இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

4 மார்ச், 2017

எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வாழ்நாள் சேமிப்பு நூல்கள்




மறைந்த எழுத்தாளர் திரு.வே.சபாநாயகம் அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு படிப்பதும் எழுதுவதுமே தலையாய பணியாக செய்து வந்தவர். படிப்பதற்கும் எழுதுவதற்கும் கால அட்டவணைப்படி நேரத்தை பகிர்ந்தவர். தமிழில் வெளிவந்த தேர்ந்தெடுத்த படைப்புகளைத் தேடித்தேடி சேகரித்து தன் அறையை அழகுசெய்தவர். நூல்களைத் திட்டமிட்டு அடுக்கி வைத்திருப்பார். நமக்குத்தேவைப்படும் ஒரு நூலின் பெயரைக் குறிப்பிட்டுக்கேட்டால் இடது பக்க அலமாரியில் மூன்றாவது வரிசையில் 10 ஆவது இடத்தில் இருக்கும் என்று குறிப்பிடுவார். சரியாக அந்த இடத்தில் அந்த நூல் இருக்கும். நான் அறிய அது போல் ஒழுங்காக நூல்களை அடுக்கி வைத்தவர் யாருமில்லை. நூல்களை அழுக்காக்காமல், கசக்காமல் மடிக்காமல் கிறுக்காமல் படிக்கவேண்டும் என்பது அவரது கொள்கை. ஒரு நூலைப்படிக்கவேண்டுமெனில் முதலில் அதற்கு ஒரு அட்டை போட்டுவிட்டுத்தான் படிப்பார். அட்டை அழுக்காகாமலிருக்க. அவர் நூலை மட்டுமல்ல. பிறரிடமிருந்து நூல்களை வாங்கினாலும் அப்படித்தான் செய்வார். அவரது நூல்களை எலாருக்கும் கொடுக்க மாட்டார் அவரின் மேற்சொன்ன பழக்கங்களை நன்கு அறிந்தவருக்கே கொடுப்பார். வாங்கியபடியே திருப்பி தரவேண்டும். எப்போது திரும்பக்கொடுக்கவேண்டும் என்று கூறுகிறாரோ அப்போது திருப்பவில்லை எனில் நினைவூட்டி பெற்றுக்கொள்வார். கணையாழி, தீபம், எழுத்து பிரக்ஞை,ஞானரதம் போன்ற இதழ்களை பைண்டிங் செய்து வரிசையாக அடுக்கி வைத்திருப்பார். அதனால்தான் அந்த இதழ்களை அவரால் சிறப்பாக தொகுக்க முடிந்தது.  அந்த இதழ்களை வெளியிட்டவர்களே முறையாக பாதுகாத்து வைக்கவில்லை. ஒரே நாளில் பல ரகமான நூல்களை வாசிக்கும் பழக்கம் அவரிடமிருந்தது. காலை 5-6 கணினியில் மின்னஞ்சல் பார்ப்பது வலைப்பதிவு செய்தவது, 6- 7 செய்தித்தாள்கள் வார இதழ்கள் படிப்பது 7-8 குளிப்பது உண்பது, 8-9 கதைகள் 9-10 நாவல்கள் 10-11 ஓய்வு 11-12 கட்டுரைகள் 12-1 இலக்கிய இதழ்கள் இது ஒரு தோறையமாக நான் குறிப்பிடுவது ஆனால் அவரின் திட்டமோ இன்னும் ஒழுங்காக அமைந்திருக்கும். ஒரு நாளைக்கு 3 நாட்குறிப்புகள் எழுதுவார். ஒன்று அன்றாட செயல்கள் சந்தித்த மனிதர்கள் பற்றியதாக இருக்கும் அடுத்து வரவு செலவு கணக்குகள், மற்றொன்றில் தமக்கு வந்த கடிதங்கள் மற்றும் அவர் யாருக்கு கடிதம் எழுதினார் என்ற விவரங்கள். இப்படி தன் வாழ்நாளை ஒரு ராணுவ வீரரைப்போல் திட்டமிட்டு செலவிட்டவர். நூல்களுக்காக செல்விட அஞ்சாதவர். அவர் மறைவுக்குப்பிறகு அந்த நூல்களை என்னசெய்யலாம் என்று அவரின் குடும்பத்தினர் திட்டமிட்டபோது என்னிடமும் ஆலோசனை கேட்டனர். அப்படியே இருக்கட்டும் அய்யாவின் பெயரில் ஒரு நூலகமாக்கிவிடலாம் ஆய்வாளர்களுக்கு பயன்படும் என்றேன். ஆனால் அவற்றை நிர்வகிப்பது அவ்வளவு எளிதில்லை என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. எனவே அய்யா அவர்கள் பணியாற்றிய பள்ளி நூலகங்களுக்குக் கொடுக்கலாம் எனத்திட்டமிட்டோம். அவற்றைக் கொண்டுசேர்ப்பதில் உள்ள நடைமுறைச்சிக்கல்களை எண்ணிப்பார்த்தும் நூல்கள் ஓரிடத்திலிருந்தால் நலமென்றும் புதிதாகத் தரமுயர்த்தப்பட்ட மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இப்போதுதான் நூல்களைச் சேகரிக்கின்றோம் பெரிய கட்டடம் நூலக்த்திற்கென தனி தாழ்வாரம் என நூல்களைப் பயன்படுத்தவும் பாதுகாக்கவும் சரியான இடம் என்பதால் அவர் குடும்பத்தினர் மகிழ்வோடு ஒத்துக்கொண்டனர். இந்த பணி மிகவும் எளிதாக இருக்கும் என்றுதான் எண்ணினேன். தொடங்கியபிறகுதான் அதன் கடினம் தெரிந்தது. முதலில் இலக்கியச்சிற்றிதழ்களை விரும்பிச்சேகரிக்கும்      கிருஷ்-.இரமதாஸ் Krish Ramadas அவர்கள் கேட்டிருந்தார் என்பதால் அவற்றை ஒழுங்குபடுத்தினோம்.
கீழ்க்கண்ட இதழ்கள் அவருக்கு அளிப்பதற்காக அட்டைப்பெட்டிகளில் வைத்தோம்
விருட்சம் – 40 இதழ்கள்
சதங்கை – 31
கவிதாசரண்-23
யுகமாயினி-42
கோடு- 8
புதியநம்பிக்கை- 22
கணையாழி -178
இலக்கியபீடம் -24
முன்றில் – 4
கல்குதிரை -11
இலக்கு -8
சிற்றிதழ்செய்தி -12
கால்ச்சுவடு 200
தளம் -12
படித்துறை -5
தொடரும் – 19
நிகழ்-15
வேர்கள் -6
தமிழ்நேயம்- 12
பிரக்ஞை-4
அலை-3
மண்-1
வள்ளுவம்-5
விசை-3
உயிர்மை-123
வடக்குவாசல்-11
அம்ருதா-73
வார்த்தை-21ரசனை-13
தீராநதி-163
உயிரெழுத்து-63
இளந்தமிழன்
திசை எட்டும் 
மன்னம்பாடி பள்ளிக்கு கணினி சார்ந்த நூல்கள்,திருக்குறள், கம்பராமாயணம்,சங்கைலக்கியங்கள், பாரதி, பாரதிதாசன், நவீனைலக்கியங்கள், கதை,புதினம்,கவிதை என ப்லதுறை நூல்கள் என மொத்தம் 1715 நூல்கள் வழங்கப்பட்டன.
கதைசொல்லி26 இதழ்களையும் சுந்தர ராமசாமியின் இவை என் உரைகள் நூலையும் எனக்கு அன்பளிப்பாக அளித்தனர்.
இப்பணியில் அய்யாவின் மகள் திருமதி.மங்களநாயகி, அய்யாவின் பெயரன் செல்வன் புவன், அய்யாவின் சகோதரி ராஜேஸ்வரி, சகோதரி மகன் திரு.கல்யாணசுந்தரம், அய்யாவின் அண்ணி திருமதி ஜெயலக்‌ஷ்மி, நான், என் மாணவர்கள் அரவிந்தசாமி,நேரு,வெஙடேசன்,பரத் அகிய அனைவரும் காலை 9.30 லிருந்து 4.30 வரை ஈடுபட்டு வெற்றிகரமாக இப்பணிகளை முடித்தோம். முடியும்வேளையில் எனது கண்கள் என்னை அறியாமலே கலங்கின. நூல்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அதனை அடுக்கி வைக்க இரண்டு அலமாரிகளையும் கொடுத்து வண்டி வாடகையையும் கொடுக்க முனவந்தனர். நான் வாடகையை மட்டுமாவது பள்ளிசார்பில் கொடுக்கிறோம் என்பதை ஏற்றுக்கொண்டனர். அவர் ஆன்மா எங்கள் பள்ளியில் காலமெல்லாம் நிலைத்து அவரின் புகழை உலகுக்கு உணர்த்தும் இந்த வாய்ப்பினை நல்கிய அய்யாவின் குடும்பத்திற்கு நன்றி சொல்வதைத்தவிர வேறு என்ன செய்வது.


1 கருத்து:

  1. வணக்கம். வாழ்த்துக்கள் நண்பர்.
    நான் கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ்கள் உலகம். தங்களுக்கு முதலில் என் நன்றியையும், வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். என் கனவுத் திட்டத்திற்கு [சிற்றிதழ்கள் நூலகம் & ஆவணகம்] மறைந்த அய்யா திரு.சபாநாயகம் குடும்பத்தினரும், நீங்களும் அளித்துள்ள, மதிப்பையும், உழைப்பையும் கண்டு ஆனந்தக் கண்ணீரோடு பிரமித்து நிற்கின்றேன். கடந்த 6 வருடமாக இணையம் மூலம் சிற்றிதழ்கள் துறையில் முழு வீச்சாக ஈடுபட்டு வரும் எனக்கு உங்களைப் போன்ற நண்பர்கள் கொடுக்கும் ஊக்கமும், ஒத்துழைப்பும், இன்னும் என்னை தீவிரமாக ஈடுபட வைக்கிறது. சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ் துவங்கிய போதும் இதே போல உலகமெங்கும் இருக்கும் இலக்கிய ஆர்வலர்கள், சிற்றிதழ் வாசகர்கள் அளித்த ஊக்கத்தினால் வெற்றிகரமாக சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழை கொண்டு வர முடிந்தது. அதே போன்று இப்போது உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் ஆவணக முயற்சிக்கு தாங்கள் உதவுவதாக கூறி புத்தகங்களையும், பிடிஎப் பிரதிகளையும் அனுப்பி வருகின்றனர். இந்த ஆவணகம் முறைப்படி 2018ம் ஆண்டு தைப் பொங்கல் அன்று பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்குள், அதற்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு முழுமையடைந்து விடும். இது அமைய இருப்பது பெரம்பலூர் நகரத்தில். இந்த நேரத்தில் இந்த பேருதவியை செய்துள்ள மேடம் திருமதி.மங்களா ராசசுந்தரம் அவர்களுக்கும், இதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித் தந்த நண்பர் திரு.ரமேஷ் கல்யான் அவர்களுக்கும் என் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அனௌவருக்கும் சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ் சார்பாக வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன். நன்றி. வணக்கம். - கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ்கள் உலகம், 04.03.17.

    பதிலளிநீக்கு