இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

9 மார்ச், 2015

மாடித்தோட்டம்- அசத்தும் கோவை இளைஞர்





எதிர்பாராமல் படிக்கநேர்ந்தது தோட்டம் வலைப்பூ. மாடித்தோட்டம் போட்டு அசத்தும் அந்த இளைஞரின் செயல் அவர்மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியது, தொடர்புகொண்டேன். தோட்டம் பற்றிய பல தகவல்கள் கொட்டிக்கிடக்கும் அவர் வலைப்பூவை இங்கே அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.
அவரையைத் தாக்கும் அசுவினி பூச்சியயை ஒழிக்க அவர் தெளித்த பூச்சிக்கொல்லி என்ன தெரியுமா? படித்துப்பருங்கள். அதிர்ந்து போவீர்கள். கிண்டலுக்காகத்தான் அந்த குளிர்பானத்தைப் பூச்சிக்கொல்லி என்று சொல்வோம் உண்மையில் அது பூச்சியைக்கொன்றிருக்கிறது.
தோட்டம் சிவா ஒரு மென்பொருள் பொறியாளர் அவர் தோட்டப் பயிரில் இவ்வளவு கவனம் செலுத்துவது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அவரின் பேட்டி இதோ.

உங்களைப்பற்றிய சுய அறிமுகம்?
இந்த பதிவில் கொடுத்துள்ளேன்.
என்னை பற்றி சொல்லவேண்டும் என்றால், சொந்த ஊர் திருநேல்வேலி அருகில் திசையன்விளை. வளர்ந்தது, பள்ளி படிப்பு எல்லாம் திருச்செந்தூர் அருகில் நாசரேத்தில்.  பொறியியல் படிப்பு சென்னையில் (MIT, Chrompet). பிறந்த வருடம் 1976 (வயது 39). வேலை, இங்கே கோவையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில். கடந்த பதினான்கு வருடமாக சாப்ட்வேர் துறையில் தான். முதலில் சென்னையில் வேலை, பிறகு ஒரு ஐந்து வருடம் அமெரிக்காவில்(Minneapolis, 2001 – 2005) , பிறகு சென்னை. தற்போது கோவையில் செட்டில்.    

முதன்முதலில் தோட்டம் அமைத்தது எப்போது?
சின்ன வயதில் மழைக்கு உரக்குழிகளில் முளைத்து நிற்கும் செடிகளை கொண்டு அமைத்த தோட்டம் தான். பிறகு பெரிய அளவில் திட்டமிட்டு ஆரம்பித்தது இங்கு கோவையில் தான் ( 2010-ல்)
இதற்காக பயிற்சிகள் பெற்றீர்களா?
பயிற்சி ஒன்றும் பெறவில்லை. கட்டணம் கொடுத்து ஒரே ஒரு பயிற்சி வகுப்பு சென்றேன். அதில் மாடித் தோட்டம் பற்றிய பொருட்கள் பற்றி விவரம் கிடைத்தது. மற்ற படி நாமே கற்றுக் கொள்வது தான். 
தோட்டதிதிற்காக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள்?
தினமும் ஒரு மணி நேரம். வார இறுதியில் மூன்று-நான்கு மணி நேரம் (புதிதாய் செடிகள், நாற்றுகள் தயாரிக்கும் போது)
வலைப்பூ தோட்டம்எப்போது தொடங்கினீர்கள்?
வலைப்பூ விவரம் படி April 2012-ல் ஆரம்பித்திருக்கிறேன். பெரிதாய் திட்டம் போட்டு ஆரம்பிக்கவில்லை. இப்படி எழுதவும் நினைக்கவில்லை. அலுவலக நண்பர்களிடம் எனது தோட்டம் பற்றி பகிர்ந்து கொள்ளும் ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்து, இந்த அளவில் வந்திருக்கிறது.  
தினமும் தண்ணீர் ஊற்றுவீர்களா?
மாடி தோட்டம் என்றால் இரண்டு நாளுக்கு ஒரு முறை. கீழே தரையில் செடிகளுக்கும் மரங்களுக்கும் மூன்று-நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றினால் போதும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது?
வீட்டில் நிறைய மரங்களும் உண்டு. வாரத்திற்கு இரண்டு நாள் நீர் பாயச்சுவதுண்டு. ஒரு முறை தோட்டம், மரங்கள் என்று சேர்த்து ஆயிரம் லிட்டர்கள் ஆகலாம் என்று நினைக்கிறேன்.
களைகள் வருகின்றனவா?. எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள்?
களைகள் இல்லாமல் எப்படி J . நேரம் கிடைக்கும் பொது களை எடுத்து விடுவேன் (பிடுங்கி போடுவது மட்டும் தான். களைக்கொல்லி ஏதும் பயன்படுத்துவதில்லை).
தேவையான மண்ணை எங்கிருந்து பெறுகிறீர்கள்?
அருகில் உள்ள நர்சரிகளில் இருந்து. பெரிதாய் தரம் எல்லாம் பார்த்து வாங்குவதில்லை. நல்ல செம்மண் என்று தெரிந்தால் வாங்கி கொள்வேன்.
உங்களுடன் பணியாற்றுபவர்களுக்கு உங்கள் தோட்டம் பற்றி தெரியுமா?
முதலில் நான் தோட்டம் வலைப்பூ ஆரம்பித்தே என் அலுவலக வலைப்பூ தளத்தில் தான். அதை அப்படியே வெளியே உள்ள வலைப்பூவிலும் பதியலாம் என்று ஆரம்பித்தது தான் தோட்டம் வலைப்பூ. அலுவலக வலைப்பூவில் இருநூறு பேருக்கு மேல் என் வலைப்பூவை தொடர்ந்தார்கள். ஆனால் நான் நினைத்த மாதிரி எனக்கு தோட்டம் மேல் ஆர்வம் உள்ள நண்பர் வட்டம் ஓன்று கூட அமையவில்லை. நேர விரயம் என்று ஒரு கட்டத்தில் அந்த வலைப்பூவை நிறுத்தி விட்டேன்.     
உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் இது பற்றி உங்களுடன் பேசுவார்களா? அவர்கள் உங்கள் தோட்டம் பற்றி என்ன நினைக்கின்றனர்?
நிறைய பேர் பேசுவார்கள். நிறைய பகிர்தல் நடக்கும். ஏதும் நாற்று கிடைத்தால், விதை கிடைத்தால் கொண்டு வந்து கொடுப்பார்கள். செடிகள் பற்றி, விதைகள் பற்றி விசாரிப்பார்கள்.  
உங்கள் மனைவி குழந்தைகள் எப்படி ஒத்துழைக்கின்றனர்? அவர்கள் உதவுகிறார்களா?
அவர்கள் ஒத்துழைப்பு நிறையவே உண்டு. என் அளவுக்கு இறங்கி வேலை செய்யவில்லை என்றாலும், திட்டமிடுவதில் இருந்து செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது என்று வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நான் என்ன தான் விளைவித்தாலும், அதை சந்தோசமாய் பறித்து சமையலுக்கு பயன்படுத்தினால் தானே நான் செலவிடும் நேரம் சந்தோசமாகும்.      
உங்கள் தேவை போக மீதம் ஏற்படும் காய்களை என்ன செய்கிறீர்கள்?
செந்த பந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்போம்.
தற்போது தோட்டத்தை விரிவு படுத்துவதன் நோக்கம் என்ன்?
நான் இப்போது செய்து கொண்டிருப்பது ஒரு சோதனை முயற்சிகள் தான். வீட்டிற்கு தேவையான காய்கறி (வெங்காயம் முதல் கொண்டு) தோட்டத்தில் இருந்தே எடுப்பது தான் எனது நோக்கம். அதற்க்கு இன்னும் நிறைய இடம் வேண்டும். அதனால் தான் விரிவு படுத்த திட்டமிட்டு இருக்கிறேன்.
நீங்கள் உற்பத்தி செய்வதை மட்டுமே சமைக்கிறீர்களா? கடையில் வாங்குவதுண்டா?
வீட்டுத்தேவை முழுவதும் பூர்த்தி செய்வது தான் எனது நோக்கம். என்றாலும் அதற்கு இன்னும் கொஞ்ச காலம் எடுக்கும். இப்போதைக்கு சில காய்கறிகள் (வெங்காயம், ஆங்கில காய்கறிகள்) கடையில் தான் வாங்க வேண்டிய உள்ளது.
வேளாண் பல்கைக்கழகத்தினருக்கு உங்கள் தோட்டம் பற்றித்தெரியுமா?
அந்த அளவுக்கு நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லையே. இங்கே கோவையில் என்னை விட பெரிய அளவில், ஆர்வமுடன் வீட்டுத்தோட்டம் செய்யவர்கள் நிறைய பேர் உண்டு. நான் செய்வதை இணையத்தில் எழுதுகிறேன். அவ்வளவு தான் வித்தியாசம்.
தோட்டம் சிவா என்பது யார் சூட்டிய பெயர்?
பெயர் எல்லாம் சூட்டவில்லை J . சில ப்ளாக் நண்பர்கள் எனது பெயரை மொபைலில் ‘தோட்டம்’ சிவா என்று பதிவதை பார்த்திருக்கிறேன். சரி அதையே பெயராக வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று ஆரம்பித்தது தான்.
ஒரு கத்திரிச்செடி எவ்வளவு நாட்கள் காய்க்கும்? அதன் பிறகு அந்த பையில் மண்ணை மாற்றுவீர்களா?
கத்தரி செடி நான்கு – ஐந்து மாதங்கள் வரை காய்க்கும். வைத்த பிறகு மாற்றி எல்லாம் வைப்பதில்லை.
காய்க் கழிவுகளை உரமாக்கும் முயற்சியைத்தொடர்கிறீர்களா?
ஆமாம். ஆனால் பெரிய அளவில் செய்ய எனது மாடித் தோட்டம் தயாராக வேண்டும். இப்போது மண் பானைகளில் வழக்கம் போல தொடர்கிறேன்.
ஒரு மாதத்திற்கு தோட்டத்திற்காக எவ்வளவு செலவாகிறது?
பெரிதாக கணக்கு எல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. செலவென்று பார்த்தால், வருடத்திற்கு மண்புழு உரம் ஒரு 1500 ஆகும். வேப்பம் புண்ணாக்கு Rs.1000 ஆகும். பிறகு விதைகள் தான். நான் கூறுவது எங்க வீட்டில் இருக்கும் மரங்களையும் சேர்த்து தான்.
குருவிகளுக்கு கூடு அமைத்துக்கொடுப்பது அவற்றுக்கு தானியம் தண்ணீர்வைப்பது போன்ற எண்ணங்கள் எப்படி தோன்றியது?
பொதுவாகவே ஒரு அணில் ஆகட்டும், குருவி ஆகட்டும், அவைகளின் செயல்களை பார்ப்பதே சந்தோசம் தானே. நிறைய மரங்கள் வைத்த போது அவைகளின் வரவும், விளையாட்டுகளும் அதிகமானது. அப்படியே ஆரம்பித்தது தான்.
குருவிகள் இனப்பெருக்கம் செய்திட முட்டை இட பாதுகாப்பான இடம் அமைத்தீர்களே முட்டை இட்டனவா?
அதில் பறவைகள் ஒன்றும் வரவில்லை. நான் அமைத்து வைப்போம் என்று ஒரு எண்ணத்தில் அமைத்தது தான். இப்போது அதை மாற்றி மரப்பலகைகளால் கூடு (Nest Box) அமைக்க நினைத்திருக்கிறேன். அவைகள் சிட்டுக்குருவிகளுக்கு பயன்படலாம். மற்ற படி வழக்கம் போல தோட்டத்தில் மரங்களில் பறவைகள் கூடு கட்டுகின்றன. சந்தோசம் தான்.
விதைகள் சேர்க்கும் முயற்சி குறித்து?. எத்தனை வகையான விதைகள் சேகரித்துள்ளீர்கள்?
பெரிதாய் ஒன்றும் அதில் கவனம் செலுத்தவில்லை. நாட்டு விதைகள் சேகரிக்க ஆர்வம் இருக்கிறது. இப்போதைக்கு கிடைக்கும் விதைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். பிற்காலத்தில் விதைகள் சேர்ப்பது பற்றி இன்னும் கவனம் செலுத்த திட்டம்.

                                                               தோட்டம் சிவா


30 ஏப்ரல், 2014

பொதுத்துறை நிறுவனங்கள் நல்லதா?




அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிப் படிப்பு. தேர்வுக்கட்டணம் செலுத்த ஏப்ரல் 23 கடைசி தேதி என்று கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. தேர்வுக்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமாம். கடைசி தேதிக்குப்பின் ஏப்ரல் 30 வரை தாமதக்கட்டணம் 500 செலுத்தவேண்டும். அதன் பின்னர் 750 செலுத்தவேண்டும்  , அபராதத்தொகையை 500க்கு மேல் விடக்கூடாது என்பதனால் இன்று எப்படியாவது கட்டணத்தை செலுத்திவிடுவது என்று முடிவெடுத்து பல்கலைக் கழக இணையதளத்தைப் பார்த்தேன்.  இணையவழியாகக் கட்டணம் செலுத்திவிடலாம் என்று பார்த்தால் அந்த வசதி முடக்கப்பட்டிருந்தது. சரி பெரியார் நகரில் உள்ள யூக்கோ வங்கியில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் அங்கு சென்று 2000 ரூபாய்க்கு தரகுத்தொகை எவ்வளவு என்று கேட்டதற்கு 65 ரூபாய் என்றனர். மாட்டுத்தரகர்களை விட மோசமாக வசூலிக்கின்றனரே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். மாநில வங்கியில் 35 ரூபாய்தான் ஆனால் அங்கு சென்றால் ஒரு நாள் ஆகிவிடும் கூட்டம் கண்ணைக்கட்டும். என்பதால் இங்கேயே வாங்கி விடுவோம் என்று முடிவுசெய்து படிவத்தை நிரப்பிக்கொடுத்தால் எங்களுக்கு சிதம்பரத்தில் கிளை இல்லை என்று திருப்பிக்கொடுத்துவிட வேறு வழியின்றி மாநில வங்கிக்கு சென்றேன் .                         ( சென்னையில் மாற்றும்படி எடுக்கலாம் என்பது  பிறகுதான் நமக்குத்தெரிகிறது)நீண்ட வரிசையில் கடைசி ஆளாய் நிற்க நேர்ந்தது.  நண்பகல் 12 மணிக்கு வரிசையில் நின்றேன். நீண்ட நேரம் நின்றும் வரிசை நகர்வதாக இல்லை. வரிசையில் நிற்பவர்கள் புலம்பத்தொடங்கினர். என்னதான் நடக்கிறது என்று எட்டிப்பார்க்கலாம் என்றால் பார்க்கிற தொலைவில் இல்லை. சகித்துக்கொண்டு நின்றேன். முன்னால் நின்றவர் ,”என்ன சார் வேல பாக்குறாங்க. தடுமாறிகிட்டு. தனியார் பேங்குல எல்லாம் இளைஞர்களை வேலைக்கு வச்சிருக்காங்க ஒரு நிமிடத்துல வேலை முடியுது. அரசாங்க பேங்குல இதுதான் தொல்ல”. என்றார். பக்கத்து வரிசை கிடு கிடுவென நகர்ந்துகொண்டிருந்தது. எங்களுக்கு பிறகு வந்தவர்களெல்லாம் வேலை முடிந்து சென்றுகொண்டிருந்தனர். மணி ஒன்று ஆனது மெல்ல மெல்ல நகர்ந்து எனக்கு முன்னால் ஒரு 5 பேர்தான் நின்றுகொண்டிருந்தனர் சற்றே ஆறுதலடைந்தேன். இப்போது அந்த அலுவலரின் முகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. ஒரு 57 வயது இருக்கும் சொட்டை மண்டை கண்ணாடி மட்டிக்கொண்டு கணினி திரையையும் விசைப்பலகையையும் உற்று உற்று பார்த்துக்கொண்டு ஒற்றை விரலால் எழுத்துகளைத் தேடித்தேடி தட்டியதைப் பார்த்தால் சிரிக்காமலிருக்க முடியவில்லை. என்ன செய்வது இவரிடம் இவ்வளவு பேர்  மாட்டிக்கொண்டோமே? எனக்குமுன்னால் இன்னும் இரண்டு பேர்தான். மணியோ 1.20 இன்னும் பத்துநிமிடத்தில் நம் முறை வந்துவிடுமா? பக் ..பக்...  என் முறை வருகிறது அவர் சாப்பிட எழுந்து சென்று விடுகிறார். இப்படி ஒரு காட்சி கண் முன்னே தோன்றுகிறது. எல்லாம் முன் அனுபவம்தான். நல்ல வேளை இன்று அப்படி ஒன்றும் ஆகிவிடவில்லை. 2.30க்கு பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூற, வீட்டுக்கு வந்து சாப்பிட்டு 3.00 மணிக்கு சென்றேன். வரைவோலையைப் பெற்றுக்கொண்டு. அஞ்சல் நிலையத்திற்கு சென்றால் 3.30. அங்கும் ஒரு நீளமான வரிசை. நம்ம நேரம் எங்கு சென்றாலும் வரிசை நீளமாகத்தான் இருக்கிறது.அதை விடக்கொடுமை காலையில் வங்கியில் பார்த்த அலுவலருக்கு அண்ணன் போல ஒருவர் அதே ஒற்றை விரலால் எழுத்துகளைத்தேடிக்கொண்டிருந்தார். இங்கு தபால் மட்டுமல்ல மின்சாரக்கட்டணம் கட்டுவதற்கும் பலர் நின்று கொண்டிருந்தனர் என்ன கொடும சார்?
மக்களுக்கு நல்லது செய்யுறோம்னு இப்படியா ஆப்பு அடிப்பிங்க. என் முறை வரும்போது 4.00 மணி . இதுக்குப் பிறகு பதிவு அஞ்சல் அனுப்ப முடியாதுன்னு சொல்லிடுவாங்களோ? நல்ல வேளை அப்பிடி ஒன்னும் சொல்லல.ஒரு வழியா விண்ணப்பம் அனுப்பியாச்சு.
அப்புறந்தான் தோணிச்சு. இங்க வரிசையில் நின்ற நேரத்துக்கு நேரா சிதம்பரமே போயி பணத்தைக் கட்டி விண்ணப்பத்த பெட்டியிலெயே போடிருக்கலாம்.
 பொதுத்துறை நிறுவனங்கள்தான் நல்லது, யாருக்கு? மக்களுக்கா அங்கு பணியாற்றுபவர்களுக்கா?

26 நவம்பர், 2013

கரகாட்டக்கலை.

                                                     
                                                        மாலா,ரவிராஜன்

                                                           
                                                  ஒப்பனையில் மாலா

                                                 
                                                   வழிபாட்டு சடங்கில் தாள் கரகம்

தலையில் கரகம் சுமந்து செல்வது நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் ஒன்றாகும். குறிப்பாக கிராமக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மகாபாரதம் கதைப்பாடல் வடிவத்தில் நிகழ்த்தப்படும்போது முதல் நாள் நிகழ்ச்சியாக காப்பு கட்டும் விழா நடைபெறும் அதனைத் தொடர்ந்து பதினெட்டு நாட்களும் விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும். அப்போது முதல் நாள் நிகழ்வில் முக்கிய அம்சமாக தாள் கரகம்  சோடித்தல் அமையும். (தாள் கரகம் என்பது குடத்தின் வாய்ப்பகுதியில் பல்வேறு வண்ணத்தாள்களால் செய்யப்பட்ட முக்கோண வடிவ கொடிகள் ஒட்டப்பட்ட குச்சிகள் செறுகப்பட்டிருக்கும்). பக்தர்  ஒருவர் அதைத் தலையில் சுமந்து வருவது  உண்டு.  அதுபோலவே தீமிதித்திருவிழாவன்று அக்கினி கரகம்(மண் பானையில் மரக்கட்டைகளை இட்டு தீ மூட்டி தகதகவென எரியவிடுவர். தீ, பானையின் வாய் வழியே நாவை நீட்டும்) எனப்படும் தீக்கரகத்தைச் சுமந்து வருவதும் வழக்கம்.கரகம் சுமப்பது என்ற வழக்கம் ஒரு வழிபாட்டு மரபாக இருந்துள்ளது.
இத்தகையதொரு வழிபாட்டுச் சடங்கு நாளடைவில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று ஒரு நிகழ்த்து கலையாக வளர்ந்துள்ளது. தலையில் கரகம் சுமந்து ஆடும் ஆட்டம் கரகாட்டம் என்றாலும்  கலைஞர்களின் தனித்திறமைக்கேற்ப பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது இக்கலை. கரகாட்டக்கலை இன்றும் நடைமுறையில் உள்ள ஒரு கலை என்றாலும் அக்கலைஞர்களின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சி  கலைகளை பெரிதும் பாதித்துள்ளது, என்றாலும் அதையே சாதகமாக மாற்றிக்கொள்ளும் கலைஞர்களும் உண்டு. தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் ,எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்தவேண்டிய தேவையை இன்று கட்டாயமாகியிருக்கிறது. கலைகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல . நாட்டுப்புற கலைகள் அந்தக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. எனவே அக்கலைஞர்கள் தொடர்ந்து வாழ்க்கையை நடத்துவதற்கு கலை நிகழ்ச்சிகளைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். அதிலும் போட்டிகள் உண்டு. எனவே ஒவ்வொரு கலைக்குழுவும் தங்கள் குழுவை நிலை நிறுத்த விளம்பரப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். தஞ்சாவூர் கிழக்கு வாசல் பகுதியில் கரகாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம் என பல குழுக்கள் தங்கள் கலைக்கான விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
என்னதான் விளம்பரப்படுத்தினாலும் இதுபோன்ற கலைகள் கோயில் திருவிழாக்களை நம்பியே உள்ளன. அதில் ஈடுபடும் கலைஞர்கள் உரிய முறையில் கெளரவிக்கப்படுவதில்லை. ஓலைக் குடிசைகளில்தான் அவர்களின் வாழ்க்கை கழிகிறது. நாம் அந்த கலைகளின் சிறப்பைப் பேசுவதால் அவர்களின் வாழ்வில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை.  கலை அவர்களை வாழவைக்கிறதோ இல்லையோ அவர்கள் கலைகளை வாழவைத்துக்கொண்டுள்ளனர் என்பதுதான் கசப்பான உண்மை. நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். அரசு அவர்களுக்கென்று நல வாரியம் அமைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
கலை கலையாக மட்டும் இல்லாமல் அதில் பல நுண் அரசியல் இயங்குகிறது. அவற்றையெல்லாம் மீறியும் பல கலைஞர்கள் பல்வேறு கலைகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளனர். அத்தகையவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள ஊ.மங்கலம் கிராமத்தில் உள்ள கரகாட்டக் கலைஞர் மாலா.இவர் பிறந்தது பண்ருட்டி அருகிலுள்ள தண்டுப்பாளையம் . தற்போது கணவர் தமிழ்ச்செல்வனோடு ஊ.மங்கலத்தில் வாழ்ந்து வருகிறார்.
மாலாவின் பெற்றோர் தொடக்கத்தில் கரகாட்டம் ஆடுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவருக்குள்ளிருந்த கலை உணர்வை யாராலும் தடுக்க இயலவில்லை. பத்து ஆண்டுகள் கரகாட்ட அனுபவம் பெற்ற தேர்ந்த கலைஞராக ஆடச் செல்லுமிடங்களிலெல்லாம் பார்வையாளர்களின் பாராட்டைப்பெற்று வருகிறார் மாலா. கரகத்தைத் தலையில் சுமந்தபடி தீப்பந்தத்தினுள் செல்வது, குழல் விளக்குகளை உடைப்பது என தன் தனித்திறமைகளை இக்கலையோடு இணைத்து பார்வையாளர்களைப் பரவச்ப்படுத்துவது மாலாவின் வழக்கம்.
இவருடன் இணைது ஆடும் ஆண் கலைஞர் ரவிராஜ். இவரும்  அதே ஊரைச் சேர்ந்தவர். இவர் முதலில் குறவன் குறத்தி ஆட்டத்தைத்தான் ஆடியுள்ளார் பிறகு தானாகவே கரகாட்டம் கற்றுக்கொண்டு இன்று கரகாட்டக் கலைஞராக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிப்பருவத்திலேயே ஆட்டத்தில் நாட்டம் கொண்டவர். பள்ளிக்கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப்பெற்றவர்.
இவருக்கு திருமணம் ஆகும் வரை  இக்கலையில் ஈடுபட எவ்வித எதிர்ப்பும் இல்லை. அதன் பிறகு இவர் மனைவிக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும் ஆடிப்பழகிய ர்வியால் வேறு வேலைகளில் ஈடுபடமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி இவரது ஆட்டம் இவரின் மனைவிக்கும் பிடித்துப்போக தொடர்கிறது கலைச் சேவை.
இப்படித்தான் பல கலைஞர்கள் கலைவாழ்க்கைக்கு தங்களை அற்பணித்துள்ளனர். அவர்களை கெளரவப்படுத்த இயலவில்லை என்றாலும் அவமானப் படுத்தாமலிருக்கவேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோளாக இருக்கிறது.

23 ஜூலை, 2013

கணித ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி


விருத்தாசலத்தில் தேசிய  இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் கணித ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
           பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள்

                           கருத்தாளர்கள்

23 ஜூன், 2013

வே.சபாநாயகம் சில குறிப்புகள்






 பிறப்பு :           2 - 3- 1935.

 பிறந்த ஊர்:       தெ.வ.புத்தூர், விருத்தாசலம் வட்டம்,
                     கடலூர் மாவட்டம் - தமிழ்நாடு.

 படிப்பு:           இளங்கலை - கணிதம், முதுகலை - தமிழ்,
                      முதுகலை - கல்வி இயல்.

 பணி:            முன்னாள் முதுநிலை விரிவுரையாளர்,  
                                        ஆசிரியர் பயிற்சி.

எழுதியுள்ள நூல்கள்: 33

தொகுப்பு நூல்கள் :  5 (கணையாழி களஞ்சியம்,
                                                  தீபம் இதழ் தொகுப்பு (2)
                          ஞானரதம் இதழ் தொகுப்பு,
                                                   ஞானரதத்தில் ஜெயகாந்தன்)

 புனை பெயர்கள்  :  சபா, அவைமுதல்வன்.

 பெற்ற பரிசுகள், விருதுகள்  :  
                                            1981-குழந்தை எழுத்தாளர் சங்க -   'ஏ.வி.எம்              
                                            அறக்கட்டளை' யின் தங்கப் பதக்கம்.
                
                                           1982 - ஆனந்தவிகடன் நடத்திய ஜாக்பாட்  
                                           சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.

                                           1983 - அமுதசுரபி 'அமரர் சின்னி கிருஷ்ணன்  
                                           நினைவு சிறுகதைப் போட்டி பரிசு.

                                          1994 - கோவை கஸ்தூரி சீனிவாசன்   
                                           அறக்கட்டளையின் நாவல் பரிசு 10000/- ரூ.

                                     1994 - கோவை வள்ளியப்பா சிறுகதை விருது.

                                      1 995 - 'தமிழரசி' இதழின் மாவட்ட சிறுகதைப்
                                    போட்டியில் முதற் பரிசு.

                                    1975, 1984, 1994 ஆண்டுகளில் 'கணையாழி'யின்
                                    'தி.ஜா நினைவு குறுநாவல்போட்டி'யில்
                மூன்று முறை பரிசு. 


                                      1996 - தமிழக அரசின் 'தமிழ் வளர்ச்சிக்
                                     கழகத்'தின் குழந்தை இலக்கியத்துக்கான
                                     முதற்பரிசு.

                                       1998 - திருப்பூர் தமிழ் சங்க குழந்தை
                                      இலக்கியத்துக்கான முதற்பரிசு.

                                        1999 - பாரத ஸ்டேட் வங்கியின் குழந்தை
                                       இலக்கிய பரிசு.

 பிற தகவல்கள்:    
                                  முதல் படைப்பு 1950ல் பள்ளி இறுதி வகுப்பு
                                   படிக்கையில் 'ஆனந்த போதினி'யில் பிரசுரம்.
                 
                                   1957ல் ஆனந்தவிகடனின் முதல் மாணவர்
                                  திட்டத்தில் தேர்வு.

 அறிந்த பிறகலைகள்:
                                  ஓவியக்கலை, ஒளிப்படக்கலை, பேச்சுக்கலை.

                                               
 இதுவரை வெளியாகி உள்ள நூல்கள்.

சிறுகதைத் தொகுப்புகள் (3)

1. குழந்தைத் தெய்வம் - மனோன்மணி புத்தக நிலையம்.......1970.
2. அசலும் நகலும்     -                                 
3. குயிற் குஞ்சு        - மணியம் பதிப்பகம்           .......1991

நாவல் (1)

ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது மணியம் பதிப்பகம்  .......1993.

(!994ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10000ரூ.பரிசு பெற்றது)

குறுநாவல்கள்(3)

1. ஸ்காலர்ஷிப்       - முத்து பதிப்பகம்.              ......1980 2..இனியொருதடவை  - மணியம் பதிப்பகம்            ......1996
3. தென்றலைத்தேடி   -                             .......1997

சிறுவர் இலக்கியம் (19)

1.விதியை வென்றவள் (வாழ்க்கை வரலாறு)            .....1982
                       - எழுத்தாளர் பதிப்பகம்.
(1982ஆம் ஆண்டின் குழந்தை இலக்கியப் போட்டியில் ஏ.வி.எம் அறக்கட்டளையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது)   

2. ஒரு பாப்பாவும், ஒரு கோழியும் ஒரு காகமும்         ....1987
  (சிறு கதைகள்) இலக்குமி நிலையம்.
3. காந்தித் தாத்தா வழியில்( சிறுகதைகள்) விசாலாடசி  .....1993
 (1994ல் கோவை வள்ளியப்பா சிறுகதை விருது பெற்றது)
4. பாப்பாவின் தோழன்(சிறுகதைகள்) அருள் புத்தக நிலையம்    .....1995
5. குறள் வந்த கதைகள்(சிறுகதைகள்)         .          ...1994
6. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் விசாலாட்சி   .....1992
7. கவிதை சொல்லும் கதைகள் இலக்குமி நிலையம்     ...1993
8. சிந்திக்க சில நீதிக்கதைகள் -                         ....1994
9. வல்லவனுக்கு வல்லவன் மணியம் பதிப்பகம்        .....1996
  (1998ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சிக் கழக முதல் பரிசு)
10.தொந்திமாமா சொன்ன கதைகள்மணியம் பதிப்பகம்    .....1993
11.தேசதேசக் கதைகள் அருள் நிலையமம்                 .....1992
 (திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற்பரிசு பெற்றது)
12. எழுசியூட்டும் கதைகள்  - மணியம் பதிப்பகம்.        ......1999
     (1999ல் பாரத ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.)
13. நெஞ்சு பொறுக்குதிலை நாவல் இலக்குமி நிலையம்....1991
14. உயிர்களிடத்து அன்பு வேண்டும்சிறுகதைகள்-மணியம்.....2001
15. சிறுவர் நீதிக்கதைகள் அநுராகம் வெளியீடு          .....2002
16. அன்பின் மகத்துவம் சிறுகதைகள்அருந்ததி பதிப்பகம்....2003
17. அக்கரைப்பச்சை     -                             .....2003
18. சொர்க்கமும் நரகமும் -         - மணியம் பதிப்பகம்....2006
19. சிந்தனைக்குச் சில கதைகள்அருள் புத்தக நிலையம் .......2002   .

திறனாய்வு(2)

1. தீபம் இலக்கியத்தடம்  - மணியம் பதிப்பகம்          .....2000
2. பூவண்ணனின் புதினத்திறன் சாதனா பதிப்பகம்.      ......2004

தொகுப்பு நூல்கள் (5)

1. கணையாழி களஞ்சியம்  - கலைஞன் பதிப்பகம்        ....2000
2. தீபம் இதழ்த் தொகுப்பு I              “                                                 ….2004
3.                     “                           -   II            “                             ...2004
4. ஞானரதத்தில் ஜெயகாந்தன் - எனி இந்தியன் பதிப்பகம் ...2006
5.. ஞானரதம் இதழ்த் தொகுப்பு -                        ....2007