இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

29 நவம்பர், 2009

கண்ணாமூச்சி



சிறுவர் சிறுமியர் என இரு பாலரும் விளையாடும் விளையாட்டு. ஒரு சிறுவனின் கண்ணை மற்றொருவன் பொத்த பிறர் ஒளிந்து கொள்ள ஒளிந்திருப்பவர்களில் ஒருவரைக் கண்டறிவது விளையாட்டு. கண்ணைப்பொத்தியிருப்பவனோடு கீழ்க்கண்டவாறு உரையாடல் நடைபெற்று முடிந்த பிறகு கண்ணைத்திறந்துவிடவேண்டும்.

உரையாடல்: கண்ணாமூச்சி காதடைப்பு

உங்க வீட்டுல என்னா சோறு?

நெல்லு சோறு

ஈ உழுந்துதா, எறும்பு உழுந்துதா?

எறும்பு உழுந்துது

எடுத்துட்டு சாப்பிட்டியா, எடுக்காம சாப்பிட்டியா?

எடுத்துட்டு சாப்பிட்டேன்

காட்டுக்கு போயி ஒரு சிங்கம், ஒரு புலி,

ஒரு கரடி எல்லாம் புடிச்சிகிட்டு வா...
கண்பொத்தி ஆடும் மரபு சங்ககாலந்தொட்டே தமிழர்களிடமிருந்திருப்பதைக் கீழ்க்கண்ட பாடல்கள் உணர்த்துகின்றன.
சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன

நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே! (ஐங்குறுநூறு)கண் புதையாக் குறுகிப் பிடிக்கை அன்ன...(அகநாநூறு)

28 நவம்பர், 2009

குலை குலையா முந்திரிக்காய்



சிறுவர் சிறுமியர் என இரு பாலரும் ஆடும் ஆட்டம். விளையாட்டில் கலந்துகொள்பவர்கள் வட்டவடிவில் அமர்ந்திருக்க ஒருவர் மட்டும் கையில் வைத்திருக்கும் துணியைச் சுழற்றிக்கொண்டு வட்டத்தைச் சுற்றி பாட்டு பாடியபடி ஓடிவரும்போது அமர்ந்திருப்போரில் யாரேனும் ஒருவர் பின்னே அத்துணியை போட்டுவிட்டு ஓடுவார். துணி யாருக்குப்பின்னால் கிடக்கிறதோ அவர் எழுந்து ஓடி துணி போட்டவரைப் பிடிக்கவேண்டும் இல்லையேல். இவர் யாரேனும் ஒருவர் பின்னால் துணியைப்போட ஆட்டம் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும்.
பாடல்: கொல கொலயா முந்திரக்காய்

நரிய நரிய சுத்தி வா

கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்

கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி.

22 நவம்பர், 2009

கல்பாரி


பாரி என்றால் கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல் என்று பொருள். தரையில் செவ்வக வடிவில் கோடு கிழித்து அதனுள் குறுக்கு நெடுக்காக இரு கோடுகள் அமைத்து கோடுகள் வெட்டுமிடத்தில் ஒரு சிறு வட்டம் வரைந்து அதில் நான்கு கற்களை வைத்து கட்டத்திற்கு ஒருவர் வீதம் நான்கு பேர் நிற்க நடுக்கோட்டில் ஒருவன் நின்று கட்டத்திற்குள்ளிருப்போர் கற்களை எடுத்துச்சென்று விடாமல் காவல் காக்கும் விளையாட்டு கல்பாரி. காவலாளியிடம் அடி படாமல் கற்களை எடுத்துவிட்டால் ஆட்டத்தில் வென்றதாக பொருள்.
பயன்கள்: உழைத்து பொருளீட்ட வேண்டும், ஈட்டிய பொருளில் தம் தேவை போக எஞ்சியதை பிறருக்கு கொடுத்து உதவுதல் ஆகிய பண்புகளைச் சிறுவர்களிடம் வளர்க்கிறது.

21 நவம்பர், 2009

சில்லி விளையாட்டு



மழைக்காலங்களில் சிறுமியர் ஆடுவது. இருவர் சேர்ந்து ஆடுவதால் தலா ஐந்து கட்டங்களை நிலத்தில் வரைந்து உடைந்த மண் பானைத்துண்டுகளை சல்லியாக்கி (இதுதான் சில்லி என்று மாறியிருக்க வேண்டும்) கட்டத்துக்குள் வீசி ஒற்றைக் காலால் நொண்டியடித்தபடி கட்டத்தினுள்ளிருக்கும் சில்லியை மிதித்து அதனை அடுத்த கட்டத்துக்குக் காலால் எத்தித் தள்ளவேண்டும் அது போல் ஒவ்வொரு கட்டத்திலும் வீசி விளையாடுவர்.இது போல் நான்கு சுற்றுகள் வெற்றிகரமாக முடித்தால் ஒரு பழம் பழுத்ததாகக் கூறி கடைசி நான்காவது கட்டத்தில் ஒரு பெருக்கல் குறி வரைந்துகொள்வது வழக்கம். வெற்றிக்கனிகளை முதலில் பெறுபவர் ஆட்டத்தில் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிறார்.

பயன்கள்: தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகிய பண்புகளைச் சிறுவயதிலேயே இவ்விளையாட்டு ஏற்படுத்துகிறது.

ஏழாங்காய் விளையாட்டு


சிறுமியர் ஆடுவது. ஏழு கற்களைக்கொண்டு ஆடுவதால் இப்பெயர். ஒரு காயைக் கையில் வைத்துக்கொண்டு மற்றகாய்களைச் சிதறவிட்டு கையிலிருக்கும் காயை மேலே விட்டு கீழிருக்கும் காயை எடுத்தபடி மேலிருந்து வருவதையும் பிடிக்க வேண்டும்.
பாடல்: ஆலெல பொறுக்கி
அரசெல பொறுக்கி
கிண்ணம் பொறுக்கி
கீரிபுள்ள தாச்சி
தாச்சின்னா தாச்சி
மதுர மீனாட்சி.
பயன்கள்: கை,வாய், கண் ஆகிய முப்புலன்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தும் ஆற்றல் வளர்கிறது

16 நவம்பர், 2009

கார்த்திகை சுற்றும் விளையாட்டு



கார்த்திகைத் திங்கள் முழு நிலா நாளில் சிறுவர் நிகழ்த்தும் சடங்கியல் விளையாட்டு இது. பனம்பூவைக் கருக்கித் தூளாக்கி துணியில் பொட்டலமாகக் கட்டி அதனை ஒரு கவைக்குள் வைத்து நெருப்பு மூட்டி சற்றுவர் அதில் பறக்கும் தீப்பொறி காட்சி கண்ணுக்கு இனிமை.

ஓரி விளையாட்டு


நீரில் ஆடும் விளையாட்டு. நிலத்தில் ஓடிப் பிடித்து விளையாடுவதைப்போன்று நீரில் மூழ்கி நீந்திச்சென்று பிடிக்கவேண்டும்.ஆட்டத்தின் தொடக்கத்தில் பாடப்படும் பாடல்:

ஆத்துல கெண்ட புடிச்சன்

எல்லாருக்கும் குடுத்தன்

எங்க வெங்கடேசனுக்கு மட்டும் குடுக்கலே.

பயன்கள்: நீச்சலை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம், யூகித்து அறியும் ஆற்றல் வளரும்.

15 நவம்பர், 2009

சடுகுடு விளையாட்டு



தமிழர்களின் வீர விளையாட்டு. சங்க கால போர் முறைகளின் எச்சமாகக் கருதப்படுகிறது. வெட்சித் திணையின் துறைகளாகக் கூறப்படும் 'பசுக்கூட்டங்களைக் கவர்தலுக்கு எழுகின்ற பேரொலி, பகைவேந்தரின் புறத்திடத்து சென்று சூழ்ந்து தங்குதல், தங்கிய பின்னர் சூழப்பட்ட ஊரை அழித்தல், எதிர்ப்பவர்களைப் போரிட்டு மீளுதல்' ஆகிய கூறுகளோடு பின் வரும் சடுகுடு ஆட்ட அலகுகள் ஒப்பு நோக்கத் தக்கவை. அவை முறையே,' ஆட்டத்தில் பாடப்படும் பாடலின் பேரொலி, எதிரணியின் எல்லைக்குள் சென்று ஆடுதல், அங்குள்ளவர்களைத் தொட்டு ஆட்டமிழக்கச் செய்தல், பிடிக்க வருபவர்களிடமிருந்து மீளுதல்'. ஆகியனவாகும்.
பாடல்: 1. நாந்தாண்டா ஒப்பன்
நல்லமுத்து பேரன்
வெள்ளி பெரம்பெடுத்து
வெளையாட வரேண்டா
தங்கப் பெரம்பெடுத்து
தாலி கட்ட வரேண்டா
வரேண்டா... வரேண்டா...
2. சப்ளாஞ்சி அடிக்கவே
சறுக்கிட்டு உழவே
ஒப்பனுக்கும் ஓயிக்கும்
ஒரு பணம் தெண்டம்
தெண்டம்... தெண்டம்...
3. தோத்த கடைக்கு நான் வரேன்
தொட்டு பார்க்க நான் வரேன்
கருவாட்டு முள்ளெடுத்து
காது குத்த நான் வரேன்.
பயன்கள்: வீர உணர்வு வளரும், சவால்களை எதிர் கொள்ளக் கற்பிக்கிக்கிறது, தமிழரின் போர் மரபுகளை அறிய உதவுகிறது.

ஆபியம் விளையாட்டு


நான்கைந்து சிறுவர்கள் சேர்ந்து ஆடும் விளையாட்டு இது. பகல் இரவு என இரு பொழுதுகளிலும் ஆடுவர். ஒருவர் குனிந்து நிற்க மற்றவர்கள் குனிந்து நிற்பவரின் முதுகில் கை வைத்து ஒரு புறமிருந்து மறுபுறத்திற்குத் தாண்ட வேண்டும். தாண்டும்போது தாண்டுபவரின் கால்கள் குனிந்திருப்பவரின் மீது படக்கூடாது, பட்டால் ஆட்டமிழப்பர்.ஆட்டத்தில் பாடப்படும் பாடல்: ஆபியம்... மணியாபியம்... கிருணாபியம் நாகனார் மண்ணைத்தொடு ராஜா சூத்துல ஒத குடு.பயன்கள்: எச்சரிக்கை உணர்வை வளர்க்கும், எதையும் தாங்குகிற வலிமையைத் தரும்.

8 நவம்பர், 2009

திம்பி விளையாட்டு



சிறுமியர் விளையாடுவது. முன்னிரவு நேரத்தில் ஆடுவர்.

பெயர்க்காரணம்:தும்பி சில நேரங்களில் ஓரிடத்திலிருந்து கொண்டு கரகரவெனச் சுற்றும்.அதனால் இவ்விளையாட்டு 'தும்பி சுற்றுதல்' என்று சூட்டப்பட்டு, பின்னர் 'திம்பி சுற்றுதல்' என்று திரிந்திருக்கலாம்.(நன்றி:முனைவர் ஆறு.இராமநாதன்)
திம்பி சுற்றும்போது பாடப்படும் பாடல்கள்:
1. எண்ண இல்ல சீப்பு இல்ல

ஊதா பொடவ இல்ல

உன்னக் கூட நான் வல்ல2. நீயும் நானும் சோடி

நெல்லு குத்த வாடி

ஆத்து மணல அள்ளிபோட்டு

அவுலு இடிக்க வாடிஇவ்விளையாட்டின் பயன்: தோழமை உணர்வை வளர்க்கிறது,சமுதாயத்தில் இணைந்து செயல்படும் பண்பை குழந்தைகளிடம் வளர்க்கிறது,திம்பிப்பாடல்கள் ஆண் பெண் உறவு நிலை, சிற்றூர் பொருளாதாரநிலை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. மேலும் விரிவாக அறிய படிக்கவும் கிராமத்து விளையாட்டுகள் (விகடன் வெளியீடு)

5 நவம்பர், 2009

விளையாட்டுகளும் அதன் பயன்களும்

சிற்றூர்களில் சிறுவர்கள் பல வகையான விளையாட்டுகளை விளையாடுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏதாவது பயன்கள் உண்டா? இப்படி ஒரு கேள்வியை அவள்விகடன் அலுவலகத்திலிருந்து கேட்டார் லட்சுமிகிருபா. கிராமத்து விளையாட்டுகள் நூலில் எழுதியிருக்கிறேன் என்று கூறியபோதும் அவர் விடவில்லை. குறிப்பாக விளையாட்டுகளின் பெயர்களைக் கூறி அவ்விளையாட்டால் என்ன பயன் கிடைக்கிறது என்று சுருக்கமாக ஹைக்கூ போலக் கூறுங்கள் என்று கேட்க சிந்தித்தபோது தோன்றியவை இவை. இவற்றையும் மீறி விளையாட்டுகள் எண்ணற்ற பயன்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.
பல்லாங்குழி: பொருள் ஈட்டும் குணம்,நினைவாற்றலை வளர்த்தல்,பிறருக்கு உதவுதல்.
காயே கடுப்பங்காய்:குழு மனப்பான்மை, உடல் மொழி அறிதல், இடர் மேலாண்மை ஆகிய பயிற்சிகளை வழங்குகிறது.

காற்றாடி:இயற்கை ஆற்றல், தொழில் நுட்ப ஆற்றல் ஆகியவற்றை சிறப்பாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுதல்.


கண்ணாமூச்சி:கண்டறியும் திறனை வளர்க்கிறது, செவிப்புலனைக்கூர்மையாக்குகிறது, காட்டிக்கொடுக்கக்கூடாது என்ற பண்பை வளர்க்கிறது.



கல்பாரி: சாமர்த்தியத்தை வெளிப்படுத்துகிறது,எதிரிகளிடமிருந்து தப்பிக்கக்கற்றுக்கொள்ளுதல்நொண்டி விளையாட்டு:இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலைத் தருவதோடு தன்னம்பிக்கையைத்தருகிறது

மேலும் விளையாட்டுகள் பற்றிய விரிவான தகவல்களுக்கு படிக்க விகடன் வெளியிட்டுள்ள கிராமத்து விளையாட்டுகள் நூலை.
நன்றி: அவள் விகடன்.













16 அக்டோபர், 2009

ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த பழமலைநாதர் கோயில்



தமிழகப் பழங்கோயில்களில் குறிப்பிடத் தகுந்தது விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர்கோயில்.சங்க இலக்கிய நூலான அகநானூற்றில் 197 ஆவது பாடலில் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாமூலனார் என்ற புலவர் விருத்தாசலத்தை 'தேம்முதுகுன்றம்' என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் பழமலைநாதரைப் பற்றிப் பாடியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக பதிமூன்றரை கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த இரிடேசியஸ் என்ற வகை சுண்ணாம்புப் பாறைகள் மீது இக்கோயில் கட்டப்பட்டிருப்பதாக நிலவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனாலும் துல்லியமாக இக்கோயில் யாரால் எப்போது கட்டப்பட்டது என்பதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளை தமிழகத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. அக்கல்வெட்டுகளில் கோயிலுக்குத் திருப்பணி செய்தவர்கள், நிலம் கொடுத்தவர்கள், நன்கொடையளித்தவர்கள் பற்றிய குறிப்புகள் மட்டுமே காணக் கிடைக்கின்றன.பத்தாம் நூற்றாண்டில் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி இக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. மேலும் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், உத்தம சோழன், இராசராச சோழன், இராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன் ஆகிய சோழ மன்னர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சோழ மன்னர்களைத் தொடர்ந்து காடவராயன், கச்சிராயன், அரியண்ண உடையார், பருவூர் பாளையக்காரர் ஆகிய குறுநில மன்னர்களும் இக்கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1760 இல் ஆங்கில ஆட்சியாளர்கள் இக்கோயிலைச் சுற்றி அகழி வெட்டி கோட்டையாக்கினர். அதனடையாளமாகத்தான் இன்றும் கோயிலைச்சுற்றியுள்ள தெருக்கள் தென்கோட்டை வீதி, வடக்குக் கோட்டை வீதி எனக் குறிப்பிடப்படுகின்றன. கோட்டையை எதிரிகள் முற்றுகையிட்டு தாக்கியதற்கான அடையாளங்களாகச் சிதிலமடைந்த சிற்பங்கள் பல கொயிலில் இன்றும் காணக் கிடைக்கின்றன. 1803 ஆம் ஆண்டு கார்ரோ என்ற ஆங்கில ஆட்சியாளர் அகழிகளைத் தூர்த்து மீண்டும் கோயிலாக்கினார். அவரைத்தொடர்ந்து சார்லஸ் கைடு என்ற மாவட்ட ஆட்சியரும் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளார். தேவாரத் திருப்பதிகங்களில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் திருமுதுகுன்றத்தின் சிறப்புகளைப் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழிலும், வள்ளலார் திருவருட்பாவிலும் திருமுதுகுன்றம் பற்றி பாடியுள்ளனர். இத்தகைய பழமையும் சிறப்பும் பெற்று விளங்கும் இக்கோயிலை பக்தர்கள் மட்டுமே சென்றுவரக்கூடிய ஓர் இடம் என்று ஒதுக்கி விட முடியாது. கலை ஆர்வலர்களுக்கும் கண்களுக்கு விருந்து படைக்கும் பல அரிய கலைப் படைப்புகள் இங்கு அமைந்துள்ளன.
பழங்கால சிற்பிகளின் கை வண்ணதைப் பல்வேறு சிற்பங்களில் காணமுடிகிறது. குறிப்பாக கோயிலின் வடக்கு, தெற்கு கோபுர வாயில்களில் அமைந்துள்ள ஆடல் மகளிர் சிற்பங்களில் பல நுட்பமான பரதநாட்டிய அடவுகள் வடிக்கப்பட்டுள்ளன. பரத நாட்டியக் கலை நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்ற மூன்று வகையான ஆடல் முறைகளைக் கொண்டது என்பர் இசையறிஞர்கள். கை, கால் அசைவுகளைக்கொண்ட தாள நுட்பங்களோடமைந்த அடவுகள் நிருத்தியம் என்ற ஆடல் முறையில் அடங்குவதாகும். இது போன்ற ஆடற்சிற்பத் தொகுதிகள் தஞ்சாவூர், சிதம்பரம், தாராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களில் காணப்படுகின்றன. இவற்றுள் காலந்தால் முந்தயதாகக் கருதப்படுகிறது விருத்தாசலம் கோயில் சிற்பங்கள். இச்சிற்பங்களில் ஆடலாசான் நெறிப்படுத்த நடனமாடும் ஆடல் மகளிர், இசைக்கருவி முழங்க நடனமிடும் காட்சி, தண்ணும்மைக்காரருடன் நடன மங்கை என பல வகையான நுட்பமான சிற்ங்கள் வடிக்கப்பட்டு காண்போர் கண்களைக் கொள்ளைகொள்ளும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளன. சிற்பிகள் சிற்பக்கலையில் மட்டும் வல்லவராயிருந்தால் மட்டும் இந்தகைய கலை நுட்பம் சிற்பத்தில் வெளிப்பட்டுவிடாது. ஆடல் கலை நுட்பங்களும் அறிந்திருந்தால் மட்டுமே இத்தகைய சிற்பங்கள் வடிப்பது சாத்தியம். அக்கால சிற்பிகள் இரு வேறு கலைகளில் ஒருங்கே அறிவாற்றல் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர் என்பதற்கு இத்தகைய சிற்பங்கள் சானறாதாரங்களாக இன்றும் திகழ்கின்றன. தமிழர்களின் கலைத் தொன்மையை உலகுக்கு பறைசாற்றுவதாகத் திருமுதுகுன்றம் கோயில் சிற்பங்கள் விளங்குகின்றன.
பழமலை தோன்றிய கதை
பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார். அப்பொழுது திருமால் தீயவர்களை வெட்டி வீழ்த்த வெட்டுண்ட உடல்கள் பிரம்மன் படைத்த நீரில் வீழ்ந்து மிதந்தன.அதைக்கண்ட நான்முகன் சிவபெருமானிடம் வேண்ட நீரும் அவ்வுடல் தசைகளும் ஒன்றாக இறுகி சிவபெருமானே மலைவடிவாகத்தோன்றி நின்றார். இதனை அறியாத மலரவன், வேறு பல மலைகளைப் படைத்தார். தான்படைத்த மலைகளுக்கு இருக்க இடமில்லாததைக் கண்டு மயங்கி நின்ற போது ," ஏ அறிவிலியே நாமே இம்மலை வடிவாகத் தோன்றி நின்றோம் நான் வேறு இம்மலை வேறு இல்லை. இந்த மலை தோன்றிய பின்னரே உன்னால் பல மலைகள் தோன்றின. ஆதலின் நம் மலைக்கு பழமலை என்றே பெயர் வழங்குவதாக. மேலும் இப்பழமலை மண்ணுலகுக்கு அச்சாணியாக அழுந்தி நின்று மேலே சிவலிங்கமாக விளங்கி நிற்கும். இதனை வழிபட்டோர் விரும்பிய பயனை எய்தி இன்புறுவர்." என்று கூறி சிவபெருமான் மறைந்ததாக விருத்தாசல புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பழமலைநாதரின் சிறப்புகள்
பழமலைநாதர் கோயில் மற்றகோயில்களிலிருந்து மாறுபட்டதும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதுமாகும். நடுநாட்டுத் திருத்தலங்கள் இருபத்திரண்டில் ஒன்பதாவதாகப் போற்றப்படுகிறது. இங்கு உயிர் நீப்பவர்களை பழமலைநாதர் தன் மடி மீது கிடத்தி ஐந்தெழுத்து உபதேசம் செய்ய பெரிய நாயகி முந்தானையால் வீசி முக்தியளிப்பதாக கந்தபுராணத்தில் கச்சியப்ப முனிவர் குறிப்பிட்டுள்ளார். சைவர்கள் 'சிவாயநம' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை எப்போதும் உச்சரித்தபடி இருப்பர். இக்கோயிலில் பல ஐந்தின் சிறப்புகள் அமைந்துள்ளன.கோயிலில் அமைந்துள்ள கோபுரங்கள் ஐந்து. திருச்சுற்றுகள் ஐந்து. கொடிமரங்கள் ஐந்து. நந்திகள் ஐந்து. தீர்த்தங்கள் ஐந்து. லிங்கங்கள் ஐந்து. தேர்கள் ஐந்து. உள் மண்டபங்கள் ஐந்து. வெளி மண்டபங்கள் ஐந்து. கடவுளின் பெயர்கள் ஐந்து. கடவுள் அமைந்துள்ள ஊருக்கும் பெயர்கள் ஐந்து.மேலும் பல சிறப்புகள் இக்கோயிலுக்கு உண்டு.அறுபத்து மூன்று நாயன்மார்களும் உள்ள ஒரே கோயில் இதுதான். ஆழத்து வினாயகர் அமைந்திருப்பதும் இக்கோயிலில் மட்டும்தான்.
காசிக்கு வீசம் அதிகம்
காசிக்கு வீசம் சாஸ்தி விருத்தாசலம் என்றொரு வழக்காறு இப்பகுதி மக்களிடையே தொன்றுதொட்டு புழக்கத்திலிருக்கிறது. காசிக்கு சென்று நீராடுவது புனிதமானதாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மணிமுத்தாற்றில் நீராடினால் அதைவிட அதிக பலனைத் தரும் என மக்கள் நம்புகின்றனர். அதனால்தான் விருத்தாசலம் விருத்தகாசி என்றும் குறிப்பிடப்படுகிறது. நெற்குப்பை என்ற மற்றுமொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு.
மணிமுத்தாற்றின் சிறப்புகள்.
இக்கோயில் மணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது. மணிமுத்தாறு குறித்தும் மக்களிடையே பல நம்பிக்கைகள் நிலவுகின்றன. மணிமுத்தாறு கோயிலின் வடக்கு, கிழக்கு ஆகிய இரு திசைகளிலும் அரை வட்ட வடிவில் செல்கிறது. இவ்வாற்றில் நீராடி பழமலைநாதரை வழிபட்டால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. கோயிலின் வடக்கு கோபுரத்திற்கும் நேர் வடக்கில் ஆற்றில் குளிப்பதே சிறந்தது என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த இடம் புண்ணிய மடு என குறிப்பிடப் படுகிறது. இவ்விடதில் இறந்தவர்களின் எலும்புகளை இட்டால் அவை கல்லாக மாறி இறந்தவரின் உயிர் நற்பயனை அடையும் என்பதும் இன்னொரு நம்பிக்கை. மணிமுத்தாற்றுக்கு இன்னொரு சிறப்புமிருப்பதாகக்கூறுகின்றனர். இந்த நம்பிக்கையினடிப்படையில் தான் இன்றும் நீத்தார் இறுதிச் சடங்குகளையும், இறந்தவர்களின் நினைவாக மாசி மகத்தன்று திதி கொடுப்பதையும் மணிமுத்தாற்றில் செய்கின்றனர்.

ஆற்றிலிட்டு குளத்தில் தேடியது.
ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பழமலைநாதர் மேல் திருப்பதிகம் பாடி சில நாள் திருமுதுகுன்றத்தில் தங்கியிருந்தார். அப்போது பொன் வேண்டும் என்னும் குறிப்போடு 'மெய்யை முற்றப் பொடி பூசியோர் நம்பி..' என்றோர் பதிகம் பாடினாராம். பழமலை நாதர் குறிப்புணர்ந்து பன்னீராயிரம் பொன் கொடுக்க இப்பொன்னெல்லாம் திருவாரூர் வந்து கிடைக்குமாறு அருள் செய்ய வேண்டும் என்று மீண்டும் வேண்டினாராம். பழமலைநாதர், " சுந்தரரே நீ இப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டுச்சென்று திருவாரூர் கமலாலயக் குளத்தில் எடுத்துக்கொள்வாயாக" என்று கூற அவ்வாறே சுந்தரமூர்த்திநாயனார் செய்தார். பொன்னை ஆற்றிலிடும்போதும் குளத்திலிருந்து எடுக்கும் போதும் மாற்று உரைத்துப் பார்த்ததற்கு வினாயகர்தான் சான்றாகத் திகழ்ந்தாராம் அதனால்தான் திருவாரூரிலும் விருத்தாசலத்திலும் மாற்றுரைத்த வினாயகர் சிலைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தல விருட்சம்
வன்னி மரம் பழமலைநாதரின் தல விருட்சமாகும். இது மிகவும் பழமையான மரமாகும் இரண்டாயிரம் வயது மரம் எனக்குறிப்பிடுகின்றனர். முதன் முதலாக இக்கோயிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்குக் கூலியாக வன்னிமரத் தழைகளை உருவிக் கொடுக்க அது அவரவர் உழைப்புக்கேற்ப ஊதியமாக மாறியதாகவும் ஒரு வாய்மொழிக் கதை உண்டு. இங்கு பல சிவனடியார்கள் ஓதுவார்களாக தேவாரம் பாடுகின்றனர். வடக்குக்கோட்டை வீதியிலுள்ள வேதாந்த மடத்தின் நிர்வாகியும் ஓதுவாருமான ஞானப்பிரகாச சுவாமிகள் இக்கோயிலில் பத்து ஆண்டுகளாக ஓதுவாராக திருப்பணி செய்து வருகிறார். தேவார தலபுராணம் என்ற நூலை இம் மடம் வெளியிட்டுள்ளது. இறைவன் ஒளி வடிவில் நமக்குள்ளே இருக்கிறான் நாம் நாள்தோறும் அவ்வொளியால் உடலுக்குத்தேவையான வெப்பத்தைப் பெறுகிறோம் கவ்வெப்பமே நாளடைவில் நம்மை ஆட்கொண்டுவிடும் இதைத்தான் முக்தியடைதல் என்கிறோம் எலும்பு கல்லகா மாறுவதும் இதனடிப்படையில்தான் என்று கூறினார். என்ன உங்களுக்கும் ஒரு முறை விருத்தாசலம் சென்று வர வேண்டுமெனத் தோன்றுகிறதா. சென்னையிலிருந்து தொடர் வண்டியில் மூன்றரை மணி நேரப் பயணம்தான் வாருங்கள் வந்தாரை வரவேற்கும் திருமுதுகுன்றம். இத்தகைய பழமையும் பெருமையும் வாய்ந்த திருமுதுகுன்றம் என்ற அழகானத் தமிழ்ப் பெயர் காலப்போக்கில் விருத்தாசலம் என்று வட மொழியால் வழங்கப்படுகிறது. முது என்னும் சொல் விருத்தம் என்றும் குன்றம் என்பது அசலம் என்றும் வடமொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த கட்டுரையின் விரிவாக்கம்

27 ஆகஸ்ட், 2009

சாமியான சாமியார்



சாமியார்கள் என்றாலே ஒரு மாதிரி காமடியாகப் பார்க்கும் இன்றைய சூழலில் ஒரு சாமியாருக்கு ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து சிலை வைத்திருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்.அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் கோட்டைக்காடு கிராமத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. கோட்டைக்காட்டு முனியப்ப சாமி என்றால் சுற்று வட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் பழமையான கோயில் அது. சுற்றிலும் முட்புதர்கள் சூழ அடர்ந்த காட்டுக்குள் அமைந்திருந்த அந்தக்கோயிலை சீர்திருத்தி கோயில் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கும்பகோணம் மாணிக்க சாது சாமி. ஓய்வு பெற்ற இராணுவ வீரரான இவர் எப்படி சாமியாரானார் என்பது தெரியவில்லை.1965 இல் கோட்டைக்காடு வந்து தங்கிய இவர் மூலிகை வைத்தியம் பார்ப்பது ஜாதகம் பார்ப்பது என மக்களோடு நெருங்கிப் பழகி பின்னர் அந்த வருமானத்தைக் கொண்டு கோயிலை விரிவாக்கம் செய்து மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். எப்போதும் அவரைச் சுற்றி பத்து பேர் இருந்துகொண்டிருப்பார்களாம். அவர்களுக்கு மூன்று வேளையும் அவர்தான் உணவு அளிப்பாராம். சுற்று வட்டாரங்களில் கோயில் கும்பாபிசேகம் என்றால் கோட்டைக்காட்டு சாமியார் இல்லாமல் நடக்காது அவ்வளவு பிரபலமானவர் இந்த சாமி. அவருடன் நெருங்கிப் பழகிய அவ்வூர் வேலாயுதம் (80) சாமியாரின் நற்பண்புகளைப் புகழ்ந்து தள்ளினார். "யாராவது எதாவது குடுத்தாங்கன்னா பக்கத்துல இருக்குற எல்லாருக்கும் குடுத்துட்டுதான் சாப்புடுவாரு அது கொஞ்சமா இருந்தாலும்.அவரு மாதிரி ஒரு மனுசன பாக்க முடியாதுங்க என்று சாமியாரின் மரணத்தை எண்ணி கண் கலங்கினார். முனியப்பர் கோயிலுல மூணு கெணறு அந்த காலத்துல இருந்துருக்குணும்னு சொல்லிகிட்டிருந்தவரு திடீர்னு ஒரு நாளு ஆளுங்கள கூப்பிட்டு இந்த எடத்துல தோண்டுங்கன்னு சொன்னாரு பத்தடி தோண்டுனா அதுல பழய கெணறு இருக்கு அந்த கேணியிலதான் இப்ப மோட்ரு போட்டு தண்ணி எரைச்சிகிட்டிருக்கு. அவ்வளவு சக்தியானவரு" என்று கூறினார். 1996 ஆம் ஆண்டு சாமியார் திடீரென மரணமடைய அவரது சொந்த ஊர்க்காரர்கள் அவரது சடலத்திற்கு உரிமை கோர ஊரே சேர்ந்து மறுத்துவிட்டது. அவர் வாழ்ந்த முனியப்பர் கோயில் வளாகத்திலேயே அவருக்கு சமாதி அமைத்து சமாதியின் மேல் சாமியாருக்கு சிலையும் அமைத்து வழிபட்டு வருகின்றனர். சாமியாரைப்பற்றி ஊரில் விசாராத்தபோது," சாமிதாங்க எங்களுக்கு தெய்வம்". என்றார் பரமசிவம், மேலும் அவர் கூறிம்போது," இப்ப இருக்குற டுபாக்கூர் சாமியாரு மாதிரியில்ல இவரு. நான் அப்ப துபாயிக்கு வேலைக்கு போயிருந்தன் சாமியாரு செத்துட்டாருன்னு சேதி கெடைச்சுது உடனே நானும் எங்கூட இருந்த எங்கூருக்காரங்க மூணு பேரும் மொட்ட போட்டுகிட்டோம். அந்த அளவுக்கு சாமியாரு மேல எங்களுக்கு மரியாதை". என்று அவர் கூறியதும் பக்கத்தில் அமர்ந்திருந்த கொளஞ்சி என்பவர்," சுருக்கமா சாமியார பத்தி சொல்லணும்னா அவரு எம்.ஜி.ஆர். மாதிரி" என்றார். மற்ற சாமியார்களைப் போல் பித்தலாட்டம் எதுவும் செய்யாமல் மக்களுக்காக வாழ்ந்த மாணிக்கசாது சாமி மாறுபட்ட சாமியார்தான்.

12 ஆகஸ்ட், 2009

மண் கவுச்சியடிக்கும் கோவிந்தன் ஓவியங்கள்








குறிப்பிடத் தகுந்த சமகால ஓவியர்களில் கோவிந்தன் ஒருவர்.பண்ணுருட்டி வட்டம் நடுக்குப்பம் கிராமத்தில் பிறந்த இவர் சிறு வயதில் கையில் கிடைத்த மண்கட்டிகளைக் கொண்டு சுவரில் கிறுக்கி பெற்றோரிடம் உதை வாங்கியபோது எதிர் காலத்தில் ஓர் ஓவியராய் வருரார் எனபது அவரின் பெற்றோருக்கே தெரிந்திருக்காது. பள்ளிப் பருவத்தில் ஓவிய ஆர்வம் வளர வளர ஓவியத்தை ஒரு பாடமாக படிக்கலாம் என்பது இந்த கிராமத்து மாணவருக்கு தெரிந்திருக்கவில்லை எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னை ஓவியக் கலைக் கல்லூரியில் நுண்கலைப் பட்டையப் படிப்பில் சேர்ந்த பிறகுதான் ஓவியம், சிற்பம் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட்டதாகக் கூறும் ஓவியர், ஓவியம் தீட்டுவதோடு சுடுமண் சிற்பம்,சிமெண்ட் சிற்பம், மரச்சிற்பம், செப்புத் தகடுகளில் செய்யும் புடைப்புச் சிற்பம் எனப் பல வகைச் சிற்பங்கள் செய்வதில் நுட்பமான பயிற்சியைக் கல்லூரி நாட்களில் பெற்றவர். கோட்டோவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், தைல வண்ண ஓவியங்கள், கணினி ஓவியங்கள் என அத்தனை வகை ஓவியங்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார். கோவிந்தன் பாணி ஓவியங்களில் கோடுகளும் வண்ணங்களும் தனித்த அடையாளமுடையவை. குறைந்த கோடுகளைக் கொண்டே ஆற்றல் மிக்க ஓவியங்களை வரைவது இவருக்குக் கை வந்த கலை. சிற்றூர் கடவுள்களின் முகங்கள் மனித முகங்களோடு ஒத்திருப்பதையும் இவரின் கோட்டோவியங்களில் காணலாம். கோடுகளற்ற வண்ணங்களின் அதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் இவரின் தைல வண்ண ஓவியங்களில் நம் நாட்டுப்புற கோயில் வடிவங்கள் புலப்படுகின்றன. நீர் வண்ணமாக இருப்பினும் அதில் இவரது முழுத்திறமையை வெளிப்படுத்துவார். சூரிய ஒளியை வண்ணத்தில் கொண்டுவரும் திறமையை இவரின் நீர் வண்ண ஓவியங்கள் பலவற்றில் காணலாம். இவரது கணினி ஓவியங்களிலும் மரபின் தொடர்ச்சி விடுபடாமல் உள்ளது சிறப்புக்குறியது. இவர் உருவாக்கிய சிறபங்கள் பேராசிரியர்களால் பாராட்டப்பெற்றவை. சிவலிங்கத்தை மலர் மொட்டு போன்ற வடிவத்தில் செம்பால் சிற்பமாக இவர் செய்துள்ளார் அச்சிற்பம் இன்றும் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஓவியராகப் பணியாற்றி வரும் கோவிந்தன் ஓவிய, சிற்பக் கலைகளைப் பற்றி கட்டுரைகள் எழுதுவது கவிதை எழுதுவது ஆலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது என கலை இலக்கிய ஈடுபாட்டு உணர்வோடு இயங்கி வருகிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சிங்கப்பூர் போன்ற அயல் நாடுகளிலும் ஓவியக் கண்காட்சிகள் நிகழ்த்தியுள்ளார்.சண்டிகரில் நடைபெற்ற உலகாளாவிய வரை கலைக்கான காட்சியில் முதன் புதலாகப் பங்கேற்ற தென்னிந்திய ஓவியர் கோவிந்தன் என்பது குறிப்பிடத் தகுந்தது. விடுமுறை நாட்களில் தான் பிறந்த நடுக்குப்பத்திற்கு இன்றும் செல்வது வழக்கம் அதனால்தான் கோவிந்தன் ஓவியங்களில் இன்னமும் மண்கவுச்சி வீசிக் கொண்டிருக்கிறது.

26 ஜூலை, 2009

திருவதிகை மரச்சிற்பங்கள்





கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகையில் செய்யப்படும் மரச்சிற்பங்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கோயில்களையும் வீடுகளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன என்பது தமிழர்களுக்கு பெருமைசேர்க்கும் செய்தியாகும்.
கோயில்களுக்கான தேர்கள், திருவிழாக்காலங்களில் தெரு உலாச்செல்லும் கடவுளர்களுக்கான ஊர்திகள்,சூரியப்பலகைகள் என அனைத்துவகையான மரச்சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர் திருவதிகைச்சிற்பிகள். மரபுவழியாகவே இக்கலைத்திறமை இவர்களின் இரத்தத்தோடு கலந்திருக்கிறது. இக்கலைப்பணி ஆறாவது தலைமுறையாகத் தொடர்கிறது.
1947ஆம் ஆண்டு திருவதிகை குப்பாசாரியும் அவர் உடன்பிறந்தவர்களான சுப்ரமணிய ஆச்சாரி,பொன்னுசாமி ஆசாரி ஆகியோரும் சேர்ந்துதான் திருப்பதிகோயில் தேரைச் செய்திருக்கின்றனர். இந்த உடன்பிறப்புகளின் வாரிசுகளான இராசாமணி ஆச்சாரி, புருசோத்தமாச்சாரி,இராசாராம் ஆச்சாரி,இராதாகிருட்டிண ஆச்சாரி,தேவா ஆகியோர் இக்கலைப்பணியை இன்றும் தொடர்கின்றனர்.
கோயில்களுக்கான தேர் செய்வதற்கென்று இலக்கணம் உண்டு அவ்விலக்கணப்படி தேரைவடிவமைத்து உருவாக்குகின்றனர். கோயிலின் மூல இடத்தில் அளவைப்பொறுத்தே தேரின் அளவை அமைக்கவேண்டும் என்றவிதிமுறைக்கேற்ப தேருக்கான நீள அகலத்தை முடிவு செய்கின்றனர்.
தேரில் பத்து வகையுண்டு; ஸ்ரீகரம்,த்வஜம்காந்தம்,ரேஷிகேசம்,நிகேதுனம்,ஸ்ரிபாத்ரம், விசாலஞ்சம்,பத்மக்கம்,பத்ரம்,சிவம் என்று குறிப்பிடப்படும் இவற்றில் கோயிலுக்கேற்ற தேரை வடிவமைப்பது என்பது முக்கியமானது.இவற்றை உணர்ந்துதான் தேரை வடிவமைப்போம் என்று இராசாமணி ஆச்சாரி கூறினார்.இவர் திருவண்ணாமலை, செவ்வாய்பேட்டை, புதுச்சேரி, திருக்கோயிலூர் ஆகிய ஊர்களின் கோயால்களுக்குத்தேர் செய்துள்ளார்.
தேரின் ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு மரத்தால் செய்கின்றனர். தேர்ச்சக்கரம் இலுப்பை மரத்தாலும் அடிப்பாகம் காட்டுவாகை மரத்தாலும் மேல் பாகம் தேக்கு,வேங்கை மரங்களாலும் செய்யப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு ஆவர்கள் செய்த தேர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. காசி,ஐதராபாத், விஜயவாடா போன்ற நகரங்களுக்குச்சென்று தேரும் மரச்சிற்பங்களும் செய்துள்ளனர். சமணக்கோயில்களிலும் சிற்பங்கள் செய்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.
தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருநீரு மலையில் 45 பாகை சாய்வான பாதையில் புதிதாகச்செய்த தேரை ஏற்றுவதற்குப் பொறியாளர்கள் திணரிய போது இராசாராம் ஆச்சாரி அம்மலையில் தேரைப் பத்திரமாக ஏற்றி நிலைநிறுத்தியது தன் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
வழுவூர் ராமையா அவர்களின் ஆலோசனையோடு இராதாகிருஷ்ணன் ஆச்சாரி உருவாக்கிய நடராஜர் சிற்பம் திருவள்ளூரில் இன்றும் உள்ளது. புருஷோத்தம ஆச்சாரி கடவுளர்களின் வாகனங்கள் பற்றிக் கூறும்போது, சிங்கம், காளை, கருடன், அன்னம், பாம்பு என பல்வேறு விலங்குகளின் உருவங்களைச் செய்துள்ளதாகவும் கூறினார். வாகனங்கள் செய்வதற்கு விலங்குகளின் அடிப்படை வடிவத்தை அத்தி மரக்கட்டைகளில் செதுக்கி வடிவமைக்கின்றனர். அத்திமரம் எடைக்குறைவு என்பதனால் அம்மரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். பிறகு வஜ்ரம்,மரத்தூள், பிலாஸ்டர் ஆஃப் பாரிஸ் ஆகியவற்றைக்கலந்து கூழ் உருவாக்கி வடிவங்களை மெருகேற்றுகின்றனர். அதன் பிறகு உப்புத்தாள் கொண்டு வழுவழுப்பாக்கி வண்ணம்பூசுகின்றனர்.வண்ணம்பூசப்பட்ட வாகனங்கள் மரச்சிற்பந்தானா? எனக் காண்போரை ஐயமுறச்செய்கின்றன. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து நாள்தோறும் கடவுளர்களின் வாகனங்கள் புதுப்பிப்பதற்காக திருவதிகை நோக்கி வந்தவண்டம் உள்ளன.
தேர், வாகனங்கள் இவற்றைவிடவும் அதிக அளவு சூரியப்பலகைகள் செய்வது இவர்களின் அன்றாட பணியாகும். சூரியப்பலகையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, பண்பாடு, மொழி,சமய வேறுபாடுகளுக்கேற்ப அவர்கள் விரும்பும் சிற்பங்களை உருவாக்குகின்றனர். இதற்கு பெரும்பாலும் பர்மாதேக்கு மரங்களைப் பயன்றடுத்துகின்றனர்.செதுக்கவேணடிய உருவத்தைத் தாளில் வரைந்து அதனைப் பலகையில் ஒட்டி சிறு உளிகொண்டு செதுக்குகி சிற்பத்தை உருவாக்குகின்றனர்.
இக்கலைப்பணியைத் தொன்றுதொட்டு செய்து வரும் இவர்கள் அடுத்த தலைமுறைக் கலைஞர்களாக தங்கள் வாரிசுகளை உருவாக்கி வருவதோடு இப்பணியில் ஆர்வம் செலுத்துபவர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கின்றனர்.
கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருது இது வரை இவர்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழர்களின் தொன்மக்கலையில் சிறந்துவிளங்கும் இவர்களைத் தமிழக அரசு பெருமைப்படுத்த வேண்டும்.

14 ஜூன், 2009

நலிவடைந்து வரும் தெருக்கூத்து




நலிவடைந்து வரும் தெருக்கூத்து
தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான தெருக்கூத்துக்கலை நலிவடைந்து வருவது ஒரு வரலாற்றுச்சோகம். கால் நூற்றாண்டுக்கிடையில் தெருக்கூத்துக் கலை மிகப்பெரிய வீழ்ச்சியை எதிர் கொண்டிருக்கிறது. சிற்றூர்களில் அறுவடை முடிந்து உழவர்கள் ஓய்வாக இருக்கும் காலங்களில் கூத்து நிகழ்த்தப்படும். கூத்து நிகழ்த்துவதற்கென்றே ஒவ்வொரு ஊரிலும் திடல் உண்டு. ஊரே திரண்டு வந்து கூத்தைக் கண்டுகளிப்பது வழக்கம். தமிழிசைக் கருவிகள் முழங்க முன்னிரவில் தொடங்கி விடிய விடிய ஆடலும் பாடலுமாகக் களை கட்டும். கூத்து தொடங்கியதும் அரங்கத்தில் முதலில் வருகின்ற கதாப் பாத்திரம் கட்டியக்காரன். குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒருங்கே கவரந்திழுக்கும் கதாப்பாத்திரமான அவர் இரண்டுக்கும் மேற்பட்ட வண்ணங்களை முகத்தில் பூசி ஒப்பனை செய்திருப்பார். விளக்கொளியில் மின்னும்படியான பளபளப்பான உடையணிந்திருப்பார். பல பல பல பல பல பப்பூன் வந்தேனே பன மரத்துல ஏறி தொப்புன்னு உழுந்தேனேஎன்று பாடியபடி அரங்கத்தை வலம் வரும்போது பார்வையாளர்களிடையே சிரிப்பொலி பரவும். பார்வையாளர்களை வரவேற்றுப் பாடி, நகைச்சுவையான பாடல்களைப் பாடி, நிகழவிருக்கும் கூத்தின் பெயரையும் கதைச் சுருக்கத்தையும் கூறுவார். அதன் பின்னர் வரக்கூடிய முதன்மைக் கதாப் பாத்திரங்களுக்குத் தோழனாக, தோழியாக, பணியாளராக, அமைச்சராக சூழலுக்கேற்ப அவர் மாறுவார். ஒவ்வொரு கதாப் பாத்திரமும் மேடைக்கு வருவதற்கு முன்பாக திரைக்குப் பின்னால் நின்று பாடல் மூலம் தம்மை அறிமுகப் படுத்திய பிறகு மேடையில் தோன்றுவர். அவர்களின் வண்ட மயமான ஒப்பனையைக் காண்பதற்காகப் பார்வையாளர்கள் ஆவலோடு காத்திருப்பர். கதாப் பாத்திரத்தின் தன்மைக்கேற்ற வண்ணத்தைக் கலைஞர்கள் தங்கள் முகத்தில் பூசியிருப்பர். ஒவ்வொரு கலைஞரும் போட்டி போட்டுக்கொண்டு தன் திறமையை வெளிப்படுத்துவார். சிறப்பாக நடிப்பவர்களுக்கு அன்பளிப்பு வழங்கி பார்வையாளர்கள் ஊக்கப்படுத்துவர். கூத்து முடிகின்ற வரை கலைஞர்களுக்கு ஊரில் விருந்தோம்பல் நடைபெறும். மக்களுக்கும் கலைஞர்களுக்குமான உறவு நெருக்கமுடையதாய் இருக்கும். இன்றைக்கும் ஒரு சில ஊர்களில் கூத்து நிகழ்த்தப்படுகிறது ஆனால் பார்வையாளர்கள் அதிகமின்மையால் கலைஞர்கள் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு கலை வெளிப்பாடு குறைகிறது. அது மட்டுமின்றி வணிக மயமாகி வரும் வேளாண் முறை, நகர மயமாகி வரும் வாழ்க்கை முறை, தொலைக்காட்சிகளின் வருகை எனப் பல்வேறு காரணங்களால் தெருக்கூத்துக் கலை மெல்ல நலிவடைந்து வருகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களே கூத்துக்கலைஞர்களாக உள்ளனர். கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில்தான் கூத்து பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. கூத்துக்கலைஞர்கள் சங்கம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசும் கூத்துக் கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் கூத்துக் கலையில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். கூத்து வாத்தியார் என்றழைக்கப்படும் நாடக ஆசிரியர்தான் கூத்துக் கலைஞர்களை ஒருங்கிணைத்து கூத்து நிகழ்த்துவார். நடிகர்களுக்கு முன் பணம் கொடுப்பதற்காகவும் ஒப்பனைப் பொருள்களைப் புதுப்பிப்பதற்காகவும் அவர் ஓர் ஆண்டிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. எனவே அத்தொகையை வட்டிக்குக் கடனாகப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அரசு கூத்துக்கலைஞர்கள் சங்கத்திற்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கி உதவினால் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து அவர்கள் விடுபட முடியும். நலிவடைந்த இலக்கியவாதிகளுக்கு உதவி செய்வதைப்போல் கூத்துக் கலைஞர்களுக்கும் அரசு உதவிட வேண்டும். வயது முதிர்ந்த அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதைப்போல் வயது முதிர்ந்த தெருக்கூத்துக் கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கலாம். கூத்துக் கலைஞர்களுக்கு வழங்கப் படும் கலைமாமணி போன்ற விருதுகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி கிராமப் பகுதிகளில் வாழும் கூத்துக்கலைஞர்களும் விருது பெறும்படிச் செய்திட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் இராசகோபால் படையாட்சி என்ற நாடகப் பேராசிரியர் இருபதுக்கும் மேற்பட்ட கூத்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், அவற்றை நாட்டுடைமையாக்கி அவரது வாரிசுகளுக்கு பரிவுத்தொகை வழங்கலாம். குறவன்குப்பம் சடகோபன், கொய்யாத்தோப்பு முத்துலிங்கம், தாழம்பட்டு தணிகாசலம், வேகாக்கொல்லை சின்னதுரை, பயித்தம்பாடி சீனுவாசன், பெருமாள் நாயக்கன் பாளையம் ராமு, செட்டிச்சாவடி செல்வராசு போன்ற கலைஞர்கள் கடலூர் மாவட்டத்தில் முக்கியமானவர்கள். இது போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கியக் கூத்துக்கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அரசு பொருட்காட்சிகளிலும், கோயில் திருவிழாக்களிலும் கூத்து நிகழத்தப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக் வழி செய்யலாம்.

3 மே, 2009

மண்ணை இழந்தவன் மானத்தை இழந்தவன்.





உழவர்கள் தங்களின் விளை நிலங்களை வீட்டு மனைகளுக்காகவும் பொருளாதார மண்டலங்களுக்காகவும் இன்று இழந்து வருகின்றனர்.அந்த நிலங்கள் அவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல மனித உறவுகளைப் போல் அவைகளும் உறவுகள்தாம் அவர்களுக்கு. மனிதர்களைப் பெயர் சொல்லி அழைப்பதைப் போல் அவர்கள் நிலங்களையும் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். பண்டைத்தமிழர்கள் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைகளாகப் பாகுபடுத்தினர். மருத நிலமான வயல் வெளிகளுக்கு பட்டா எண் கொடுக்கப்பட்டு இந்த எண்ணுடைய நிலம் இன்னாருடையது என்ற தகவல்களை அரசு பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நில வரி வசூல் செய்யப்படுகிறது. இப்பட்டா எண்கள் பதிவேடுகளில் மட்டுமே உள்ளன. மக்கள் பயன்படுத்துவதில்லை அன்றாட நடைமுறையில் நிலங்களைக் குறிப்பிடுவதற்கு தாங்கள் வைத்த பெயர்களையே பயன்படுத்துகின்றனர். இப்பெயர்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒரு காரணம் உள்ளது. மண்ணின் தன்மை, நிலம் உள்ள திசை, அங்குள்ள தாவரங்கள், நிலத்திற்கு அருகிலுள்ள இடங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நிலங்களுக்கு பெயர் சூட்டப்படுகிறது. மம்பாடு, இறங்காடு, பொட்டங்காடு, கருப்பேரி, களர், செம்பிடுப்பு, கல்லடிகுட்டை, கரையாம்பட்டி ஆகியன மண் அடிப்படையில் தோன்றிய நிலப் பெயர்களாகும். இவை மண்ணின் தன்மைகளை மட்டுமல்லாமல் அங்கு வாழும் மக்களின் பண்பாட்டையும் உணர்த்துகின்றன. பொட்டங்காட்டில் வாழும் மக்களை பொட்டங்காட்டான் என்றும் காட்டுப்புறத்தான் என்றும் குறிப்பிடுவர் காட்டுப்புறத்தான் மோட்டுப்புறத்தான் முட்டாயி கடைய மொறைக்கப்பாத்தான் என்ற பழமொழியும் நிலப்பெயரின் அடிப்படையில் தான் தோன்றியிருக்கவேண்டும். திசைகளின் அடிப்படையில் நிலங்களுக்குப் பெயரிடுவதும் பல ஊர்களில் மரபாக உள்ளது. கீழவெளி, மேலவெளி, வடக்குவெளி, தெக்குவெளி என்பன இதற்குச் சான்றுகளாகும். வெளி என்பதற்கு பதில் காடு என்று அழைப்பதும் உண்டு. விளை நிலங்களோடு வாழிடங்களையும் சேர்த்து திசைகளின் பெயரால் கீழசீமை, மேலசீமை, வடக்கு சீமை, தெக்கு சீமை எனக் குறிப்பிடுவர்.கிழக்கும் தெற்கும் நாகரீக பகுதிகளாக நாட்டுப்புற மக்களால் நம்பப்படுகின்றன. தற்போது நிலத்திலுள்ள தாவரங்களின் பெயராலும், ஒருகாலத்தில் அந்த நிலத்தில் சிறப்பாக விளைந்த தாவரங்களின் பெயராலும், வயல் வரப்புகளிலுள்ள தாவரங்களின் பெயராலும் நிலங்கள் அழைக்கப்படுகின்றன.கம்பங்காடு, கருப்பங்கொல்லை, கத்திரிமேடு, அவுரிகுட்டை, சோளகாவெளி, பூந்தோட்டம், எட்டுபுளி, திரிகடம்பு, மாங்குட்டை போன்ற நிலப்பெயர்கள் தாவரங்களினடிப்படையில் சூட்டப்பட்டவையாகும். இவற்றின் மூலம் நம் உழவுத் தொழிலில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை நாம் உணரலாம். விளை நிலங்களுக்கு அருகிலுள்ள இடங்களின் பெயரால் நிலங்களைக் குறிப்பிடுவதும் உண்டு. அம்மன்கோயில் மேடு, வீரன்கோயில் துண்டு, மணியங்கோயில் திட்டு, காட்டேரியம்மன் ஓட்டம், களத்துமேட்டு கொல்ல, பெரியேரி வெளி, ஊர்வாரி, ஆத்தம்படுவை போன்றவை இவ்வகையில் அடங்கும். நிலத்தைக் குடும்பச் செலவுக்காக வேறு ஒருவரிடம் விற்றாலும் அந்த நிலம் விற்றவரின் பெயராலேயே அழைக்கப்படும். நோட்டக்காரன் கொல்லை, மணியாரங்கொல்ல, நாட்டான் கொல்ல என்பன இதற்கு சான்றுகளாகும். நில உரிமையாளர்களாக இருந்த போது நோட்டக்காரர், மணியக்காரர், நாட்டார் என்று மரியாதையாக அழைக்கப்பட்டவர்கள் நிலத்தை இழந்ததும் அன் விகுதி பெற்று மரியாதையையும் இழக்கின்றனர்.தனக்கான மண்ணை இழந்தவன் மானத்தை இழந்தவனாகிறான். இது போன்று ஒவ்வொரு ஊரிலும் நிலங்களுக்கு மக்கள் சூட்டியிருக்கும் பெயர்களை ஆராய்ந்தால் அப்பகுதி மண்ணின் தன்மை, நிலத்தடி வளம், அங்கு விளையும் பயிர் மற்றும் மர வகைகள் காலந்தோறும் வேளாண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதற்கான காரணங்கள், அங்கு வாழும் மக்களின் பண்பாடு, நாகரிகம், சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல்வேறு கூறுகளை அறிந்து கொள்ள இயலும். இத்தகைய வரலாறுகள் தெரியாமல் பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நிலங்களை வேட்டையாடி வரும் மனை வணிகர்களைப் பார்த்து நிலமென்னும் நல்லாள் மெல்ல நகுவாள். மண்ணின் மீது மனிதர்களுக்குத்தான் எத்தனைப்பற்று. ஊரும் உலகமும் இதற்காக சந்தித்தப் போர்கள் எத்தனை எத்தனை ! காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்.

மாறிவரும் தேர்தல் பரப்புரைகள்

தேர்தல் காலங்களில் கட்சிகள் தங்களின் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் மக்களிடம் சொல்லி வாக்கு கேட்பதற்கு இன்று நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் கால் நூற்றாண்டுக்கு முந்தைய தேர்தல் காலம் முற்றிலும் மாறுபட்டிருந்தது. சுவர் விளம்பரம், தட்டி விளம்பரம், மிதிவண்டி பரப்புரைப் பயணம், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்கு கேட்பது எனப் பல வகையான விளம்பர உத்திகளைப் பின்பற்றிக் கட்சித் தொண்டர்கள் விரும்பிச் செயலாற்றுவர். அன்றைய சுவர் விளம்பரங்கள் மிகவும் எளிமையானவை. சிற்றூர்களில் தொண்டர்களே எவ்விதக் கைம்மாறும் கருதாமல் சுவர் விளம்பரங்களைச் செய்வார்கள். எழுத்துகள் அழகாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை சின்னம் தெரிந்தால் போதும். பனைமட்டையின் நுனியை நசுக்கி தூரிகைத் தயாரித்து காவியைக் கரைத்து வண்ணமாக்கி உள்ளூர் வளங்களைக் கொண்டே பொருள் செலவில்லாத சுவர் விளம்பரங்கள் தொண்டர்களால் செய்யப் பட்ட காலம் அது. பள்ளிக் குழந்தைகள் கூட கரித்துண்டுகளைக்கொண்டு சுவரில் சின்னத்தையும் வேட்பாளரின் பெயரையும் அவர்களுக்கே உரிய கிருக்கல் எழுத்துகளால் வரைந்தும் எழுதியும் வைப்பர். அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக தகரத்தில் வெட்டப்பட்ட சின்னங்கள் சிற்றூர்களுக்கு வந்தன. நமது சின்னம் என்று மேலே எழுதி அதன் கீழே சின்னத்தின் படம் வெட்டப்பட்டிருக்கும் அந்தத் தகரத்தை சுவரில் வைத்துப் பிடித்துக்கொண்டு வெட்டப்பட்ட பகுதியில் தூரிகையால் வண்ணத்தைப் பூசினால் சுவரில் விளம்பரம் தயார். தட்டி விளம்பரங்களும் அது போலவே. கட்சிக்காரர்களின் வீட்டுக் கொல்லையிலுள்ள மூங்கில் மரத்தை வெட்டிப் பிளந்து தேவையான அளவுக்குத் தட்டி செய்து அதில் பழய செய்தித்தாள்களை ஒட்டி அதன் மீது வெள்ளைத் தாள்களை ஒட்டி தேவையான வண்ணப் பொடிகளைக் கரைத்து வஜ்ரம் கலந்து தட்டியில் எழுதி தெருக்களில் வைப்பர். அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக வண்ணச் சுவரொட்டிகள் சிற்றூர் சுவர்களை அலங்கரித்தன.கட்சியின் கிளைச் செயலாளர் நகரத்திற்குச் சென்று சுவரொட்டிகளைப் பெற்று வருவார். பயன்படுத்த முடியாத மிதிவண்டி டயர்களில் வெள்ளைத் தாள்களை ஒட்டி அதையும் விளம்பரத் தட்டிகளாகப் பயன்படுத்துவர். தொண்டர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவரவர் மிதிவண்டியில் கட்சிக் கொடியைக் கட்டிக்கொண்டு வரிசலாக அணி வகுத்து போடுங்கம்மா ஓட்டு ..............ய பாத்து என்று முழக்கமிட்டபடி பக்கத்து ஊர்களுக்கு சென்று அங்குள்ள தொண்டர்களையும் சேர்த்துக் கொண்டு செல்வர் ஒவ்வொரு ஊரிலும் தொண்டர்கள் சேரச் சேர மாபெரும் பேரணி போலாகிவிடும் தொண்டர்களின் முழக்க ஒலி கேட்டு வீட்டிலுள்ளவர்கள் வெளியில் வந்து ஆர்வமாக எந்தக் கட்சியினர் எனப் பார்ப்பதுண்டு. இது போல் பரப்புரை செய்ய வேண்டும் என்று யாரும் தொண்டர்களை வற்புறுத்துவதுமில்லை அதற்காக அவர்களுக்கு எந்தவித மதிப்பூதியமும் வழங்குவதுமில்லை. வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கும்போது நெகிழியால் செய்யப்பட்ட அவர்களின் கட்சி சின்னத்தை வழங்கி வாக்கு கேட்பது மரபு. குழந்தைகள் அந்த சின்னத்தை விரும்பி வாங்கி சட்டைப் பொத்தானில் செறுகிக் கொள்வர். தேர்தல் பரப்புரைக் கூட்டங்களும் முன்பு போல் இப்போதில்லை. தலைவர்கள் பரப்புரைக்கு வருகிறார்களென்றால் ஒரு வாரத்திற்கு முன்பே சுற்றியுள்ள சிற்றூர்களுக்கெல்லாம் ஒலிப் பெருக்கி மூலம் அறிவித்து விடுவார்கள். பொது மக்களுக்கு இடையூறில்லாத இடங்களில் மேடை அமைக்கப்படும் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் கூட்டங்கள் நடக்கும் மக்கள் வேலைகளை முடித்துக்கொண்டு கூட்டத்திற்கு வருவதற்கு ஏதுவாக இருக்கும். கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தலைவர்கள் முன்கூட்டியே வந்து முக்கியத் தொண்டர் ஒருவர் வீட்டில் தயாராகியிருக்கும் உணவை உண்டு அவ்வூர்த் தொண்டர்களோடு அளவளாவிய பிறகு கூட்டத்திற்குச் செல்வார். கூட்டத்தில் தலைவருக்கு மாலையோ பொன்னாடையோ அணிவிக்க விரும்பபவர்கள் வரிசையில் நின்று அணிவிப்பார்கள். இப்போது உள்ளது போல் பாதுகாப்பு கெடுபிடிகள் அப்போது இல்லை. கூட்டங்களுக்கு ஊதியம், உணவு கொடுத்து ஆள் சேர்க்க வேண்டிய அவசியம் அப்போது இல்லை. நம்முடைய வாழ்க்கைத் தரத்தை ஓரங்குலமாவது உயர்த்துவதற்கு நம் தலைவர் பாடுபடுவார் என்ற நம்பிக்கைத் தொண்டர்களிடமிருந்தது. இப்போது அந்த நம்பிக்கையோடு வினாக்குறியும் சேர்திருக்கிறது.கைம்மாறு கருதாத தொண்டர்களும் தன்னலம் கருதாத தலைவர்களும் இன்று இத்தகைய பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றனர். அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொண்ட கக்கன் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிய சாமிக்கண்ணு தொண்டர்களை உயிராகக் கருதிய எம்.ஆர்.கிருட்டிணமூர்த்தி போன்ற வட்டாரத்தலைவர்கள் மக்களிடையே புகழ்பெற்று விளங்கினர். தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டுவதற்கு அவர்களிடம் பெரிதாகச் சொத்துகள் இருந்ததில்லை.தெருப்புழுதி கால்களில் படிய வீதி வீதியாக நடந்து சென்று வாக்காளர்களை நேரில் சந்திந்து வாக்கு கேட்டனர். அமர்ந்துகொண்டே கேட்பதற்குக் குளிரூட்டப் பட்ட மகிழுந்துகள் அவர்களிடம் இல்லை. தேர்தல் பணிகளைத் தொண்டர்கள் தமது ஊர்த் திருவிழாப் பணிபோன்று செய்தனர்.அவர்கள் வீட்டுச் சுவர்களில் அவர்களே விளம்பரம் செய்ததனால் யாரிடமும் அனுமதி பெற வேண்டிய தேவை இருந்ததில்லை. இன்று அரசியல் கட்சிகளெல்லாம் வணிக நிறுவனங்களாகி விட்டதனால் எல்லாவற்றுக்கும் ஒரு விலை குறித்தாயிற்று வாக்கு உட்பட. காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்

19 ஏப்ரல், 2009

ஈழத்தமிழர்களைக் காக்க கடவுளிடம் புகார் கொடுத்த படைப்பாளிகள்





போரில் செத்து மடியும் அப்பாவி ஈழத்தமிழர்களைக்காக்க வேண்டி தமிழகத்தில் நாள்தோறும் வெவ்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் விருத்தாசலத்தில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டம் இது வரை எங்கும் நடக்காத ஒரு போராட்டம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பாமர மக்களைத் தூண்டுவதே இப் போராட்டத்தின் நோக்கம். நாட்டுப்புற மக்களிடையே சில நம்பிக்கைகள் காலகாலமாகப் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை மூட நம்பிக்கை என நாம் எளிதில் புறம்தள்ளிவிடலாம் ஆனால் அம்மக்கள் அவற்றை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட மாட்டார்கள். அம்மக்களின் உள் மனதில் புதைந்து கிடக்கும் அத்தகைய ஒரு நம்பிக்கையை போராட்ட வடிவமாக்கியிருக்கின்றனர் படைப்பாளிகள். தமக்குத் துன்பம் தரும் ஒருவரை எதிர்ப்பதற்கோ தண்டிப்பதற்கோ மனிதர்களுக்கு உரிய அனைத்து வழிகளாலும் இயலாத போது நாட்டுப்புற மக்கள் நாடக்கூடிய கடைசி புகலிடம் அவர்களின் குல தெய்வம். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி இந்த நம்பிக்கை சார்ந்ததுதான். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் தவறுசெய்தவர்களைத் தண்டிக்கவேண்டி குல தெய்வக்கோயிலில் சீட்டு எழுதி கட்டுவர். அவர்கள் நம்பிய படி தவறு செய்தவருக்கு உரிய தண்டனை கிடைத்ததும் கோயிலில் கட்டிய சீட்டை காணிக்கை செலுத்தி திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் அவ்வாறு பெற்றுக்கொள்ளாவிட்டால் சீட்டு கட்டியவரையே கடவுள் தண்டிப்பார் என்பது நம்பிக்கை. இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை உலகெங்கும் உள்ள மக்கள் சக்தியால் தடுத்து நிறுத்த இயலாத நிலையில் கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவனாவது ராசபக்சேவை தண்டிக்கட்டும் என்கிற தொனியில்தான் இப்போராட்டம் நடந்துள்ளது. விருத்தாசலத்தின் தெற்கே மூன்று கல் தொலைவில் உள்ளது வேடப்பர் கோயில் துட்டதெய்வம் எனக்கருதி மக்கள் இதனை பய பக்தியோடு வழிபடுவர் சாலையில் செல்லும் ஊர்தி ஓட்டிகளில் பெரும்பாலானோர் வேடப்பர் கோயிலுக்கருகில் செல்லும் போது ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி சூடம் கொளுத்தி கும்பிட்டுவிட்டுத்தான் கடந்து செல்வர். விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்களுக்கு இது குல தெய்வம் நினைத்தது நடக்கவேண்டி சீட்டு எழுதி கட்டும் வழக்கம் இன்றும் இங்கு நடைமுறையில் உள்ளது.கடவுளுக்கு கொடுக்க வேண்டிய புகார் மனுவைத் தாளில் எழுதி பூசாரியிடம் கொடுக்க அதை அவர் பனை ஓலையில் எழுதி சீட்டையும் ஓலையையும் வட்ட வடிவில் வளையல் போல சுற்றி தெய்வத்தின் முன் வைத்து படைத்து புகார் கொடுக்க வந்தவரிடமே கொடுத்து சூலத்தில் மாட்டச் செய்வார். இதைத்தான் படைப்பாளிகளும் செய்தனர்.விருத்தாசலம் பாலக்கரையிலிருந்து பம்பை இசை முழங்க ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்பாளிகள் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையைப் பற்றி உறுக்கமாக பாடிய படி ஊர்வலமாக வேடப்பர் கோயிலுக்குச் சென்று சீட்டு எழுதி கட்டினர்.அவர்கள் கடவுளிடம் கொடுத்த புகார் மனு இதுதான் " நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2040 சித்திரைத் திங்கள் 2 ஆம் நாள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் அருள் மிகு வேடப்பரை குலதெய்வமாகக் கொண்ட நாங்கள், தங்களுக்கு எழுதிக்கொள்ளும் பிராது. நமது தமிழ் உறவுகளாகிய அப்பாவி ஈழத் தமிழர்களை நச்சுக் குண்டு வீசி கொடூரமாகக் கொன்று குவித்து வரும் கொலைகாரன் ராசபக்சேவையும் சரத் பொன்சேகாவையும் தண்டித்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாறு வேண்டி இச்சீட்டினைத் தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். இதற்கு படிக்கட்டணமாக ரூ.11 செலுத்திவிடுகிறோம். தாங்கள் தண்டனையை உறுதியாக நிறைவேற்றியதும் அதற்கு பரிகாரமாகப் படிக்கட்டணமும் சிறப்பும் செய்து புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்". இந்த புகார் மனுவை படைப்பாளிகள் சார்பில் கடலூர் மாவட்ட செயலாளர் ஆதித்யாசெல்வம் கொடுக்க படைப்பாளிகள் கண்மணிகுணசீகரன், தங்கவெங்கடேசன், தெய்வசிகாமணி, ஆறு.இளங்கோவன், புதூர்சாமி,மணிவண்ணன்,செம்புலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் செல்லும்போது உடுக்கை இசை கேட்டு ஆவேசமாக ஆடி ஒரு மூதாட்டி அனைவரின் கவனத்தைக் கவர்ந்தார். இது போல் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து சிறு தெய்வக் கோயில்களிலும் சீட்டு எழுதி கட்டும் போராட்டம் தொடரும் என படைப்பாளிகள் பேரியக்க நிருவாகிகள் தெரிவித்தனர். காண்க தமிழ் ஓசை களஞ்சியம்

14 ஏப்ரல், 2009

ராசபக்சேவுக்கு சாமிதான் தண்டனை கொடுக்கவேண்டும்.

"அருள்மிகு வேட்ப்பர் துணை"

கொலைகாரன் ராசபக்சேவுக்கு தண்டனை வேண்டி வேடப்பர் கோயிலில் சீட்டு எழுதிகட்டிய படைப்பளிகள்.
நாட்டுப்புற மக்கள் தங்களுக்கு நேரும் துன்பங்களைக் கேட்பாரற்ற போது தங்களின் குல தெய்வத்திடம் சீட்டு எழுதிக்கட்டுவது மரபு.அவர்களுக்குத் துன்பம் செய்தவர்களை தெய்வம் தண்டிக்கும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைப் பின்பற்றி தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் கொலைகார ராசப்க்சேவுக்கும், சரத்பொன்சேகாவுக்கும் தக்க தண்டனை கொடுக்க வேண்டி வேடப்பர் கோயிலில் தமிழ்ப் படைப்பளிகள் பேரியக்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சீட்டு எழுதி கட்டியுள்ளனர். அதன் விவரம் பின் வருமாறு. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் அருள்மிகு வேடப்பரைக் குலதெய்வமாகக் கொண்ட மக்களின் சார்பில் நாங்கள்,தாங்களுக்கு நாளது தேதியில் எழுதிக்கொள்ளும் பிராது. எங்களின் தமிழின உறவுகளாகிய அப்பாவி ஈழத்தமிழ் மக்களை நச்சுக்குண்டு வீசி கொன்று குவித்து வரும் ராசபக்சேவையும் சரத் பொன்சேகாவையும் மாறு கால் மாறு கை வாங்கி தண்டனை கொடுக்குமாறு வேண்டி இச்சீட்டினைத் தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். இது எங்களின் கடைசி நம்பிக்கை, ஏனென்றால் நாங்கள் யார் யாரையோ நம்பினோம் அவர்கள் எல்லோரும் எங்களை கைவிட்ட நிலையில் தங்களை மட்டுமே ஈழத்தமிழ் மக்களைக்காக்கும் கடைசி ஆதாரமாக நாங்கள் நம்புகிறோம். எஙள் நம்பிக்கை வீண் போகாமல் கொலைகார ராசபக்சேவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் தக்க தண்டனை கொடுத்து அப்பாவி ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு தங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு படிக்கட்டணமாக ரூ.10 செலுத்திவிடுகிறோம். தண்டனையைத் தாங்கள் உறுதியாக நிறைவேற்றும் நிலையில் உடன் நாங்கள் அதற்கு பரிகாரமாக படிக்கட்டணம் மற்றும் சிறப்பு கொடுத்து பிராதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு,தங்களைக் குலதெய்வமாகக் கொண்ட மக்களின் சார்பில்கடலூர் மாவட்ட தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்க நிர்வாகிகள்.
கோ.தெய்வசிகாமணி,
இரத்தின புகழேந்தி,
கோவிந்தன்,
கண்மணிகுணசேகரன்,
சி.சுந்தரபாண்டியன்,
அன்பாதவன்,
ஆறு.இளங்கோவன்,
மா.துரைராசு,
இராம.அசோகன்,
புதூர் சாமி,
சீவாசெந்தில்,
தங்க.வெங்கடேசன்,
அரங்க.வேணுநாதன்,
சிவராமகிருட்டிணன்,
கு.தமிழாகரன்,பூமாலைமணிவண்ணன்,
காமராசு,திருமாறன்,
செம்புலிங்கம்,
செகநாதன்.
..

12 ஏப்ரல், 2009

வண்ண மயமாகும் பணபாட்டு அசைவுகள்

ஓவியர் தட்சணாமூர்த்தி










நவீன ஓவியங்களை அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது என்கிற கருத்து கலை உலகில் நிலவி வருகிறது.இத்தகைய ஓவியங்களை வரையும் ஓவியர்கள், மனித வாழ்க்கை இன்று சிக்கல் நிறைந்ததாக, புரிந்து கொள்ள இயலாததாக உள்ளது அதுதான் எங்கள் ஓவியங்களில் வெளிப்படுகிறது என்கின்றனர். இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து என்றாலும் எளிய மக்களுக்கு நவீன ஓவியங்கள் புரிந்துகொள்ள இயலாதவையாகத்தான் உள்ளன என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஓவியங்களை வரையும் நவீன ஓவியர்களும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் ஒருவர்தான் ஓவியர் தட்சணாமூர்த்தி. 1954 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி அருகிலுள்ள நல்லூரில் பிறந்த இவர் தற்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஓவியத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு முடித்த இவர் ஓவியர் கோவிந்தனின் வகுப்புத் தோழர். தொடக்கக் கல்வியை நல்லூரிலும், பள்ளிக்கல்வியை அருகிலுள்ள புதுப்பேட்டையிலும் முடித்த ஓவியருக்கு சிறு வயதிலேயே ஓவியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அதற்குக் காரணம், பள்ளியில் ஓவிய ஆசிரியர்கள் வரைந்த ஓவியங்களும் பண்ணுருட்டி பகுதியில் சிறு வயதில் பார்த்த வண்ணப் பதாகைகளும்தான். ஓவியக் கல்லூரியில் சேர்ந்த பிறகு அங்கிருந்த பேராசிரியர்கள் அல்போன்சா, கன்னியப்பன், சந்திரசேகரன், சானகிராமன், முனுசாமி ஆகியோரின் வழிகாட்டுதல் மிகுந்த உற்சாகத்தைத் தரவே ஓவித்தின் மீதான ஈடுபாடு அதிகரித்தது. அது போலவே சுடுமண் சிற்பங்கள் செய்வதிலும் கை தேர்ந்தவராக விளங்கும் ஓவியர் இன்றும் தொடர்ந்து ஓவியங்களை வரைந்து வருகிறார். இவரது ஓவியங்களைப் பார்த்ததும் இவை தட்சணாமூர்த்தி வரைந்தவை எனக் கூறுமளவிற்குத் தனித்தன்மை வாய்ந்தவை. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்களை ஓவியங்களில் இவர் வடிக்கும் போது அந்த நடனங்களின் ஒயிலான அடவுகளையும் வேகமான அசைவுகளையும் மிக நுட்பமாக வெளிப்படுத்துவார். ஆட்டக்கலைஞர் அணிந்திருக்கும் ஆடை காற்றில் அலைவதை இயல்பாக ஓவியத்தில் பதிவு செய்வது தட்சணாமூர்த்தியின் தனித்தன்மை. கோட்டோவியங்கள் வரைவதிலும் வல்லவர். பல்வேறு இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாகக் கணையாழி, எக்கனாமிக் டைம்ஸ், அலைவ் போன்ற இதழ்களில் அதிகம் வெளியாகி யிருக்கின்றன. இவர் தம் நண்பர்களோடு சேர்ந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், கல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் ஓவியக் கண்காட்சி நடத்தியிருக்கிறார். சென்னை, புதுவை, கேரளா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஓவிய முகாம்களில் பங்கேற்றிருக்கிறார். சென்னையிலும் கொச்சியிலும் இதுவரை பதினொரு முறை தனிநபர் ஓவியக்கண்காட்சி நடத்தியிருக்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல வெளிநாடுகளிலும் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். 1990 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் பங்கேற்று சிறந்த ஓவியர் விருது பெற்றுள்ளார். நீர் வண்ணம், தைல வண்ணம், அக்ரிலிக் எனப்படும் நவீன வண்ணம் ஆகிய வண்ணங்களில் ஓவியம் தீட்டும் இவர் கணினியைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைவதில்லை. கேன்வாஸ் எனப்படும் துணியில் தூரிகையைக்கொண்டு வரைவதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி கணினியில் வரையும்போது கிடைப்பதில்லை, மேலும் வண்ணங்களைக் கலந்து கலந்து தீட்டுவதில் கிடைக்கின்ற உயிரோட்டமும் பனுவலாக்கமும் கணினியில் நாம் எதிர்பார்க்க முடிதாது. ஒரு குழந்தையைத் தொடுவதற்கும் ஒரு தாளைத் தொடுவதற்கும் எத்தகைய வேறுபாடு உண்டோ அத்தகையதுதான் இந்த ஊடகங்களுக் கிடையேயான வேறுபாடும் என்கிறார். இவரது ஓவியங்களில் பாத்திரங்களின் முகத்திலுள்ள உறுப்புகளுக்கோ ஆடை ஆபரணங்களுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை, ஏனெனில் பார்வையாளர்களின் கவனம் ஓவியப் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் அடவுகளிலிருந்து சிதறிவிடும் என்பதால். ஓவியராக மட்டுமில்லாமல் பார்வையாளர் கோணத்திலிருந்தும் ஓவியத்தைப் படைப்பது இவரது ஓவியத்தின் வெற்றியாக உணர முடிகிறது. நுட்பமான பண்பாட்டு அசைவுகளை வண்ணமயமான ஓவியங்களால் வெளிப்படுத்தும் தண்சணாமூர்த்தியின் படைப்புகள் கலை உலகின் பேழைகளாக நிலைத்து நிற்கும் வல்லமை உடையன.

29 மார்ச், 2009

காயத்ரியின் ஒலிம்பிக் கனவு நிறைவேறுமா ?





விளையாட்டுப் போட்டிகளில் உலக அளவில் சாதனை புரிந்தவர்களுக்கு நம் நாட்டு அரசு ஊக்கப்பரிசு வழங்கி அந்த சாதனையைப் பாராட்டுவது நடைமுறை. அதன் மூலம் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் ஊக்கம் பெறுவதோடு மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை ஈட்டி நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார். ஒலிம்பிக் போட்டியிலோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலோ தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ஒரு கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ஐம்பது லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு இருபத்தைந்து லட்சமும் ஊக்கப் பரிசு வழங்குவதற்கு அரசு ஆணையே உள்ளது. அது போலவே காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றவர்களுக்கு இருபது லட்சமும், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு முறையே பதினைந்து லட்சமும் பத்து லட்சமும் வழங்குவதற்கும் அதே அரசு ஆணை வழிகாட்டுகிறது. காமன் வெல்த் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம் வாங்கியதற்காக கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சுஜார்ஜுக்கு தமிழக அரசு பதினைந்து லட்சம் வழங்கியுள்ளது.ஆனால் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பூனாவில் நடைபெற்ற இளையோருக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு 4 ஙீ 100 மீ தொடர் ஒட்டத்தில் தங்கப் பதக்கமும், தடைதாண்டும் ஓட்டத்தில் ஒரு வெள்ளிப் பதக்கமும் ட்ரிபிள் ஜம்ப்பில் ஒரு வெள்ளிப் பதக்ககமும் வென்று நம் தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இது வரை தமிழக அரசு எந்த நிதியும் வழங்கவில்லை, ஏன் என்ற காரணமும் தெரியவில்லை. தற்போது சென்னை புனித வளனார் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு கணினித் தொழில் நுட்பம் பயிலும் காயத்ரிதான் அந்தப் பெண். தடைதாண்டும் போட்டியில் காயத்ரியின் சாதனையை முறியடிக்க இதுவரை இந்தியாவிலேயே யாராலும் முடியவில்லை. 2007 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய தடை தாண்டும் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் 14.40 நிமிடங்களில் இலக்கை எட்டி பூனம் பெல்லியப்பாவின் 11 ஆண்டு கால (14.50) சாதனையை முறியடித்ததோடு மட்டுமல்லாமல் 2008 ஆம் ஆண்டு ஜாம்செட்பூரில் நடைபெற்ற தேசியப் போட்டியில் 14.04 நிமிடங்களிலும் அதே ஆண்டில் மைசூரில் நடைபெற்ற போட்டியில் 14.02 நிமிடங்களிலும் இலக்கை எட்டி இவரது முந்தைய சாதனைகளை இவரேதான் முறியடித்திருக்கிறார். இதுவரை இவரின் இந்த சாதனைகளை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. மேலும் 2007 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், அதே ஆண்டில் தென்கொரியாவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் தடைதாண்டுதலில் ஒரு வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். இவரது சாதனைகளைப் பாராட்டாத பத்திரிகைகள் இல்லை.இவரது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று நம் நாட்டிற்குப் பெறுமை சேர்க்கவேண்டும் என்பதுதான். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த காயத்ரி விளையாட்டு வீராங்கனையானது சுவையான நிகழ்வாகும். இவரது சொந்த ஊர் அரியலூருக்கு அருகிலுள்ள இலந்தங்குழி. தந்தை கோவிந்தராசு, தாய் நவமணி, அக்காள் கயல்விழி, தங்கை கிருத்திகாவோடு தற்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவர் இரண்டாம் வகுப்பு படித்த போது வட்டார விளையாட்டுப் போட்டி ஒன்றை வேடிக்கை பார்க்கச் சென்றிருக்கிறார் அப்போது விளையாட்டுத் திடலின் ஒரு மூலையில் தாண்டிக் குதித்துக்கொண்டிருந்த இவரை உற்று நோக்கிய பயிற்சியாளர் முனைவர் நாகராஜன் இவரிடமுள்ள திறமையைக் கண்டு கொண்டதோடு காயத்ரியின் பெற்றோரை அணுகி காயத்ரிக்கு உரியமுறையில் பயிற்சி கொடுத்தால் எதிர்காலத்தில் பெரிய விளையாட்டு வீராங்கனையாவார் என்று கூறி அன்று முதல் காயத்ரிக்கு இலவசமாகவே பயிற்சி கொடுத்து வளர்த்தெடுத்திருக்கிறார். இவரின் விளையாட்டுத் திறமைக்காகவே சர்ச்பார்க் ஆங்கிலப் பள்ளி கட்டணமில்லாமல் சேர்த்துக்கொண்டது. பள்ளிக்கல்வியை முடித்ததும் புனிதவளனார் கல்லூரி இலவசக் கல்வியும் விளையாட்டுப் பயிற்சியும் காயத்ரிக்கு வழங்கி வருகிறது. ஒரு அரசு செய்ய வேண்டிய பணியைத் தனியார் நிறுவனம் செய்கிறது.இதற்கு உறுதுணையாக இக்கல்லூரியின் இயக்குநர் பாபுமனோகரன் விளங்குகிறார்.ஆனால் வழங்க வேண்டிய ஊக்கப் பெரும் நிதியைக்கூட வழங்காமல் அரசு காலம் கடத்தி வருவது இவரது ஒலிம்பிக் கனவுகளுக்குத் தடைக்கல்லாக உள்ளது. ஆம் ஒலிம்பிக்கில் சாதிக்கவேண்டும் என்பதுதான் காயத்ரியின் அடுத்த இலக்கு. ஒலிம்பிக்கில் வெற்றி பெறவேண்டுமென்றால் குறைந்தது மூன்றாண்டுகளுக்கு வெளிநாடுகளில் தங்கி பயிற்சி பெற வேண்டும் உணவு, உடல் திறன், விளையாட்டுப் பயிற்சி என ஒவ்வொன்றுக்கும் ஒரு வல்லுனரின் கண்காணிப்பில் தயாரானால்தான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்குத் தகுதியுடையவராகலாம் அதற்கு ஒரு கோடி செலவாகும். தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தற்போதுள்ள அரசாணைப் படி காயத்ரி இதுவரை செய்த சாதனைகளுக்காக வழங்க வேண்டிய ஊக்கத்தொகையே 62 லட்சத்து 15 ஆயிரம். இந்தத்தொ தொகையை உடனே வழங்கினால் கூட காயத்ரி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட உதவியாக இருக்கும். காயத்ரிக்கு ஊக்கப் பெரும் நிதியை உடனே வழங்கவேண்டுமென்று அச்சமில்லை பத்திரிகை ஆசிரியர் இறைவன் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் தனிக்கவனத்திற்குக் கொண்டு சென்றால் காயத்ரியின் ஒலிம்பிக் கனவு நிறைவேறும். தொடர்புடைய அதிகாரிகள் கவனிப்பார்களா?

22 மார்ச், 2009

ஈழத்தமிழர் முகாமின் அவல நிலை





ஈழத்தில் போர் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர் இது இன்றைய நிலை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போல போர் கடுமையாக நடைபெற்ற போது இலங்கைத் தமிழ் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க இயலாமல், உயிர் வாழவும் இயலாமல் ஏதிலியராகப் பலர் தமிழகத்திற்கு வந்தனர் அவர்களில் நூறு குடும்பத்தினர் விருத்தாசலம் வந்தனர். அவர்களுக்குக் கடலூர் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்குப் பின்புறமுள்ள இடத்தில் ஒரு குடும்பத்திற்கு பத்தடி நீளம் பத்தடி அகலமுள்ள தற்காலிகக் கொட்டகை அமைத்துத் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். நூறு குடும்பங்களில் ஒரு சில குடும்பங்கள் மீண்டும் நாட்டிற்கு சென்றுவிட ஒரு சிலர் வேறு முகாம்களுக்குச் சென்றுவிட இன்று விருத்தாசலம் முகாமில் ஐம்பத்தெட்டு குடும்பங்கள் மட்டுமே உள்ளன. இவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு மாதத்திற்குக் குடும்பத்தலைவருக்கு ரூ.400, தலைவிக்கு ரூ.250, ஒரு குழந்தைக்கு ரூ.90 வழங்கப் படுகிறது. மேலும் சலுகை விலையில் மாதத்திற்கு அரிசி 12 கி., மண்ணெண்ணெய் 6 லி., சர்க்கரை 2கி. வழங்கப் படுகிறது. விருத்தாசலம் முகாமிலுள்ளவர்கள் அனைவருமே இலங்கையில் மீன் பிடித் தொழிலைச் செய்தவர்கள் அவர்களுக்கு சொத்து எனச் சொல்லிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் மீன் பிடித்தொழிலில் கிடைத்த நல்ல வருமானத்தைக் கொண்டு தரமான வாழ்க்கை நிலையில்தான் அங்கு இருந்திருக்கின்றனர். ஏதிலியராக இங்கு வந்த பின்பு அவர்களுக்குத் தெரிந்த அவர்களின் குலத்தொழிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதிக்கவில்லை நம் அரசு. எனவே வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாய சூழலில் பெரும்பாலானோர் வீடுகளுக்கு வண்ணமடிக்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர்.அதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் அரசு வழங்கும் உதவித் தொகையையும் வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்திவருகின்றனர். அரசு தற்காலிகமாக இருபதாண்டுகளுக்கு முன்பு கட்டிக்கொடுத்த அந்த குடிசைகளை இதுவரை மாற்றவுமில்லை பராமறிக்கவுமில்லை. குடும்பங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்ததும் ஒரு சிலர் இரண்டு வீடுகளை ஒன்றாக்கி சிமிட்டி ஓடுகளைக் கொண்டு மழை, வெய்யிலிலிருந்து பாதுகாத்துக் கொண்டுள்ளனர். இயலாதவர்கள் விதியை நொந்துகுண்டு அரசு அமைத்துக்கொடுத்த அதே குடிசையில் இன்றும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை அரசுக்குத் தெரிவிப்பதற்காக அவர்களுள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் நாளடைவில் அவர் ஊழல் பேர்வழியாகிவிட தற்போது வேறு ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்து மீண்டும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர். பாவம் அவர்கள் வேறு என்ன செய்ய முடியும். முந்தைய ஆட்சியில் இரவில் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டது தற்போது பகலிலும் வழங்கப் படுகிறது அதானால் மின் கட்டணம் அதிகமாகி விட்டதாக வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் புலம்புகின்றனராம் அது எப்போது நிறுத்தப் படுமோ என்ற அச்சத்திலுள்ளனர். முகாமில் கழிவறைகள் உள்ளன அவற்றைப் பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்றனர் ஆண்கள் திறந்த வெளியில்தான். கழிவு நீர் சேமிப்புக் குழி நிரம்பி நீண்ட நாட்களாகிறது அதனை சுத்தம் செய்வதற்காகப் பல முறை கோரிக்கை விடுத்தும் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. குடி நீர் இணைப்பு கொடுத்துள்ளனர் ஆனால் தண்ணீர்தான் வராது எனவே மூன்றடி ஆழமுள்ள குழி அமைத்து அதனுள்ளிறங்கி தண்ணீர் பிடித்துக்கொள்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலுள்ள முகாம்களில் இவர்களுக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளுக்குச் செல்லவேண்டுமெனில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன் அனுமதிக்காகச் செல்கிறவர்களிடமும் கையூட்டு கேட்டு அலை கழிக்கின்றனர் நம் மதிப்பிற்குரிய அலுவலர்கள். அப்படியும் அனுமதி கிடைத்து வெளியூர் செல்லும் போது மாத உதவித்தொகைக் கொடுப்பதற்காக அலுவலர்கள் வந்து விட்டால், அவர்களுக்குரிய உதவித் தொகையை குடும்பத்திலுள்ள பிறரிடம் கொடுப்பதில்லை. மீண்டும் அவர் ஊரிலிருந்து வந்த பிறகு வட்டாட்சியர் அலுவலகம் சென்று கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் அவருக்குரிய உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் விசயகாந்து இதுவரை ஒரு முறை கூட அந்த முகாமுக்குள் சென்று பார்க்கவில்லை.அவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்ன? முகாமிலுள்ள வீடுகளுக்கிடையே ஒற்றையடிப் பாதை அளவுக்குத்தான் இடமுள்ளது. போதுமான நிலப்பரபு இருந்தும் நெறுக்கமாக வீடுகள் கட்டப்பட்டிருப்பதால் காற்றோட்ட வசதியில்லை. எனவே அரசு இருபதாண்டுகளுக்கு முன்பு கட்டிய அவ் வீடுகளைப் பராமறிப்பதற்காக அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதோடு, அவர்களிடம் கருணையோடு நடந்துகொள்ள வேண்டுமென வட்டாட்சியட் அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நகர வளர்ச்சியில் அக்கரையோடு செயல்பட்டு வரும் கோட்டாட்சியர் ஈழத்தமிழர் முகாமை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டுமென்பது அம் மக்களின் எதிர்பார்ப்பு.

14 மார்ச், 2009

ஒற்றுமை வளர்க்கும் கன்னியாயி வழிபாடு



வழிபாட்டிடங்களில் தீண்டாமையைக் கடைபிடிப்பதும் சாதிய மோதல்கள் நிகழ்வதும் இன்றும் நடைமுறையிலிருப்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதற்கு மாறாக ஆதிதிராவிட இன மக்கள் தலைமையில் நடைபெறும் கன்னியாயி வழிபாட்டில் வன்னியர் இன மக்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் வழிபடுவதும், ஆதிதிராவிடர்களிடம் சாட்டையடி வாங்குவதும் இன்றைக்கும் ஒரு சிற்றூரில் நடைமுறையில் உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள மருங்கூரில்தான் மாசி மகத்தன்று இத்தகையத் திருவிழா நடைபெறுகிறது. கன்னியாயி வழிபாடு மருங்கூரில் ஆதிதிராவிடர்களால் பல தலைமுறைகளுக்கு முன்பிருந்தே நடத்தப்பட்டு வருகிறது. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு வரை ஏழு செங்கற்களை நட்டுவைத்து வழிபட்டு வந்திருக்கின்றனர். அதன் பிறகு வாசுதேவ படையாட்சி என்பவர் ஏழு கன்னி சிலைகளை மரச்சிற்பங்களாகச் செய்து கொடுத்துள்ளார். இப்போது நடுகற்களோடு மரச்சிற்பங்களையும் சேர்த்து வழிபட்டு வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் மாசி மகத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாள் காப்பு கட்டுதல், இரண்டாம் நாள் கன்னி தெரு வலம் வருதல், மூன்றாம் நாளான மகத்தன்று கன்னிகள் ஊருக்குத் தெற்கே உள்ள வெள்ளாற்றுக்குச் செல்லுதல் என நடைபெறும். கன்னி ஆற்றுக்குச் செல்வதைக் கிள்ளை முகம் பார்க்கச் செல்லுதல் எனக் குறிப்பிடுகின்றனர். முதலிரண்டு நாள் திருவிழாவும் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியிலேயே நடைபெறுகின்றன. மூன்றாம் நாள் திருவிழாவில் ஆற்றுக்குச் செல்லும் கன்னி வன்னியர்கள் வாழும் தெரு வழியாகச் செல்லும். அப்போது வன்னியர்கள் கன்னிகளுக்குப் பாவாடை, மாலை அணிவித்து மாவிளக்கு மாவிட்டு வழிபடுவர் ஆதிதிராவிட பூசாரி வன்னியர்களுக்கு தீப ஆராதனைக் காண்பித்து திருநீரு வழங்குவர். நீண்ட நாள் நோய்வாய்ப் பட்டவர்கள், பேய் பிடித்திருப்பதாய் நம்புகிறவர்கள் கன்னியிடம் வேண்டிக் கொண்டு ஆதிதிராவிடப் பூசாரியிடம் சாட்டையடி வாங்குவது இன்றும் வழக்கத்திலுள்ளது. ஆற்றுக்குச் சென்று கன்னிகளை இறக்கி வைத்து வழிபாடு செய்து பேய் பிடித்ததாய் நம்பப்படும் கன்னிப் பெண்களுக்கு சாட்டையடி கொடுத்து பேயோட்டுவர். இச் சடங்குகள் முடிந்த பிறகு கோயிலுக்கு திரும்புகையில் கன்னிகளுக்கு மரச்சிற்பம் செய்து கொடுத்த வாசுதேவ படையாட்சியின் வீட்டிற்குச் செல்கின்றனர். இதைப் பிறந்த வீடு எனக் குறிப்பிடுகின்றனர். இவ் வழிபாட்டு முறைகளை உற்று நோக்கும் போது இது பழமையான வழிபாட்டு முறையாகவே தோன்றுகிறது. கோயிலில் விழா தொடங்கும்போது காப்பு கட்டுதல், நடுகல் நட்டு வழிபடுதல், ஆற்றின் நடுவில் கன்னிப் பெண்களுக்குப் பேயோட்டுதல் ஆகிய அனைத்துமே சங்ககாலத்தில் நடந்திருக்கின்றன என்பதைக் கீழ்க்கண்ட சங்கப் பாடல்கள் மூலம் அறியலாம்.
விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாம்; கைந்நூல் யாவாம் (குறு: 218 ; 2)
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் (அகம்: 67 ; 9-10) வேற்றுப் பெருந்தெய்வம் பலஉடன் வாழ்த்தி, பேஎய்க் கொளீஇயள் இவள்.....(குறு : 263 ; 4-5 )
இப்பாடல்கள் இவ்வழிபாட்டின் தொன்மையை உணர்த்துவது போல வேறு சில வழக்காறுகள் ஆதிதிராவிடர்கள் பழங்காலத்தில் உயர்வான இடத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன. இவர்கள் சமய குருவாக இருந்து பல சடங்குகளை நடத்தியுள்ளனர். சில பழங்கோயில்களில் இவர்களுக்கு தனி மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் கோயில் திருவிழாவின் போது ஆதிதிராவிடர் ஒருவர் யானை மீது அமர்ந்து கொடி பிடித்துச் செல்லும் வழக்கம் அண்மைக்காலம் வரை நடைமுறையில் இருந்ததாக பேராசிராயர் தொ.பரமசிவன் குறிப்பிடுவார். பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பாரில்லாமல் கீழ்ச்சாதியானான் என்று ஒரு சொல்லடை உண்டு, அதற்கேற்ப காலப்போக்கில் ஆதிதிராவிடர்கள் தாழ்த்தப்பட்ட சமூகமாக சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இந்நிலையில் மருங்கூரில் நடைபெறும் இத்திருவிழா தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதாக உள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும்.
காணக:தமிழ் ஓசை களஞ்சியம்

11 மார்ச், 2009

ஆகாசவீரன் வழிபாடு





போரில் இறந்தவர்களின் நினைவாக நடுகல் அமைத்துவழிபடும் மரபு தமிழர்களிடையே உண்டு என்பதற்கு சானறுகள் காணப்படுகின்றன. இது ஒரு தொன்மையான வழிபாட்டு முறையாகக் கருதப்படுகிறது. இதனைத்தான் முன்னோர் வழிபாடு என்ற கோட்பாடாக அறிஞர்கள் வளர்த்தெடுத்தனர். இறந்தோரின் ஆற்றல் வாழ்வோரின் நலனில் பெரும்பங்காற்றுகிறது எனும் கருத்தாக்கத்தால் ஏற்பட்டதே முன்னோர் வழிபாடாகும். சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இத்தகைய வழிபாடு காணப்படுகிறது என்பார் முனைவர் ஆறு.இராமநாதன். இந்த வழிபாட்டு முறைதான் நாளடைவில் குல தெய்வ வழிபாடாக மாறியிருக்கலாம் இதனை பகுத்தறிவுப் பார்வையில் மூட நம்பிக்கை என்று புறம் தள்ளிவிட முடியாது. மக்களின் வழிபாட்டு முறை என்பது நாட்டின் பண்பாட்டு வரலாற்றோடு தொடர்புடைய ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு இனக்குழு மக்களின் பண்பாட்டுத் தொன்மையை வெளிப்படுத்துவதாகும். சிற்றூர்கள் தோறும் இன்றும் இவ்வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மணிமுத்தாறு வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள அழகியசிற்றூர் மருங்கூர். அங்கு வாழும் வன்னிய இன மக்களில் க(£)லிங்கராயர் என்ற பட்டப்பெயருடைய பங்காளிகள் குல தெய்வமாக ஆகாச வீரனை வழிபட்டு வருகின்றனர். இவ்வழிபாட்டு முறை முற்றிலும் மாறுபட்டதாகவும், பண்பாட்டுத் தொன்மையுடையதாகவும் விளங்குகிறது. சிறு தெய்வம் என நிறுவன சமயத்தினரால் குறிப்பிடப்படும் வழிபாட்டு இடங்களில் வேல், சிலை, மரம் என ஏதேனும் ஓர் அடையாளம் காணப்படும். ஆனால் ஆகாச வீரனுக்கு எவ்வித அடையாளமும் பூமியில் இல்லை. வானத்தில் அவர்களின் வீரன் இருப்பதாக நம்புகின்றனர். பங்காளிக் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வேண்டிக்கொண்டு ஆகாச வீரனுக்கு பூசை செய்வது வழக்கம். ஆடு, பன்றி ஆகிய உயிர்களை வீரனுக்கு வேண்டி விட்டு அவற்றைப் பலியிடு வர். இவ்வாறு உயிர்ப்பலி கொடுத்து நடத்தப்படும் பூசை பிலி பூசை எனக் குறிப்பிடப் படுகிறது(பலி பூசை என்பது பிலி பூசை என மருவியிருக்கலாம்) உயிர்ப்பலியின்றி, பொங்கல் மட்டும் பொங்கி செய்யப்படும் பூசை பா(ல்) பூசை எனப்படும். பூசைக்கு இன்றும் கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தப்படுகிறது. மண்பானை, சட்டி, அகப்பை ஆகியவற்றை மட்டுமே சமைக்கப் பயன் படுத்துகின்றனர். மஞ்சள், மிளகு ஆகியவற்றைத் தவிர உப்பு, புளி, மிளகாய் என எதையும் பயன்படுத்துவது இல்லை. நெல்லைக் குற்றுவது மஞ்சளரைப்பது என அனைத்துப் பணிகளையும் ஆண்களே செய்யவேண்டும். பூசைக்குப் பொருள்களைக் கொண்டு செல்லும் போதும், மஞ்சளரைத்து எடுத்துச்செல்லும் போதும் எதிரில் யாரும் வராமலிருக்கும்படி அறிவிப்பு செய்து அதன் பிறகே எடுத்துச்செல்வர். சமைத்த உணவு வகைகளைப் படைப்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்துவதில்லை. பொரச இலையைத் தைத்துத் தையல் இலையாகப் பயன்படுத்துவர். இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது. காட்டுமல்லிப் பூவைத்தான் பூசைக்குப் பயன்படுத்துகின்றனர். படைக்கும்போது பூசை செய்பவர் வாயைக் கட்டிக்கொள்வார். பூசைக்கு சூடம், சாம்பிராணி தவிர பிற பொருள்கள் பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு இலைக்கும் முன்பாகச் சூடத்தைக் கொளுத்தி எரியச்செய்வர். பூசையில் கலந்து கொள்ளும் ஆண், பெண், சிறுவர்கள் அனைவரும் வெள்ளை உடையில்தான் வர வேண்டும். கறுப்பு நிற நாடாவோ, அறைஞாண்கயிரோ அணியக் கூடாது. ஆகாச வீரனுக்குக் கறுப்பு ஆகாது என்பதால் அக்குடும்பத்தினர் எப்போதும் கறுப்பு நிற அரைஞாண் கயிறு அணிவதில்லை. பூசை முடிந்ததும் முதல் உணவை ஆகாயத்தை நோக்கி வீசுவது மரபு. ஆகாச வீரன் அவ்வுணவைப் பெற்றுக்கொள்வார் என நம்புகின்றனர். இப்பூசையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நீத்தார் நினைவுச் சடங்கு போலவே அமைந்துள்ளன. பூசையன்று பெண்கள் தலையில் பூச்சூடுவதில்லை. அன்று தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்பதில்லை. உப்பின்றிச் சமைப்பது, பூசைப் பொருள்களைக் கூடையில் வைத்து எடுத்துச் செல்வது, அப்போது எதிரில் யாரும் வராமலிருப்பது, பெண்கள் வெள்ளை உடை அணிவது ஆகிய அனைத்தும் இறப்புச் சடங்கோடு தொடர்புடையவை. எனவே தங்கள் இல்லத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போரில் இறந்த வீரனையே இவர்கள் தெய்வமாக வழிபடுவதாகக் கருதலாம். இக்காலிங்கராயர்களின் குடும்பம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பங்காளிச் சண்டையில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்பதை இவர்களிடம் நிலவும் வாய்மொழிக் கதையின் மூலம் அறிய முடிகிறது.

26 பிப்ரவரி, 2009

சாதிப்பிள்ளைகளின் சமூகநிலை



சாதிப்பிள்ளைகள் எனப்படும் இனக்குழு மக்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு கலப்பினமாக இவ்வினத்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது தெலுங்கையும், பிறரிடம் பேசும்போது தமிழையும் பயன்படுத்துகின்றனர்.இவர்கள் ; குடிப்பிள்ளை, சாதிப்பிள்ளை, ஒண்டிபுலி, நோக்கர் என பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். இவ்வின மக்கள் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,கடலூர்,சேலம்,தருமபுரி,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் இம்மக்கள் பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழிலைச் செய்து வந்தனர். மக்களிடையே பித்தளைப் பாத்திரத்தின் பயன்பாடு குறைந்து வருவதால் அத்தொழில் நலிவடைந்து தற்போது கிடைக்கின்ற கூலி வேலையைச் செய்து வருகின்றனர்.வன்னியர் இன மக்களிடம் வரி வசூல் செய்யும் வழக்கம் இவர்களிடையே இன்றும் காணப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வன்னியப் பாளையக்காரர்கள் இவர்களுக்கு இவ்வுரிமையை வழங்கியுள்ளனர் என்பது இவர்கள் கூறும் வாய் மொழிக்கதை வாயிலாகவும், இவர்களிடமுள்ள செப்புப் பட்டயத்தின் மூலமும் அறிய முடிகிறது. தமிழகத்தில் பதிமூன்று முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் சாதிய மோதல்கள் மிகுதியாக நிகழ்ந்துள்ளன என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது மேலும் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என இரு அணிகளாகப்பிரிந்து மோதிக்கொண்டனர் என்பதையும் உணர முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இத்தகைய ஒரு பூசலைச் சாதிப்பிள்ளைகள் தீர்த்து வைத்ததோடு இடங்கைச் சாதியினரான வன்னியர்களுக்கு ஆதரவாக விளங்கியதற்கு நன்றிக் கடனாகத்தான் இவர்களுக்கு இப்பட்டயம் வழங்கப்பட்டிருக்கிறது. இது சேலம் மாவட்டம் மல்லிகுந்தம் இராம கவுண்டன் என்பவரிடம் உள்ளதாக தொல்லியல் அறிஞர் நடனகாசிநாதன் குறிப்பிடுகிறார்.இப்பட்டயம் 1708 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும்.உடையார்பாளையம் சமீன்தாரால் இது வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செப்பேடுகள் ஈரோடு,காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் உள்ளாதாகவும் அறியமுடிகிறது. அறுபத்துநான்கு அடிகள் கொண்ட இரண்டுபக்க செப்பேட்டில் அது வழங்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இப்பட்டயமும் விருதும் கொண்டுவரும் சாதிப் பிள்ளைக்கு தடையில்லாமல் தலைக்கட்டு ஒன்றுக்கு முக்குறுணி அரிசியும் ஊருக்கொரு ஆடும் பண்ணியும் கொடுக்க வேண்டியது. அப்படி கொடாமல் யாதாமொருவர் தடை செய்தவர்கள் கங்கைக் கறையில் காறாம் பசுவைக் கொன்ற தோசத்தில் போவார்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பட்டயத்தினடிப்படையில் சாதிப்பிள்ளைகளில் சிலர் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாவட்டங்களில் இன்றும் வரி வசூல் செய்து வருகின்றனர். சாதிப்பிள்ளைகள் தங்களுக்குள் வரிவசூலிக்ககும் ஊர்களைப் பிரித்துக் கொள்கின்றனர். ஒருவருக்கு உரிய ஊரில் பிறர் சென்று வரி வசூலிக்கக்கூடாது என அவர்களுக்குள் கட்டுப்பாடு உள்ளது. அவரவர்களுக்கு உரிய ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை நாட்களில் சென்று வரும்படி பெற்று வருகின்றனர். வரி பெறுவதற்காக செல்லும் போது வன்னியர்களுக்கு உரிய பதினெட்டு பட்டங்களையும் முப்பத்திரண்டு விருதுகளையும் குறிப்பிட்டு துதிபாடுகின்றனர். ஆடு வெளங்கி மாடு வெளங்கி காடு வெளங்கி வீடு வெளங்கணும் எங்க ஆயாளும் எங்க அப்பாவும் எங்க அப்பனோட பிள்ளைகளும் முழிங்கி போல சுத்தியும் மூச்சி அழியாமலும் புலிக்கொடி முதுகுல வெளங்கி அவுங்க அதிகாரம் வெளங்கி செங்கோலு வெளங்கி ஒரு குடிக்கு ஆயிரம் குடியாவணும் மலை போல வந்தாலும் பனி போல நீங்கணும்என்று வாழ்த்திப் பாடுவது வழக்கம். வரும்படி பெறுவதற்கு செல்லும்போது அவ்வீட்டிலிருக்கும் சிறுவர்களைக் கவரும் விதமாகக் கையிலிருந்து பாம்பு,தவளை,காட்டேரி போன்றவற்றை வரவழைக்கும் சால நிகழ்ச்சியை நிகழ்த்துவர். இவ்வின மக்கள் ஆண்டில் பாதி நாட்களுக்கு மேல் வரி வசூலிப்பதற்காக இடம் பெயரும் நாடோடி வாழ்க்கையை மேற்கொள்வதால் இவர்களின் குழந்தைகளைப் படிக்க வைக்க இயலாமல் போய்விடுகிறது.இது குறித்து இம்மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சாதிப்பிள்ளை சங்கத்தை உருவாக்கி கொஞ்சிக்குப்பம் முருகன் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்தார் குறிப்பாக சாதிப்பிள்ளைகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்பது அவர்களின் முக்கியமான கோரிக்கையாகும். 2001 ஆம் ஆண்டு இவர்களை விசாரணைக்கு அழைத்த அரசு இவர்களிடம் பல கேள்விகளை எழுப்பியது. சாதிப்பிள்ளை இன மக்கள் தொகை எவ்வளவு, பழக்க வழக்கங்கள், பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தியோர் எண்ணிக்கை, பத்தாம் வகுப்பு தேரியோர் எண்ணிக்கை, பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை ஆகிய விவரங்களை அளிக்கும் படி இவர்களிடம் அரசு அதிகாரிகள் கேட்டுள்ளனர். அவர்களால் இவ்விவரங்களை எப்படி கொடுக்க இயலும்? அதனால் இவர்களின் கோரிக்கைக் கிடப்பில் போடப்பட்டது. தமிழக அரசு இவர்களைப் பற்றிய விவரங்களை அரசு அலுவலர்களைக் கொண்டு சேகரித்து இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அப்போதுதான் உண்மையிலேயே எட்ட முடியும்.

15 பிப்ரவரி, 2009

நடராசர் கோயில் நிர்வாகமும் மக்கள் எதிர்பார்ப்பும்





சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகப்பொருப்பு நீதிமனற தலையீட்டால் தீட்சிதர்களிடமிருந்து தமிழக அரசுக்குக் கைமாறியிருக்கிறது.கோயிலை யார் நிர்வகிப்பது என்பதில் காலகாலமாக சிக்கல் இருந்து வந்திருக்கிறது என்பதை கோயில் வரலாறு நமக்குச் சொல்கிறது. அரசர்களிடமிருந்த நிர்வாகப் பொருப்பினை கோயிலுக்கு பூசை செய்பவர்கள் சூழ்ச்சியால் கைப்பற்றிக்கொண்டனர். அரசுஅதிகாரிகள் கோயிலை நிர்வகித்ததற்கும், அதில் சிக்கல் எழும்போது அரசன் தலையிட்டு நிர்வாகத்தை ஒழுங்கு செய்தான் என்பதற்கும் ஆதாரமான கல்வெட்டு கோயில் வளாகத்தில் உள்ளது. மேலும் கல்வெட்டு ஆய்வாளர் செ.இராசு குறிப்பிடும்போது 1610ஆம் ஆண்டு கும்பகோணம் சிவப்பிரகாசரும்,1684 இல் தில்லை சிற்றம்பலத் தவமுனியும், 1702 இல் பாதபூசை அம்பலத்தாடுவாரும், 1711 இல் தில்லை காசி தம்பிரானும் கோயிலை நிர்வகித்ததாகக் குறிப்பிடுகிறார். 17 ஆம் நூற்றாணடில் பீசப்பூர் சுல்தான் படையெடுப்பினால் சிலகாலம் பூசை நின்றுபோனதோடு கோயில் நிர்வாகமும் சீர்குலைந்தது. 18 ஆம் நூற்றிணடில் நடைபெற்ற கர்நாடகப் போர்களின் போது படைப்பிரிவுகள் தங்குமிடமாகவும் இக்கோயில் பயன்பட்டிருக்கிறது. அதன் காரணமாக வெற்றி பெற்றவர்களால் கோயில் கைப்பற்றப்பட்டது. 1753 இல் மராத்தியர்களும் பிரஞ்சுக்காரர்களும் இணைந்து கோயிலை ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றினர். 1760 இல் ஆங்கிலத் தளபதி மேசர் மான்சன் திரும்பக் கைப்பற்றினார். 1780 இல் ஐதரலி சிதம்பரம் கோயிலைக் கைப்பற்றி தம் படைகளை அங்கே தங்கவைத்தார். இப்போர்க் காலங்களில் கோயிலில் முறையான வழிபாடு நடைபெறாமல் போனதோடு கோயில் நிர்வாகமும் வலுவிழந்துபோனது. இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது எனவே அவர்களின் வழித்தோன்றல்களான பிச்சாவரம் என குறிப்பிடப்படும் பித்தர்புரம் பாளையக்காரர்கள் இக்கோயிலை நிர்வகித்து வந்தனர் அப்போது கோயில் சாவி பித்தர் புரத்திலிருந்து காலையில் பல்லக்கில் வைத்துக் கொண்டுவரப்பட்டு பூசைமுடிந்து இரவு மீண்டும் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு நாளும் சாவி வரும்வரை தீட்சிதர்கள் கோயில் வாசலில் காத்துக்கிடந்தார்கள். பின்னர் பிச்சாவரம் பாளையக்காரர் கோயில் சாவியை தீட்சிதர்களே வைத்துக்கொண்டு பூசையை சரியாகச் செய்யுமாறு பணித்திருக்கிறார். இக்காலகட்டத்தில்தான் அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்தான் பூசைசெய்யவந்த தீட்சிதர்கள் கோயில் நிர்வாகத்தை மெல்ல மெல்ல கைப்பற்றியிருக்கவேண்டும். இது ஒருபுறமிருக்க வழிபாட்டு முறைகளில் பல மாற்றங்களை இதற்கு முன்பே தீட்சிதர்கள் செய்திருக்கின்றனர். சிவபெருமான் 'தென்னாடுடைய சிவன்' எனக் குறிப்பிடப்படுகிறார். சிவ ஆகம முறைப்படிதான் நடராசருக்கு வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் எல்லா சைவக்கோயில்களிலும் பாடப்பட்ட தேவாரம் முழுவதும் சிதம்பரம் நடராசர் கோயிலில்தான் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன. ஓலைச்சுவடியில் இருந்தால் தேவாரம் அழிந்துவிடும் என்று கருதிய முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் நரலோக வீரன் காலிங்கராயன் அவற்றை செப்பேடுகளில் பதித்து சிதம்பரம் கோயில் சிற்றம்பலத்தில் வைத்தான் (சிற்றம்பலம் எனும் சொல்லே சிதம்பரம் என்றாயிற்று) என்ற செய்தி முத்திறந்தார் ஈசன் முதல் திறத்தைப் பாடியவாறு ஒத்தமைத்த செப்பேட்டின் உள் எழுதி-இத்தலத்தில் எல்லைக் கிரிவாய் இசை எழுதினான் கூத்தன் தில்லைச் சிற்றம்பலத்தே சென்றுஎன்று கல்வெட்டில் குறிப்பிடப்ட்டுள்ளது. இப்படி நம் தமிழ் மன்னர்கள் தேவாரத்தை பாதுகாத்து வைத்த இடத்திலேயே இன்று அதனைப் பாட இயலாத சூழல் ஏற்பட்டதனால்தான் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் கடந்த பத்து ஆண்டுகளாகப் போராடினார். இதற்கும் முன்பு இதே கோரிக்கைக்காக தமிழ்காப்பணி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் பேராசிரியர் மெய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது அக்கோரிக்கையை அப்போதைய அரசு கண்டுகொள்ளாததனால் குடமுழுக்கு வேள்வித் தீயில் வீழ்ந்து மாய்வோம் என இறுதி எச்சரிக்கை விடுத்தார். இத்தகைய நீண்ட போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையத் தலைவர் வழக்கரிஞர் ராசு ஒருங்கிணைப்பில் தமிழ்தேச பொது உடைமைக் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் , மக்கள் கலை இலக்கியக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராடி வெற்றி பெற்றதன் விளைவாக இன்று கோயில் நிர்வாகம் அரசின் கைக்கு வந்திருக்கிறது. இது குறித்து சிதம்பரம் மக்கள் என்னநினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்வதற்காக ஒரு சிலரைச் சந்தித்தோம்.அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை முன்னாள் தலைவரும் இந்திய மக்கள் சக்தி இயக்கத்தின் இந்நாள் தலைவருமான பேராசிரியர் அ.சண்முகம் கூறும்போது கோயில் சொத்துகள் அடையாளம் கண்டு மீட்கப் படவேண்டும், இதுவரை இக்கோயிலையே நம்பி வாழ்ந்துவிட்ட தீட்சிதர்களின் மறுவாழ்வுக்கு வழிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். கோயிலுக்கு 918 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அதில் 466 ஏக்கர் மட்டுமே ஏனொ தனோவென்று குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமகள் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கரிஞர் சி.ரமேசு நடராசர் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்றதன் மூலம் சிதம்பரத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது கருமாரியம்மன் கோயில் வருமானத்தில் தான் கலைக்கல்லூரி உருவானது. தீட்சிதர்களிடம் நிருவாகப் பொருப்பு இருந்த போது எவ்வளவு வருமானம் வந்தது என்று யாருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டார். கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்றது சரிதான் ஆனால் எல்லா கோயில்களையும் நிர்வகிப்பதுபோல் நடராசர் கோயிலை நிர்வகிக்கக்கூடாது, வழிபாட்டு முறையில் அரசு தலையிடக்கூடாது என்று தமிழ்நாடு வைணவ சபை சிதம்பரம் பகுதி துணைத்தலைவரும் பாரதிய சனதாக் கட்சியின் மாவட்டப் பொருளாளருமான கோபாலகிருட்டிணன் கருத்து தெரிவித்தார். தமிழ்தேசப் பொது உடைமைக் கட்சி கி.வெங்கட்ராமன் கூறும்போது எங்களுக்கு வழிபாட்டு முறையில் நம்பிக்கை இல்லை என்றாலும் தமிழ் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதால் போராடினோம் இனி எத்தகைய வழிபாட்டு முறை தொடரவேண்டும் என்பதை பக்தர்கள்தான் முடிவு செய்யவேண்டும் அதற்காக பக்தர்கள் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றார். பக்தர்கள் யாரும் இதற்காகப் போராட முன்வரவில்லை நாத்திகர்கள்தான் போராடுகின்றனர் என்பது தீட்சிதர்களின் குற்றச்சாட்டு. பக்தர்களுக்கு உரிய உரிமையைக் கொடுத்தால் நாங்கள் எதற்காகப் போராடப் போகிறோம் என்றார் தமிழ் தேசப் பொது உடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் சிவப்பிரகாசம். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அரசு கோயில் நிர்வாகத்தை நடத்துமா? நன்றி; தமிழ் ஓசை-களஞ்சியம்