறைகிறது. அது மட்டுமின்றி வணிக மயமாகி வரும் வேளாண் முறை, நகர மயமாகி வரும் வாழ்க்கை முறை, தொலைக்காட்சிகளின் வருகை எனப் பல்வேறு காரணங்களால் தெருக்கூத்துக் கலை மெல்ல நலிவடைந்து வருகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களே கூத்துக்கலைஞர்களாக உள்ளனர். கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில்தான் கூத்து பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. கூத்துக்கலைஞர்கள் சங்கம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசும் கூத்துக் கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் கூத்துக் கலையில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். கூத்து வாத்தியார் என்றழைக்கப்படும் நாடக ஆசிரியர்தான் கூத்துக் கலைஞர்களை ஒருங்கிணைத்து கூத்து நிகழ்த்துவார். நடிகர்களுக்கு முன் பணம் கொடுப்பதற்காகவும் ஒப்பனைப் பொருள்களைப் புதுப்பிப்பதற்காகவும் அவர் ஓர் ஆண்டிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. எனவே அத்தொகையை வட்டிக்குக் கடனாகப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அரசு கூத்துக்கலைஞர்கள் சங்கத்திற்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கி உதவினால் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து அவர்கள் விடுபட முடியும். நலிவடைந்த இலக்கியவாதிகளுக்கு உதவி செய்வதைப்போல் கூத்துக் கலைஞர்களுக்கும் அரசு உதவிட வேண்டும். வயது முதிர்ந்த அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதைப்போல் வயது முதிர்ந்த தெருக்கூத்துக் கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கலாம். கூத்துக் கலைஞர்களுக்கு வழங்கப் படும் கலைமாமணி போன்ற விருதுகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி கிராமப் பகுதிகளில் வாழும் கூத்துக்கலைஞர்களும் விருது பெறும்படிச் செய்திட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் இராசகோபால் படையாட்சி என்ற நாடகப் பேராசிரியர் இருபதுக்கும் மேற்பட்ட கூத்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், அவற்றை நாட்டுடைமையாக்கி அவரது வாரிசுகளுக்கு பரிவுத்தொகை வழங்கலாம். குறவன்குப்பம் சடகோபன், கொய்யாத்தோப்பு முத்துலிங்கம், தாழம்பட்டு தணிகாசலம், வேகாக்கொல்லை சின்னதுரை, பயித்தம்பாடி சீனுவாசன், பெருமாள் நாயக்கன் பாளையம் ராமு, செட்டிச்சாவடி செல்வராசு போன்ற கலைஞர்கள் கடலூர் மாவட்டத்தில் முக்கியமானவர்கள். இது போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கியக் கூத்துக்கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அரசு பொருட்காட்சிகளிலும், கோயில் திருவிழாக்களிலும் கூத்து நிகழத்தப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக் வழி செய்யலாம்.